மனிதர்களின் குடல் நாளம், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வைரஸ்கள் நம் உடலுக்குள் என்ன செய்கின்றன?
நீங்கள், நம் குடலுக்குள் வசிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த பாக்டீரியாக்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் கோடிக்கணக்கான வைரஸ்கள் வாழ்கின்றன. அந்த பாக்டீரியாக்கள் மீதும் நம் மீதும் அவை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதுதான் ஃபேஜியோம். அதாவது, பாக்டீரியாக்களை உண்ணக்கூடிய நுண்ணுயிரிகளின் தொகுப்பு. மனித செரிமான மண்டலத்திற்குள் இத்தகைய வைரஸ்கள் பில்லியன் கணக்கில், டிரில்லியன் கணக்கில் இருக்கின்றன. அவற்றின் தொகுப்புதான் ஃபேஜியோம்.
இந்த ஃபேஜியோம் தொடர்பான அறிவியல் புரிதல் சமீபத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் கொலராடோ அன்சுட்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பாக்டீரியாலஜிஸ்ட் ப்ரெக் டியூர்காப். அவற்றின் மகத்தான பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், சரியான பாக்டீரிய உண்ணி வைரஸை, அதாவது ஃபேஜை (phage) பயன்படுத்தினால் அல்லது குறிவைத்து சிகிச்சை மேற்கொண்டால், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமென்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
“பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமே இருக்கும்” என்று ஸ்டான்ஃபோர்ட் மெடிசனின் தொற்றுநோயியல் மருத்துவரும் ஆய்வாளருமான பால் பொலிக்கி கூறுகிறார்.
ஆனால், இப்போதைக்கு மனித குடல் நாளப் பகுதியை எத்தனை பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் ஆக்கிரமித்துள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு பாக்டீரியாவுக்கும் ஒன்று அல்லது அதற்கும் குறைவாக இவை இருக்கக்கூடும்.
பாக்டீரிய உண்ணி
வைரஸ்கள் நபருக்கு ஏற்ப மாறுபடுமா?
பாக்டீரிய உண்ணி வைரஸின் மரபணுக்களை கொண்ட பாக்டீரியாக்களும் குடலில் இருக்கின்றன. ஆனால், அவை வைரஸ்களை தீவிரமாக உற்பத்தி செய்யவில்லை. அந்த பாக்டீரியாக்களின் மரபணுத்தொகுதியில் பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் டி.என்.ஏ.களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதே அதற்குக் காரணம்.
இன்னும் நிறைய அடையாளம் காணப்படாத ஃபேஜ்கள் இருக்கின்றன. இவற்றை விஞ்ஞானிகள் ஃபேஜியோமின் “இருண்ட பொருள்” என்று அழைக்கின்றனர். இது வரையிலான ஃபேஜ் ஆராய்ச்சிகளின் பெரும்பகுதி, இந்த வைரஸ்கள் மற்றும் அவை சார்ந்து வாழும் பாக்டீரியாவை அடையாளம் காண்பதாக இருந்துள்ளன.
நல்ல ஃபேஜ்களின் தரவுத்தளத்தில், சுமார் 1,40,000க்கும் மேற்பட்ட ஃபேஜ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது நிச்சயமாக குறைத்து மதிப்பிடப்பட்ட அளவுதான். அயர்லாந்தில் உள்ள கார்க் பல்கலைக்கழக கல்லூரியின் நுண்ணுயிரியலாளர் கொலின் ஹில், "பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் பன்மைத்துவம் அசாதாரணமானது” என்கிறார்.
விஞ்ஞானிகள் மனித மலத்தின் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு வரிசைகளைப் பிரித்தறிவதன் மூலம் இந்த ஃபேஜ் வைரஸ்களை கண்டுபிடிக்கிறார்கள். அதில்தான், ஆய்வாளர்கள் க்ராஸ்ஃபேஜ் (crAsspage) எனப்படும் குடலில் காணப்படும் மிகப் பொதுவான ஃபேஜ் குழுவைக் கண்டறிந்தார்கள்.
குடலில் பொதுவாகக் காணப்படும் க்ராஸ்ஃபேஜ்கள் மனித ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவை குடல் பாக்டீரியாவின் பொதுவான குழுவாக அறியப்படும் பாக்டீராய்டுகளை (Bacteroides) பாதிப்பதால், அப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்கிறார் ஹில்.
பாக்டீராய்டுகளை பாதிக்கும் பிற பொதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் குபாஃபேஜ் (குடல் நாள பாக்டீராய்டுகளை தாக்கும் ஃபேஜ்) மற்றும் லோவிஃபேஜ் (பல வைரஸ் மரபணுக் கூறுகள்) ஆகியவை அடங்கும்.
இத்தகைய பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் தொகுப்பு ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். நுண்ணுயிரியல் துறையின் 2023ஆம் ஆண்டு மதிப்பாய்வில் (2023 Annual Review of Microbiology) ஹில் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் விவரித்ததன்படி, வயது, பாலினம், உணவுமுறை, வாழ்க்கை முறை ஆகிய அனைத்தையும் பொறுத்து, இந்தத் தொகுப்பில் மாற்றங்கள் இருக்கும்.
வைரஸ் - பாக்டீரியா உறவு
ஃபேஜ் எனப்படும் இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாவை பாதித்து, சில நேரங்களில் அவற்றைக் கொல்கின்றன என்பது நாம் அறிந்தது தான். ஆனால் அதையும் தாண்டி, வைரஸ், பாக்டீரியா இடையே விவரிக்க முடியாத அளவுக்குச் சிக்கலான உறவு இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
“நாங்கள் முதலில், ஃபேஜ்களும் பாக்டீரியாக்களும் சண்டையிடுகின்றன என்று நினைத்தோம். ஆனால், அவையிரண்டும் எதிர்த்திசையில் இருக்கும் அதேவேளையில், ஒன்றுக்கொன்று நல்லுறவையும் பேணுகின்றன.”
புதிய மரபணுக்களை கொண்டு வருவதன் மூலம் ஃபேஜ்கள் பாக்டீரியாவுக்கு பயனளிக்கின்றன. ஒரு பாக்டீரிய உண்ணி வைரஸ் துகள் ஒரு பாக்டீரியாவுக்குள் ஒன்றிணையும்போது, அந்த வைரஸ் சில நேரங்களில் அதன் புரதக்கூட்டிற்குள் அதன் சொந்த மரபணுப் பொருட்களுடன் சேர்த்து பாக்டீரியாவின் மரபணுக்களையும் அடைத்து வைத்துக்கொள்ளும்.
பின்னர், அந்த மரபணுக்களை ஒரு புதிய ஒம்புயிரி (Host) பாக்டீரியாவாக மாற்றுகிறது. இப்படி தற்செயலாகத் தனது புரதக்கூட்டில் அது சேகரித்த மரபணுக்கள் உதவிகரமாகவும் இருக்கும் என்கிறார் டியூர்காப். ஏனெனில், அவை ஆன்டிபயாடிக் பொருட்களுக்கு எதிர் செயலாற்றும் திறனையும், ஒரு புதிய பொருளை ஜீரணிக்கும் திறனையும் குடலுக்கு வழங்கக்கூடும்.
பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாக்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நேரத்தில் அவற்றைக் கொல்வதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக ஹில் கூறுகிறார். பாக்டீராய்டுகள் எனப்படும் பாக்டீரியாக்கள், தங்கள் வெளிப்புற மேற்பரப்பில் பல வகையான பூச்சுகளைக் கொண்டுள்ளன. இந்தப் பூச்சுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்ப்பது மற்றும் செரிமான மண்டலத்தின் வெவ்வேறு பகுதிகல் இருந்து பலவாறான நன்மைகளை செய்கின்றன.
ஆனால், “க்ராஸ்ஃபேஜ் வகையைச் சேர்ந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இந்தப் பூச்சுகளை அடையாளம் கண்டுவிடக்கூடும். ஆகையால் பாக்டீராய்டுகள் தங்கள் வெளிப்புற பூச்சுகளைத் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய தேவை உள்ளது,” என்கிறார் ஹில்.
இதன்விளைவாக, குடலில் வெவ்வேறு வகை வெளிப்புற பூச்சுகளைக் கொண்ட பாக்டீராய்டுகள் உள்ளன. அதோடு, குடலின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வகையிலும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் இவற்றின் எண்ணிக்கை அமைகின்றன.
வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்
பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எல்லை மீறிப் போகாமல் பாக்டீரிய உண்ணி வைரஸ்களான ஃபேஜ்கள் தடுக்கின்றன.
நம் உடலிலுள்ள குடல் நாளம் காடுகளைப் போன்ற ஒரு சூழலியல் அமைப்பைக் கொண்டது. ஒரு காட்டில் வாழும் புலிகளும் ஓநாய்களும் எப்படி மான்களை வேட்டையாடுமோ, அதுபோல, ஃபேஜ் வைரஸ்கள் பாக்டீரியாக்களை வேட்டையாடுகின்றன. காட்டிற்கு புலிகளும் ஓநாய்களும் எப்படித் தேவையோ, அதேபோல, நம் குடலுக்கும் இந்த ஃபேஜ்கள் தேவை.
இதில், வேட்டையாடிக்கும்(ஃபேஜ்கள்) இரைக்கும்(பாக்டீரியாக்கள்) இடையிலான உறவில் மாற்றம் ஏற்படும்போது, நமது செரிமான மண்டலத்தில், குடல் அழற்சி(IBS), குடல் எரிச்சல், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக, குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய குடலில், வைரஸ்களின் பன்மைத்தன்மை குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குடல் நாள நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேணுவதற்காக, அதற்கேற்ற உணவுமுறையை மக்கள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்படுவார்கள். சில தீவிரமான சந்தர்ப்பங்களில் மருத்துவரீதியாக மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், பாக்டீரிய உண்ணி வைரஸ்களை சமாளிப்பது மருத்துவத்தில் மிகவும் நேர்த்தியான அணுகுமுறையை வழங்கக்கூடும் என்று ஹில் கூறுகிறார். அதாவது, வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, அதை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை அழிப்பதற்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு ஏதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களை விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இல்லாமல் போனால், “சில வகையான பாக்டீரியாக்கள் குடலில் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்றும் அதனால், சில உணவுகளை ஜீரணிக்க முடியாமல் வாயுப் பிரச்னை மற்றும் வயிறு வீக்கம் ஏற்படலாம்.” ஆகவே, நம் குடலின் சூழலியல் அமைப்பை நிர்வகிக்கும் டிரில்லியன் கணக்கான இந்த ஃபேஜ்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று ஹில் பரிந்துரைக்கிறார்.
நன்றி:பிபிசி தமிழ்/ ஆம்பர் டான்ஸ்
0 comments:
Post a Comment