யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பசுமையான வயல்களுக்கும், மின்னும் நெல் வயல்களுக்கும் மத்தியில், தயாளன் என்ற எளிய விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடுமையாக உழைத்தான். அவனது கையும் காலும் மண்ணின் வாசனையுடன் பழகியது மட்டுமே அல்ல, அவனது ஆன்மா கூட இயற்கையின் தாளங்களுடன் எதிரொலித்தது. தயாளன் என்றும் பழங்கால பழமொழியில் நம்பிக்கையுடையவன். அதிலும் "வினை விதைத்தவன், வினை அறுப்பான்; தினை விதைத்தவன், தினை அறுப்பான்" அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. மற்றது 'கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளார்ச்சி பெறாது”
கைபடாத குழந்தை என்பது, தாயின் அன்பு, உறவுகளின் பாசம். இவை இல்லாமல் வளரும் குழந்தை எதிர்காலத்தில் சிறந்து வளர முடியாது. அதுபோல் உழவர்களின் கால்படாமல் விவசாயம் செய்தால் செழிக்காது. விளை நிலத்தில் உழவ செய்யாமல் இருந்தால் பாழ் நிலமாக (தரரிசு நிலம்) மாறிவிடும். அதில் பயிரிட்டு விவசாயம் செய்வது கடினம். குழந்தையின் வளர்ச்சி, நிலத்தின் விளைச்சல் இரண்டிற்கும் மற்றொன்றின் அரவணைப்பு தேவையாகின்றது என்பதே அவனின் எண்ணமும் செயலும் கூட.
ஒவ்வொரு விடியலிலும், தயாளன் தனது சிறிய நிலத்தை அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்து வந்தான். அவனது சிறு தோட்டம் காய்கறிகளால் நிரம்பியிருந்தன. ஒவ்வொன்றும் அவனது உழைப்பிற்கும் மண்ணின் மீதான அன்பிற்கும் சான்றாகும். ஆனால் அவனது சுமாரான சம்பாத்தியம் அவனது குடும்பத்தின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை.
ஒரு நாள், தயாளனின் கிராமத்திற்கு அருகிலுள்ள நகரத்தைச் சேர்ந்த பெரிய கடைக்கார முதலாளி ஒருவர் அங்கு வந்தார். அவர் தனது கடைக்கு தேவையான காய்கறிகளை அந்த கிராமத்தில் இருந்து பெற தேடிக்கொண்டிருந்தார். அவ்வேளையில் தான், தயாளனின் அபரிமிதமான விளைச்சலைக் கண்டு, அவர் தயாளனுடன் ஒப்பந்தம் செய்தார். தயாளன் இதனால் நம்பிக்கைகொண்டு, அவன் தனது குடும்பத்திற்கு சிறந்த எதிர்காலத்தை கற்பனை செய்தான்.
நாட்கள் வாரங்களாக மாறியபோது, தயாளன் தனது சிறந்த அந்தந்த காலத்துக்குரிய காய்கறிகளை கடை உரிமையாளருக்கு விடாமுயற்சியுடன் தொடர்ந்து வழங்கினான். வாரம் இரு முறை காய்கறிகளை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக் கொண்டு நாலு மைலுக்கு அப்பால் இருக்கும் நகரத்துக்கு நடந்து சென்றே விற்றுவிட்டு வருவது அவனின் வழக்கம், அந்தந்த காலத்துக்கு உரிய காய்கறிகளை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக
அரிசி, பருப்பு, சீனி போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை கடை முதலாளியிடம் இருந்து வாங்கி வருவான்.
தயாளன் தான் கொடுத்த அந்த காய்கறிகளுக்குப் பதிலுக்கு, அவன் நியாயமான பண்டமாற்றை எதிர்பார்த்தான். ஆனால் அந்த கடையின் முதலாளி, பேராசையால் உந்தப்பட்டு வஞ்சகமான நோக்கத்தை கொண்டிருந்தார் என்பது அவனுக்கு அப்ப தெரியாது. அவன் ஒரு கிராமத்து அப்பாவி!
தயாளன் கொண்டுவரும் காய்கறியின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. இதை அறிந்த முதலாளி, அந்த வாய்ப்பை பயன்படுத்தி மற்ற காய்கறிகளோடு கலந்து நல்ல லாபமும் சம்பாதித்து விடுவார்!
பல வருடமாக விவசாயி தயாளன் காய்கறிகள் கொண்டு வருவதால் முதலாளி அதை எடை போட்டு பார்த்ததில்லை; தயாளன் சொல்கின்ற எடையை அப்படியே எடுத்து அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார். காரணம் தயாளனின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது என்பதால்.
என்றாலும் கடை முதலாளி தயாளனின் நம்பிக்கையைப் பயன்படுத்த முடிவு செய்தார். தயாளனுக்கு பண்டமாற்றாக கொடுக்கும் ஒவ்வொரு பத்து இறாத்தலுக்கும் உண்மையில் ஒன்பது இறாத்தலே கொடுப்பார். ஒவ்வொரு இறாத்தலிலும் அதற்குத் தக்கதாக குறைத்துவிடுவார். இந்த வஞ்சகத்தை அறியாத தயாளன், தனக்கு நேர்ந்த அநீதியை அறியாமல், அயராது உழைத்தான்.
ஒரு நாள் தயாளன் பத்து இறாத்தல் கத்தரிக்காய் கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச் சென்றான். சிறிது நேரத்தில் பத்து பத்து இறாத்தல் கத்தரிக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, கடை முதலாளி, அந்த கத்தரிக்காய்களை அவனுக்கு முன்னால் எடை போட்டார். அதில் ஒன்பது இறாத்தல் மட்டுமே இருந்தது கண்டு கோபப்பட்டார்.
அன்று முழுவதும் முதலாளிக்கு தூக்கமே வரவில்லை, அதே சிந்தனை தான். தயாளன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டானே? இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான காய்கறிகளை வாங்கி ஏமாந்து விட்டோமே? அடுத்த முறை தயாளன் வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்.
மூன்று நாட்கள் கழித்து தயாளன் மிகவும் மகிழ்வாக சில காய்கறிகளுடன் வழமைபோல் வந்தான். இம்முறை நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தான். அவனை எப்படியும் நேராக கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு, எத்தனை இறாத்தல் தக்காளிப்பழம் என்று முதலாளி கேட்க பத்து இறாத்தல் என்றான் விவசாயி தயாளன்.
தயாளன் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க, அது ஒன்பது இறாத்தல் தான் இருந்தது. முதலாளி ஒன்றுமே சிந்திக்காமல், எடுத்த எடுப்பிலேயே, அவருக்கு வந்த கோபத்தில் பளார்,பளார் என தயாளனின் கன்னத்தில் அறைந்தார். இத்தனை வருடமாக இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பித் தானே எடை போடாமல் அப்படியே நீ சொன்னபடி வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனான் தயாளன்.
ஐயா, என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு பணம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு இறாத்தல் பருப்பை ஒரு தட்டிலும், இன்னொரு தட்டில் காய்கறிகளையும் வைத்து தான் எடைபோட்டு கொண்டுவருவேன். இதைத் தவிர வேறு எதுவும் நான் செய்வதில்லை. நான் கிராமக்காரன். உண்மையாக வாழ, உண்மையாக நேசிக்க பழகியவன். கன்னத்தை தடவிக்கொண்டு, தலை நிமிர்ந்து நின்றான். அவன் வாய் கொஞ்சம் மெதுவாக ஒரு பழைய பாடலை முணுமுணுத்தது.
"நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்!"
"இருப்பவர்கள் இதயத்திலே
இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே
இன்பப் பயிர் வளர்க்கணும்!"
முதலாளிக்கு செருப்பால் அடித்தது போல் அது இருத்தது. அவரின் வண்டவாளம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதே? தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார். இத்தனை வருடங்களாக விவசாயியை, கிராமத்தானை, தயாளனை ஏமாற்ற நினைத்த முதலாளியும்
அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது அவருக்கு தெளிவானது.
இது தான் உலகநியதி. நாம் எதை கொடுக்கிறோமோ
அதுதான் நமக்கு திரும்ப வரும். ஆமாம்
நல்லதைக் கொடுத்தால் நல்லது வரும்
தீமையைக் கொடுத்தால் தீமை தான் வரும்
வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம், ஆனால் கட்டாயம் வரும்
ஆகவே நல்லதை மட்டுமே கொடுப்போம், நல்லதை மட்டுமே விதைப்போம்!
'மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.'
'வினை விதைத்தவன், வினையறுப்பான்; தினை விதைத்தவன், தினை அறுப்பான்'
↠↠↠↠↠↠↠↠↠↠
நன்றி :கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
0 comments:
Post a Comment