மனிதன் பிறந்து சற்று அறிவு வந்தவுடன் வானத்தைப் பார்த்து பிரமித்து, அண்டம் பற்றிய பல உண்மைகளைக் கண்டு பிடித்தான். அத்தோடு கூடவே மாற்றிக் கொள்ளவே இயலாத, அறிவியலோடு சற்றுப் பொருந்தாத சில, பல மூட நம்பிக்கைகளும் சேர்ந்து வளர்ந்து வந்தன. அவற்றுள் ஒன்றுதான் செவ்வாய் குற்றம் என்பது.
இந்தச் செவ்வாய் என்ற ஒரு கிரகம், வேடிக்கையாக இந்துக்களை நோக்கித்தான் பாய்ந்து கொடுமை செய்கிறது; திருமணங்களைத் தடுக்கிறது. மாற்றுச் சமயங்களை ஏனோ தெரியாது நோக்குவது இல்லை. இல்லை, இல்லை நோக்கினாலும் அவர்களுக்குத் தெரிவது இல்லையோ?
முதலில் நமது சாஸ்திரத்தின் அடிப்படையே பிழையானது. பூமி, இது ஒரு கிரகம் இல்லையாம்; சாஸ்திரத்தில் சேர்க்கப்படவில்லை. இந்தப் பூமிதான் நடுவில் நிலைத்து நிற்க, கிரகங்களான சூரியன், சந்திரன், மற்றும் ஏழு கிரகங்களும் பூமியைச் சுற்றி வருகிறதாம்.
உண்மையில் சூரியன் ஒரு கிரகம் அல்ல; அது ஒரு நட்ஷத்திரம். சந்திரன் ஒரு கிரகமும் அல்ல; அது ஒரு துணைக் கோள் மட்டுமே. எங்கள் கிரகங்கள் எல்லாமே பூமியை அல்ல, சூரியனைத்தான் சுற்றி வருகின்றன என்பது தெரியாத பெரும் அறிவாளிகளால்தான் இந்த சாஸ்திரக் கலை உருவாக்கப்பட்டது. அதைவிட இல்லாத இரண்டு கிரகங்கள்; ராகு, கேது வேறு!
புதனில் பார்க்கப் பெரிய ஒரு சந்திரன் வியாழனைச் சுற்றுகிறதே, அதனால் ஒரு தாக்கமும் இல்லையோ?
இந்துக்களாகிய நாம் இப்போது இருப்பது மிகவும் சோகமான பரிதாப நிலையில். வேறு விஞ்ஞானிகள், தொலைதூர கிரகங்கள், சிறுகோள்கள், வால் மீன்கள், பல கோடிக்கணக்கான தூரத்தில் உள்ள விண்மீன் மண்டலங்கள் என்று ஆய்வுகள் செய்து கொண்டிரும்பொழுது, நாங்கள் இன்னமும் 5<->40கோடி கி.மீ. தூரத்தில் உள்ள செவ்வாய் என்ற ஒரு சிறு கிரகத்தாலும், மற்றும் 120 <->140 கி.மீ. தூரத்தில் உள்ள சனி என்ற கிரகத்தாலும், மேலும் இதர கிரகங்கள், நட்ஷத்திரங்களாலும் மனிதனின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கங்கள் ஏற்படுகின்றன என்று போலியான ஆழ்ந்த நம்பிக்கையினால் இன்னமும் பீதி கொண்டு இருக்கின்றோம்.
மேலே தெரியும் வானத்தை 12 ஆல் பிரித்து, அந்த ஒரு வீட்டில், செவ்வாய் அப்படி இருந்தால் செவ்வாய் குற்றம் இப்படி வரும் என்று கூறி அவர்களின் திருமணத்தை தடுத்துக்கொண்டிருக்கும் கூட்டம் இந்த நவீன காலத்திலும் இருக்கின்றது என்பது கவலைக்கிடமான விடயம்.
நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் எண்ணுக்கடங்காத விண்மீன் தொகுப்புகளில் பல உயிருள்ள அல்லது எரிந்து போன நட்ஷத்திரங்களில் இருந்து இன்னமும் நமக்கு ஒளி வந்துகொண்டு இருக்கின்றது. அப்படி இருக்க, அங்கும் இங்கும் இருக்கும் ஒரு சில 27 நட்ஷத்திரங்களைப் பொறுக்கி எடுத்து, குழந்தை பிறக்கும் பொழுது அது எங்கு தெரிந்தது என்ற ஒரு விடயம்தான் அந்தக் குழந்தையின் வாழ்வினை நிச்சயம் செய்கின்றது என்று கூறுவது எவ்வளவு முடிடாள்தனமான சிந்தனை என்று தெரியவில்லையா?
'செவ்வாய் குற்றம்' கொண்டவர்களுக்குத் திருமணம் நிலைக்காது; ஒருவர் மரணிப்பார்; பெரியவர்கள் இறப்பார்கள் என்று நிறுவ விஞ்ஞான ஆதாரமோ, அறிவியல் விளக்கமோ, அனுபவ உண்மைகளோ எதுவுமே இல்லை. எங்காவது ஒன்று 'காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த' சம்பவம் நடந்திருந்தால், அதைச் செவ்வாய் குற்றத்தோடு தொடர்பு படுத்தும் அறிவாளிகள் உள்ளனர்.
உலகெங்கும் அறிவியல் சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்க, இன்னமும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டிக் கொண்டு இருக்கலாமா?
சிந்தியுங்கள்!
:-செ
.சந்திரகாசன்
No comments:
Post a Comment