விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்


மகிழ்ச்சி ஏற்படுத்தும் உணவு

சத்துமிக்க உணவை உட்கொள்ளும்போது நமது மூளை செரடோனின் எனும் வேதிப் பொருளை உற்பத்தி செய்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது உற்பத்தி ஆகும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. பொதுவாகவே நமது மூளை ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றபடியும் ஒருவிதமான வேதிப்பொருட்களைச் சுரக்கும். இப்படியான சுரப்பு மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகள், பூச்சிகளில் கூட நிகழ்கிறது. உணவை விழுங்கும் வேளையில் மூளைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடக்கிறது. இதுவே மனிதர்கள், விலங்குகளை அந்தப் குறிப்பிட்ட உணவைத் தொடர்ந்து உண்ண வைக்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த போன் பல்கலை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலை ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

புற்றுநோய் சரிசெய்ய..

மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று எலும்புப் புற்றுநோய். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆஸ்டன் பல்கலை இதை சரிசெய்ய உலோகத் தாதுக்கள் கலந்த கண்ணாடியைப் பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது.

 

டிமென்ஷியா குறைய..

வயதாவதால் ஏற்படும் டிமென்ஷியா எனும் நினைவாற்றல் குறைபாடு, உலகம் முழுவதும் பெருகி வருகிறது. ஃப்ளேவனாய்ட்ஸ் எனப்படும் சேர்மங்கள் நிறைந்த டீ, டார்க் சாக்லெட், பெர்ரி ஆகியவற்றை உட்கொள்வதால் இந்த நோய் குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

உதவும் எக்ஸ்-ரே கதிர்கள்

அவ்வப்போது நமது பூமியை நோக்கி ஆபத்தான விண்கற்கள் வருவதுண்டு. அவற்றின் திசையை மாற்றி நம்மைக் காத்துக் கொள்ள எக்ஸ்-ரே கதிர்கள் உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

நோயிலிருந்து காக்கும் ஸ்பிரே

கொரோனா முதலிய நோய்கள் முதலில் தாக்குவது சுவாச மண்டலத்தைத் தான். பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போது அவர் மூக்கின் வழியே வெளியேறும் கிருமிகள் காற்றில் கலக்கின்றன. வேறு ஒருவர் சுவாசிக்கும்போது அந்தக் கிருமிகள் அவர் மூக்கில் நுழைகின்றன.

அங்கு சில காலம் தங்கி இனப்பெருக்கம் செய்த பின்பே நுரையீரலைத் தாக்குகின்றன. இத்தகைய நோய்களுக்குத் தடுப்பூசிகள் உள்ளன. என்றாலும் மூக்கில் தங்குகின்ற காலத்திலேயே அவற்றை அழித்துவிட்டால் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

கிருமிகளை அழிக்க மருந்துகளும் உள்ளன. ஆனால் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்கும்போது கிருமிகளும் அவற்றின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டு பலம் அடைகின்றன.

எனவே மருந்தே இல்லாமல் கிருமிகளை அழிக்கும் வழியை உருவாக்க விஞ்ஞானிகள் குழு தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தது. அதன் பயனாக உருவானது தான் பிகான்ஸ் (Pathogen Capture and Neutralizing Spray - PCANS). அதாவது கிருமிகளைப் பிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்யும் ஸ்பிரே.

இதை மூக்கில் அடித்தால், இது ஒரு ஜெல் போல் மூக்கின் உட்சுவர்களில் படிந்துவிடும். இது நம் சுவாசத்தை எந்த வகையிலும் பாதிக்காது.

ஆனால், உள்ளே வருகின்ற பாக்டீரியா, வைரஸ்களைப் சிக்க வைத்துக் கொள்ளும். அவை நகரமுடியாமல், பெருக முடியாமல் அப்படியே இறந்துவிடும். ஆய்வுக்கூடத்தில் எலிகள் மீது இதைச் சோதித்துப் பார்த்தனர். மூக்கில் H1N1 வைரஸ் இருந்த எலிகளுக்கு ஸ்பிரே அடித்துப் பார்த்தனர். 99.99 சதவீத வைரஸ்கள் இறந்துவிட்டன.

இந்த ஸ்பிரே 8 மணி நேரம் மூக்கில் இருந்தது. 4 மணி நேரம் கிருமிகளைக் கட்டுப்படுத்தியது. 3 டி பிரின்டிங்கில் உருவாக்கப்பட்ட மனித மூக்கிலும் இது சோதிக்கப்பட்டது. இது மிக ஆபத்தான பல வைரஸ், பாக்டீரியாவை அழித்தது.

 

 

மருந்தே இல்லாமல் நோயைக் கட்டுப்படுத்தும் இந்தப் புதிய ஸ்பிரே நல்ல வரவேற்பைப் பெறும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கணித்துஉள்ளனர்.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment