நீரைத் தூய்மையாக்கும் எளிய இயந்திரம்
இந்த உலகில் தண்ணீருக்குப் பற்றாக்குறை என்பதே இல்லை. ஆனால்,
சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் பூமியில் கிடைக்கும்
அதிகளவு நீர், உப்பு நீராக இருப்பது, நல்ல நீர், ஆறு, ஏரி, குளங்களில் கிடைக்கிறது.
இவையும் கடுமையாக மாசடைந்து வருவதால் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான நீர் என்பது,
கானல் நீராக இருக்கிறது.
கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நீர் நிலைகளில் இருந்து மிகக்
குறைந்த செலவில் சுத்தமான நீரைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
இதை உருவாக்க, பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்படும் சாதாரண டயர்கள் போதும். அதற்கு மேலே
குடை போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். உள்ளே இருக்கும் சில இயந்திரப் பொறிகள் சூரியனிடம்
இருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை சூடாக்குகின்றன.
நீர் சூடாகி, ஆவியாகி, குடை போன்ற அமைப்பின் மீது பட்டு மறுபடியும் நீராக மாறும். இந்த நீர் தனியாக ஒரு பையில் சேமிக்கப்படும். நீர் ஆவியாகி மறுபடியும் நீராக மாறும்போது, அதில் உள்ள மாசுகள் அகற்றப்பட்டுவிடும் என்பது தான் இந்த இயந்திரம் இயங்குவதற்கான மிக அடிப்படையான விதி.
இந்த எளிய இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு நாளுக்கு, 3.67 லிட்டர் நல்ல நீரைப் பிரித்தெடுக்க முடியும். மிகக் குறைந்த செலவில் வடிவமைக்கக் கூடியது என்பதால், இது உலகம் முழுக்க நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நுண் நெகிழிகளால் இப்படி ஓர் ஆபத்தா?
நெகிழிகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை
நாம் அறிவோம். இந்த நெகிழிகள் உடைந்து நுண் நெகிழிகளாக மாறுகின்றன. இவை, 0.001 மில்லி
மீட்டருக்கும் குறைவான நெகிழித் துகள்கள், நுண் நெகிழிகள் என்று அழைக்கப்படுகின்றன;
நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. உணவு, தண்ணீர், சுவாசம்,
ஏன் நம் தோல் வழியாகக் கூட உடலுக்குள் நுழையலாம். இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்
என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த வியன்னா பல்கலை மேற்கொண்ட ஆய்வில் நுண்
நெகிழிகள் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நம் உடலுக்குள்
செல்லும் நுண் நெகிழிகள், உடலின் சில பாகங்களில் அப்படியே தங்கி விடுகின்றன. பாக்டீரியா,
வைரஸ் அல்லது வேறு கிருமிகளால் நோய்கள் ஏற்படும் போது அந்தக் கிருமிகளைக் கொல்வதற்காக
ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம்.
அப்படியான மருந்துகளை இந்த நுண் நெகிழிகள் உறிஞ்சிக் கொள்கின்றன.
எனவே, அந்தக் கிருமிகள் கொல்லப்படாமல் சுதந்திரமாகப் பெருகுகின்றன. இதனால் நோயின் பாதிப்பு
அதிகமாகும். அதுபோல நாம் உட்கொண்ட மருந்தை எதிர்க்கும் வல்லமையையும் அந்தக் கிருமிகள்
வளர்த்துக் கொள்கின்றன. வருங்காலத்தில்இது மிகப்பெரிய அபாயமாக மாறும் என்று விஞ்ஞானிகள்
எச்சரிக்கின்றனர். நுண் நெகிழி மாசைக் கட்டுப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது கருவி
உலக மக்களை அச்சுறுத்தக்கூடிய மிகக் கொடிய நோய்களில் ஒன்று
புற்றுநோய். இதில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று நுரையீரல் புற்றுநோய். இதை ஆரம்பத்திலேயே
கண்டறிவது என்பது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், கண்டறிந்து விட்டால் விரைவாக
சிகிச்சை செய்து நோயாளியைக் காப்பாற்றி விட முடியும்.
நாம் மூச்சை வெளிவிடும் போது அதில் வெளிப்படுகிற ஒருவித வேதிப்பொருளை வைத்து நுரையீரல் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய முடியும் என்று சீனாவைச் சேர்ந்த ஜிஜியாங் பல்கலை கூறியுள்ளது.
நம் உடலில் கொழுப்பானது உடைக்கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது, ஐசோப்ரின் என்னும் வேதிப்பொருள் வெளியாகும். இது நாம் விடும் மூச்சில் கலந்து உடலை விட்டு வெளியேறி விடும். இதனுடைய அளவு குறைவாக இருந்தால், நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வேதிப்பொருள் களைக் கண்டறிவது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. இது தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கடைசியில் பிளாட்டினம், இண்டியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் கலந்த ஒரு சென்சாரை உருவாக்கினர். இது மிகக் குறைந்த அளவு வெளியேறுகின்ற ஐசோப்ரினைக் கூடக் கண்டறிந்து விடும்.
விஞ்ஞானிகள் 13 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் ஐந்து பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களின் வெளியிடும் மூச்சை சென்சார் கொண்டு ஆராய்ந்த போது, நுரையீரல் புற்றுநோய் உள்ள வர்களை விட இல்லாதவர்களுக்கு அதிகமான ஐசோப்ரின் வெளியாவது தெரிந்தது.
இந்த சென்சாரை மேலும் செம்மைப்படுத்தி, நவீனமயமாக்கி, எளிமையான ஒரு கருவியாக வடிவமைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.
அவ்வாறு உருவாக்கப்பட்டு விட்டால் நுரையீரல் புற்றுநோயை, பெரிய பொருட் செலவு இல்லாமல், நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மிகச் சுலபமாகக் கண்டறிந்து விடலாம்.
அல்சைமரை வேகப்படுத்தும் மது!
குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மது அருந்துவதால் பல்வேறு
உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகளில் இதுவரை வெளிவராத பல தகவல்கள்
வெளிவந்துள்ளன.
வயதாவதால் ஏற்படுகின்ற ஞாபகம் மறதிநோய், அல்சைமர்ஸ். மது அருந்துவதால்
இந்த நோயின் பாதிப்பு அதிகமாவது தெரியவந்துள்ளது.
இந்த நோயின் பல்வேறு நிலைகளில் இருந்த 75 நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள் விஞ்ஞானிகள். அவர்களது மூளையில் ஏற்பட்டுள்ள செல் இறப்பு, செல்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் இருக்கின்ற குழப்பம், ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றை மது அருந்துவதால் ஏற்படுகின்ற பாதிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.
இரண்டு பாதிப்புகளும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பது தெரிய வந்துள்ளது. குளிர் பிரதேசங்களில் குறைந்த அளவு மது அருந்துவது என்பது அத்தியாவசியத் தேவையாக உள்ளது.
ஆனால் இந்த அளவு அதிகரிக்கும் போது அது பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். அதிக மது அல்சைமர் நோயைத் தீவிரப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
காது கேளாதவருக்கு உதவும் கண்ணாடி
பிறவியிலேயே காது கேட்காதவர்களுக்கும், வயதாவது அல்லது பிற
காரணங்களால் காது மந்தம் அடைந்தவர்களுக்கும், உதவும் வகையிலான ஒரு புது கண்ணாடியை நியூயார்க்கைச்
சேர்ந்த கோர்னெல் பல்கலையில் படிக்கின்ற 25 வயது மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
காது கேட்பதில் குறைபாடு உடையவர்களால் எதிரே பேசுபவருடைய வாய் அசைவை வைத்துத் தான் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அறிந்து கொள்வதற்குப் பேசுபவரை மிகவும் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். இந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக நிர்பாய் நரங் (Nirbhay Narang) எனும் மாணவர் ஒரு கண்ணாடியை வடிவமைத்துள்ளார்.
இதைச் சாதாரண மூக்குக் கண்ணாடி போலக் கண்கள் மீது அணிந்து கொள்ளலாம். இது ஐபோன் உடன் ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
எதிரே ஒருவர் பேசும் போது அவருடைய குரல் போனில் பதிவாகி அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமாக எழுத்தாக, மாற்றப்படும்.
இந்த எழுத்து அணிந்திருப்பவருடைய கண்ணாடியில் தெரியும்.
இதனால் தன்னிடம் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதைக் கண்ணாடியில் வாசித்து அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் மட்டும் விற்கப்படுகின்ற இந்தக் கண்ணாடி விரைவில் உலகம் முழுதும் பிரபலமாகும்.
புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு
நம் உடல்நலனுக்கு நல்ல கொழுப்புகள் தேவை. அதிலும் ஒமேகா 3, ஒமேகா 6 ஆகிய கொழுப்பு அமிலங்கள் மிகவும் அவசியமானவை. ஒமேகா 3, சில தாவரங்கள், மீன்கள், பாசிகளில் உள்ளது.
ஒமேகா 6 தாவர எண்ணெய், விதைகளில் உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, பெரியவர்களுக்கு ஏற்படும் இதய நோய்கள் ஆகியவற்றை இவை தடுக்கின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன.
அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலை மேற்கண்ட புதிய ஆய்வில் மேற்கண்ட அமிலங்கள் சில வகை புற்றுநோய்களைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தலை, கழுத்து, உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், நுரையீரல், கருப்பை, சிறுநீரகம், மூளை, தைராய்டு சுரப்பி உள்ளிட்ட 19 இடங்களில் ஏற்படும் புற்றுநோய்களை ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள் கட்டுப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
லண்டன் மருத்துவ ஆய்வகத்திலிருந்து 2,58,138 பேரின் மருத்துவ அறிக்கையை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். 13 ஆண்டுகள் தொடர்ந்து அவர்களைக் கண்காணித்தனர். அவர்களில் 29,838 பேருக்குப் புற்றுநோய் ஏற்பட்டது.
அவர்களைச் சோதித்துப் பார்த்ததில், அவர்கள் உடலில் ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள் மிகக் குறைவாக இருப்பது தெரியவந்தது.
இவை அதிகமாக இருந்தவர்களுக்குப் புற்றுநோய் ஏற்படவில்லை. எனவே புற்றுநோய் வராமல் தடுக்கவும், பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கும் ஒமேகா 6 கொழுப்பைத் தினமும் ஆண்கள் 17 கிராமும், பெண்கள் 12 கிராமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பகிர்வு:தீபம் இணையதளம்
0 comments:
Post a Comment