- "கனகம்மா"- சிறு கதை



அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971  ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 2000 ஆண்டில் மாரடைப்பால் காலமாகிவிட்டார்.

 

இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது. கிழக்கு வடக்கு மாகாணம் எங்கும் ஒரு பாதுகாப்பற்ற சூழல். தனித்துப்போன கனகம்மா, தன் இளைய  மகளுடன் அத்தியடியிலேயே வாழத் தொடங்கினார். தொடக்கத்தில் போரின் பாதிப்புகள் குறைவாக இருந்ததாலும், தட்டுப்பாடுகள் அவ்வளவாக பாதிப்பு அடையாததாலும் வாழ்வு ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருந்தது. என்றாலும் வேலைகளுக்கு போய் வருவதும், பாடசாலைக்கு போய் வருவதும் பல இடர்பாடுகளை சந்தித்தது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பயம் பொதுவாக எல்லா வடக்கு கிழக்கு மக்களிடமும் இருந்தது.  

 

இனப் போரின் திவீரமும் அதனால் தட்டுப்பாடுகளும் போக்குவரத்துக்களும் பிரச்சனைகளுக்கு உள்ளாக, குடும்பத்துக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. பிள்ளைகளின் படிப்பை தொடரவேண்டும், அதேநேரம் பாதுகாப்பும் வேண்டும் தாயையும் பார்க்கவேண்டும் போன்ற சுமைகள் ஒருபக்கம். இவற்றை ஓரளவு சமாளிக்க யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்புக்கு போகவேண்டும் என்று இளைய மகளும், தான் பிறந்த மண்ணை விட்டு வரமாடடேன் என்று தாயும் இரு வேறு திசையில் இருந்தார்கள். மகளின் தற்காலிக முடிவு நல்லதாக இருந்தாலும், பிறந்த மண்ணில் தாய் கொண்ட பற்று இழுபடியை கொடுத்தது. கனகம்மா, மகள் குடும்பம் கொழும்பு போவதைத் தடுக்கவில்லை, ஆனால் தன்னை பார்க்க வேலைக்கு ஒரு ஆளை ஒழுங்குபடுத்தி, தன் அத்தியடி வீட்டிலேயே, தன்னை விட்டுவிட்டு போகும்படி எந்த நேரமும் கேட்டுக்கொண்டே இருந்தார்.

 

அச்சுவேலி, இடைக்காட்டை  பூர்வீக இடமாக கொண்ட , ஆனால் அத்தியடியில் 1917 இல் பிறந்து வளர்ந்த கனகம்மா, எட்டுப்பிள்ளைகளின் தாயாக இருந்தாலும், இரண்டு பிள்ளைகள் இளம் வயதிலேயே காலமாகியும், ஐந்து பிள்ளைகள் ஒவ்வொருவராக தங்கள் குடும்பத்துடன் நாட்டை  விட்டு போனதாலும், மிஞ்சி இருக்கும் இளைய மகளின் அரவணைப்பும் பாதுகாப்பும் அவசியம் என்பதை அறியாதவர் அல்ல கனகம்மா. பணம் அவருக்கு பிரச்சனை இல்லை. அவரின் பிரச்சனை தன் வீட்டை, மண்ணை விட்டு வெளியே போவது தான். கனகம்மா அதே சிந்தனை, அதனால் அவரின் கவலையும் அதிகரித்து, அவரின் முகத்தின் செந்தளிப்பும் குறையத் தொடங்கியது. அரசை, அரசியல்வாதிகளை தன்பாட்டில் திட்டுவார். சிலவேளை முற்றத்து மண்ணைத் தூக்கி எறிவார். கனகம்மாவின் போக்கு ஒரு வித்தியாசமாக மாறிக்கொண்டு இருந்தது. 

 

கணவனின் மறைவிற்கு பிறகு, அவரின் வாழ்வில் ஒரு கை முறிந்தது போல உணர்ந்தார். ஆனால் அவரின் மருமகன் அந்தக்குறையை விடாமல், தேவையான வெளி உதவிகளை அன்பாகவும் ஆதரவாகவும் செய்தார். ஆகவே கனகம்மாவிற்கு பெரும் பிரச்சனை என்று ஒன்றும் இருக்கவில்லை, முதுமையும் கவலையும் தான் அவரை வாட்டிக்கொண்டு இருந்தது.

 

யாழில் அடிக்கடி நடைபெறும் ஆகாயத்தில் இருந்து குண்டு வீச்சிலும், கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதலும் மற்றும் படையினரின் கெடுபிடிகளும் கனகம்மாவின் இளைய மகளுக்கு எப்பவும் ஒரு பதற்றத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது. அது ஞாயமானது கூட. எவ்வளவு கெதியாக வடமாகாணத்தை விட்டு வெளியே போகவேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருந்தார். ஆனால் தாயின், கனகம்மாவின் பிடிவாதம் தளர்ந்தபாடில்லை. தாயை தனிய   விட்டுவிட்டு போகவும் மனம் இல்லை. முதியோரின் தனிமை எவ்வளவு கொடுமை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

 

ஒரு காலத்தில், புதிதாக வீட்டுடன் அணைத்துக் கட்டிய புதுவிறாந்தை  முழுவதும் பொயிலை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதன் மேல் ஏறி, தம்பி இருவருடனும் விளையாடும் போது வாங்கிய அடிகள் எத்தனையாக இருந்தாலும்,  'அம்மா, கனகம்மா என்றும் எங்களை மிக அன்போடும் ,கண்டிப்போடும் வளர்த்திருந்தாள்.பிள்ளைகளை கண்ணுங்கருத்துமாக வளர்த்து கரை சேர்த்திருந்தாள்' .... மகள் அதை முணுமுணுத்தபடி வானத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும்?

 

பேரப்பிள்ளைகளின் உலகத்தில் கனகம்மா ஒரு குழந்தையாகவே மாறிப் போவாள். கனகம்மாவிடம் அன்பு எவ்வளவு இருந்ததோ அந்த அளவு வைராக்கியமும் இருந்தது. அது மட்டும் அல்ல, அவரது  வார்த்தைகள் உச்ச ஸ்தாயில் [மண்டிலத்தில்] வெளிப்படும் தன்மை கொண்டவை. எனவே அந்த பேச்சை கோபப் பேச்சாக புரிந்து கொண்ட உறவுகளும் இல்லாமல் இல்லை. அந்த இரண்டும் தான் அவரின் குறைபாடு என்று சொல்லலாம். கனகம்மா இப்ப அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வாசகம் படுக்கையில் போட்டு வதைக்காமல், இவங்களின் கெடுபிடியால் அகப்படாமல், சீக்கிரமே போயிரணும். வீட்டின் வளவில் பதுங்கு குழிகள் கட்டி இருந்தாலும், கனகம்மா அங்கெல்லாம் போகமாட்டார். அப்படியான சூழலில் அத்தியடி பிள்ளையாரையும் நல்லூர் முருகனையும் திட்டித் தீர்த்துவிடுவார்.

 

 கந்தையா இறந்ததிலிருந்து கனகம்மா தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள். பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கோணல் பார்வைகளுக்கு இரையாவதை விட தனிமையில் அமைதி பெறுவதையே அவர் அதிகமாக விரும்பினார். ஒரு சில நேரங்களில் பழைய நினைவலைகளில் சிக்கி, அவளுக்குள்ளேயே ஒப்பாரிவைத்து அழுவதும் உண்டு. ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்க தொடங்குவதும் அவர்களின்  உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். அதனை கனகம்மாவின்  இளைய மகள் நன்கு உணர்ந்தவர். அது தான் அவரை விட்டுவிட்டு போகாமல் இன்னும் அத்தியடியிலேயே இருந்தார்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம்.அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா?

 

"இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்

 செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்

 தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து

 தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி

 மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு

 உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து

 நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக்

 கரையவர் மருளத் திரையகம் பிதிர

 நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து

 குளித்துமணற் கொண்ட கல்லா இளமை

 அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ

 தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று

 இருமிடை மிடைந்த சிலசொல்

 பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே"  

 

இங்கே முதல் பதினொரு அடிகளில்  தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்விட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில்...  "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து , இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும் , முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். அப்படித்தான் கனகம்மா இன்று இருக்கிறார்.

 

என்றாலும் மூத்த மகளும் நாலாவது மகன் குடுப்பத்துடனும் 2003 யாழ் போனபோது, மூத்தமகள், நாலாவது மருமகள், இளைய மகள் எல்லோரும் சேர்ந்து கனகம்மாவுடன் கவனமாக எடுத்து உரைத்ததின் பலனாகா இறுதியில் ஒருவாறு அத்தியடியை விட்டு நகர ஒத்துக்கொண்டார். மனிதரின் வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டமும் பலவிதமான உறவுகள் கடந்து சென்று கொண்டே தான் இருக்கும். ஒவ்வொன்றும் அன்பு, பாசம், நேசம், துன்பம், களிப்பு என்று மனதில் தோன்றும் மொத்த உணர்வுகளையும் உள்ளடக்கியதாய் இருக்கும். எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மாவுக்கும் பிள்ளைக்குமான உறவுக்கிடையேயான பந்தம், மற்ற எல்லாவற்றையும் விட மேலானது. வாழ்வின் பாதையில் ஆயிரம் பேர் வந்தாலும் இவர்கள் இருவருக்குமிடையேயான மனது மட்டும் அருகருகே அமர்ந்து மற்றவர்களை வேடிக்கை பார்க்கும். அவ்வளவு எளிதில் இந்த உறவுக்கயிற்றை வெட்டிவிட முடியாது. அதனாலதான் கனகம்மா இறுதியில் சம்மதித்தார் போலும். என்றாலும் சுவருடன் சாய்ந்து தன் முகத்தை சுளித்து தன் வெறுப்பையும் கோபத்தையும் காட்டிடத் தவறவில்லை. அது அவரின் இயல்பான குணம். அதை யாராலும் மாற்ற முடியாது.

 

நன்றி

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment