மஞ்சள், மிளகாய் உள்பட மசாலாப் பொருட்களை உணவில் சேர்ப்பது உடலுக்கு நல்லதா?

மிளகாய், மஞ்சள் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்ற கூற்றுகள் உள்ளன. "நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்" என்றும் கூறப்படுவது உண்டு. ஆனால், நம் உணவில் இத்தகைய மசாலா பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கிறதா? உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து அவை நம்மை தடுக்கிறதா?

 

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மசாலா பொருட்கள் நம் உணவின் அங்கமாக உள்ளன. சிப்ஸ் வகைகளில் மேலே தூவியோ அல்லது இஞ்சி தேநீராகவோ, நம்முடைய உணவில் சேர்க்கப்படும் மிளகாயாகவோ அவற்றை நாம் உட்கொள்கிறோம். ஆனால், சில ஆண்டுகளாக அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தக் கூடிய சிறந்த உணவுகளாக அவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

 

உடல்நல பிரச்னைகளை தடுக்கும் பொருட்டு, 2016 தேர்தல் பிரசாரங்களின் போது நாளொன்றுக்கு ஒரு மிளகாயை ஹிலாரி கிளிண்டன் சாப்பிட்டதாக தகவல்கள் உள்ளன. ஆசியாவில் ஆயிரம் ஆண்டுகளாக உட்கொள்ளப்பட்டு வரும் மஞ்சள், உலகம் முழுவதிலும் உள்ள காபி கடைகளில் "கோல்டன் லேட்டே" (மஞ்சள் கலந்த பால்) எனும் பெயரில் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பெருந்தொற்று காலத்தில் மஞ்சள் "நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்", வியாதியிலிருந்து நம்மை காக்கும் என்றும் மெசேஜ்கள் பரவின. அந்த மஞ்சள், ஒரு பிரபல சமையல் கலைஞர் கூற்றுப்படி "எங்கும் உள்ளது."

 

இதனிடையே, 2013-ல் "பெயோன்ஸ் டயட்" எனும் தவறான ஆலோசனையில் இருந்து (முற்றிலும் தாவர வகையிலான உணவுப்பழக்கம்) இருந்து கெயென் மிளகாய் (ஒருவித குடை மிளகாய்) இன்னும் மீளவில்லை. அதன்படி, அந்த மிளகாயை மேப்பிள் சிரப், எலுமிச்சை பழம் மற்றும் தண்ணீர் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என கூறப்பட்டது.

 

ஆனால், நம்முடைய உணவில் இந்த மசாலா பொருட்கள் ஏதேனும் பலன்களை வழங்குகின்றதா? உடல்நல குறைவு ஏற்படுவதிலிருந்து தடுக்கிறதா? அல்லது இவற்றில் ஏதாவது உண்மையில் நமக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதா?

 

மிளகாயின் பலன்கள்

மிகவும் அறியப்பட்ட, பரவலாக பயன்படுத்தப்படும் மசாலா பொருள், மிளகாய் தான். நம்முடைய உடல்நலனில் அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அதனால் பலன்கள், மோசமான விளைவுகள் என இரண்டும் ஏற்படும் என அவை கண்டறிந்துள்ளன.

 

கேப்சைசின் (Capsaicin) என்பதுதான் மிளகாயில் உள்ள முக்கிய பொருள். நாம் மிளகாயை சாப்பிடும்போது, கேப்சைசின் மூலக்கூறுகள், நம் உடலின் வெப்பநிலை ஏற்பிகளுடன் வினைபுரிந்து, காரமான உணர்வை உருவாக்க மூளைக்கு சமிக்ஞை செய்கின்றன.

 

நாம் நீண்ட காலம் வாழ்வதற்கு கேப்சைசின் உதவலாம் என சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

கடந்த 2019ல் மேற்கொள்ளப்பட்ட இத்தாலிய ஆராய்ச்சியில், மிளகாய் சேர்க்கப்பட்ட உணவை வாரத்திற்கு நான்கு முறை உட்கொண்டவர்களுக்கு, அதை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாக கண்டறியப்பட்டது. (ஆராய்ச்சியில் புகைப்பிடித்தல், உடற்பயிற்சி, ஒட்டுமொத்த உணவுப்பழக்கம் உள்ளிட்ட வாழ்வியல் பழக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.) சீனாவில் கடந்த 2015-ல் 5 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மிளகாயை உட்கொள்வது இறப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதில், தினந்தோறும் காரமான உணவுகளை உட்கொள்பவர்களுக்கு, வாரத்தில் ஒருமுறைக்கும் குறைவாக உட்கொள்பவர்களை விட இறப்புக்கான ஆபத்து 14% குறைந்துள்ளது.

 

"காரமான உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது, இறப்புக்கான, குறிப்பாக புற்றுநோய், இதய நோய் மற்றும் மூச்சு சம்பந்தமான நோய்களால் ஏற்படும் இறப்புகளுக்கான குறைவான ஆபத்துடன் தொடர்புடையது என்பதுதான் இதில் முக்கியமான கண்டுபிடிப்பு," என்கிறார், ஹார்வர்டு பொது சுகாதார பள்ளியின் ஊட்டச்சத்து பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான லூ குய்.

 

எனினும், குறுகிய காலத்தில் அதிகமான மிளகாய்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் அல்லது மூச்சு சம்பந்தமான நோய்களிலிருந்து காக்கும் என்பது இதன் அர்த்தம் அல்ல.

 

இந்த சீன ஆய்வு ஒவ்வொரு ஏழு ஆண்டும் மக்களை பின்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம். ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களின் ஆரோக்கியத்தில் மிளகாய்கள் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ ஏற்படவில்லை, காலப்போக்கில் தான் ஏற்பட்டுள்ளது. முதலில், ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் ஏற்கெனவே ஆரோக்கியமாக இருந்தார்கள்.

 

வயது, பாலினம், கல்வி நிலை, திருமண நிலை, உணவு, மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் உடலியக்க செயல்பாடு உள்ளிட்ட வாழ்வியல் முறை காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மிளகாயை உட்கொள்வதன் விளைவுகளை எல்லாவற்றிலிருந்தும் பிரிக்க முயன்றார் குய். மிளகாயை உண்பதால் நோய்களுக்கான ஆபத்து குறைவதற்கு கேப்சைசின் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்

 

"காரமான உணவுகளில் உள்ள கேப்சைசின் போன்ற சில பொருட்கள், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார் அவர். மேலும், "இது இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை விவரிக்க உதவி செய்யலாம்," என்கிறார் குய்.

 

கேப்சைசின் நாம் எரிக்கும் ஆற்றலின் அளவை அதிகரித்து, பசி உணர்வை குறைக்கும் என, சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 

கத்தார் பல்கலைக்கழகத்தின் மானுட ஊட்டச்சத்து துறை இணை பேராசிரியர் ஸுமின் ஷி, மிளகாய் உடல்பருமன் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைப்பதாகவும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பயனளிப்பதாகவும் கண்டறிந்துள்ளார். அறிவாற்றல் செயல்பாட்டில் மிளகாய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் அவர், அதிலும் தான் மூன்றாவது முறையாக வெற்றியடையலாம் என எதிர்பார்த்தார்.

 

ஆனால், சீனாவில் வயதுவந்தோரிடையே அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மிளகாய் இரண்டுக்குமான தொடர்புகளை ஆராய்ந்த போது, அதிகமாக மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு மோசமான அறிவாற்றல் செயல்பாடு இருந்ததாக கண்டறிந்தார். நினைவாற்றலில் அதன் விளைவு அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு 50கி அளவு மிளகாய் எடுத்துக் கொள்ளும் போது மோசமான நினைவாற்றலுக்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வில் ஈடுபட்டவர்களே தெரிவிக்கும் தரவுகள் நம்பகத்தன்மையற்றது என பரவலாக கருதப்படுவதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

மிளகாயை உட்கொள்ளும் போது ஏற்படும் காரமான உணர்வு நீண்ட காலமாக விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. இந்த தன்மை, மிளகாய் ஏன் அறிவாற்றல் குறைவுடன் தொடர்புடையது என்பதற்கான சில பார்வைகளை வழங்குகின்றது. நோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து தங்களை பாதுகாக்கும் பொருட்டு தாவரங்கள் அடைந்த பரிணாம வளர்ச்சியே இந்த காரத்தன்மை.

 

"சில தாவரங்கள் தன்னை பாதுகாத்துக்கொள்ள கசப்புத் தன்மை வாய்ந்ததாகவோ அல்லது காரமானதாகவோ பரிணமித்தன. தாவரங்கள் தன்னைத்தானே நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றிக்கொள்கின்றன," என பிரிட்டனின் நியூகேசில் பல்கலைக்கழகத்தில் நியூட்ரிஷன் ரிசர்ச் சென்டர் பாப்புலேஷன் ஹெல்த் சயின்சஸ் எனும் மையத்தின் மூத்த விரிவுரையாளர் கிர்ஸ்டென் பிராண்ட் தெரிவிக்கிறார்.

 

ஆனால், இந்த சேர்மங்கள், பூச்சிகளை விட மனிதர்களிடத்தில் குறைவான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. "கேஃபின் போன்று சிறிதளவு நச்சுத்தன்மை நல்லதே. கேஃபின், நம்முடைய வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது, இதனால் நாம் அதிக விழிப்புடன் இருக்கிறோம்," என்கிறார் அவர். "எனினும், அதிகளவு நச்சு நமக்குக் கேடானது." என்றும் அவர் கூறுகிறார்.

 

இத்தகைய சுவையை அளிக்கும் உணவுப்பொருட்களில் உள்ள சேர்மங்கள், மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல என வாதிடுகிறார், பிர்மிங்காமில் உள்ள ஆஸ்டன் மெடிக்கல் ஸ்கூலில் கற்பிக்கும் மூத்த ஆய்வு மாணவரும் உணவியல் நிபுணருமான டுவேன் மெல்லர். இவர் பிரிட்டனில் உள்ளார்.

 

"உணவில் நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்கும் நிறைய நிறமிகளும் கசப்புத்தன்மை வாய்ந்த உணர்வும் தாவரங்களை பூச்சிகள் சாப்பிடாமல் பாதுகாப்பதற்காக உள்ளன. இதன் நச்சுத்தன்மைக்கு நாம் பழகிவிட்டோம். கருந்தேநீரில் உள்ள டன்னின்கள் (tannins) உட்பட இத்தகைய தாவரங்களின் சேர்மங்களை அனுபவிக்க நாம் பழகிவிட்டோம், ஆனால் சில உயிரினங்கள் அதற்கு பழகவில்லை." என்று அவர் கூறுகிறார்.

 

மற்றொரு புறம்,இத்தகைய மசாலா பொருட்கள் சிலவற்றில் பலனளிப்பவையாக இருந்தாலும், வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு வழக்கமாக நாம் அதை உட்கொள்வதில்லை.

 

"மசாலா பொருட்கள் உணவின் பண்புகளை சமன்படுத்த பயன்படுத்தப்பட்டன. உணவு சூடு, குளிர்ச்சி, ஈரப்பதம் மற்றும் வறட்சியான பண்புகள் உள்ளவையாக கருதப்பட்ட நிலையில், அவற்றை சமன்படுத்த வேண்டும் என நினைத்தனர்," என்கிறார் அவர். உதாரணமாக, மீன் குளிர்ச்சியானது, ஈரப்பதம் கொண்டது என கருதப்பட்ட நிலையில், மசாலாக்கள் சூடு மற்றும் வறண்ட தன்மை கொண்டவை.

 

உணவை மருந்தாக பயன்படுத்துவதும் அதன் பண்புக்கேற்ப அவற்றை சமன்செய்வதும் ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கிய கோட்பாடாகும். இது, இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

 

நிறைய மேற்கு நாடுகளில், இத்தகைய கருத்துகள் புதிதானவை. "உணவை சமநிலை செய்யும் இந்த கருத்துரு, புதிய, நவீன மருத்துவத்துடன் பகிரப்பட்டுள்ளது," என்கிறார் அவர். "மசாலா பொருட்களுடன் நமக்கிருக்கும் நவீன கவர்ச்சி, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, இடைக்காலத்தை நமக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஆன்டிபயாடிக் போன்ற நவீன மருந்துகளுக்கும் மாற்று மருத்துவத்திற்கும் (superstitious medicine) இடையே தடுப்பு சுவர் இருந்தது."

 

தன் வேலையின் ஒரு பகுதியாக இந்த மூலக்கூறுகள் புதிய மருந்துகளுக்கான சேர்மங்களாக இருக்க முடியுமா என ஆராய்கிறார், மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் சிகிச்சை முறைகளின் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு குறித்த மையத்தின் முன்னாள் உதவி ஆய்வு பேராசிரியரான கேத்ரின் நெல்சன். குர்கியூமினின் விளைவுகள் குறித்த கூற்றுகள் குறித்து அவருக்கு தெரியவந்ததால் அதுகுறித்து ஆராய அவர் முடிவு செய்துள்ளார்.

 

"சோதனைக் குழாய்களில் வளரும் செல்களில் இந்த சேர்மங்களை சேர்த்து, அச்செல்களில் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் உழைப்பை செலுத்துகின்றனர்," என்கிறார் அவர்.

 

ஆனால், குர்கியூமின் ஒரு "பயங்கரமான" மூலக்கூறு என அவர் கூறுகிறார். ஏனெனில், அது செரிமானம் ஆனவுடன் உடல் அதை பயன்படுத்த முடியாது என்கிறார் அவர். சிறுகுடலால் அதை எளிதாக உறிஞ்ச முடியாது. மேலும், சிறு மற்றும் பெருங்குடல்களில் உள்ள புரோட்டீன்களுடன் கலக்கும் போது அதன் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம். அதனால் பெரும் பலன் இல்லை.

 

மஞ்சளில் உண்மையாக பலனளிக்கக் கூடிய ஒன்று உண்டு, ஆனால், அது குர்கியூமின் அல்ல என்கிறார் அவர். ஓர் உணவில் மஞ்சள் சேர்த்து சமைக்கும்போது, அது மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்க்கப்பட்டு, சூடுபடுத்தும்போது, அதன் வேதியியல் சேர்மங்கள் மாறும் என்கிறார் அவர்.

 

"உண்மையில் மஞ்சளில் நாம் பார்க்க வேண்டியது குர்கியூமின் அல்ல. அது மட்டும் மஞ்சளில் இல்லை. அதனை வேதியியல் ரீதியாக மாற்றப்படவோ அல்லது நன்மை பயக்கும் வகையில் ஏதாவது சேர்க்கப்படவோ வேண்டும்."

 

நிறைய மஞ்சள் சாப்பிடுவது ஆபத்தானது அல்ல என்று கூறும் அவர், ஆனால் சுய-மருந்தாக அதை உட்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

 

விளைவுகளும் காரணிகளும்

மிளகாய் மற்றும் மஞ்சள் குறித்து பரவலாக ஆராயப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான சோதனைகள் அதனை உட்கொள்வதால் ஏற்படும் வெவ்வேறு வித ஆரோக்கியமான விளைவுகளை மட்டுமே ஒப்பிட்டுள்ளது. இவை, காரணத்தை விளைவிலிருந்து பிரிக்காது. மேலும், ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு மனித உடலுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 

ஊட்டச்சத்து தொடர்பான பல ஆராய்ச்சிகள் போலவே, காரணத்திலிருந்து விளைவை பிரிப்பது கடினமானது.

 

கடந்த 2019-ல் மிளகாய் உட்கொண்டால் இறப்புக்கான ஆபத்து குறைவாக கூறப்பட்ட ஆராய்ச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அது அவதானிப்புதான். எனவே, மிளகாய் உட்கொண்டால் நீண்ட காலம் வாழ முடியுமா, ஆராய்ச்சியில் ஏற்கனவே ஆரோக்கியமான மக்கள் மிளகாய்களை உட்கொண்டுள்ளனரா என்பதை அறிவது கடினம். அதுகுறித்த ஆராய்ச்சி நடைபெறுகிறது.

 

இத்தாலியர்கள் மற்றும் மத்திய தரைக்கடல் என வெவ்வேறு கலாசாரங்களில் மிளகாயை எப்படி உண்கின்றனர் என்பதில்தான் இது அடங்கியிருப்பதாக, இத்தாலியில் உள்ள மத்திய தரைக்கடல் நரம்பியல் மையத்தின் தொற்றுநோயியல் நிபுணரும் ஆய்வாசிரியருமான மரியாலௌரா பொனாசியோ கூறுகிறார்.

 

"மத்திய தரைக்கடல் நாடுகளில் மிளகாய் பரவலாக உட்கொள்ளப்படுகிறது," என்கிறார் பொனாசியோ. "பெரும்பாலும் பாஸ்தா, பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளுடனோ சேர்த்து உண்ணப்படுகிறது."

 

அவற்றை பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளுடன் சாப்பிடலாம் என்பது, மசாலா பொருட்கள் எப்படி மறைமுகமாக பலனளிக்கலாம் என்பதற்கான ஓர் உதாரணம்.

 

பர்கர்களில் மசாலா கலவையைச் சேர்ப்பது, மசாலா இல்லாமல் பர்கரை சாப்பிடுபவர்களைக் காட்டிலும் ஒரு நபரின் உடலில் குறைவான நிலையற்ற மூலக்கூறுகளை (free radicals) உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும், மேலும் இறைச்சியை புற்றுநோய் காரணியாக மாற்றலாம் என்றும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஆனால், அதன் பலன்களை மசாலா பொருட்களின் பதப்படுத்தும் தன்மைகளை பொறுத்து எளிமையாக விளக்கலாம், என இந்த ஆய்வில் ஈடுபடாத மெல்லர் கூறுகிறார்.

 

"இறைச்சியில் மசாலா பொருட்களை சேர்ப்பது, இறைச்சியை பதப்படுத்த நன்கு அறியப்பட்ட வழியாகும்," என்கிறார் அவர். "மசாலா பொருட்களின் பலன்கள் நேரடியானதாக அல்லாமல், அதன் பதப்படுத்தும் தன்மையில் அதிகமாக இருக்கலாம். இரு வழிகளிலும் உண்ணும் உணவை ஆபத்து குறைவானதாக ஆக்குவதிலிருந்து நாம் பலனடையலாம்."

 

நாம் எதனுடன் அந்த மசாலா பொருட்களை சாப்பிடுகிறோம் என்பதிலிருந்து அதன் பலன் நமக்குக் கிடைப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். உதாரணமாக, உப்புக்கு பதிலாக அவற்றை நாம் பயன்படுத்தும் போக்கு, என்கிறார், நியூ யார்க்கில் உள்ள என்.ஒய்.யூ லங்கோன் ஹெல்த் எனும் மருத்துவ மையத்தின் மருத்துவ உதவி பேராசிரியர் லிப்பி ராய். "மசாலாக்கள் உணவை சுவையானதாக மாற்றுகின்றன. இது, உப்புக்கான ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்," என்கிறார் அவர். உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு பொருட்களுக்கு மாற்றாக மசாலாக்களை பயன்படுத்துவது, வெகுஜன உணவுகளை சுவையானதாக ஆக்குகின்றன என கடந்தாண்டு ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

 

காய்கறிகளுடன் மிளகாயை உண்ணும் போக்கு நம்மிடையே உள்ளது. இதுவும் நமக்கு பயனளிக்கும்.

 

எனவே, மஞ்சள் கலக்கப்பட்ட பால், (கோல்டன் லேட்டே) எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. சில காய்கறிகளை மசாலா தூவி சாப்பிடுவது நல்லது. எந்தவொரு நோயையும் தடுக்கவோ அல்லது போராடுவதற்கோ, நாம் நிச்சயமாக அவற்றை நம்பக்கூடாது.

 

நன்றி:ஜெஸிகா பிரவுன்/பிபிசி

 

0 comments:

Post a Comment