விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்

 


ஆண் கொசுக்களும் ரத்தம்

பொதுவாகப் பெண் கொசுக்கள் தான் ரத்தத்தை உறிஞ்சி நோயைப் பரப்பும். ஆண் கொசுக்கள் (male mosquitoes) உணவாக பொதுவாக பாலிப்பொருள்கள் (nectar) மற்றும் பொதுவான சர்க்கரைகள் (sugars) போன்றவற்றை உறிஞ்சுகின்றனர். இதில் பல வகையான செடி பூக்கள், பழங்கள் மற்றும் சில முக்கியமான சர்க்கரைகள் அடங்கும். அவர்கள் ரத்தத்தை உறிஞ்சுவதில்லை, ஆனால்சமீபத்திய ஆய்வில், போதுமான தேன் கிடைக்காதபோது ஆண் கொசுக்களும் ரத்தம் உறிஞ்சும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

பனிக்கரடிக்கும் ஆபத்து

உலக வெப்பமயமாதல் காரணமாக துருவப் பகுதிகளில் பனி உருகுவதால் உறைந்திருந்த கிருமிகள் பல உயிர் பெறுகின்றன. இவை, அங்கு வாழும் பனிக்கரடிகளைத் தாக்கி பாதிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

மருந்து கொண்டு செல்லும் அரிசி ரோபோ

நமக்கு நோய் ஏற்படும்போது மருந்துகளை வாய் வழியாக விழுங்குகிறோம். சில மருந்துகள் ஜீரண மண்டலத்தைக் கடந்து உடலுக்குள்ளே செல்லும்போது வலுவிழந்து விடும். அதனால் தான் சில மருந்துகளை ஊசி மூலமாகச் செலுத்துகிறோம். ஆனால், இதிலும் சில பிரச்னைகள் உள்ளன.

 

நம் உடலின் உள் பாகங்களுக்கு ஊசி மூலமாக மருந்துகளை அனுப்பும்போது அவை தங்களுடைய ஆற்றலை இழக்கக் கூடும். ஆகவே, இவற்றுக்குப் பதிலாகச் சிறிய அளவிலான ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் நீண்ட கால மாக நடந்து வருகின்றன. அவற்றில் சில வெற்றியும் பெற்றுள்ளன.

 

சிங்கப்பூரைச் சேர்ந்த என்.டி.யு., பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதுவித ரோபோவை உருவாக்கி உள்ளனர். இது, நாம் உண்ணும் அரிசியின் அளவு மட்டுமே இருக்கும். இதில் மருந்தை வைத்து உடலுக்குள்ளே அனுப்பிவிடலாம். பிறகு வெளியில் உள்ள காந்தப்புலத்தைக் கொண்டு அதை நகர வைக்கலாம்.

 

இவ்வாறு நகர்த்திக் கொண்டு சென்று எந்த உடல் பாகத்தில் மருந்து தேவையோ, அந்த இடத்திற்கே ரோபோவைக் கொண்டு போகலாம். அங்கே சென்ற பிறகு எந்தக் குறிப்பிட்ட இடைவேளையில் மருந்தைச் செலுத்த வேண்டுமோ அப்படி மருந்தைச் செலுத்த வைக்கலாம்.

 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ரோபோவால் நம் செல்களுக்கும், தசைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் நம் உடலில் புற்றுக் கட்டிகள் இருக்கக்கூடிய சிக்கலான இடங்களுக்கும் சென்று மருந்தைச் சேர்க்கும் விதமான ரோபோக்களை உருவாக்குவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு உருவாக்குவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்.

பார்வையை பாதுகாக்கும் பிஸ்தா

பாலில் பாதாம், பிஸ்தா ஆகியவற்றை நாம் கலந்து குடிப்போம். பிஸ்தாவில் சுவையூட்டப்பட்ட ஐஸ்க்ரீம் கிடைக்கிறது. அருமையான சுவையுடன், ஆரோக்கியம் தரும் சத்துகளையும் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டப்ட்ஸ் பல்கலை தன் புதிய ஆய்வில், பிஸ்தாவை உண்பது கண் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று கண்டறிந்துள்ளது.

 

பிஸ்தாக்களில் லுடீன் (Lutein), ஜீயாக்சாண்டின் (Zeaxanthin) ஆகிய நுண்சத்துகள் உள்ளன. ஆனால், முட்டையில் லுடீன் மட்டுமே உள்ளது. ஆகவே முட்டையை விட பிஸ்தா நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

பிஸ்தாவில் மோனோ, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவையும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை தான். கண் பார்வை குறைபாடு உடைய முதியவர்களுக்கு இது பார்வையை மேம்படுத்த உதவுகிறது.

 

 

தொடர்ந்து 12 வாரங்கள், 57 கிராம் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் விழித்திரை ஆரோக்கியம் மேம்படுதுவது ஆய்வுப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. பிஸ்தாவில் உள்ள வேறு சில சத்துகள் மூளைக்கு நன்மை தருகின்றன. நினைவாற்றல் தொடர்பான நோய்களுக்கு இது தீர்வாகிறது.

 

தேனான தேன்

கொசுத்தேனீ என்று அழைக்கப்படும் கொடுக்கற்ற தேனீக்கள் சேகரிக்கும் தேனானது பல் ஆரோக்கியம், ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் என்று குயின்ஸ்லாந்து பல்கலை கண்டறிந்துள்ளது.

 

இதயத் திசுக்களைச் சரிசெய்ய..

இன்று, இதய நோய்கள் பெரும்பாலான மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மாரடைப்பு ஏற்பட்ட பிறகு இதயம் பலவீனமடைகிறது, இதயத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. நம் எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகும் ஒருவித புரதம் 'ஜிபிஎன்எம்பி'. இது இதயத் திசுக்களை வலிமையாக்குவதாக அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை கண்டறிந்துள்ளது. எலிகளில் மேற்கொண்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியளவில் மருந்து மாத்திரை தேவைப்படாமல் இதயத் திசுக்களைச் சரிசெய்ய, இயற்கையான வழியாக இந்தப் புரதம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

நல்ல தூக்கத்திற்கு மருந்து

ஆரோக்கியமான வாழ்விற்கு மிக அவசியமானது தூக்கம். நம் உடலில் துாக்கத்தை ஏற்படுத்துவது மெலடோனின் எனும் ஒரு ஹார்மோன். இது பீனியல் சுரப்பியில் இருந்து உற்பத்தி ஆகிறது.

 

இதுவே இரவில் தூக்கத்தையும் பகலிலே விழிப்பையும் தருகிறது. இந்த ஹார்மோன் மூளைக்குள்ளே சென்று மூளையை ஓய்வுகொள்ளச் செய்கிறது. நம் உடலுக்குள் இருக்கும் உயிரியல் கடிகாரம் சரியாக இயங்குவதற்கு, இது ஒரு முக்கிய காரணி.

 

ஆனால், இரவு நேரம் அதிக அளவில் மொபைல் போன், லேப்டாப் முதலிய டிஜிட்டல் ஒளிகள் நம் மீது படுவதால் இந்த ஹார்மோனின் சுரப்பு குறைகிறது.

 

அதனால் பலர் தூக்கமின்மையால் அவதிப்படு கின்றனர். இதைச் சரி செய்வதற்காக மெலடோனின் ஹார்மோனை மாத்திரையாக எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இது எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன.

 

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தூங்கச் செல்வதற்கு, 30 நிமிடம் முன்பாக 2 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் போதும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இத்தாலி, சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

 

அதில் மொத்தம் 1,689 பேர் பங்கேற்றனர். இவர்களுக்குப் பல்வேறு அளவுகளில், பல்வேறு நேரங்களில் மருந்து கொடுக்கப்பட்டது.

 

இறுதியாகத் தூங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்பாக 4 மில்லிகிராம் அளவு இந்த ஹார்மோனை எடுத்துக்கொள்வது நல்ல தூக்கத்தை வரவழைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 

: செ.மனுவேந்தன்:

1 comment:

  1. சிறப்பு மகிழ்ச்சி

    ReplyDelete