"பொண்டாட்டி ராஜ்ஜியம்" -சிறு கதை

இலங்கையின் வடமாகாணத்தில் ஒரு அமைதியான புறநகர் பகுதியில்,  அகிலா மற்றும் துகிலன் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக மகிழ்ச்சியாக, அவர்களின் காதலின் அடையாளமாக ஒரு அழகிய பெண் குழந்தையும் பெற்று வாழ்க்கை நடத்திவந்தனர். என்றாலும் நாளடைவில் மூடிய கதவுகளுக்குப் பின்னால், ஒரு இருண்ட மற்றும் ஒரு பொண்டாட்டி ராஜ்ஜியம் மெல்ல மெல்ல தலை தூக்க தொடங்கியது. அகிலம் எல்லாம் தன் கையில் என்ற ஒரு திமிர் அகிலாவிடம் வளர்ந்துவிட்டது. துகிலன் அவளின் காதலிலும் அழகிலும் தன்னை இழந்து, அதை கவனிக்காமல்  தூங்கி விட்டான் போலும்!  

 

அகிலா ஒரு வலுவான விருப்பமும் உறுதியும் கொண்ட பெண். அவள் தனது கவர்ச்சியான பேச்சு ஆற்றலாலும் மற்றும் கூரிய புத்தியாலும் கணவரான துகிலனை விட பதவி உயர்வு பெற்று அதிகமாக சம்பாதிக்க தொடங்கினாள். காலப்போக்கில், அவள் கணவன் துகிலனை ஒரு பொருட்டாக கருதாமல், அவனை மதிக்காமல் தான் நினைத்தபடி குடும்பத்தை ஆளத் தொடங்கினாள். பொண்டாட்டி ராஜ்ஜியம் முளைவிட ஆரம்பித்தது!  துகிலனின் கருத்துகளையும் உணர்வுகளையும் கருத்தில் கொள்ளாமல் பெரிய மற்றும் சிறிய அனைத்து முடிவுகளையும், செயல்களையும்  அவள் தன்பாட்டில் எடுக்க தொடங்கியதுடன், துகிலனை தன் விருப்பத்திற்கு இணங்கி  நடக்க கட்டாயப் படுத்தினாள்.

 

மறுபுறம், துகிலன் ஒரு கனிவான மற்றும் மென்மையான ஆன்மாவாக இருந்தான். அதனால் அகிலா தன் ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவதில் அவளுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. துகிலன் அவளின் கொஞ்சலான பேச்சிலும் உடல் அழகிலும் முழுமையாக தன்னைப் பறிகொடுத்ததால், அவளின் மாற்றத்தை, போக்கை அவன் ஆரம்பத்தில் பெரிதுபடுத்தவில்லை. தன்னுடைய சம அதிகாரத்தை உறுதிப்படுத்துவதை விட இணக்கமான வீடு முக்கியமானது என்று நம்பினான். அதனால் வேலை முடிந்ததும் வீட்டிலேயே தங்கி அவர்களின் இளம் மகள் எழிலியை கவனித்துக்கொள்வதிலும், அவளுடன் விளையாடுவதிலும்   கூடிய கவனம் செலுத்தினான். 

 

துகிலன் ஒரு கனிவான, அடக்கமான மற்றும் கடின உழைப்பாளியாக சாதாரண வாழ்வை விரும்புபவனாக இருந்தாலும் அகிலா அதற்கு மாறாக சிறந்த உணவுகள், மிகவும் ஆடம்பரமான ஆடைகள் மற்றும் ஆடம்பரமான நகைகளை விரும்புபவளாகவும் , தொழில் நிலையத்தின் உயர் பதவியில் உள்ளவர்களுடன் நெருங்கி பழகுவதிலும் ஆர்வம் உள்ளவளாக தனது வாழ்வை அமைக்க தொடங்கினாள். அதனால் சிலவேளை நியாயமற்ற கோரிக்கைகளையும் துகிலனிடம் கட்டளையிடுவாள்.

 

தொடக்கத்தில் துகிலன் அதை கண்டும் காணாமல் இருந்தாலும், வருடங்கள் செல்ல செல்ல, அகிலாவின் கட்டுப்பாடு துகிலனை பாதிக்க ஆரம்பித்தது. அவன் தனது சொந்த குடும்பத்திலேயே ஒரு கீழ்ப்படிந்தவராக மாறுவதை உணர்ந்தான். அது மட்டும் அல்ல, அகிலா நேரத்துடன் வீட்டிற்கு வருவதும் குறைய தொடங்கியது. தனக்கு ஒரு மகள் வீட்டில் இருக்கிறாள் என்பது கூட சிலவேளை மறந்தவள் போல் அவள் நடவடிக்கை இருந்தது. குடும்பத்தின் நிதி தேவைகள், குழந்தை வளர்ப்பு அல்லது வீட்டு விடயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டாள். அவளின் பொண்டாட்டி ராஜ்ஜியத்தில் கணவனுக்கு அது முழுவேலையாக மாறிவிட்டது. அதனால் எழிலியும் தன் தந்தையை சக்தியற்றவராக பார்க்கத் தொடங்கினாள், இது தான் துகிலனை தன் சம அதிகாரத்தை சவால் செய்ய வழிவகுத்தது.

 

ஒரு ஞாயிறு மாலையில், துகிலனைக் கலந்தாலோசிக்காமல், துகிலன் மற்றும் எழிலியை அவர்களது பழக்கமான சூழல்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வேரோடு பிடுங்கி, தனது தொழில் வாழ்க்கைக்காக, கொழும்புக்கு போக அகிலா முடிவு செய்தாள். துகிலன் தனது வேலை மற்றும் மகளின் நிலையை தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​​​அகிலா அவனது கவலைகளை ஒதுக்கித் தள்ளியதுடன், துகிலனை இனி வீட்டில் முழுநேரமாக இருந்து மகளையும் வீட்டையும் கவனிக்கும் படியும் இது குடும்பத்திற்கு சிறந்த நடவடிக்கை என்றும்  வலியுறுத்தினாள். அவளது ராஜ்ஜியத்தில் தான் ஊமையாக இருந்ததின் பலனை கண்டு, அவனுக்கு தன் மேலேயே கோபம் கோபமாக வந்தது.

 

துகிலன் இப்ப  ஒரு முறிவுப் புள்ளியை அடைந்துவிட்டான். அகிலாவை  அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்த தொடர்ந்து அனுமதித்தால், அவர்களது குடும்பம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்காது என்பதை அவன் உணர்ந்தான். எனவே, அவன் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு அகிலாவுடன் பேசத் தொடங்கினான். அவன் அமைதியாக தனது உணர்வுகளையும் கவலைகளையும் அவளுக்கு விளக்கினான், அதுமட்டும் அல்ல நாம் ஒரு குடும்பம் என்றால்  முடிவுகளை கூட்டாக ஒன்றாக எடுக்க விரும்புவதாக அவளிடம் கூறினான். அப்படி இல்லை என்றால் நானும் என் மகளுடன் பிரிவதே மேல். நீ தனியாக உனக்கு வேண்டிய ஆட்டத்தை ஆடலாம் அல்லது நீ உனக்கு, உன் எண்ணத்துக்கு ஏற்ற புது வாழ்வை தேடிக்கொள்ளலாம். நான் தடையாக இருக்கமாட்டேன். ஆனால் என் மகளை உன்னிடம் விடமாட்டேன். அவள் ஒரு பண்புள்ள மகளாக வளரவேண்டும். அவன் உறுதியாக கூறிவிட்டு மகளையும் தூக்கிக்கொண்டு சமையல் அறைக்கு போய்விட்டான்.

 

எப்படியாயினும், அகிலாவால்  அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றாலும் துகிலனின் புதிய உறுதிப்பாட்டால் அவள் கொஞ்சம் அச்சம் அடைந்தாள். துகிலன் தவறாக தனது நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டினாள். அவர்களது காரசாரமான வாக்குவாதம் அதிகரித்தது, துகிலன் தனது விரக்தியில், தனது மனதை புண்படுத்தும் மற்றும் கொடூரமான விடயங்களைக் துணிந்து எடுத்துக் கூறினான், ஒரு தந்தை மற்றும் கணவராக அவன் தனது  பங்கைக் சரியாகக் நேர்த்தியாகக் கையாண்டான்.

 

இறுதியில், ஒரு குடும்பத்தில் ஒரு தலைவனாக தலைவியாக  இருப்பது என்பது அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பயன்படுத்துவதைக் குறிக்காது என்பதை அகிலா உணரத் தொடங்கினாள். உண்மையான தலைமைத்துவம் என்பது அனைவருக்கும் பயனளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு கணவனும் மனைவியும் பிள்ளைகளுடன் சேர்ந்து செவிமடுப்பது, மதிப்பது மற்றும் வேலை செய்வதாகும் என்பது அவளுக்கு புரிந்தது. அவள் முதல் முறையாக அழுதுகொண்டு கணவனையும் மகளையும் கட்டி அணைத்தாள். பொண்டாட்டி ராஜ்ஜியம் இன்னும் ஒரு கோணத்தில், ஒரு  தலைவனின் தலைவியின் அடக்குமுறை ஆட்சியின் கீழ் இல்லாமல், ஒரு அணியாக எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக, முன்னைய இருண்ட  ராஜ்ஜியத்தில் இருந்து விடிவு பெற்றது!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

No comments:

Post a Comment