அறிவியல்=விஞ்ஞானம்
ஆக்டோபஸின்
எட்டு கைகள்
ஆக்டோபஸ் விசித்திரமான உயிரினம்.
அமெரிக்காவைச் சேர்ந்த சிகாகோ பல்கலை மேற்கொண்ட ஆய்வில், ஆக்டோபஸின் எட்டு கைகளும்
தனித்தனி நரம்பு மண்டலத்தால் இயக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எல்டர்பெர்ரி
பழம்
ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்டது
எல்டர்பெர்ரி. இதன் சாற்றைக் குடித்து வந்தால், குடல் நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரித்து,
உடல் எடை குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாம்பு விஷத்தை
முறிக்க…
உலகளவில் ஆண்டுதோறும் பாம்பு
கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பாம்பு விஷத்தை முறிக்கும் புரதம் ஒன்றை,
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டேவிட் பேகர் உருவாக்கியுள்ளார்.
நார்ச்சத்து
நாம் உண்ணும் உணவில் உள்ள
நார்ச்சத்தை குடலில் உள்ள பாக்டீரியா, கொழுப்பு அமிலங்களாக மாற்றுகிறது. இது புற்றுநோய்
வராமல் தடுக்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்போர்ட் பல்கலை கண்டறிந்துள்ளது.
தினமும் வால்நட்
அமெரிக்காவைச் சேர்ந்த மின்னசொட்டா
பல்கலை மேற்கொண்ட ஆய்வில், தினமும் வால்நட் சாப்பிட்டு வந்தால் இதய நோய், உடல் பருமன்
ஏற்படும் வாய்ப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது.
விரதம் இருக்க
சிறந்த நேரம்
உடல் பருமன் என்பது உலகம் முழுதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய ஒரு வாழ்வியல் நோய். இதனால், நீரிழிவு, இதய நோய்கள், ஏன் சில வகை புற்று நோய்கள் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடல் பருமனை குறைப்பதற்கு பல்வேறு மருத்துவ ஆய்வுகள் நடந்து வருகின்றன.
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு வாயிலாக பருமனை குறைக்க முடியும் என்றாலும் அனைவருக்கும் இது சாத்தியப்படுவது இல்லை.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த
க்ரானடா பல்கலை ஆய்வாளர்கள், பல்வேறு அறிவியல் அமைப்புகளுடன் இணைந்து மிகப்பெரிய ஆய்வு
ஒன்றை செய்தனர்.
ஒரு பகுதியினர் காலை 9:00 - 5:00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் உணவு உண்ணலாம்; மற்ற நேரங்களில் விரதம் இருக்க வேண்டும். அடுத்த பகுதியினர் மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை சாப்பிடலாம்; மற்ற நேரங்களில் கூடாது. இன்னும் ஒரு பகுதியினர் இரவு 12:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை எந்த நேரமும் சாப்பிடலாம். மற்ற நேரங்களில் விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு வரையறுக்கப்பட்ட பின், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.
ஆய்வின் இறுதியில், மற்ற இரண்டு பகுதியினரை காட்டிலும் காலை 9:00 -முதல் மாலை 5:00 மணி வரை மட்டும் உணவு உட்கொண்டு, மற்ற நேரங்களில் விரதம் இருந்தவர்கள் நல்ல மாற்றம் கண்டனர். இவர்களுக்கு உடல் பருமன், குறிப்பாக வயிற்று பகுதிகளில் இருக்கிற கொழுப்பு குறைந்து இருப்பது தெரிந்தது. ஆகவே, இன்டர்மிடென்ட் பாஸ்டிங் இருப்பவர்களுக்கு சரியான நேரம் இதுதான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூஞ்சையிலிருந்து
புரதச்சத்து
ஆடு, பன்றி முதலிய விலங்குகளின்
மாமிசம் சிவப்பு இறைச்சி என்றழைக்கப்படுகிறது. இதில் புரதச்சத்து இருந்தாலும், கூடவே
கெட்ட கொழுப்புகளும் உள்ளன. எனவே, இவற்றுக்குப் பதிலாக பூஞ்சையிலிருந்து எடுக்கப்படும்
மைக்கோ புரதத்தை உட்கொள்வது நல்லது என்று, இங்கிலாந்தில் உள்ள நார்த்தம்ப்ரியா பல்கலை
மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தாவர உணவுகளால்
ஏற்படும் நன்மைகள்
பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் முதலிய தாவர உணவுகளின் நன்மைகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வியன்னா பல்கலை, முக்கியமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
இதில், தாவர உணவுகளை உட்கொண்டால், வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 24 சதவீதம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. பரம்பரையாக சர்க்கரை வியாதி, உடல் பருமன் உள்ளவர்களுக்கும் கூட இது பொருந்தும் என்கிறது ஆய்வு.
அதிக சர்க்கரை உள்ள பானங்கள், தீட்டப்பட்ட தானியங்கள் (Refined grains), இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தி, வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.
இங்கிலாந்தில் உள்ள பயோ பேங்கில், 1,13,097 பேரின் 12 ஆண்டுகளுக்கான மருத்துவத் தரவுகள் சோதிக்கப்பட்டன. இவற்றில், தாவர உணவுகளை உண்பதால் ரத்த சர்க்கரை அளவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் சதவீதமும் குறைவது தெரிய வந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல், சிறுநீரகம், ஈரல் ஆகிய உடல் உறுப்புகளின் செயல்பாடு இதனால் ஊக்கப்படுத்தப்படுகிறது என்றும் தெளிவாகி உள்ளது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment