"கந்துவட்டி" - சிறு கதை

தமிழ்நாட்டின் பசுமையான பண்டைய சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கிய பூம்புகார் கிராமத்தில் ராஜன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்கள் ஒரு காலத்தில் தங்கள் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக அறியப்பட்டனர். இருப்பினும், அவர்கள் கந்துவட்டியின் பிடியில் சிக்கியபோது விதி ஒரு கொடூரமான திருப்பத்தை எடுத்தது.

பொதிய மலை, இமய மலை போலத் தனிப்பெருமை வாய்ந்தது பூம்புகார். பொதிய மலையும், இமய மலையும் நடுங்குவது இல்லை. அதுப்போல, புகாரில் மிகுந்த செல்வமும், பகையின்மையும் சேர்ந்து விளங்குவதால், இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் புகாரை விட்டு எங்கும் செல்வதில்லை. இதனால் பூம்புகார், நாகலோகம் போலப் போகத்திலும், தேவலோகம் போலப் புகழிலும் சிறந்து விளங்கியது என்று சிலப்பதிகாரம் கூறும். ஆனால் இன்று அதே பூம்புகாரில் வாழ்ந்த ராஜன் குடும்பம் என்ன ஏது இனியும் நடக்குமோ என்று அஞ்சி நடுங்கின்றனர்! காலம் செய்த கோலம் இதுவோ?

கடந்த காலங்களில் விவசாயிகள் மழை, வரட்சி காலங்களை துல்லியமாக அறிந்து தமது விவசாய செய்கைகளை அதற்கு ஏற்றவாறு செய்து சீரும்சிறப்புமாக வாழ்ந்தனர்ஆனால் இன்று அப்படி இல்லை. ஒழுங்கற்ற காலநிலை சூழல்கள் பல விவசாயிகளை கஷ்டத்தில் மூழ்கடித்தது.

ராஜன் குடும்பத்தின் ஒரே உழைப்பாளியான  திரு. ராஜன், அறுவடை காலம் பெய்த பெரும் மழையால், பயிர்கள் எல்லாம் சேதமடைந்து  நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டான். தனது குடும்பத்தை காப்பாற்ற ஆசைப்பட்டு, உள்ளூர் கந்துவட்டிக்காரரான திரு. குமாரவேலுவிடம் உதவி பெற்றான். ஆனால் அவரோ உதவி கரம் நீட்டுகிறேன் என்ற போர்வையில், ராஜனுக்கு அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்கினார். ராஜனுக்கு உண்மையில் கந்துவட்டி என்றால் என்னவென்றே தெரியாது. எதோ கொஞ்ச வட்டியுடன் திருப்பி கொடுத்து விடுவேன் என்ற நம்பிக்கை தான் அவனிடம் இருந்தது.

"தனிவட்டி கூட்டுவட்டி தெரியாதவனுக்கு

கந்துவட்டிக் கணக்கு எப்படித் தெரியும் ?"

ஆழிப்பேரலை இலங்கை மற்றும் தென் இந்தியாவை டிசம்பர் 26, 2004 தாக்கும் வரை சுனாமி என்றால் என்ன என்று பலருக்குத் தெரியாது. அப்படித்தான் ராஜனுக்கு முதலில் அதன் கொடுமை தெரியவில்லை

"குழந்தைகள் போலத்தானே

அலைக்கரம் கொண்டு

குறும்புகள் செய்தாய்!"

"அன்னையைப் போலத்தானே

மயங்கிக் கிடக்க

மணல் மடி தந்தாய்!"

"வள்ளல் போல

வாரி வழங்கி

வளமைகள் செய்தாய்!" 

இப்படித்தான் அவனின் எண்ணம் அந்த நேரம் இருந்தது

"அரக்கனைப் போலே

கொலை முகம் காட்டி

ஏன் கொன்றாய் கடலே!"

என்று தான் கதறப் போகிறேன் என்று அப்ப அவனுக்குத் தெரியாது? முதலில், அடுத்த அறுவடையுடன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்று ராஜன் நம்பினான். ஆனால் பயிர்கள் மீண்டும் தோல்வியடைந்ததால், கடனுக்கான வட்டி வேகமாகக் குவியத் தொடங்கி, அது குடும்பத்தை கடனில் ஆழமாகப் புதைத்தது.

அன்பான மனைவியும் தாயுமான திருமதி ராஜன், கடனின் மன உளைச்சல் தன் கணவனை ஆட்கொண்டதை மிக கவலையாக கவனித்தாள். அவள் அவனை ஆறுதல் படுத்த தன்னால் இயன்றவரை முயன்றாள், ஆனால் கடன் தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், அது அவர்களின் உறவைப் பாதிக்கத் தொடங்கியது. வாக்குவாதங்கள் அன்றாட நிகழ்வாக மாறியது, ஒரு காலத்தில் மகிழ்வாக மற்றும் அன்பாக இருந்த  குடும்பம் பதட்டமாகவும் வெறுப்பாகவும் மாறியது.

அவர்களின் குழந்தைகள், ராம் மற்றும் பிரியா, பெற்றோரின் பதற்றத்தை உணரத் தொடங்கினர், அவர்கள் தங்கள் பெற்றோரின் புன்னகை மீண்டும் மலரும் என்ற நம்பிக்கை கொண்டு இருந்தாலும், அவர்களின் முகத்தில் கவலைக் கோடுகள் பதியத் தொடங்கின, அவர்களின் வீட்டில் நிறைந்திருந்த மகிழ்ச்சிக்கு பதிலாக விரக்தியின் மூச்சுத்திணறல் தான் ஆழிப்பேரலையாக அவர்களின் வீடு முழுவதும் ஒலித்துக்கொண்டு இருந்தன,

கடன் சுமை அதிகமானதால், திரு. ராஜன் விரக்தியில் ஆழ்ந்தார். அவர் இரவும் பகலும் அயராது உழைத்தார், அவர்களின் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ஒரு வழியைக் கண்டு பிடிக்க முயன்றார், பல தன் உற்ற நண்பர்களின் வீடுகளுக்கு ஏறி இறங்கினார், ஆனால் யாரும் உதவுவதாகத் தெரியவில்லை. ராஜன் ஒவ்வொரு முறையும் சோர்ந்து போய் வேதனையோடு வீடு திரும்பினான். அது ஒரு கடக்க முடியாத மலை போல் இப்ப அவனுக்குத் தோன்றியது.

ஒரு நாள் காலை குமாரவேலு அவன் வீட்டுக்கே வந்துவிட்டார். காலிங் பெல் அடிப்பதை கேட்ட ராஜனின் மகள் பிரியா கதவைத் திறந்தாள். “இது ராஜனின் வீடு தானே?” “ ஆமாம்சார்! , கொஞ்சம் இருங்க அப்ப  குளித்துக்கொண்டு இருக்கிறார். வந்துவிடுவார் என்று உள்ளே அழைத்து விட்டு, தாயை கூப்பிட்டாள்நீ அவர் பொண்ணாஎன்ன படிக்கிறே? என்று பேச்சை தொடங்கினார் குமாரவேலு. ஆனால் அவள் மௌனமாக தன் அறைக்குள் போய்விட்டாள்

திருமதி ராஜன் " என்ன இந்தப்பக்கம்?" என்று கதையை ஆரம்பித்தாள். ஆனால்  குமாரவேலுவோ எந்த மரியாதையும் இல்லாமல்என் கடங்காரன் ராஜனை பார்க்க வந்தேன் என்கிறார். அதற்குள் ராஜனும் குளித்து முடிந்து அங்கு வந்தான்.

என்ன ராஜன், மாதம் முடிந்தா ஒழுங்கா வட்டி தர முடியாதா? உன்னைத் தேடி உங்க வீட்டிற்கு வந்தா இங்கு கொஞ்சம் கூட எனக்கு மரியாதை இல்லே! உம் பொண்ணு கதவை அடித்து சாத்திக்கொண்டு போறார், மனைவியோ ஒரு தேநீர், காபியோ தருகிற  எண்ணம் இல்லை?" கொஞ்சம் அதட்டலாக பேசத் தொடங்கினார். “ உங்க வீட்டுக்காரன் காசும் வட்டியும் தர வேண்டும், பணத்தை எடுத்து வச்சா நான் எதற்கு இங்கு நிற்கிறேன்? நான் பாட்டுக்குப் போய் விடுவேன்!” என்று, ராஜனை பார்க்காமல் ராஜனின் மனைவியிடம் கடுமையாக பேசினார். ராஜன் நாளை மாலைக்கு, முதலும் வட்டியும் தந்துவிடுவேன், இப்ப வீடடை விட்டு பேசாமல் போய்விடு என்று சொல்லி, குமாரவேலுவை திருப்பி அனுப்பினான்.

அனால் மேலும் மேலும் அவமானத்தையும் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் திரு.ராஜன் அன்று இரவு ஒரு அதிரடியான நடவடிக்கை எடுத்தான். தன் குடும்பத்தின் மீதான தனது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு, தன்னை தூக்கு கயிற்றில் போட்டுவிட்டான்.

ராஜன் தற்கொலை செய்து கொண்ட செய்தி கிராமத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த ராஜன் குடும்பத்திற்கு நேர்ந்த சோகத்தை அக்கம் பக்கத்தினர் கிசுகிசுத்தனர். திருமதி. ராஜன் நொறுங்கிப் போனார், துக்கம், குற்ற உணர்வு மற்றும் பெரும் கடன் சுமை ஆகியவற்றால் சிக்கித் தவித்தார், கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி, அவர்களது வீட்டையும்  குமாரவேலு கைப்பற்றி, எதிர்காலத்தில் குடும்பத்தை வீடற்றவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் ஆக்கி, நடுத்தெருவில் அகதிகளாக அலைய விட்டு அவர்களை முழுவதுமாக தின்றுவிடும் போல் அவளுக்குத் தோன்றியது.

எனவே, திருமதி ராஜன், குமாரவேலுவின் சுரண்டல் நடவடிக்கைகளுக்கு எதிராக கிராமத்தின் ஆதரவைத் திரட்டி, நியாயம் தேட நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். ஒரு நீதியான  வழக்கறிஞரின் உதவியுடன், அவர் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினார், தனது குடும்பத்தின் துன்பங்களுக்குப் கந்துவட்டிக் காரனான குமாரவேலுவே பொறுப்புக்கூற வேண்டும் என்பதில், நீதியின் முன் உறுதியாக இருந்தார், பூம்புகார் கண்ணகி போலவே!

இருப்பினும், திருமதி ராஜன் நீதியை நாடுவதால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த திரு.குமாரவேலு, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இழிவான தந்திரங்களைக் கையாளத் தொடங்கினார். திருமதி ராஜனின் முயற்சிகளை முறியடிக்க, செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்களை பணியமர்த்தவும், மற்றும் அவளைப்பற்றி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடவும் - குறிப்பாக அவளது கற்பைக் கேள்விக்குள்ளாக்கும் பொய்யான வதந்திகளைப் பரப்பி, சமூகத்தில் அவளது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த - அவர் தனது செல்வத்தை பயன்படுத்தினார். அது விரைவில், திருமதி ராஜனின் மனதில் ஒரு கருமேகத்தை உண்டாக்கி, அவளை விரக்தியின் ஆழமான படுகுழியில் தள்ளியது.

அசைக்க முடியாத உறுதி இருந்த போதிலும், திருமதி ராஜன் வஞ்சகம் மற்றும் துரோகத்தின் வலையில் சிக்கிக் கொண்டார். தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக ஒதுக்கல் ஆகியவற்றின் இடைவிடாத தாக்குதல் தாங்க முடியாத அளவுக்கு அவளை வருத்தியது. அவமானம் மற்றும் நம்பிக்கையின்மையால் நுகரப்பட்ட அவள், விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவளை வேட்டையாடும் கொடூரமான கிசுகிசுக்களுக்கு இறுதியில் அடிபணிந்தாள்.

அவளும் தன் கணவன் ராஜன் போலவே சோகமான முடிவுக்கு தன்னை உள்ளாக்கிக் கொண்டாள். அவளின் மறைவு குறித்த செய்தி கிராமத்தில் மீண்டும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மட்டும் அல்ல  ராமையும் பிரியாவையும் அனாதைகளாகவும் ஆக்கியது.

கிராமவாசிகள் தங்கள் சமூகத்தின் அன்பான உறுப்பினரின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கும்போது, ​​கோபம் மற்றும் வெறுப்பின் தீ, சுடர்களாக எழும்பி குமாரவேலுவின் வீட்டை முற்றுகையிட்டது

"கந்துவட்டி எண்ணெயில் கொதித்து

கொப்பளிக்கிறதே குமாரவேலுவின் வீடும்!

பல ஏழைகளின் உடல்களை எரித்துத்

தின்ற குடல்களும் அங்கு திணறத் தொடங்குதே!!

 

நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment