இறைவி மகள் -குறும்படம்
விஞ்ஞானம் வழங்கும் விந்தை
அறிவியல்=விஞ்ஞானம்
ஆரஞ்சு தோலில்
இதய நோய்க்கான தீர்வு
ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிட்டுவிட்டுத் தோலைக் குப்பையில் போட்டுவிடுகிறோம். ஒரு சிலர் அதில் குழம்பு செய்வது, காயவைத்துப் பொடி செய்து, தோல் மீது பூசுவது என்று பயன்படுத்துவர். ஆனால், உலகம் முழுதும் பெரும்பாலும் இந்தத் தோல், கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது அல்லது வீணாக்கப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், ஆரஞ்சுத் தோலில் இருந்து இதய நோய்க்கான மருந்தை எடுக்க முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
உண்மையாகும் கற்பனை
கண்டுபிடிப்புகள் எல்லாம் கற்பனையிலிருந்து பிறக்கின்றன என்பர். அதை உறுதிப்படுத்தும் விதமாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டப்ட்ஸ் பல்கலை விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு அமைந்துள்ளது. அப்படி என்ன கண்டுபிடித்தார்கள்?
நாம் அனைவரும் நிச்சயமாக ஸ்பைடர்மேன் படத்தைப் பார்த்திருப்போம். அதில் கதாநாயகனான ஸ்பைடர் மேன் தன்னுடைய கைகளில் இருந்து ஒரு விதமான பசையை உருவாக்குவார். அதைக் கொண்டு தன்னுடைய மொத்த உடலையும் இழுத்து, ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பறந்து சென்று மக்களைக் காப்பாற்றுவார்.
அவர் கையில் இருக்கின்ற பசை அந்த அளவு உறுதியானதாக இருக்கும். அப்படியான ஒன்றைத்தான் விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் சிலந்தியின் வலையைப் பயன்படுத்தவில்லை. மாறாக அதைவிட மிகச் சுலபமாக கிடைக்கின்ற பட்டுப்புழுக்களின் பசையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பட்டுப்புழுக்களில் இருந்து எடுக்கப்பட்ட பசையில் சிலவிதமான வேதிப்பொருட்களை கலந்து பரிசோதித்தனர்.
ஒரு சிறிய ஊசியின் வழியே இந்தப் பசையை செலுத்தினால் ஆரம்பத்தில் இது திரவமாக இருக்கும், மிகக்குறுகிய நேரத்தில் கெட்டியாக மாறிவிடும். மாறிய பிறகு இந்தப் பசை நுாலின் எடையை விட 80 மடங்கு அதிக எடை உள்ள பொருளைச் சுமக்கும் அளவு பலம் பெற்று விடும்.
இந்தப் புதிய கண்டு பிடிப்பு அறிவியல் ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை தசை பொறியியல், ஒட்டும் திரவங்களின் தயாரிப்பு முதலியவற்றில் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
உயிரினத் தடயங்கள்
நாசா மேற்கொண்ட ஆய்வில், செவ்வாய்க் கிரகத்தின் லெபர்ட் ஸ்பாட் என்றழைக்கப்படும் பகுதியில் உள்ள பாறைகளில், உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதய நோய்கள்- ஸ்ட்ராபெரி
ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின், பாலிஃபீனால், நார்ச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன. அவ்வப்போது இதை உண்டுவந்தால் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
நீரிழிவுக்குத் தீர்வாகும் புதிய இன்சுலின்
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலருக்கு அன்றாடம் இன்சுலினை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது இன்சுலினை எடுத்துக்கொண்டால் சர்க்கரை குறையும். ஆனால் ஏற்கனவே சர்க்கரை அளவு குறைவாக இருப்பதை அறியாமல் இன்சுலின் எடுத்துக்கொண்டால் ஆபத்து. அதாவது, சர்க்கரை அளவு மிகவும் குறைந்து உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய இன்சுலின் NNC2215. இதை உடலுக்குள் செலுத்திக் கொண்டால் போதும். இது நேரடியாக ரத்தத்தில் கலக்காது, மாறாக எப்போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறதோ அப்போது மட்டும் கலக்கும். மற்ற நேரங்களில் உடலில் தங்கி இருக்கும். எலிகள், பன்றிகள் மீது சோதித்துப் பார்த்தபோது இந்த இன்சுலின் நன்றாக வேலை செய்தது. விரைவில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்