விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்

 


உதவும் இசை

அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா உளவியல் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், இசை வாயிலாக நாம் இழந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நினைவாற்றலை அதிகரிக்கவும் இசை உதவும் எனத் தெரியவந்துள்ளது.

 

நீரிழிவை கண்டறிய புதுமுறை

அமெரிக்காவில் உள்ள க்ளிக்ஸ் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் மனிதர்களின் குரலை வைத்தே நீரிழிவு இருப்பதைக் கண்டறியும் வழிமுறையை உருவாக்கி உள்ளனர். இதன்படி நாம் பேசும்போது ஏற்படும் ஸ்தாயி (Voice pitch) மாறுபாட்டைச் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இயங்கும் செல்போன் செயலி ஆராய்ந்து முடிவைச் சொல்லும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும்போது குரல் வளையில் ஏற்படும் அழுத்தம் இந்த மாறுபாட்டை உருவாக்கும் என்ற அனுமானமே ஆய்வின் அடிப்படை. ஆய்வாளர்கள் 505 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் 174 நீரிழிவு நோய் உள்ளவர்கள், 242 பேர் நோய் இல்லாதவர்கள், 89 பேர் நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள். இவர்களை அமைதியான சூழலில் அமர்த்தி 2 வாரங்கள் தொடர்ந்து தினமும் 6 முறை குரலைப் பதிவு செய்தனர். மற்றொரு புறம் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்தனர்.

 

இந்த ஆய்வு முடிவில் ரத்த சர்க்கரை அளவுக்கும் குரல் மாறுபாட்டிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, விரைவில் மேம்படுத்தப்பட்ட புது முறையிலான ரத்த சர்க்கரை கண்டறியும் வழிமுறை அறிமுகமாகும்.

 

கிருமிகளை பலவீனமாக்கும் மருந்து

கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுடன் அன்றாடம் மனித இனம் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தக் கிருமிகளுக்கு எதிரான முதல் மருந்து பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்டது 1928ஆம் ஆண்டில். அதைத் தொடர்ந்து கிருமிகளைக் கொல்லும் பலவித மருந்துகள் தற்போது வந்துவிட்டன. அவை ஆன்டி பயாடிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றைச் சமாளித்து வளரும் யுக்தியைத் தற்போது கிருமிகள் பெற்றுவிட்டன.

மருந்தின் வீரியத்தை அதிகரிக்க, அதிகரிக்கக் கிருமிகளும் வலிமை பெற்ற 'சூப்பர்பக்ஸ்' ஆக மாறி வருகின்றன. எனவே நேரடியாகக் கிருமிகளைத் தாக்காமல் அவற்றைச் செயலிழக்கச் செய்யக்கூடிய, அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடுக்கக்கூடிய மருந்துகளை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

உதாரணமாக எசரிக்கியா கோலை எனும் பாக்டீரியா, குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான வயிற்றுப்போக்கை உருவாக்கும். இது குடலில் ஒட்டி இருந்து நோயை ஏற்படுத்தும். நாம் தரும் மருந்து குடலில் பாக்டீரியா ஒட்டாமல் தடுக்கும். இதன்மூலம் நோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் மருந்துக்கு எதிராகப் பாக்டீரியா வீரியம் அடைவதும் தவிர்க்கப்படுகிறது.

நார்வே, பின்லாந்து நாட்டைச் சார்ந்த ஆய்வாளர்கள் இப்படியான இரு சேர்மங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம். ஒரு சேர்மம் ஐஸ்லாந்தில் வாழ்கின்ற ஒருவகை நத்தையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் T091-5. T160-2 எனும் மற்றொரு சேர்மம் நார்வேயில் வாழும் ஒரு கடற்பாசியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இவை எசரிக்கியா கோலை பாக்டீரியாவின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, வலுவிழக்கச் செய்தன.

முக்கியமாக சாதாரண கிருமியை 'சூப்பர்பக்ஸ்' ஆக மாற்றும் வேலையை இவை செய்யவில்லை. இந்த ஆய்வு எதிர்காலத்தில் கிருமிகளுக்கு எதிரான மருத்துவத்தில் பெரிய மாற்றம் நிகழ்வதற்கான தொடக்கப்புள்ளியாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

பேட்டரி புது முறை

இன்றைய தேதியில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை இயங்க லித்தியம் பேட்டரி அவசியம். லித்தியம் எடுக்கும் போது இயற்கை மாசடைகிறது. இதனால் ஆர்.சி.ஈ., எனும் புது முறை ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்போர்ட் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

 

தங்கம் உருவாக…

தங்கம் கிடைத்தால் பேரானந்தம்.பூகம்பம் என்றால் பேரழிவு.ஆனால்  பூகம்பம் ஏற்படும்போது உருவாகும் மின் தாக்கத்தால் தான் பூமியில் தங்கம் உருவாகின்றன என்று ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலை ஆய்வு தெரிவிக்கிறது.

 

குணப்படுத்தும் செல்கள்

நமது உடலை நோய்கள் தாக்காமல் காக்கும் தன்மை உடையவை 'டி' செல்கள். இவற்றை நேரடியாக முறிந்த எலும்புகள், சிதைந்த தசைகள் மீது செலுத்தினால் அவற்றைக் குணப்படுத்தும் என்று ஜப்பானைச் சேர்ந்த ஒசாகா பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

மரபணு மாற்றி, சத்துகளை ஏற்றி சாதனை!

பீட்டா கரோடின் என்பது மனித உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து. இதை வைத்தே நமது உடல் வைட்டமின் 'ஏ' சத்தை உற்பத்தி செய்கிறது. இது கண்பார்வை, நோயெதிர்ப்பு சக்தி, செல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவசியம். வைட்டமின் ஏ சத்து சிலவகை புற்றுநோய்கள், அல்சைமர் நோய், இதய நோய் உள்ளிட்டவற்றைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள், இளஞ்சிவப்பு நிற காய்களான பூசணி, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் பீட்டா கரோடின் அதிகம்.

இலைக்கோஸ் எனப்படும் லெட்யூஸ், இலைகளாலான ஒரு காய்கறி. இது சாண்ட்விஜ் உள்ளிட்ட உணவுகளில் பயன்படுகிறது. இதில் பீட்டா கரோடின் சத்து ஓரளவு உள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐபிஎம்சிபி (IBMCP) ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சாதாரண இலைக்கோசில் சில மரபணு மாற்றம் செய்து அதில் உள்ள பீட்டா கரோடின் சத்தை 30 மடங்கு அதிகரித்துள்ளனர்.

இந்தச் சத்தை அதிகரிக்கும்போது அந்தக் காயின் நிறமும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. எனவே இதற்கு 'தங்க இலைக்கோஸ்' (Golden Lettuce) என்ற பெயரிட்டுள்ளனர். இதன் நிறம் நம்மைக் கவரும் விதத்தில் உள்ளது. அதேநேரம் சத்து மிக்கதாகவும் உள்ளது. இதில் உள்ள கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதில் உள்ள சத்தை மிகச் சுலபமாக நம் உடலால் உறிஞ்சிக் கொள்ள முடியும் என்பது தான்.

இந்தப் புதிய இலைக்கோஸை முள்ளங்கி, பட்டாணி முதலிய காய்கறிகளுடன் சாலடாக கலந்து சாப்பிடலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment