போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா நகரின் நடுவே, எழுச்சிமிக்க ஒரு தமிழ்க் குடும்பம் கம்பீரமும் ஆடம்பரமும் நிறைந்து காணப்பட்டது.
அவர்களைச் சூழ்ந்து இன்னும் சவால்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் அதன் மத்தியிலும் தமக்கு இயல்பான, பழக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடிந்தது. உண்மையில் ஆடம்பரம் என்பது பார்ப்பவரின் பார்வையில் தான் உள்ளது. நேற்று (கடந்த காலம்) ஆடம்பரமாகக் கருதப்படுவது இன்று (தற்போது) ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்று ஆடம்பரமானது ஸ்மார்ட்போன்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சொகுசு வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகள் போன்ற உயர் தொழில்நுட்ப கேஜெட்டுகளை உள்ளடக்கியது. விரைவான இணைப்புகள் மற்றும் இருப்புக்கான வசதிகள் ஆகியவை நவீன ஆடம்பரத்தின் மிகவும் மதிப்புமிக்க அம்சங்களாகியுள்ளன. ஏன் உணவு உடை கூட
“தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பது இரண்டே"
என்ற கருத்தில் இருந்து மாற்றம் அடைந்துதான் உள்ளது. அவரவர் வாழும் சூழல் மற்றும் அவர்களின் வசதிகளைப் பொறுத்து. இலங்கையின் இறுதிக்கட்ட இராணுவ யுத்த நகர்வின் போது, வன்னிப்பிரதேசத்தில் இருந்த மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றுமோரிடத்திற்கு விரட்டியடிக்கப்பட்டு இறுதியாக முள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து அவர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அப்போது, பிள்ளைகள் மற்றும் தாய்மார் என குடும்ப உறவினர்களின் கண்முன்னாலேயே கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி சரணடையும் சம்பவம் இடம்பெற்றிருந்தது. ஆனால் இவ்வாறு சரணடைந்தவர்களை அதன் பின்னர் அவர்களது உறவினர்கள் இன்னும் காணவில்லை. சரணடைந்தவர்களின் நிலைமை என்ன அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் அல்லது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற மக்களின் போராட்டமும் மற்றும் காணி பறிப்பு, பலவந்த குடியேற்றம், திடீரென முளைக்கும் புத்தருக்கு எதிரான சாத்வீக கொந்தளிப்பால் இன்னும் அங்கு அமைதியில்லா அரசியல் மோதல்கள் தொடர்ந்து இருந்தபோதிலும், மதியழகன் குடும்பம் தங்கள் செல்வத்தையும் சமூக அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொண்டனர். குடும்பத்தின் தலைவரான மதியழகன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார், அவர் தனது செல்வத்தை ஜவுளி மற்றும் கட்டுமானம் உட்பட பல்வேறு தொழில்களில் பன்முகப்படுத்தினார். அவரது தீவிர வணிக புத்திசாலித்தனம், துன்பங்களை எதிர்கொண்டாலும் குடும்பத்தை செழிக்க அனுமதித்தது.
மதியழகன் குடியிருப்பு வவுனியாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த ஒரு அற்புதமான மாளிகையாகும். வீட்டின் பிரமாண்டம் அதன் ஈர்க்கக்கூடிய கட்டிடக்கலை, பசுமையான தோட்டங்கள் முதலியவற்றை கொண்டு இருந்ததுடன், பாதுகாப்பிற்காக உயர்ந்த சுவர்களாலும் சூழப்பட்டு இருந்தது. உள்ளே, வீடு நேர்த்தியான கலைப்படைப்புகள், பழங்கால பொருட்கள் மற்றும் சிறந்த அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டும், பார்ப்பவர் கண்களுக்கு, அது அமைந்து இருக்கும் சூழலைப் பொறுத்து ஒரு ஆடம்பரமாக காட்சி அளித்தது.
அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றிவிட்டது என்ற கருத்து பரவலாக இருந்தாலும், மதியழகனின் மனைவி பொற்கொடியை அப்படி முழுதாக சொல்லமுடியாது. இவர் கலையில் வல்லவர் மற்றும் கருணையுள்ள உள்ளமும் படைத்தவர். அவர் அடிக்கடி ஆடம்பரமான விருந்துகள் மற்றும் கலாச்சாரக் கூட்டங்களை ஏற்படுத்தி அதற்கு நகரத்தின் உயரடுக்கினரை அவர்களின் வீட்டிற்கு அழைப்பதும் உண்டு. என்றாலும் தம்மைச் சுற்றியிருந்த மக்கள் படும் துன்பங்களை அவர் மறக்கவில்லை. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு தம்மால் இயன்ற ஆதரவையும் வழங்கி வந்தார். இதற்கு அவர்களின் வீட்டில் நடைபெறும் விருந்துகளும், அதனால் ஏற்பட்ட பல்வேறு பட்ட உயரடுக்கினரின் தொடர்பும் உதவின.
அவர்களின் இரண்டு குழந்தைகளான ஆரன் மற்றும் ஆதிரை ஆகியோருக்கும் சிறந்த கல்வி மற்றும் வாய்ப்புகள் வழங்கியதுடன் ஆரன் லண்டனில் படிக்கவும் அனுப்பப்பட்டார், அதேவேளை ஆதிரை கொழும்பில் உள்ள ஒரு புகழ்பெற்ற சர்வதேச பள்ளியில் படித்தார். குடும்பம் தங்கள் குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் உறுதியாக இருந்ததுடன், குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் மற்றும் தாம் வாழும் பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு சாதகமான பங்களிப்பை வழங்கவும் தயார் படுத்தினார்கள். உண்மையில் அவர்களின் ஆடம்பர வாழ்க்கை வெறும் பொருள் செல்வத்தைப் பற்றியது அல்ல; அவர்களின் பரம்பரை செழித்து வருவதற்கான ஒரு சான்றாகவும் இருந்தது.
நகரின் மறுபுறம், ஒரு சுமாரான சுற்றுப்புறத்தில், வாணன் என்ற இளைஞன் வசித்து வந்தான். ஆதிரைக்குப் பழக்கப்பட்ட செல்வமும் ஆடம்பரமும் அவனுக்கு இல்லை என்றாலும், அவன் அறிவால் நிறைந்தவனாகவும், நல்ல இதயத்தை உடையவனாகவும் இருந்தான். வாணன் தனது வாழ்க்கையை கல்வி மற்றும் விளையாட்டுக்காக அர்ப்பணித்திருந்தான், மேலும் அவன் தனது திறமை மற்றும் இரக்கத்திற்கு பெயர் பெற்ற உயர் தகுதி வாய்ந்த மருத்துவனாக சித்தியடைந்து, வவுனியாவில் தன் முதல் பணியை ஆரம்பித்தான்.
வாணனின் தந்தை ஒரு சாதாரண தோட்டக்காரனாக இருந்ததால், அவன் படிக்கும் காலத்தில் கஞ்சியுடன் வெங்காயம் மிளகாய் கடித்து சாப்பிட்ட காலமும் இருந்தது. பிறகு பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது பல கறிகளுடன், நண்பர்களுடன் சுவைத்து சாப்பிட்ட காலமும் இருந்தது. அது அவனுக்கு அப்ப ஒரு ஆடம்பர உணவாக இருந்தது. ஆனால் இன்று அவன் ஒரு மருத்துவனாக, உயர் சம்பளத்தில் வந்ததும், அந்த உணவு அவனுக்கு ஒரு சாதாரண உணவாக அமைந்துவிட்டது. உடைகளும் அப்படியே! அதுதான் ஆடம்பரம்!
ஒருமுறை ஆதிரை விடுமுறையில் வவுனியா வந்து இருந்தாள். இப்ப அவள் கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி. அவளின்
ஒரு துரதிஷ்டமான நாளில், வாணன் பணிபுரிந்த மருத்துவமனைக்கு கொஞ்சம் அருகில் உள்ள தூசி நிறைந்த தெருவில் ஆதிரையின் கார் பழுதடைந்தது. மன உளைச்சலும் விரக்தியும் அடைந்து, தன் பயணத்தை எப்படித் தொடர்வது என்று யோசித்துக் கொண்டே காரை விட்டு இறங்கினாள். அப்போது, ஆஸ்பத்திரிக்கு செல்லும் வாணன் அவளின் இக்கட்டான நிலையைக் கவனித்தான். அவன் உடனடியாக அவளை அணுகி, தன் உதவியை வழங்கினான்.
வாணனின் கனிவான புன்னகையும், உதவும் குணமும் ஆதிரையை ஒருமுறை நிலைகுலைய வைத்தது. அவன் காரின் நிலையை விரைவாக மதிப்பிட்டு, இயந்திரவியல் பற்றிய தனது அறிவைக் கொண்டு, காரை சரிப்பண்ணிக் கொடுத்தான். அவனது உதவிக்கு நன்றியுடன், ஆதிரை தனது பாராட்டுக்கு அடையாளமாக அவனை ஒரு காபிக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தினாள். ஆனால் தனக்கு வேலைக்கு போக நேரமாச்சு என்று அதை நிராகரித்து, தன் மோட்டார் சைக்கிளுக்கு போனான். அவள் நீங்க யார்? எங்கே வேலை? என்று கேட்டதுக்கு அவன் பதில் சொல்லாமல், தனது மோட்டார் சைக்கிளில்
அமர்ந்தான். என்றாலும் அந்த நேரம் அதன் வழியே சென்ற வவுனியா மகாவித்தியாலய அதிபர், தன் காரை விட்டு இறங்கி, 'ஐயா, உங்களால் தான் என் மகள் இன்று தப்பி பிழைத்தாள். உங்கள் உடனடியான சத்திர சிகிச்சைக்கு மிக்க மிக்க நன்றி' என அழாக்குறையாக கூறி நன்றி தெரிவிப்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை.
"அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;"
அவன் கம்பீரமான அழகை மட்டும் அல்ல, இப்ப அவனின் தகமையையும் அறிய, அவளை அறியாமலே ஒரு காதல் நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. அவள் ஆடம்பரமான கார் மற்றும் அலங்காரம் கொண்டு இருந்தாலும், அவன், அவனின் எளிமை, அறிவுத் தகமை அதை விட உச்சமாக அவளுக்கு தெரிந்தது. அவனின் கழல் அணிந்தது போன்ற கால்களையும் கருநிறத் தாடியையும் கண்டு, கொண்ட காதலால் அவளின் ஆடம்பர கைவளைகள் கூட ஜொலிக்க மறந்து அவளின் கையில் இருந்து வெட்க்கி கழல்கின்றன. அவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி அங்கிருந்து அகன்றாள். என்றாலும் அடுத்தகிழமை வரும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு, ஆடம்பரமான விருந்த்துக்கு அவனையும் அழைக்க தாயிடம் கேட்கவேண்டும் என்று முடிவு செய்தாள்.
பிறந்த நாள் விருந்தின் போது, வாணனை, வவுனியா மகாவித்தியாலய அதிபர், எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து,
ஆதிரை வாணனுடன் கொஞ்சம் நெருக்கமாக உரையாடலைத் தொடங்கினள். அப்பொழுது வாணனின்புத்திசாலித்தனம் மற்றும் பணிவு ஆகியவற்றால் அவன் மேலும் ஈர்க்கப்பட்டதுடன் அவன் தனது தொழிலில் காட்டும் அர்ப்பணிப்பு, சமூகத்தின் மீதான அவனது பார்வை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான அவனது கனவுகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயப் பட்டாள். வாணனும் அவளின் கருணை மற்றும் அழகால் வசீகரிக்கப்பட்டான்,
அவர்களின் சந்திப்பு அழகான நட்பாக அன்றில் இருந்து மாறியது. தன் பெற்றோரினூடாக வாணனின் மருத்துவமனைக்கு தன்னால் இயன்ற விதத்தில், தொண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலிருந்து குறைந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு பொருட்களை வழங்குவது வரை உதவினார், வாணனும் தேவைப்படுபவர்களுக்கு உதவும் மனதைக் கவரும் உலகத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தினான், இது அவள் எப்போதும் அறிந்த ஆடம்பரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.
நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment