- உலகம் முழுவதும் மீண்டும்
பேரலையாக மாறுமா?
கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்த திரிபால் மனிதர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கோவிட் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களுக்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான என்.ஹெச்.எஸ் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குகிறது.
சமீப கால புதிய கொரோனா திரிபுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. XEC எனும் இந்த புதிய திரிபு, முந்தைய ஒமிக்ரான் திரிபிலிருந்து உருவானதாகும்.
லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் மரபியல் மையத்தின் இயக்குநராக உள்ள பேராசிரியர் ஃபிராங்காயிஸ் பால்லாக்ஸ் பிபிசியிடம் கூறுகையில், “கோவிட் வைரஸின் முந்தைய திரிபுகளைவிட இந்த புதிய திரிபு வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் இதற்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றும்” என்றார்.
இந்த புதிய திரிபு குளிர்காலத்தில் அதிகளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.
அலையாக மாறுமா?
கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் டிரான்ஸ்லேஷனல் மையத்தின் இயக்குநர் எரிக் டோபோல், “இந்த புதிய திரிபு தற்போதுதான் தொடங்கியுள்ளது” என கூறினார்.
“இது ஓர் அலையாக மாறுவதற்கு பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகலாம்,” என அவர் LA டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
அறிகுறிகள் என்ன?
முந்தைய திரிபுகளை போன்றே சளி அல்லது காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாக உள்ளன.
🚹அதிக உடல் வெப்பம்
🚹உடல் வலி
🚹சோர்வு
🚹இருமல் அல்லது வறண்ட தொண்டை
பாதிப்பு ஏற்பட்ட சில வாரங்களில் பெரும்பாலானோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் நீண்ட நாட்களுக்கு பிறகே குணமடைவர்.
இந்த புதிய திரிபின் தாக்கம் டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் அதிகம் இருப்பதாக, எக்ஸ் பக்கத்தில் கோவிட் தரவுகள் குறித்து ஆராய்ந்துவரும் மைக் ஹனி தெரிவித்துள்ளார்.
முன்பைவிட தற்போது குறைவான பரிசோதனைகளே செய்யப்படும் நிலையில், எவ்வளவு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமை (UKHSA) கூறுகையில், வைரஸ்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு, புதிய திரிபுகள் தோன்றுவது வழக்கமானதுதான் என தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் துணை இயக்குநர் டாக்டர் காயத்ரி அமிர்தலிங்கம் கூறுகையில், “மரபியல் ரீதியாக வைரஸ்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறுவது சாதாரணமானதுதான். பிரிட்டன் மற்றும் உலகளவில் பரவும் கோவிட்டின் திரிபுகள் குறித்து UKHSA அனைத்து தரவுகளையும் கண்காணித்து வருகிறது, எங்களிடம் உள்ள தரவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். கோவிட் 19 தொற்றுக்கு எதிராக தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து தடுப்பூசிகள் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.” என்றார்.
நன்றி:மிட்செல் ராபர்ட்ஸ்/ டிஜிட்டல் சுகாதார ஆசிரியர், பிபிசி
0 comments:
Post a Comment