விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம் 



செயற்கை வெளிச்சத்தில் தூக்கமின்மை

சீனாவைச் சேர்ந்த எஸ்.யு.எஸ்.டி., பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரவு நேரம் செயற்கை வெளிச்சத்தில் இருப்பதற்கும் தூக்கமின்மைக்குமான தொடர்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதிகமான செயற்கை வெளிச்சம் பயன்படுத்தப்படுகின்ற நகரங்களில் தான் தூக்கமின்மையால் அவதிப்படும் நோயாளிகளும் அதிகம் உள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

இதய ஆரோக்கியம் காக்கும் ப்ளேவனால்

விதைகள், கோக்கோ, க்ரீன் டீ, சில வகை பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள ஒரு முக்கியமான சத்து ப்ளேவனால் (Flavonols). இதனால், நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நிறைய ஆய்வுகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.

இங்கிலாந்தைச் சேர்ந்த பர்மிங்காம் பல்கலை சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் ப்ளேவனால் இதய ஆரோக்கியம் காப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்விற்காக விஞ்ஞானிகள் ஆரோக்கியமான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு வெண்ணெய், சீஸ், பால் முதலிய கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தந்தனர். பிறகு அவர்களை இரு குழுக்களாகப் பிரித்தனர். ஒரு குழுவுக்கு ப்ளேவனால் அதிகமுள்ள பானத்தையும், மற்றொரு குழுவுக்கு ப்ளேவனால் குறைவாக உள்ள பானத்தையும் தந்தனர். இரு குழுவினரையும் சில கணிதப் புதிர்களைத் தீர்க்கச் சொன்னார்கள்.

இதன்மூலம் நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தின்போது அதிகரிக்கும் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் இரண்டையும் செயற்கையாக அவர்களுக்கு உருவாக்கினர்.

இதற்குப் பிறகு இரு குழுவினரின் இதயச் செயல்பாடு, ரத்த அழுத்தம் இரண்டையும் சோதித்தனர். இதில் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் ப்ளேவனால் அதிகமுள்ள பானத்தை அருந்தினரோ அவர்களின் இதயச் செயல்பாடு அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

பொதுவாக அதிகக் கொழுப்புள்ள உணவுகள், மன அழுத்தம் ஏற்படும் நேரத்தில் இதயச் செயல்பாட்டைப் பாதிக்கும். ஆனால், இந்த ஆய்வின் மூலம் இப்படியான உணவுகள் சாப்பிடும்போது ப்ளேவனாலை அதிகமாக உட்கொண்டால் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமும் 400 - 600 மில்லிகிராம் ப்ளேவனாலை எடுத்துக் கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

 [ஃபிளாவனாய்டுகள் என்பது என்ன?

ஃபிளாவனாய்டுகள் பல தாவரங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் இலைகளில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் கலவைகள் ஆகும், அவை மருத்துவ வேதியியலில் சாத்தியமான பயன்பாடுகளுடன் உள்ளன.

காய்ச்சிய தேநீர் உணவில் அதிக அளவு ஃபிளவன்-3-ஓல்களை வழங்குகிறது. அவுரிநெல்லிகள் (புளூ பெரி ) அதிக அளவு அந்தோசயனிடின்களை (31%), அதைத் தொடர்ந்து வாழைப்பழங்கள் (21%) மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் (14%) கொண்டிருக்கின்றன. .]


இதய நோய்-'டிமென்ஷியா'

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கரோலின்ஸ்கா மையம் ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது. இதில், பொதுவாக இதய நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளை, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டால், 'டிமென்ஷியா' முதலிய மூளை தொடர்பான நோய்கள் வரலாம் என்று தெரிய வந்துள்ளது.

 

எந்த நேரத்தில் எவ்வளவு கலோரி?

மின்சார விளக்குகள் வராத காலத்தில், இரவு உணவை மாலையிலேயே உண்டுவிட்டு உறங்கச் செல்லும் வழக்கம் இருந்தது.

இன்றும் கூட சிலர், சூரியன் மறைந்த பின்னர் சாப்பிட மாட்டார்கள்; அதை ஒரு மரபாகவே பின்பற்றி வருகின்றனர். இது, உடலுக்கு நல்லது என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.

அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலை, அதிக உடல் பருமன் கொண்ட, 50 - 70 வயதுக்கு உட்பட்ட 26 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியது.

இவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இரு குழுவுக்கும் ஒரே கலோரி அளவுள்ள உணவு, வெவ்வேறு நேரங்களில் கொடுக்கப்பட்டது.

அதாவது, தினசரி கலோரி தேவையில் 45 சதவீதத்தை, குழு ''வுக்கு மாலை 5:00 மணிக்கு முன்னரும், குழு 'பி'க்கு மாலை 5:00 மணிக்கு பின்னரும் தந்தனர். இரு குழுவினரின் ரத்த சர்க்கரை அளவு, இதயச் செயல்பாட்டை பரிசோதித்தனர்.

குழு ''வைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியமாக இருப்பதும், குழு 'பி'யைச் சேர்ந்தவர்களின் ஆரோக்கியம் கெட்டிருப்பதும் தெரிய வந்தது.இந்த ஆய்வின் மூலம், நம் உணவின் பெரும்பகுதியை அதாவது தினசரி கலோரி தேவையில் 45 சதவீதத்தை, மாலை 5:00 மணிக்குள் எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் தரும் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

 

தண்ணீர் குடிப்பது

அமெரிக்காவைச் சேர்ந்த சான்பிரான்சிஸ்கோ பல்கலை ஆராய்ச்சியாளர்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சிறுநீரக கற்கள், ஒற்றைத் தலைவலி, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், குறைந்த ரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தடுக்க உதவும் என்று தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

 

அல்கஹால்-புற்றுநோய்

தலை, கழுத்தில் ஏற்படும் புற்றுநோய்களைக் குணப்படுத்தக் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பாலிவினைல் அல்கஹால் (Polyvinyl alcohol) எனும் வேதிப் பொருளை இணைத்துப் பயன்படுத்தினால் சிகிச்சையின் திறன் அதிகரிப்பதாக ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோ பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

அல்சைமர் வாய்ப்பைக் குறைக்க

வயதாகும்போது ஏற்படும் மறதிநோயான அல்சைமருக்கும், வயிறு உள்ளிட்ட உறுப்புகளில் தேங்கும் உள்ளுறுப்பு கொழுப்புக்கும் (Visceral fat) உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இளவயதில் வயிற்றில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்வது பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும் என்று கூறுகின்றனர்.

 

பக்கா உணவு மக்கானா

சமீபகாலமாக பிரபலம் ஆகிவரும் மக்கானா, உண்மையில் 3,000 ஆண்டுகளாக ஆயுர்வேத, சீன பாரம்பரிய மருத்துவத்தில் அறியப்பட்ட ஒன்றுதான். தமிழில் இதனை தாமரை விதை என்று அழைப்பர். இது தாமரை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவித அல்லியிலிருந்து பெறப்படுகிறது. ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

இது உண்மைதானா என்று அறிய 2012, 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் உலகின் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வில் மக்கானா, ரத்த சர்க்கரை கட்டுப்படுத்துதல், ரத்த அழுத்தத்தைச் சீராக்குதல், கொழுப்பைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு உதவும் என்று தெரியவந்தது. நீரிழிவு ஏற்பட்டிருந்த எலிகள் மீது சோதித்ததில் அவற்றின் ஈரல், சிறுநீரகம் ஆகியவற்றின் இயக்கம் சீரானது. 2019இல் எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மக்கானாவை உண்பது கெட்ட கொழுப்பைக் குறைத்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சோளத்தை எவ்வாறு பாப்கார்னாகச் சாப்பிடுகிறோமோ அதுபோல் இவை பொரித்து விற்கப்படுகின்றன. இவற்றை வறுத்து, கஞ்சி, சூப் ஆகியவற்றில் சேர்த்துக் குடிக்கலாம். பொடி செய்தும் உண்ணலாம். அல்லது பச்சையாகக் கூட பரிமாறலாம். உலகம் எங்கும் பெரியளவில் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

2030ஆம் ஆண்டு இதன் விற்பனை 9 கோடி டாலர் மதிப்புக்கு உயரும் என்கின்றனர் நிபுணர்கள். இந்தியாவில் 2023- - 2024ஆம் ஆண்டு மட்டும் 25,130 டன் மக்கானா உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.

மக்கானாவில் லுசின், ஐசோலுாசின், மெத்தியோனைன், சிஸ்டைன், அர்ஜினைன், குளுட்டமைன் உள்ளிட்ட நுண்சத்துகள் உள்ளன. இதில் உள்ள கிரியேட்டின், செல்களுக்கு ஊட்டமளிக்கிறது. 100 கிராம் மக்கானா விதைகளில் 9.7 கிராம் புரதம், 0.1 கிராம் சர்க்கரை, அத்துடன் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. பல்வேறு பலன்கள் தரக்கூடிய பக்காவான உணவு மக்கானா என்று மருத்துவர்கள் சான்றிதழ் தந்துள்ளனர்.

:தொகுப்பு-தீபம் இணையத்தளம்

0 comments:

Post a Comment