அறிவியல்=விஞ்ஞானம்
துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
பாலைவனத்திற்கு
நடுவே வளர்ந்த பிரமாண்டமான நகரம் துபாய். இந்த நகரத்தில் எங்கு சென்றாலும் வாகனங்களில்
தான் செல்ல வேண்டும். நடந்து செல்வதை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. மொத்த ஜனத்தொகையில்
13 சதவீதம் பேர் மட்டுமே நடைபாதைகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம், அங்கு நிலவும்
கடுமையான வெப்பமும், பாலைவன புழுதியும் தான்.
வரும்
2040ம் ஆண்டிற்குள், பாதசாரிகளின் சதவீதத்தை 13ல் இருந்து 25 ஆக உயர்த்துவதற்கு அந்த
நாடு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 6,500 கிலோ மீட்டர் நடைபாதையை உருவாக்க இருக்கிறது.
ஏற்கனவே இருக்கும் 2,300 கி.மீ., நடைபாதை இதில் இணைத்துக் கொள்ளப்படும். இதற்கு, 'துபாய்
வாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக துபாய் உலக வர்த்தக மையம், அருங்காட்சியகம், மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் 2 கி.மீ., நீளமும், 50 அடி அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட உள்ளது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் தெரிவித்துள்ளார். இது, 10 முக்கிய இடங்களை இணைக்கிறது. இதன் மொத்த பரப்பளவில் 30,000 சதுர மீட்டர் நடைபாதை முழுக்கவே, 'ஏசி' முதலிய உபகரணங்களால் குளிரூட்டப்படும். இன்னும் உள்ள 30,000 சதுர மீட்டர் நடைபாதை முழுக்கவே, பசுமையான சூழலில் நிழல் உள்ளபடி அமைக்கப்படும்.
அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் இணைந்து இதை செய்ய உள்ளன. முதல்கட்ட பணி 2025யிலிருந்து 2027க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கும், நகரத்தை அழகாக மாற்றவும் இது பயன்படும். இதனால், மக்களின் உடல் நலனும், சுற்றுச்சூழலும் ஒருங்கே காக்கப்படும்.
கைக்கடிகார பட்டையால் வரும் ஆபத்து
இன்றைக்கு ஸ்மார்ட் வாட்ச் மிகப் பிரபலமாகி வருகிறது. நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு துாரம் நடக்கிறோம், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு என்ன என்பன போன்ற விபரங்களை இது கண்காணிக்கிறது.
ஆரோக்கியம் கருதி இவற்றை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்த கடிகாரத்தை அணிய நாம் பயன்படுத்தும் பட்டைகளால் (ஸ்ட்ராப்) உடல்நல கோளாறுகள் ஏற்படும் என்று கூறுகிறது.
பாலி ப்ளுரோ அல்கைல் சப்ஸ்டன்ஸ் - பி.எப்.ஏ.எஸ்., (Poly fluoroalkyl
substances - PFAS) என்பவை, பல்வேறு துறைகளில் பயன்படக்கூடிய ஒரு வேதிப் பொருள். தண்ணீர், எண்ணெய் ஆகியவை ஒட்டாது என்பதால், இது துணிகள், குடை ஆகிய பொருட்கள் மீது பூச்சாகப் பயன்படுகிறது. இது சாதாரணமாக மட்குவது இல்லை. அதனால் தான் இவற்றை, 'நிரந்தர வேதிகள்' (Forever
chemicals) என்று கூறுகின்றனர். இவை நம் உடலுக்குள் ஊடுருவினால், நீரிழிவு முதல் புற்று நோய் வரை ஏற்படும்.
நாம் நம் தோலை ஒட்டி அணிகிற கடிகார பட்டையில் இருந்து, இந்த ஆபத்தான வேதிப் பொருட்கள் நம் உடலுக்குள் நுழைகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியானா பல்கலை, 22 வெவ்வேறு கடிகார நிறுவனங்களின் கடிகாரப் பட்டையை சோதித்துப் பார்த்தது. அவற்றில், ஒன்பது தயாரிப்புகளில் இந்த ஆபத்தான வேதிப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாதாரணமாக அழகு சாதன பொருட்களில் பயன்படும் நிரந்தர வேதிகளின் அளவை விட, இவற்றில் நான்கிலிருந்து எட்டு மடங்கு அதிகமாக இருந்தன.
இதனால், கைக்கடிகாரம் வாங்குபவர்கள் அதன் பட்டையை அணிவதற்கு முன், அதில் உள்ள வேதிப் பொருட்கள் என்னென்ன என்பதை உரிய நிறுவனங்களிடம் இருந்து தெரிந்து அணிவது நல்லது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.
அரிசியில் க்ளைசிமிக் குறியீடு
ஓர் உணவை
உண்டவுடன் அது எவ்வளவு வேகமாக ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பது தான் அந்த
உணவின் க்ளைசிமிக் குறியீடு (Glycemic index). இப்போது பயன்பாட்டில் உள்ள அரிசியில்
இது அதிகம். அதனால் தான் அரிசி உணவு அதிகம் உண்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
குறைவான க்ளைசிமிக் குறியீடு உள்ள அரிசி வகைகளை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் ஆய்வுகள்
மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்துண்ணிஅணில்கள்
அணில்கள்
என்றால் பழங்கள், கொட்டைகள் ஆகியவற்றை உண்ணும் சைவப் பிராணி என்று தான் நினைத்திருப்போம்.
ஆனால், அவை அனைத்துண்ணிகள். சில நேரங்களில் சிறிய பூச்சிகள், பறவைகளின் முட்டைகள்,
பல்லிகள் ஆகியவற்றையும் உட்கொள்கின்றன. ஆனால், முதன்முறையாக அணில்கள் வேட்டையாடி ஓர்
உயிரைக் கொன்று உண்பதை கலிபோர்னியா மாகாணத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கின்றனர்.
இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு என்று கூறுகிறார்கள்.
காபியில் சர்க்கரை நல்லதா, கெட்டதா?
நமக்கு மிகவும் பிடித்தமான பானம் காபி. காபி உடலுக்கு நல்லதா, கெட்டதா என்று மாறி மாறி, பல்வேறு ஆய்வுகள் பலவிதமான முடிவுகளைத் தெரிவித்து வருக்கின்றன.
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் காபியில் சர்க்கரை சேர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராய்ந்து இருக்கின்றனர்.
எலிகளை வைத்து காபியைச் சோதித்துப் பார்த்தனர். எலிகளுக்கு 1 சதவீத கேபைன் (Caffeine), ஒரு சதவீதம் சுக்ரோசும், 0.1 சதவீதம் சாக்கரினும் கலந்த நீரைக் கொடுத்தனர். இதைப் பருகியதும் எலிகள் மிகவும் சுறுசுறுப்பாக மாறின.
இரவில் மட்டுமே இயங்கும் சில எலிகள் பகலில் கூட சுறுசுறுப்பாகின. எலிகளை இருட்டில் அடைத்து வைத்த போதிலும் கூட அவை துாங்கவில்லை.
இதிலிருந்து கேபைனுடன் இனிப்பு சேரும்போது, அது மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.பொதுவாக நாம் காபி குடிக்கும் போது மூளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் டோபோமைன் ஹார்மோன் சுரக்கிறது. இதுதான் துாக்கம் வருவதைத் தடுக்கிறது. இதனுடன் இனிப்பும் சேரும் போது, விளைவுகள் இன்னும் நன்றாக இருக்கின்றன. எனவே இரவு துாக்கம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது.
அதிக நேரம்
விழித்திருந்து வேலை செய்ய வேண்டும் என்பவர்கள் காபியில் இனிப்பைச் சேர்த்துக் கொள்வது
நல்லது. இதனுடன் பாலையும் சேர்த்துக் கொள்வது இன்னும் நன்மையைக் கொடுக்கும் என்று விஞ்ஞானிகள்
கூறுகின்றனர்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment