விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்

 


🍽இந்த உணவு முறை மூளைக்கு நல்லது

மத்திய தரைக்கடலை ஒட்டிய கிரேக்கம், இத்தாலி முதலிய நாடுகளில் பின்பற்றப்படும் உணவுமுறை பல சிறப்புகளை உடையது. இது உடலுக்கு பலவித நன்மைகள் செய்யும் என்று ஏற்கனவே வெளிவந்த அறிவியல் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவில் பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், முழு தானியங்கள், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்கள் ஆகியவை அதிகளவில் இடம்பெறும். சிலவகை மீன்களைத் தவிர்த்து வேறு இறைச்சி வகைகள் குறைவாகவே இருக்கும். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள இலினாய் பல்கலை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 3,000 பேர் பங்கேற்றனர். இவர்களுக்குப் பிற உணவுகளுடன் மத்திய தரைக்கடல் உணவு வகைகள் பல்வேறு விகிதங்களில் கலந்து தரப்பட்டன.

ஆய்வாளர்கள், கலந்துகொண்டவர்களின் மூளையைத் தொடர்ந்து, சில விதமான எம்.ஆர்.., ஸ்கேன்கள் எடுத்துக் கண்காணித்தனர். மூளை, தண்டுவடம் ஆகியவற்றின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைக்கக் கூடிய தசையை வெள்ளைப் பொருள் என்று அழைப்பர்.

யார் யாரெல்லாம் மத்திய தரைக்கடல் உணவு வகைகளை அதிக விகிதத்தில் உண்டனரோ, அவர்களின் மூளையில் உள்ள வெள்ளைப் பொருட்கள் நல்ல ஆரோக்கியம் அடைந்திருந்தது தெரியவந்தது. குறைவான விகிதங்களில் சாப்பிட்டவர்களுக்கு எந்த மாற்றமும் காணப்படவில்லை.

மத்திய தரைக்கடல் உணவு களை சாப்பிட்டவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் ஆரோக்கியம் அடைந்தன.

மூளையில் காணப்பட்ட வீக்கம் குறைந்தது. ரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருந்தது. இந்த உணவால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருப்பதால், மூளையும் ஆரோக்கியம் அடைகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

🦮நாய்களோடு அதிக நெருக்கம் வேண்டாம்!

சல்மோனெல்லோசிஸ் (Salmonellosis) என்ற நோயை சல்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா கிருமி ஏற்படுத்துகிறது. இந்தக் கிருமி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும்.

பச்சையான அல்லது சரியாக சமைக்கப்படாத முட்டை, இறைச்சி, சரியாகக் காய்ச்சப்படாத பால் இவற்றை உண்பதால் மட்டுமே இந்தக் கிருமி நம் உடலுக்குள் செல்லும் என்று பொதுவாக நம்பப்பட்டு வந்தது.

ஆனால், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலை மேற்கொண்ட தற்போதைய ஆய்வில், சல்மோனெல்லா பாக்டீரியா என்ற நோய், வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாய்களிடமிருந்தும் மனிதர்களுக்குப் பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த பாக்டீரியா நம் உடலுக்குள் நுழைந்தால், முதலில் குடல் சுவரைத் தாக்கும். நாம் உட்கொள்ளும் நீரையும், உணவில் உள்ள திரவப் பொருட்களையும் நம் குடலால் உறிஞ்சிக் கொள்ள முடியாமல் போகும். இதனால் வாந்தி, தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.

பல்கலை ஆய்வாளர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள், நாய்கள் குறித்த மருத்துவ அறிக்கைகளைப் படித்தனர். அப்போது நாய்களோடு அதிக நெருக்கமாகப் பழகியவர்களுக்கு இந்தத் தொற்று எளிதாக ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

நம் அன்புக்குரிய விலங்குகளாக இருந்தாலும் நாய்களோடு விளையாடிய பின்னர் நம் உடலைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நோயிலிருந்து நாம் தப்பிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

🎅மறதிநோய்

ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், யாருக்கெல்லாம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அடிக்கடி மாறுகிறதோ அவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதிநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

 

🧠மூளையின் கூர்மை

தக்காளி முதலிய தாவரங்களில் இருக்கும் சேர்மம் லைக்கோபீன் (Lycopene). இது மனித மூளையின் செயல்பாட்டைக் கூர்மையாக்கும் தன்மை உடையது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

🍐பழரசத்தை விட நல்லது இதுதான்

பழரசங்கள் குடிப்பது நல்லது தானே என்று கருதலாம். நல்லதுதான், ஆனால், சில தீமைகளும் உள்ளன. முதலாவதாகப் பழங்களை அப்படியே சாப்பிடும்போது நார்ச்சத்து கிடைக்கிறது. அடுத்ததாகப் பழரசங்களில் உள்ள சர்க்கரை, ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டும் ஏற்கனவே அறியப்பட்டவை தான். புதிதாக ஒரு பிரச்னை இருப்பதை அமெரிக்காவில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலை தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வில் 18 - 35 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான 14 நபர்கள் சோதிக்கப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் தொடர்ந்து மற்ற உணவுகளுடன் பழரசம் தரப்பட்டது. இதில் அவர்கள் வாயிலும் குடலிலும் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து, தீய பாக்டீரியாக்கள் அதிகரிப்பது கண்டறியப் பட்டுள்ளது.

பழரசத்தில் உள்ள அதிகமான சர்க்கரையால், வாயில் உள்ள கிருமிகள் பெருகிவிடுவதே இதற்குக் காரணம். இந்தக் கிருமிகளால் பல்வேறு உடல் நலக் கோளாறு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகவே, பழரசங்களைக் குடிப்பதை விட, பழங்களை உடைத்து கூழாக்கி, சதைப்பகுதியை வடிகட்டிவிடாமல் அப்படியே சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று கூறுகின்றனர்.

 

🥸கிருமிநாசினி

மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பதை அறிவோம். மஞ்சளில் உள்ள குர்குமினைக் கொண்டு ஆன்டிபயாடிக் மருந்துகளால் கூட கொல்ல இயலாத நுண்ணுயிரிகளைக் கொல்ல முடியும் என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலை கண்டறிந்துள்ளது.

 

🜚கொழுப்பை கரைக்கும் தங்கம்

உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் பருமனைக் குறைக்க, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க வேண்டியது அவசியம். ஆனால், கொழுப்பைக் கரைக்கப் பயன்படும் மருந்துகள் ஆரோக்கியமான தசைகளை வலுவிழக்கச் செய்து விடுகின்றன. இதனால், தசை வலிமையைக் குறைக்காமல் கொழுப்பை மட்டும் கரைக்கும் மருந்தை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.

தற்போது எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா பல்கலை தங்க நானோ துகள்களை இதற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளது. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் துகள்கள் அவற்றின் உடலில் உள்ள கொழுப்பை 36 சதவீதம் வரை குறைத்துள்ளது.

இந்த மருந்து கொடுக்கப்பட்டு வெறும் ஒன்பது வாரங்களில் இவ்வளவு முன்னேற்றம். அது மட்டும் இல்லாமல் எலிகளின் சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி இருக்கின்றன. எனவே வருங்காலத்தில் இது மனிதர்களுக்கும் பயனுள்ள மருந்தாக அமையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

   

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment