விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம் 

🤖சிகரெட் குப்பை அகற்றும் ரோபோ

பொது இடங்களில் போடப்படும் குப்பை கழிவுகளை அகற்றுவது பெரிய வேலையாக உள்ளது. ஏராளமான துாய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். என்றாலும் முழு தீர்வு கிடைப்பதில்லை. இதனால், இதற்கென்றே பிரத்யேக ரோபோ ஒன்றை, 'யுனிட்ரி' எனும் சீன நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இத்தாலிய தொழில்நுட்ப கழகம் இந்த ரோபோவை, சிகரெட் குப்பையை அகற்ற பயன்படுத்தி உள்ளது. பயன்படுத்தப்பட்ட சிகரெட்கள் தான் பொது இடங்களில் மிக அதிகளவில் சேரும் குப்பை.

எனவே, அதை கண்டுபிடிக்கும் பிரத்யேக கேமராவும், கண்டுபிடித்த பின் அதை உறிஞ்சிக் கொள்ளும் 'வாக்குவம் கிளீனரும்' இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ளன.

எனவே, இதற்கு வெரோ (VERO - Vacuum -cleaner Equipped Robot), அதாவது வெற்றிட அழுத்தம் கொண்டு சுத்தம் செய்யும் கருவி பொருத்தப்பட்ட ரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, நான்கு கால்களுடன் பார்ப்பதற்கு இயந்திர நாய் போல் இருக்கும். கால்களுக்கு அருகில் தான் உறிஞ்சு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றின் வாயிலாக சிகரெட் குப்பை இருக்கும் இடத்தை கண்டறிந்து, இயந்திரக் கால்களால் அங்கு நடந்து செல்கிறது; கால்களை குப்பை மீது வைத்து உறிஞ்சிக் கொள்கிறது. எதிர்காலத்தில் இதில் இன்னும் அதிக முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

 

👴முதுமையைத் தள்ளிப்போட..,

அமெரிக்காவைச் சேர்ந்த என்.ஐ.ஏ. பல்கலை மேற்கொண்ட ஆய்வில், கலோரிகள் குறைந்த வீகன் உணவு முதுமையைத் தள்ளிப்போடுவது தெரியவந்துள்ளது. சராசரியாக 40 வயதுடைய 21 ஜோடி இரட்டையர்களை ஆய்வில் ஈடுபடுத்தி இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

 

👨அல்சைமர் நோய் அழிக்க…

அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணம் மூளை செல்களில் டாவ் புரதம் (Tau protein) படிவது. TTCM2 எனும் மருந்தை மூக்கின் வழியே ஸ்ப்ரேயாகச் செலுத்துவதன் வாயிலாக இந்தப் புரதத்தை அழிக்க முடியும் என்று, அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ் பல்கலை கண்டறிந்துள்ளது.

 

👩மன அழுத்தம்

சிங்கப்பூர் தேசிய பல்கலை 13,738 பேரை ஈடுபடுத்தி மேற்கொண்ட ஆய்வில்,தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட மன அழுத்தம் தொடர்பான நோய்கள் 21 சதவீதம் குறைவாகவே ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.

 

💓வாழ வைக்கும் செயற்கை இதயம்

இதய மாற்று அறுவை சிகிச்சையின் போது, இதயம் மாற்றும் நேரம் வரை சிகிச்சை பெறுபவரை உயிர் வாழ வைக்கும் செயற்கை இதயத்தைப் பொருத்தி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இது முழுதும் இயந்திரமயமானது.

 

🌹முள்ளில்லாத ரோஜா செடி உருவாக்கம்

ஸ்பெயினில் உள்ள யு.பி.வி., பல்கலை ஆய்வாளர்கள் கத்திரிக்காய்களை ஆராயும்போது, அவற்றில் உள்ள 'தி லோன்லி கை' எனப்படும் எல்..ஜி., (LOG) மரபணுக்கள் தான் முட்களை உருவாக்குகின்றன என்று கண்டறிந்தனர். தாவரங்களில் சில ஹார்மோன்களை உருவாக்குவதும் இதுதான்.

தங்கள் ஆய்வு முடிவைப் பிற நாட்டு விஞ்ஞானிகளிடம் தெரிவித்தனர். முந்தைய ஆய்வுகளைப் படித்தனர். மேலும் சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். இவற்றிலிருந்து எல்..ஜி., மரபணுக்கள் தான் 20 தாவர இனங்களில் முட்கள் உருவாகக் காரணம் என்று உறுதி செய்தனர். ரோஜாச் செடிகளில் இந்த மரபணுவைச் செயலிழக்கச் செய்தனர், பிரான்ஸ் நாட்டின் வேளாண், உணவு, சுற்றுச்சூழல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். முட்கள் இல்லா செடி உருவானது.

அதே வழியைப் பின்பற்றி, 'டெசர்ட் ரெய்சின்' எனும் ஆஸ்திரேலிய பழத்தை முட்கள் இன்றி வளர்த்தனர். இப்படி செய்வதால் அந்தத் தாவரங்களில் வேறு எந்த மோசமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. இந்த முறையில் முட்கள் வளர்வதைத் தடுத்துவிட்டால் விவசாயிகள், தோட்ட வேலை செய்பவர்கள் தொல்லையின்றி நல்ல சாகுபடி செய்யலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment