இலங்கையின் துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில் கவி என்ற இளைஞன் இருந்தான். அவன் உயரமானவன், வசீகரிக்கும் புன்னகை மற்றும் சாகச மனப்பான்மையுடன் மக்களை சிரமமின்றி தன்னிடம் ஈர்த்தான். கவி, தனது உயர் படிப்பைத் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடரும் போது தங்குவதற்கு ஒரு இடத்தைத் கண்டியில் தேடி, அமைதியான சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான வீட்டைக் கண்டான். உரிமையாளர் திரு ராஜன் அவனை அன்புடன் வரவேற்று வாடகைக்கு தனது வீட்டில் ஒரு அறை கொடுத்தார்.
திருவாளர் ராஜன் கண்டியில் பெரும் வர்த்தகராகும். அவர் நுவரெலியாவில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்த பெற்றோருக்கு ஒரே மகனாக இரு சகோதரிகளுடன் பிறந்து, லைன் அறை குடிசையில் [வரிசை வீடு ஒன்றில்] தனது வாழ்வை ஆரம்பித்தவர். என்றாலும் கடுமையான உழைப்பால், விடா முயற்சியால் இன்று பெயர் சொல்லக் கூடிய செல்வந்தவர்களில் ஒருவராக திகழ்ந்தாலும், தன் பழைய வாழ்வை மறவாத பெருந்தகையும் ஆவார். அதனால்த் தான், கல்வியின் மேல் உள்ள கவியின் ஆவலைப் பார்த்தும், மற்றும் அவன் அவருடன் ஆற்றிய உரையாடலில் தெரிந்த பண்பாட்டை பார்த்தும் அவனுக்கு ஒரு அறை ஒதுக்க தீர்மானித்தார். மற்றும்படி அவரின் வீடு பெரிதாக இருந்தாலும், வாடகைக்கு விடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
வாடகை வீடு எடுக்க அவன் கண்டியில் ஏறி இறங்கிய அனுபவத்தை அவன் இன்னும் மறக்கவில்லை. அதிலும் அந்த கடைசி வீடு, அவர்களுக்கே போதுமானதாக இல்லா விட்டாலும், அவர்களின் தோட்ட வாழ்வின் நிலைமை காரணமாக, அவனுக்கு அறை ஒன்று கொடுக்க சம்மதித்தது இன்னும் ஞாபகத்துக்கு வந்தது. என்றாலும் இரு சின்ன பிள்ளைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி என ஒரு கூட்டு குடும்பமே அதற்குள் முடங்கி வாழ்வது கட்டாயம் அமைதியான படிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், எதோ சாட்டுச் சொல்லி தட்டிக்கழித்து விட்டான். அதை அவனால் இன்னும் மறக்க முடியவில்லை. ஒருவேளை தான் அதை எடுத்து இருந்தால், அவர்களின் வாழ்வில், அந்த வாடகைப் பணத்தால், கொஞ்சம் முன்னேற்றம் கண்டு இருக்கலாம் என்பது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது.
"சின்னஞ் சிறுசுகளை பேத்தியாருடன்
லைன் குடிசையில் விட்டுவிட்டு,
மலைஉச்சியில் தேயிலைக் கொழுந்தை
அலைந்து அலைந்து பறித்து எடுத்து,
கோதுமை ரொட்டியும் சாம்பலும்
அரை வயிறுக்கு நிரப்பிக் கொண்டு,
உறங்கிடும் மழலைக்கு தாய்ப்பாலை
ஊட்டுவார் - கால் நீட்டி இளைப்பாறுவார்,
ஓடுவார் - மீண்டும் அடுத்தநாள் மலைக்கே,
வாழ்க்கையின் சக்கரம் இது ஒன்றே!"
என்ற கவிதை வரி அவன் மனதில் மலர்ந்து மலை நாட்டு தமிழரின் இன்ப துன்பங்களின் வெளிப்பாடாக அது இருந்தது. ராஜன் முதலியாரின் அந்த வீடு தன் தலைக்கு மேல் கூரையாக மட்டும் மாறாமல் காதல் மற்றும் சவால்களின் எதிர்பாராத பயணத்திற்கு தன்னை அழைத்துச் செல்லும் என்று கவிக்கு அன்று தெரியாது. ராஜன் முதலியாருக்கு மீரா என்ற மகள் இருந்தாள், அவளுடைய அழகும் புத்திசாலித்தனமும் நாளடைவில் கவியின் கவனத்தை ஓரளவு ஈர்த்தது என்றாலும், அவன் அதை வெளிக்காட்டவில்லை. அவனின் நோக்கம் எல்லாம் அமைதியான சூழலில் படிப்பை தொடருவது மட்டுமே. ஒரு நாள் மாலை மீரா தனது உயர் கல்லூரி வகுப்புகளை முடித்து வீடு திரும்பியபோது, நேரடியாக இருவரும் சந்தித்தனர். அவள் ஒரு புன்முறுவலுடன், ' நீங்க கொஞ்சம் பிரீ என்றால், எனக்கு ஒரு கணக்கு புரியவில்லை, விளங்கப் படுத்துவீர்களா?' என்று கேட்டபடி மாடிக்கு போய்விட்டாள். எனவே அவன் அவளின் கேள்வியை பொருட்படுத்தவில்லை. அவனும் தன் அறைக்கு போய்விட்டான்.
ஆனால் ஒரு மணித்தியாலத்தின் பின், தனது அறைக் கதைவை யாரோ தட்டுவது கேட்டு, கவி திறந்தான். அங்கே முதலியார் ராஜனின் மனைவி நின்றார். ' சாரி, தம்பி நீங்க பிரீ என்றால், மீராவுக்கு எதோ பாடம் விளங்கவில்லையாம், கொஞ்சம் சொல்லிக்கொடுக்க முடியுமா?', என்று கேட்டார். அவன் கொஞ்சம் யோசித்து விட்டு, ஒரு அரை மணித்தியாளத்தால் அனுப்புங்க என்றான். ' இல்லை, நீங்க மேலே வசதியாக படிக்கும் அறை இருக்கு, அங்கு வந்தால் நல்லது தம்பி' என்று இழுத்தார். அவன் ஓகே என்றுவிட்டு தன் அறைக்குள் உடன் போய்விட்டான்.
"கொழுந்து கிள்ளும் கோதையர்க்கே மாலைசூடுங்கள் - அவர்கள்
கோடி செல்வம் தேடித்தரும் திறனைப்பாடுங்கள்!
விழுந்தெழுந்து தளர்ந்திடாமல் மலைச்சரிவிலே - கொழுந்தை
விரைந்தெடுக்கும் விரலசைவின் அழகைக் கூறுங்கள்!"
எங்கேயோ கேட்ட ஒரு பாடல் அவனுக்கு நினைவு வந்தது. அதை மனதில் ரசித்தபடி, மேல்மாடிக்குப் போனான். படிப்பு அறை ஒரு சிறு நூல்நிலையம் மாதிரி, பல விதமான புத்தகங்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ' நன்றி' என்று மெல்லிய குரலில் கூறியபடி, தனது சந்தேகத்தை நேரடியாக, உடனடியாகவே கேட்கத் தொடங்கினாள். அவனும் வந்த வேலையை முடித்துவிட்டு போவோம் என்று, உடனடியாகவே பாடத்தை விளங்கப்படுத்த தொடங்கினான். என்றாலும் கண்கள் நாலும் மௌனமாக ஏதேதோ பேச மறக்கவில்லை. கண்களுக்கு தெரியுமா அது காணப்போகும் பிரச்சனைகள்?
'மையோ மரகதமோ மரிகடலோ மலை முகிலோ
அய்யோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்'
அவன் நிறம் மையோ, பச்சை நிற மரகதமோ, மறிக்கின்ற நீலக்கடலோ, கார்மேகமோ, ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவை கொண்டு உள்ளானே என்று அவளின் இரு கண்களும்,
‘கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும்' என்ன மதர்க்கும் விழி கொண்டாள்;
சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும், சுவரும், திண்
கல்லும், புல்லும், கண்டு உருக, பெண் கனி நின்றாள்’
கொல்லும் வேலையும், கூற்றத்தையும் வெல்லும் என்னுமாறு இவளது விழி மதமதத்து, இவளது அழகைக் கண்டு குன்று, சுவர், கல், புல் அனைத்தும் உருகுமாறு கனியாகி நிற்கிறாள் என்று அவனும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். நாட்கள் வாரங்களாக மாற, கவி மீரா இருவரும் வெளிப்படையாகவே காதலிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் அடிக்கடி பேசாத வார்த்தைகளால் நிரப்பப்பட்ட பார்வைகளைப் பரிமாறிக் கொள்வார்கள், மேலும் அவர்களின் உரையாடல்கள் சிரமமின்றி படிப்பித்தல், பாடம் கேட்கிறேன் என்ற நிகழ்ச்சிகளுக்குள் பின்னிப்பிணைந்து இருந்தன. இருப்பினும், அவர்களின் மலர்ந்த காதல் தடைகள் இல்லாமல் இல்லை.
மீராவின் குடும்பம் பாரம்பரிய மலையக மதிப்புகளை தன்னகத்தே கொண்டு, தங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக வைத்திருந்தது. அவர்களின் மனதில் எதோ ஒரு மூலையில் யாழ் மேலாதிக்கம் பற்றிய தவறான புரிந்துணர்வு குடிகொண்டு இருந்தது. உண்மையில் யாழ் மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். உண்மையில் யாழ் மேலாதிக்கம் என்பது பொதுவாக யாழ் மக்களை குறிக்காமல் அந்த சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றது என்பதே சரியானதாகும். ஆனால் அதை புரியும் அறிவு ராஜன் குடும்பத்தாரிடம் இருக்கவில்லை.
மேலும் தங்கள் மகளை, தங்களுடைய வீட்டில் தற்காலிகமாக வசிக்கும் ஒரு குடியிருப்பாளன் காதலிப்பது ஒரேயடியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. முதலியார் ராஜன், கவியை விரும்பினாலும், அவனின் குடும்பம் பற்றி சரியாகத் தெரியாதது ஒரு தடையாகவும் இருந்தது. எனவே தன் மகளிடம் கவியில் இருந்து விலகி இருக்கும் படி அறிவுறுத்தினார். அத்துடன் கவியையும் தங்களுக்கு விருந்தினர் சில மாதங்களுக்கு வருவதாகவும், வேறு வீடு பார்க்கும் படி கூறினார். என்றாலும் உண்மையான காரணத்தை அவனுக்கு கூறவில்லை. ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அவன் நம்பியதால், அவன் தான் முன்பு கடைசியாக பார்த்த அந்த கூட்டு குடும்ப வீட்டுக்கு, ராஜன் குடும்பத்துக்கு இதுவரை தங்க இடம் கொடுத்ததுக்கு நன்றி கூறிவிட்டு, புறப்பட்டுவிட்டான். ஆனால் மீரா அவனுக்கு விடைகொடுக்க முன்னுக்கு வரவில்லை. அப்பத்தான் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. என்றாலும் அவன் அதை காட்டிடாமல், விடை பெற்று சென்றான். என்றாலும் மீரா, தன் பூட்டிய அறைக்குள் சாளரத்தினூடாக அவன் போவதையே கண்ணீருடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
"முதல் பார்வையில் உன்னை அறிந்தேன்
மறுபார்வையில் உலகம் கண்டேன்
விழி அசைவினில் உன் விழி தேடினேன்
கனவினில் திளைத்து காவியங்கள் படைத்தேன்
எப்படியும் உன்னை மீண்டும் சந்திப்பேன்
தப்பான எண்ணத்தை சுக்கு நூறாக்குவேன்!"
என்று அவள் வாய் முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. சவால்கள் இருந்தபோதிலும், மீரா பெற்றோரின் இதயத்தை வென்று அவர்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். கவியின் வாடகை வீடாக இருந்த தங்கள் வீடு, அவனுக்கு நிரந்தர வீடாக மாறவேண்டும் என்பதே இப்ப அவளின் தினப் பிரார்த்தனையாக இருந்தது.
நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment