"பொய் சாட்சி"- சிறு கதை



ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம்

தீவீரம் அடைந்தது.

 

ஆனால், இலங்கையில் நீடித்த மற்றும் அழிவுகரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக நீடித்த யுத்தம், தேசத்தின் மீது ஏற்படுத்திய வடுக்களை கலைவதற்குப் பதிலாக அது நீடிப்பதைத் தான் காண முடிந்தது. உதாரணமாக போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கூட  வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டே இருந்தன இந்த சூழலில் தான் சர்வதேச அழுத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கம், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தான் விசாரணைகளை ஆரம்பிப்பதாக ஆரம்பித்தது.

 

எனவே,  திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து 11 வருடங்களாக தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்செல்வி, இறுதி யுத்தத்தில் தனது தாய் தெய்வானையை இராணுவம் விசாரணைக்கு என கூட்டிச் சென்றதாகவும், அதன் பின் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும், அதற்கான பதிலை இராணுவம் அல்லது அரசு தராமல் காலம் கடத்தி வருவதாகவும், இன்று தன் தாய் காணாமல்போனோர் பட்டியலில் உள்ளடங்கி விட்டதாகவும், எனவே தனக்கு வெளிப்படையான மறுமொழியுடன், நீதி வழங்கப்பட வேண்டும் என்று, 2020 ஆண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30-ஆம் தேதி நீதி மன்றத்தில் முறையிட்டார்.

 

முதல் நாள் வழக்கில் தமிழ்செல்வி, நீதிமன்றத்தில் எழும்பி

 

"கனம் தங்கிய நீதிபதி அவர்களே என் அம்மா காணாமல் போகவில்லை! காணாமல் ஆக்கப்பட்டார்" என்று தனது முறையீட்டை கூறத்தொடங்கினார்.

விவிலியம், தொடக்க நூல் 4: 9 ஒரு எடுத்துக்காட்டாக  எடுத்து

 

"ஆண்டவர், காயினிடம், 'உன் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவன் 'எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்றான். காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. ஆபேலின் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து கதறிக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார். காயின் ஆபேலைக் கொன்று புதைத்துவிட்டான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆதாமும் ஏவாளும்தான் உலகின் ஆதி மாந்தர்கள் என்பதை நம்புகிறவர்களுக்கு, காணாமற்போன முதல் மாந்தன் ஆபேல் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை, காணாமலாக்கப்பட்டான். தொலைந்து போகவில்லை, தொலைத்துக் கட்டப்பட்டான். ஆபேலின் மறைவுக்குப் பொறுப்புக் கூறும்படி ஆண்டவர், காயினைக் கேட்டார். நாமறிந்த முதல்பொறுப்புக் கூறல்’ (ACCOUNTABILITY) கோரிக்கை இதுவே கனம் நீதிபதி அவர்களே" என்று தன் வாதத்தை தொடங்கினார்.

 

"இப்போது ... நம் காலத்தில்இலங்கைத் தீவுநாட்டில்என் கணவர்  எங்கே?” என்று ஒரு மனைவி கேட்கிறார். “என் மகன் எங்கே?” என்று ஒரு தாய் கேட்கிறார். எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே .. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட, அவரா, இதோ இங்கே இருக்கிறார்என்று விடை கிடைக்கவில்லை. ஆக அவர்களின் சாத்வீக போராட்டம் தொடர்ந்து தினமும் நடைபெறுகிறது கனம் நீதிபதி அவர்களே. அந்த வரிசையில் தான், எங்கள் வீடு வந்து, என் அம்மாவை கூடிச் சென்ற இராணுவம் இன்னும் என் கேள்விக்கு முடிவு தராமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறது. சிலோனாக இருந்த இலங்கைத் தீவு 1972இல் சிறிலங்கா குடியரசான பிறகுதான் காணாமல் ஆக்கும் நடைமுறைகள் இங்கு பரவலாயின. அதில்  என் அம்மாவும் இப்ப ஒருவர், கனம் தங்கிய நீதிபதி அவர்களே"

 

தமிழ் செல்வியால் தொடர்ந்து வாதாட முடியாமல் கண்ணீர் இரு கன்னங்களாலும் கீழே ஒழுகி அவள் மார்பையும் நனைத்தது. கொஞ்ச நேரம் அவள் அமைதியாக இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு கண்ணகியின் ஞாபகம் வந்தது.  

 

"வாயிலோயே வாயிலோயே

அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே

இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று

அறிவிப்பாயே அறிவிப்பாயே" 

 

என்ற கண்ணகியின் வழக்குரை பாணியை நினைத்தால், உடனே எழும்பி

 

"காணாமல் ஆக்கப்பட்டவர்களது குருதியின் குரல்ஆபேல் சிந்திய குருதியின் குரலைப் போலவே, கனம் தங்கிய நீதிபதி அவர்களே  - மண்ணிலிருந்து கதறிக் கொண்டே இருக்கும். உலகத்தின் உளச்சான்றுக்குச் செவி இருந்தால் அந்தக் குரல் கேட்கும். நீதி கிடைக்கும்!, உங்களை நம்புகிறேன்!!" அவள் சுருக்கமாக தன் முதல் வாதத்தை நீதிமன்றத்துக்கு முன் வைத்தாள்.

 

ஆனால் அரசு மற்றும் இராணுவத்தின் சார்பில் இந்த காணாமல் போகும் போது, ​​இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்தவர் தனது சாட்சியை முன் வைத்தார்.

 

"போரின் போது சரணடைந்தர்கள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் உரிய முறையில் செயலாக்கப்பட்டதாக" அவர் கூறி, மேலும் "யுத்தத்தின் இறுதியிலும் அதன் பின்னும் கூட , நாங்கள் ஒரு நல்ல அமைப்பைக் கொண்டிருந்தோம், அங்கு நாங்கள் அழகான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அல்லது விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட  மக்கள் திரும்பி வருவதில்லை - அது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட கதை,” என்று அவர் ஒரு கேலி புன்னகையுடன் கூறினார்.

 

அதன் பின், காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சாட்சி அளித்த ஒரு உயர் அதிகாரி, அங்கு தடயவியல் நிபுணர்கள், சாட்சிகளைப் பாதுகாக்கும் பிரிவுகள் மற்றும் விசாரணை அதிகாரங்களைக் கொண்டு இருந்தாலும் அதற்கு  குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அதிகாரம் இல்லை என்றும் அலுவலகம் சந்தேக நபர்களை வழக்கறிஞரிடம் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் கூறினார்.

 

அதை தொடர்ந்து தமிழ்செல்வி மீண்டும் சாட்சி கூண்டில் ஏறினாள். அவள் கையில் கண்ணகி வைத்திருந்த அந்த உடையாத மற்ற சலங்கை இருக்கவில்லை, ஆனால், அவள் நடுங்கும் கைகளில் நான்கு மங்கலான புகைப்படங்கள் இருந்தன. அவள் கண்ணீர் இன்னும் ஒழுகிக்கொண்டே இருந்தது.

 

"2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், வீட்டிற்கு வந்த இராணுவ புலன் விசாரணை குழு ஒன்று தான் என் அம்மாவை,  வலுக்கட்டாயமாக பேருந்து ஒன்றில் மற்றும் பலருடன்  ஏற்றினர். நான் எனது அம்மாவுடன் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது, ​​அவர்கள் மறுத்துவிட்டார்கள்என்று கூறி அதற்கு சான்றாக அந்த நாலு படங்களையும் நீதிபதியிடம் கொடுத்தார். இதை எதிர்பாராத அரச சாட்சிகள் கொஞ்சம் தடுமாறினார்கள்.

 

"நான் உங்களிடம் பணிவாக கேட்பது என் அம்மா கொல்லப்பட்டாரா  அல்லது உயிருடன் இருக்கிறாரா? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு?  அதை விட்டு நட்டஈடு அல்ல"

 

அவள் உறுதியாக கூறினாள். இதைத்தொடர்ந்து, மேலும் சர்வதேச அழுத்தத்தின் கீழும், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்தது.

 

இருப்பினும், உண்மையைத் தேடுவதற்கான உண்மையான முயற்சிகளுக்கு மத்தியில், ஒரு மோசமான சதி வெளிப்பட்டது. அங்கே  ஒரு பிரிவு, மறைமுக நோக்கங்களால் உந்தப்பட்டு, பழியை மாற்றுவதற்கும், ஏதேனும் சாத்தியமான தவறுகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும் ஆதாரங்களை உருவாக்க முடிவு செய்தது.

 

போலியான சாட்சியங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்ற வடிவங்களை சோடித்தது. அதற்கு வடக்கு, கிழக்கு சில தமிழ் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கூட விலை கொடுத்து வாங்கியது. இந்த மோசடி மற்றும் பொய் சாட்சிகள், அதிகாரத்தின் துணையுடன் தாண்டவம் ஆடியது.

 

"விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும்,

பிரிவஞ்சாது அவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்

கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி,

எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?"

 

காஞ்சிப் பூ மலர்ந்தது. குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்தில் பிரிந்திருக்கலாமா? நானும் மறைக்கத்தான் பார்க்கிறேன் முடிய வில்லையே! 'பொய் சாட்சி' சொன்னவன் வந்து கீழே நின்ற மரம் பட்டுப் போனது போல இருக்கிறதே என் நிலை ! என்கிறாள் ஒரு சங்க தமிழிச்சி! அப்படித்தான் இந்த 'பொய் சாட்சி'கள் அவள் மனதில் ஓரளவாவது துளிர்த்து இருந்த நம்பிக்கையை பட்டுப் போக செய்துவிட்டது. 

 

ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது"  என்ற பிளேட்டோ வின் வசனம் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்ப நீதி மன்றத்தை நாடுவதை அவள் நிறுத்திவிட்டாள். அதிகாரத்தில் இருக்கும் பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ?

 

நன்றி :[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment