"எங்கள் பள்ளிக் காதல் " -சிறு கதை


இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஒரு யாழ்ப்பாணக் கிராமமான அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள இடைக்காட்டில் எங்கள் பள்ளிக்கூடம் முதலில் ஒரு திண்ணைப் பாடசாலையாக 1925 இல் முப்பது பிள்ளைகளுடன் பண்டிதர் திரு சுவாமிநாதர் இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு, தேற்றாவடி திரு சுப்பர் முருகுப்பிள்ளை ஆசிரியரின் இல்லத்தில் உருவானது. பின் ஓலைக்கொட்டிலில் அமரர் பண்டிதர் திரு இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு இன்று எங்கள் பாடசாலை அமைந்து உள்ள இடத்தில் நூறு பிள்ளைகளுடன் இடைக்காடு புவனேஸ்வரி ஆரம்ப பாடசாலையாக உருவானது. அப்பொழுது அது ஓரளவு பின்தங்கிய நிலையில், ஆனால் அறிவின் கலங்கரை விளக்கமாக அதை மாற்றக்கூடிய ஆர்வமும் நம்பிக்கையும் உள்ள ஆசிரியர்களையும் முதல்வரையும் தன்னகத்தே கொண்டு இருந்தது. நான் அங்கு உயர்வகுப்பின் விஞ்ஞான பிரிவில் படிக்கும் மாணவன். என் பெயர் அறிஒளி. என் அப்பா நிலவுகளட்டியில் ஒரு தோட்டக்காரர். ஓரளவு வசதியான குடும்பம்.

 

பல தசாப்தங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட எங்கள் பள்ளி, எளிமையான தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும், பின் அது இடைக்காடு மகாவித்தியாலயமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. என்னுடன்தான் முதல் முதல் விஞ்ஞான உயர் வகுப்பு அங்கு 1977 / 1978 இல் ஆரம்பித்து முழுமை அடைந்தது. இது அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும்  யாழ் கல்வித்துறையின் ஒத்துழைப்பினாலும் சாத்தியமானது. என்றாலும் வரையறுக்கப்பட்ட வளங்களின் சவால்கள் மற்றும் அன்று வட பிராந்தியத்தை பாதித்த ஒரு கொந்தளிப்பான வரலாற்றின் நிழல் அல்லது பதட்டமான சூழல் இருந்தபோதிலும், எங்கள் பள்ளி கிராமத்தின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதில் உறுதியாக இன்றுவரை நற்பெயருடன் இயங்குகிறது.

 

பல ஆண்டுகளாக, எங்கள் பள்ளி பல தடைகளை எதிர்கொண்டது. இப்பகுதி பின்னாட்களில் மோதல்களால் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் தவறாமல் கலந்துகொள்வதை கடினமாக்கியது, மேலும் உள்கட்டமைப்பை பராமரிப்பதில் தொடர்ந்து சவால்கள் இருந்தன. எவ்வாறாயினும், பள்ளி சமூகத்தின் மீள்தன்மை அசைக்க முடியாததாக இருந்தது.  அதற்கான முக்கிய காரணம் அன்று நானும் உயர் வகுப்பில் கற்றுக் கொண்டு இருந்த சக மாணவர்கள் எல்லோரும், எங்கள் நிலைமையை புரிந்து, கட்டாயம் அகில இலங்கை ரீதியில் உயர்வகுப்பிலும் அதே போல சாதாரண வகுப்பிலும் சாதனைகளை புரியவேண்டும் என்பதில் ஒத்த கருத்தில் இருந்து, அதன்பொருட்டு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் குழு ஒன்றை நாம் ஒன்றாக அமைத்தது ஆகும். அது ஒரு  திருப்புமுனையாக மாறி, கிராமத்தை நல்ல நிலைக்கு மீட்டெடுக்கவும், குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்யவும் கல்வியே முக்கியம் என்பதை கிராமவாசிகளுக்கு உணர்த்தவும் ஒரு தளமாக இன்றுவரை அமைந்துள்ளது.

 

இதனால், புதிய வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றைக் கட்டுவதற்கு உள்ளூர் வணிகங்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் உதவி புரிந்தனர். இந்த சூழலில் தான், நான் என் சக மாணவர்களுடன் உதவி கேட்டு, எங்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவரின் அரச விடுதிக்கு சென்ற பொழுதுதான் நான் அவளை முதலில் சந்தித்தேன். அவள் அந்த மருத்துவரின் மகள். அவள் கொழும்பில் பிறந்து வளர்ந்து, இன்று தந்தையின் வேலை மாற்றத்துடன் எங்கள் பிரதேசத்துக்கு வந்துள்ளாள். என்றாலும் அவள் யாழ்ப்பாண வேம்படி மகளீர் கல்லூரியில் தான் தன் சாதாரண வகுப்பை தொடருகிறாள். பெயர் முழுமதி.

 

அந்த முதல் சந்திப்பில் தான் என் நெஞ்சு முதல் முதல் அல்லாட தொடங்கியது. அதுவரை நான் காதல் என்ற ஒன்றை நினைக்கவேயில்லை. இத்தனைக்கும் எங்கள் பாடசாலை ஒரு கலவன் பாடசாலை. ஒருவேளை அவள் என் சக மாணவிகளில் இருந்து கொஞ்சம் வேறுபட்ட பாணியில், வித்தியாசமாக நகர்புறத்து நாகரிக அலங்காரத்தில், உடையில் இருந்தது, பேசியது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் அவளின் கோலம் ஒரு தமிழ் பெண்ணின் அடையாளமாகவே இருந்தது.

 

'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்

நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்'

 

அவள் பின்புறம் இருண்டு தொங்கும் கூந்தலை கொண்டு இருந்ததுடன் பூ மொட்டு போல் இரண்டு மையுண்ட கண்களையும் உடையைவளாக இருந்தாள். என்றாலும் செய்யக் கருதிய எங்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கான மற்றும் ஒரு தகுதி அல்லது பெருமை பெரும் செயலை முற்றிலும் முடிக்காமல் இடையே அதற்கு ஊறு செய்தால் அதன் பயனை அடையாமையோடு இகழ்ச்சியையும் தரும் என்ற ஒரு அக உணர்வு பொங்க, காதல் அன்பிற்கும்  கடமைக்கும் இடையேயான தவிப்பு நிலையாகி, உறுதி கொஞ்சம் தளர்ந்து என் அறிவு ஊசலாட தொடங்கியது.

 

தந்தை மருத்துவர் வந்து எங்களை சந்திக்க எடுத்த ஒரு சில மணித்துளிகளில் அவள் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் ஆர்வமுள்ள மாணவி என்பதையும், கவர்ந்து இழுக்கும் ஒரு வசீகரம் கொண்ட அழகையும் அவளிடம் நான் கண்டேன். மருத்துவரிடம் நாம் கதைக்கும் பொழுது, வேம்படி மகளீர் கல்லூரி யாழ் கோட்டைக்கு அருகில் இருப்பதால், அவரின் இயல்பான பயத்தையும் அறிந்தேன். எனவே ஏன் அவளை தற்காலிகமாக எங்கள் பாடசாலையில் சேர்க்கக் கூடாது என்று ஒரு கேள்வி கேட்டு, நாம் விடை பெற்றோம்.

 

என்ன ஆச்சரியம், அடுத்த கிழமை அவள் எம் பாடசாலைக்கு சாதாரண வகுப்பில் சேர்ந்து அங்கு வந்தது மட்டும் அல்ல, என்னைத் தேடி வந்து என்னிடம் முதல்நாள் ஆசீர்வாதமும் பெற்றாள். ' உங்களால் தான் நான் இங்கு சேர்ந்தேன், இங்கு தனியார் வகுப்புகள் இல்லை, என் அப்பா ஓரே பிஸி, எனக்கு தெரியாததை நீங்க தான் சொல்லித்தரவேண்டும்' என்ற சிறு வேண்டுதலுடன் விடை பெற்று தன் வகுப்புக்கு போனாள். அந்த திரும்பி போகும் பொழுது அவள் பார்த்த பார்வை இன்னும் என்னால் மறக்க முடியாது. 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்று கூறிய புரட்சி கவிஞர் பாரதிதாசன் தான் எனக்கு ஞாபகம் வந்தது.

 

கண்கள் இதயத்தின் நுழைவாயில். காதலின் தூதுவன். பழக்கம் வரக் காரணமாகி, ஒழுக்கம் பிறழவும் காரணமாயிருப்பது ஐம்புலன்கள்தானே?

அதிலும் பெண்களின் கண்கள் போர் செய்யவல்ல அம்புகள். அது என் நெஞ்சில் துளைத்து என்னை துன்புறுதத் தொடங்கியது. 'முலையவர் கண்ணெனும் பூச லம்பு' என்று கம்பரின் மதிப்பீடு எனக்கு உண்மையானது!

 

நாங்கள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக எமக்கிடையில் பகிரப்பட்ட அறிவுசார் நலன்களால் பிணைத்தோம், அவளுக்கு தெரியாத, விளங்காத பாடங்களை போதிக்கும் பொழுது, தெரிந்தும் தெரியாமலும் எங்கள் இதயங்களையும் அங்கு ஊற்றினோம். எண்ணற்ற மணிநேரங்களை செலவழித்ததால் எங்கள் தொடர்பு ஆழமடைந்தது. காலப்போக்கில், எங்கள் நட்பு இன்னும் ஆழமான ஒன்றாக மலர்ந்தது. கல்வி மற்றும் வாழ்க்கையின் சிக்கல்களை ஒன்றாகக் கடந்து, ஒருவருக்கொருவர் முன்னிலையில் நாங்கள் ஆறுதல் கண்டோம். எங்கள் காதல் உணர்ச்சிகளின் சூறாவளி, பகிரப்பட்ட கனவுகள் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் கலவையாகும்.

 

ஆயினும்கூட, நான் மற்றொரு அன்பான - எங்கள் பள்ளிக்கூடத்தின் புனிதமான அரங்குகளுக்குள் அறிவைப் பின்தொடர்வதில், அதை 1979 இல் பெருமையாக்கி, முதல் முதல் அங்கிருந்து பொறியியல், மருத்துவ, விஞ்ஞான பீடங்களுக்கு நானும் சக மாணவர்களும், விஞ்ஞான பிரிவு ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே தெரிவாக வேண்டும் என்பதில் ஒரு நீடித்த பேரார்வம் மாற்றம் இன்றி இருந்தது. எனது ஆர்வத்தைத் தூண்டிய வழிகாட்டிகளையும், என்னை புதிய உயரத்திற்குத் தள்ளிய சகாக்களையும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் துடிப்பான கல்விச் சமூகத்தையும் நான் அங்கு கண்டேன். பள்ளியின் பெயர் கௌரவம் மற்றும் எதிர்கால நற்பெயர் வாய்ப்புக்கு அது அவசியமாக இருந்தது. மேலும் அந்த பெயரை பிரகாசமாக பிரகாசிக்க வைக்க நான் உறுதியாக இருந்தேன்.

 

முழுமதி மீதான என் காதல் ஆழமானதால், நான் ஒரு சங்கடத்தை எதிர்கொண்டேன். எனது காதல் தோழி மற்றும் எனது கல்வி ஆகிய இரண்டிலும் எனது பக்தியை, அன்பை சமநிலைப்படுத்துவது சவாலானது. இரவு நேர என் கூடுதலான பாடம் மீட்டல் மற்றும் எங்கள் உறவின் உணர்ச்சிகரமான இணைப்பு சில சமயங்களில் மோதின. இந்த இரண்டு காதல்களுக்கிடையேயான மென்மையான சமநிலையை என்னால் பராமரிக்க முடியுமா என்று நான் கேள்வி எழுப்பிய தருணங்கள் பல இருந்தன.

 

இறுதியில், கல்வியின் மீதான எனது காதல் எனது பள்ளியின் பெயரைப் பற்றியது மட்டுமல்ல, தனிப்பட்ட வளர்ச்சி, அறிவுசார் ஆய்வு மற்றும் அறிவைப் பின்தொடர்வதற்கான அர்ப்பணிப்பு என்பதை நான் உணர்ந்தேன். இந்த காதல் என் எதிர்காலத்தில் ஒரு நீண்ட கால முதலீடாக இருப்பதுடன், அதேசமயம் முழுமதி மீதான என் காதல், அழகாக இருந்தாலும், முதலில் வாழ்க்கைக்கான அத்திவாரம் தேவை என்பதை உணர்ந்தேன்.

 

இறுதியில், முழுமதியும் நானும் தற்காலிகமாக சுமுகமாகப் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்,  கற்றல் மீதான எம் இருவரின் ஆர்வமும் எங்கள் பள்ளி மீதான எமது அர்ப்பணிப்பும் அசைக்க முடியாததாகவே இருந்தது. ஆனால் நான் அவளுக்கு தனிப்பட்ட பாடப் பயிற்சி கொடுப்பது தொடர்ந்தது.  நான் தேர்ந்தெடுத்த துறையில் மற்ற சக மாணவர்களுடன் 1979 இல் பொறியியல் துறைக்கு தேர்ந்து எடுக்கப் பட்டேன். என்னைத் தொடர்ந்து முழுமதியும் 1981 இல் மருத்துவ பீடத்துக்கு தெரிவானாள். அதுவும் நான் படிக்கும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கே!

 

மீண்டும் எம் காதல் ரோலர்கோஸ்டர் போல், பயங்கரமான வீழ்ச்சி ஒரு முறை இருந்தாலும், அவையைத் தாண்டி நாம் மகிழ்வாக பேராதனை வளாகத்தில் உச்சத்தில் இப்ப இருக்கிறோம். எங்கள் பள்ளிக்கூடம் கூட  இப்ப உச்சத்தில்!!

 

நன்றி-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment