உலகமகா நடிகையடி நீ! + "சமாதானம்" + "விலைவாசி"

 கவிதைகள்: 


உலகமகா நடிகையடி நீ!

உலகமகா நடிகையடி நீ,
உண்மை மறைத்து வாழ்கின்ற நீ.
பொறுமை இழந்து புலம்புகின்றேன்,நீ 
பொய்மையின் விம்பமாய்  காண்கிறேன்.

ஒவ்வொருவர்க்கொரு  முகமொன்றெடுத்து,
உன்உள்ளத்தின் பாங்கை மறைப்பதெதற்கு?
என் முன் புலியாய் சினம்காட்டுகிறாய், நீ 
அந்நியர்முன் பசுவாய் சிரிக்கின்றாய்.

வார்த்தையில் வலியும், பார்வையில் சாயல்,
மனதின் பாழையும் மறைப்பது காயல்.
அறியாதவர் முன் தாழ்ந்த முகமடி,உன் 
அறிந்தவர் முன் உருக்கம் தவறல்லடி.

எத்தனை நாளுக்கடி இப்படிச் சாக்கு,
எந்நாள்தான் உனது உண்மை வெளிக்கு?
முகமூடி களையும் நேரம் வருமோ,
மனதின் கனலுக்கு அமைதி தருமோ?

நாடக முத்திரை நீக்கி வாழ்வாய்,
உண்மையின் வேரை உறுதிச் செய்யாய்.
உயிர்க்களின் நெஞ்சம்  உண்மை உணரும்,
அதில் தான் வாழ்வின் மகிழ்ச்சி திகழும்.

👧எண்ணம்:செ.மனுவேந்தன் 


"சமாதானம்"


"விட்ட பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்டு
சட்டம் எல்லோருக்கும் பொதுவாக மாற்றி 
போட்ட தடைகளை நீதியாய் நீக்கி  
நட்ட ஈடுகளை வெளிப்படையாகச் சொல்லி 
கட்டி எழுப்பு அமைதியான சமூகத்தை!"

"இருஇனம் வாழும் ஒரு நாட்டில் 
இணக்கம் கண்டு இதயம் பரிமாறி 
இழிவு படுத்துவதை உணர்ந்து நிறுத்தி 
இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு
இனியாவது மன்னிப்புக்கேள் ஒற்றுமை பிறக்கும்!"

"இரண்டாயிரம் ஆண்டுகளாய் வாழும் இனத்தை 
இந்த நாட்டின் பூர்வீக குடிகளை 
இதயமற்று நசுக்குவதை உடனே நிறுத்தி 
இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து
இருகையாலும் அணைத்தால் மலர்வது சமாதானமே!" 

💁[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
.........................................

"விலைவாசி"

[இரட்டைக் கிளவி]

"கிசுகிசு ஒன்றைக் வானொலியில் கேட்டேன் 
கிறுகிறு என்று தலை சுற்றுதே! 
மலமலங்க விழித்து சட்டைப்பை   பார்த்தேன் 
வெடுவெடு என நடுக்கம் வந்ததே!"

"நறநற என்று பல்லைக் கடித்தேன் 
குளுகுளு அறைக்கு விடை கொடுத்தேன் 
கரகரத்த குரலில் மனைவியைக் கூப்பிட்டேன் 
பரபரக்க வைக்கும் செய்தியைச் சொன்னேன்!"

"கிடுகிடு என்று விலைவாசி கூடிற்று 
தகதக மின்னும் உன் மேனியும்  
நொகுநொகு என்று மாவை அரைக்கணும்
மாங்குமாங்கு என தினம் உழைக்கணும்!" 
👲[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
............................................

0 comments:

Post a Comment