விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=மின்சாரம்

புதிய தாது அதிக மின்சாரம்

புதைபடிவ எரிபொருட்களால் புவியில் மாசுபாடு அதிகரிக்கிறது. அதற்கு மாற்றாகவே சூரிய ஒளி மின்சாரம் முன்மொழியப்படுகிறது.

சூரிய ஒளித் தகடுகள் பெரும்பாலும் சிலிக்கானால் தான் செய்யப்படுகின்றன. சில இடங்களில் சிலிக்கானுக்கு மாற்றாக பெரோவ்ஸ்க்கைட் (Perovskite) எனும் தாதுப் பொருளும் பயன்படுகிறது. இதில் கால்சியம், டைடானியம் ஆக்ஸைட் ஆகியவை இருக்கும்.

இந்தத் தாதுவின் விலையும் கனமும் குறைவானது. அதிக வளையும் தன்மை கொண்டது. ஆனால் பிரச்னை என்னவென்றால், இது சுலபமாக உடைந்துவிடும். சூரிய ஒளியில், வெப்பத்தில் இருந்தால் பலவீனமாகிவிடும்.

சீனாவில் உள்ள ஜீஜியாங் பல்கலை விஞ்ஞானிகள் இந்தத் தாதுவில் சிறிய மாற்றம் செய்து, ஒரு புது வகையை உருவாக்கியுள்ளனர்.

இதன் பெயர் 'ஹைப்ரிட் பெரோவ்ஸ்க்கைட்.' இதில் ஒழுங்கற்ற கரிமப் படலங்களும், ஒழுங்கான கரிமமற்ற படலங்களும் உள்ளன.

இதனால் வெயில், மழையைத் தாங்கும் ஆற்றலைப் பெறுகின்றன. 1,000 மணிநேரம் சூரிய ஒளியில் இருந்தாலும் இவற்றின் மின்சாரம் தயாரிக்கும்

திறன் குறையவில்லை. விரைவில் இது நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

புயல் சிதைக்கும் மின்சாரம்

சூரியனிலிருந்து வரும் புயல் நம் பூமியின் காந்த மண்டலத்தில் பட்டு துருவ ஒளிகள் போன்ற அழகிய ஒளிகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், இவை அதிக ஆற்றலுடன் பூமியைத் தாக்கினால் மின்சாரம் பயணம் செய்யும் கேபிள்களைச் சிதைக்கும் வாய்ப்பு உள்ளதாக, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

மடங்கும் ட்ரோன்

பல்வேறு பயன்பாடுகளுக்காக ட்ரோன்கள் பறக்கும்போது இடைவெளி குறைவான இடங்களில் அவை நுழைய வேண்டி வரலாம். அந்தச் சூழல்களில் தனது சக்கர இறக்கைகளை மடக்கிக் கொள்ளும் வகையிலான ட்ரோன்களை நார்வேயின் தொழில்நுட்பக் கழகம் வடிவமைத்துள்ளது.

 

நீரிழிவுக்கு நிரந்தர தீர்வு

நம் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் தான் இன்சுலினைச் சுரக்கின்றன. உயருகின்ற ரத்த சர்க்கரையை இன்சுலின் தான் கட்டுப்படுத்துகிறது.

இந்தச் செல்கள் சிதைவுற்றாலோ, போதுமான இன்சுலின் சுரக்காவிட்டாலோ நீரிழிவு நோய் ஏற்படும். இதைச் சரிசெய்ய இன்சுலினை உடலில் ஊசிமூலம் செலுத்துவதே ஒரே தீர்வாக உள்ளது.

பாதிக்கப்பட்ட பீட்டா செல்களைப் பழையபடி இன்சுலினைச் சுரக்கச் செய்ய சில ஆய்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. ஆய்வுக்கூடத்தில் பீட்டா செல்களை வளர்த்து அவற்றை மனித உடலில் பொருத்துவது ஒரு வழி.

ஆனால், இதை விடச் சிறந்த வழி மனித உடலிலேயே அவற்றை வளரச் செய்வது. இது சுலபமானதல்ல. இதற்குச் சரியான வழியை அமெரிக்காவின் மவுன்ட் சினாய் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இதன்படி இரு மருந்துகள் பயன்படுகின்றன. அதில் ஒன்று ஹார்மைன். இது இயற்கையாகவே குறிப்பிட்ட சில தாவரங்களில் இருக்கும். இது நம் பீட்டா செல்களில் உள்ள DYRK1A எனும் நொதியை உருவாக்க வல்லவை. மற்றொன்று GLP1 எனும் மருந்து.

விஞ்ஞானிகள் டைப் 1, 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் உடலில் முதலில் மனித பீட்டா செல்களைப் பொருத்தினர். பின்பு மேற்கண்ட மருந்துகளைச் செலுத்திச் சோதித்தனர். 3 மாதங்களில் எலிகள் உடலில் பீட்டா செல்கள் 700 சதவீதம் அதிகரித்தன.

நீரிழிவு நோய் நீங்கியது. மருத்துவ சிகிச்சையை நிறுத்திய பின்பும் நோய் திரும்ப வரவில்லை. முதன்முறையாக பீட்டா செல்களைப் பெருக்கும் வழிமுறை வெற்றி பெற்றுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு இது தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

சிங்கப்பூருக்கு மின் கம்பிகள்

ஆஸ்திரேலியாவில் சூரிய மின் தகடுகள் வைத்து தயாரிக்கப்படும் மின்சாரம், அங்கிருந்து சிங்கப்பூருக்கு மின் கம்பிகள் மூலம் அனுப்பும் திட்டம் வரப்போகிறது. 4,300 கி.மீ., துாரம் இந்தக் கம்பிகள் கடலுக்கடியில் கொண்டு செல்லப்படும். 2030ம் ஆண்டு இந்த வேலை முடிந்ததும் இது, உலகின் மிகப் பெரிய மரபுசாரா ஆற்றல் திட்டப்பணி ஆகிவிடும்.

 

சத்தான எண்ணெய்கள்

ஜெர்மானிய மனித ஊட்டச்சத்து பல்கலை 56,000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், வெண்ணெயை விட ஆலிவ் முதலிய தாவர எண்ணெய்கள் சத்தானவை என்று தெரிய வந்துள்ளது. தாவரக் கொழுப்பு, வெண்ணெயைக் காட்டிலும் நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றை குறைவாகவே ஏற்படுத்தும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

காரணம் ஓட்ஸ்

உடல் பருமனுக்கு தரப்படும் மருந்தைப் போலவே ஓட்ஸ் உணவில் உள்ள சத்துகள் நம் உடலில் வேலை செய்யும் என்கின்றனர், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை ஆய்வாளர்கள். ஓட்ஸில் உள்ள சில நார்ச்சத்துகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றுவதே உடல் மெலிவதற்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

⇐⇐⇐⇐⇐⇐⇐⇐⇐⇐⇐தொகுப்பு:செ .மனுவேந்தன் 

0 comments:

Post a Comment