விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்

🦟ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

மனிதர்களுக்கு ஓயாத தொல்லை தருபவை கொசுக்கள். வந்தோம், கடித்தோம், வயிராற ரத்தம் குடித்தோம் என்றில்லாமல், விஷ வைரஸ்களைப் பரப்பும் விஷமம் பிடித்தவை இவை. இதனால் தான் இவற்றிடம் உஷாராக இருக்க வேண்டும் என்கின்றனர்.

மேட் முதல் கொசு அடிக்கும் பேட் வரை, வேப்பிலை முதல் கொசு வலை வரை என்ன செய்தாலும் இவற்றை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. எங்காவது ஒளிந்திருந்து தங்கள் வேலையைக் காட்டிவிடும்.

இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, இந்தக் கொசுக்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளது. கருவிக்கு 'ஐரிஸ்' என்று பெயர் சூட்டியுள்ளது. இதை ஓர் அறைக்குள் வைத்துவிட்டால் போதும். சதாநேரமும் கேமரா கண்கொண்டு கொசுக்களைத் தேடிக் கொண்டே இருக்கும். அகச்சிவப்பு எல்..டி., விளக்கும் இதில் இருப்பதால் இருளிலும் கண்காணிக்கும். இதில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூளையாகச் செயல்படுகிறது. இதனால் கொசுக்களுக்கும், இன்ன பிற காற்றில் மிதக்கும் குப்பைக்கும் எளிதாக வித்தியாசம் கண்டுவிடும்.

பறக்கும் கொசு எங்காவது அமர்ந்துவிட்டால் உடனே இந்தக் கருவி தன் லேசர் வெளிச்சத்தால் அந்த இடத்தைக் காட்டிவிடும். கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனுக்கு எச்சரிக்கை வந்துவிடும். பிறகு பேட்டை எடுத்து கொசுவை வேட்டையாட வேண்டியது உங்கள் வேலை.

அதையும் அந்த மிஷினே செய்து விடக் கூடாதா என்று நீங்கள் நினைப்பது அந்த நிறுவனத்திற்கு கேட்டிருக்கும். விரைவில் இதற்கும் வழியுடன் வரும் என்று எதிர்பார்ப்போம்.


🐼புது பேண்டேஜ்

உடலில் காயம்பட்ட இடத்தில் பேண்டேஜ் போட்டு காயம் ஆற்றுவோம். சில ஆழமான, எளிதாக குணம் ஆகாத காயங்களுக்கு சாதாரண பேண்டேஜ் போதாது. அவற்றுக்காகவே மின் அலைகளைப் பயன்படுத்தும் புது பேண்டேஜ் அறிமுகமாகி உள்ளது. நீர் பட்டவுடன் இது செயல்படத் துவங்கி காயம் ஆற்றும்.

 

🔍மெக்னீசியம் குறைவாக உள்ளவர்

நடுத்தர வயதுடைய 172 பேரை வைத்து சவுத் ஆஸ்திரேலியா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், மெக்னீசியம் சத்து குறைவாக உள்ளவர்களுக்கே டி.என்.. கோளாறுகள் அதிகமாக ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பீன்ஸ், பச்சை காய்கறிகள், விதைகள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

🎾டென்னிஸ் விளையாட ரோபோ

மனிதர்களுடன் டென்னிஸ் விளையாடும் ரோபோவை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. 29 போட்டிகளில் 13 வீரர்களை ரோபோ வீழ்த்தியது. இன்னும் சில மாற்றங்கள் செய்தால், இது மனிதர்களையே மிஞ்சக் கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

🍯தேன் கலந்தால் நல்லது

நம் உடலில், குறிப்பாகக் குடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அவற்றில் நமக்கு நன்மை செய்பவை நலநுண்ணுயிரிகள் (Probiotics) என்று அழைக்கப்படுகின்றன. குடல் நலநுண்ணுயிரிகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்துப் பல ஆய்வுகள் வெளியானபடி உள்ளன.

குறிப்பிட்ட சில உணவுகளை உண்பதன் வாயிலாக அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும். இன் தயிர் (யோகர்ட் - தயிர் போன்ற ஒரு பால் பொருள்) நலநுண்ணுயிரிகள் நிறைந்தது. இதில் தேன் சேர்த்து உண்பது அதில் உள்ள நுண்ணுயிரிகள் முழுமையாக நம் உடலில் சேர வழிவகுக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய் பல்கலை கண்டறிந்துள்ளது.

மத்தியத் தரைக் கடல் பகுதிகளின் உணவுகளில் இன் தயிரில் தேன் சேர்க்கப்படுகிறது. இதுகுறித்த ஆய்வில் இறங்கினர் ஆராய்ச்சியாளர்கள். 170 கிராம் இன் தயிரில் 42 கிராம் தேன் கலந்தனர். நம் வயிற்றில் உணவைச் செரிப்பதற்காக சில வேதியியல் வினைகள் நடக்கும். அதேபோன்ற ஓர் ஆய்வுக்கூட சோதனைக்கு இன் தயிர் கலவையை உட்படுத்தினர். அதிலிருந்து தேனானது இன் தயிரிலிருந்த நலநுண்ணுயிரிகளை வேதிவினையால் அழியாமல் காத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வுக்கூட சோதனையை அடுத்து, மனித உடலில் சோதிப்பதற்காக 66 பேரை அழைத்தனர். அவர்களில் ஒரு பகுதியினருக்கு தேன் கலந்த இன் தயிரையும், மற்றொரு பகுதியினருக்கு தேன் கலக்காத இன் தயிரையும் இரண்டு வாரங்களுக்கு உண்ணத் தந்தனர்.

பிறகு இருதரப்பினரின் குடலில் உள்ள நலநுண்ணுயிரிகளைச் சோதித்தனர். தேன் கலந்து உண்டவர்கள் குடலில் நிறைய நலநுண்ணுயிரிகள் உயிருடன் இருந்தன. இதிலிருந்து தேனானது நலநுண்ணுயிரிகளைக் காக்கிறது என்ற ஆய்வுக்கூட முடிவு வலுப்பெறுகிறது.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment