"வலுவான குரல் வளமான சிந்தனை
பழமை வாதிகள் கண்களை திறக்கட்டும்!
கடந்தயுகம் ஒதுக்கித் தள்ளிய மக்கள்
விழித்து எழுந்து உரிமை கேட்கட்டும்!"
"சுதந்திர நெருப்பு நெஞ்சில் எரிய
கலங்கரை வெளிச்சம் பாதை காட்டட்டும்!
இலங்கையில் பிறந்து
துன்பம் அனுபவிப்பவனை
கண்கள் திறந்து அரசு அறியட்டும்!"
"வாழ, நேசிக்க, சமபங்கு அடைய
ஒவ்வொரு அடியிலும் உரிமை கோரட்டும்!
புராணங்கள் சமயங்கள் பழைய கிடங்கே
நெகிழ்ச்சி கொண்டு கதவுகள் திறக்கட்டும்!"
"கனவுகள் விரிய தைரியம் பெருக
சிறகுகள் அடித்து விடுதலை பெறட்டும்!
சுதந்திரம் வேண்டும் சிறுபான்மை இனங்கள்
உரிமை பெற்று விலங்கிணை உடைத்தெறியட்டும்!"
👈👉
"செண்ணச் சிவிகையுந்
தேரும்வையமும்
உனதாக்குக!"
"ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்
ஆபரணம் ஆக்கி உன்னை அலங்கரிக்காதே
ஆகாயம்வரை பொய்களைப் அடுக்கிப் பேசி
ஆரவாரத்துடன் மற்ற இனத்தை ஒடுக்காதே !"
"நேசித்து வெறுத்து பகுத்தறிவு மறந்து
நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடாதே
நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து
நேராராகி சமதர்மமும் நீதியும் மறக்காதே!"
"விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை
விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள்
விரைந்து அவசரமாக எதையும் எடுக்காமல்
விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !"
"மகிழ்ச்சி என்பது எல்லோருக்கும் வேண்டும்
மற்றவர்கள் வீட்டிலும் மல்லிகை மணக்கும்
மறந்துகூட மற்றவர்களுக்கு துரோகம் செய்யாதே
மனம் திருந்திய இலங்கையை கட்டியெழுப்பு!"
"மகிமையான வாழ்வை பெருமையாக அனுபவி
மகிழ்வுடன் துன்பமும் கலந்தவன் மனிதன்
மந்திரம் தந்திரம் மகிழ்வைத் தரா
மழலையின் முகத்தில் உண்மையை அறி!"
"செழிப்பு நிறைந்த இலங்கையை வளர்த்து
செல்வம் பொழியும் நாடாய் மாற்றி
செங்கோல் வழுவாமல் ஆட்சி நடத்தி
செண்ணச் சிவிகையுந் தேரும்வையமும் உனதாக்குக!"
👈👉
1] நேரார் - பகைவர்
2] செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் - ஒப்பனை செய்யப்பட்ட சிவிகையும் தேரும் வண்டியும்
நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
0 comments:
Post a Comment