சினக்க வைக்கும் மலச் சிக்கல்

'மூன்று நாளாக மலம் போகவில்லை. சரியான கஸ்டமாக இருக்கு' என்றார் ஒருவர்.

'எனக்கு சரியான மலச்சிக்கல்' என்ற மற்றவரது முகம் சரியான கவலையில் இருந்தது போலத் தெரிந்தது.

மலம் இறுகிக் கஸ்டப்படுகிறார் போல இருக்கு என எண்ணி 'எப்ப கடைசியாக மலம் போனது' என்று கேட்டேன். 'காலமை போனது. வழக்கமாக எனக்கு ஒவ்வொரு நாளும் 1-2 தரம் போறது. இப்ப 2 நாளைக்கு ஒரு தரம்தான் போகுது' என்றார்.

ஆம். இந்த மலச்சிக்கல் என்ற சொல்லின் அர்த்தம் ஆளுக்காள் மாறுபடும்.

எத்தனை நாளுக்கு ஒருக்கால் மலம் வெளியேறும்? அல்லது தினமும் வெளியேறுமா? அதன் தன்மை மிக இறுகியதா இல்லையா? சாதாரணமாக வெளியேறுமா அல்லது முக்கித்தான் வெளியேற்ற வேண்டுமா போன்ற பல விடயங்களை மலச்சிக்கல் என்ற சொல்லாடல் உள்ளடக்குகிறது.

பொதுவாக வாரத்திற்கு மூன்று முறைக்கு குறைவாகவே மலம் வெளியேறுவதையே மலச்சிக்கல் என்பார்கள். மலச்சிக்கலின் போது மலம் இறுக்கமாகவும் ஈரலிப்பின்றி காய்ந்தும் இருக்கும். அத்துடன் மலம் சிறுசிறு கட்டிகளாகவும் வெளியேறலாம். அத்துடன் மலத்தை வெளியேற்றுவதற்கு அதிக முயற்சி எடுத்து முக்க வேண்டியிருக்கலாம். எவ்வளவு முயன்றும் மலம் முழுமையாக வெளியேறவில்லை என்ற உணர்வு ஏற்படுவதும் மலச்சிக்கலில் அடங்கும். மலவாயிலில் எரிவு நோ போன்ற வேதனைகளோடு மலம் வெளியேறுவதும் இதில் அடங்கலாம்.

மலம் கழித்த பின்னரும் முழுமையாக மலம் வெளியேறவில்லை என்ற உணர்வு ஏற்படுவதும், மலம் தானாக வெளியேற முடியாது இருப்பதால் விரல்களைப் போட்டு அகற்ற வேண்டி நேர்வதும் மலச்சிக்கலில் அடங்கும்.

தினமும் மலம் வெளியேறுவதுதான் உணவு குழாயினதும், சமிபாட்டுத்தன்மையினதும் ஆரோக்கியத்திற்கான அறிகுறி என்றே பலரும் நம்புகிறார்கள். உண்மையில் அவ்வாறில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு தடவையே வழமையாக மலம் வெளியேறுபவரின் ஆரோக்கியம் தினமும் வெளியேறுபவரது ஆரோக்கியத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.

உலகளவிய ரீதியில் 16 சதவிகிதமானவர்களுக்கு மலச்சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. அதே நேரம் பெண்கள் ஆண்களைவிட அதிகமாக மலச்சிக்கலால் பாதிக்கப்படுவதும் அவதானிக்கப்படுள்ளது. பொதுவாக வயதானவர்களிடையே மலச்சிக்கல் ஏற்படுவது அதிகம். அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில் 33 சதவிகிதமானவர்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகிறார்களாம். அதே போல குழந்தைகளிலும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. படுக்கையில் கிடக்கும் நோயாளிகளிலும் ஏற்படலாம். பல கர்ப்பணிப் பெண்களுக்கும் அதிகம் ஏற்படுகிறது.

 

இது ஏன் ஏற்படுகிறது?

நாம் உண்ணும் உணவானது இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் சமிபாடடைந்து பெருங்குடலை அடைகிறது. இங்கு நீரும் மீதமிருக்கும் போசணைகளும் உறிஞ்சப்பட்ட பின்னர் கழிவுகள் மலமாக மலக்குடலை அடைக்கின்றன.

தவறான உணவு முறையே மலச்சிக்கலுக்கு பிரதான காரணமாகிறது. நார்ப்பொருள் குறைந்த உணவுகளை உண்பதும் போதிய நீராகாரம் உட்கொள்ளாமையுமே முக்கியமானவை.

நார்ப்பொருள் அதிகமுள்ளவை தாவர உணவுகளோயாகும். காய்கறிகள், பழவகைகள், போதியளவு எடுக்க வேண்டும். இலை வகை உணவுகளிலும், பயறு பருப்பு உழுந்து போன்ற பயற்றின உணவுகளிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. அதே போல வாழைப்பழம், பப்பாசி உட்பட நார்ப்பொருள் உள்ள உணவுகளையும் தினசரி போதியளவு உணவில் சேர்க்க வேண்டும்.

இதைச் சொன்னவுடன் பல நோயாளிகள் நான் மரக்கறி சாப்பாடுதான் சாப்பிடுறனான் என்று சொல்வார்கள். ஒரு பானை சோற்றிற்கு ஒரு தேக்கரண்டி அளவு மரக்கறி சேர்த்திர்களா என நான் கிண்டல் அடிப்பதுண்டு. எனவே முக்கியமானது எவ்வளவு அதிகமாக பழங்களையும் காய்கறிகளையும் உண்பதுதான்.

போதிய நீராகாரம் அருந்தாமை, உடல் உழைப்பு இல்லாமல் சோம்பிக் கிடப்பது, மலங்கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால் அதை அலட்சியப்படுத்தி தாமதிப்பது, மலங்கழிக்கும் ஒழுங்கானது, பிரயாணம் போன்றவற்றால் குழம்புவது போன்றவையும் காரணங்களாகலாம்.

சிலவகை மருந்துகளும் மலச்சிக்கலை சிலரில் ஏற்படுத்துவதுண்டு குடல் புண்ணுக்கு குடிக்கும் பாணி மருந்துகள், வலிநிவாரணி மருந்துகள், கல்சியம் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் எனப் பல உண்டு.

நீரிழிவு, பக்கவாதம், பார்க்கின்சன் நோய் போன்ற சில நோய்களும் மலக்குடலின் இயல்பான செயற்பாட்டை குறைத்து மலச்சிக்கலைக் கொண்டு வருவதுண்டு. தைரொயிட் சுரப்பி குறைபாட்டு நோயும் மலச்சிக்கலை கொண்டு வருவதுண்டு. புற்றுநோய் கட்டிகளும் காரணமாகலாம்.


நீங்கள் என்ன செய்ய வேண்டும்

ஏற்கனவே குறிப்பட்டது போல நார்ப்பொருள் அதிகமுள்ள காய்கறிகள் பழவகைகள் போன்றவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். போதிய நீராகாரம் அருந்துங்கள்.

கோப்பி அருந்துவதைத் தவிருங்கள். அது மலச்சிக்கலை மோசமாக்கும். மதுபானமும் அதே போல மலச்சிக்கலை மோசமாக்கும் என்பதால் மது அருந்துவதையும் தவிருங்கள். அதே நேரம் இறைச்சி முட்டை, பால், சீஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுக்காது அளவோடு உண்ணுங்கள்.

தினமும் உடலுழைப்பில் ஈடுபடுங்கள் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். மலச்சிக்கல் மருந்துகளை கண்டபடி உபயோகிக்க வேண்டாம். அவை உடனடியாக மலத்தை இளக்கினாலும், அடிக்கடி உபயோகிக்கும் போது மலக்குடலின் செயற்திறனைப் பாதித்து மலச்சிக்கலை மோசமாகவே செய்யும்

மலச்சிக்கல் கடுமையாகவும் தொடர்ந்து நீடிக்கவும் செய்தால் சில பின்விளைவுகள் ஏற்படக் கூடும். முக்கியமாக மூலநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல மலவாயிலில் வெடிப்பு, புண்கள் ஆகியவையும் தோன்றலாம். மலக் குடல் இறங்குவதற்கான சாத்தியங்களும் உண்டு.

எனவே மலச்சிக்கல் ஏற்கனவே கூறப்பட்ட சுயபாராமரிப்பு முறைகளால் குறையவில்லை எனில் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். அவர் விரல் வைத்து குதப் பரிசோதனை செய்து பார்ப்பார். சில இரத்தப் பரிசோதனைகளும் செய்யக் கூடும். மலக் குடலினுள் குழாய் விட்டு பரிசோதனையும் செய்யக் கூடும்.

பொதுவாக மலச்சிக்கல் உயிர் ஆபத்தான பிரச்சனை அல்ல என்றபோதும் கவனத்தில் கொள்வது அவசியம்.

 

டொக்டர். எம்.கே.முருகானந்தன்/குடும்ப மருத்துவர்/வடமராட்சி, பருத்தித்துறை, வியாபாரிமூலை.

0 comments:

Post a Comment