எப்படித் தவிர்ப்பது?
சராசரி இந்தியர் நாளொன்றுக்கு 10.98 கிராம் உப்பை உட்கொள்வதாக ‘டாக்ஸிக் லிங்க்’ ஆய்வறிக்கை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் சொல்லும் அளவைவிட இது இரு மடங்கு அதிகம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அளவுகோல்களின்படி, சராசரியாக ஒரு மனிதர் நாளொன்றுக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும்.
நாளொன்றுக்கு 10 ஸ்பூன் சர்க்கரையை உட்கொண்டால், ஒரு சராசரி இந்தியர் ஆண்டுக்கு 18 கிலோ சர்க்கரையை உட்கொள்வதாகப் பொருள்.
‘அதற்கேற்ப, மனித உடலில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாக' டாக்ஸிக் லிங்க் (Toxics Link) என்ற அரசுசாரா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.
புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், 'உப்பு, சர்க்கரையில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்' (Microplastics in Salt and Sugar) என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளில் இருந்து, உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, இந்நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி, மரக்காணம் உள்படப் பல பகுதிகளில் உப்பு, சர்க்கரை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
'டாக்ஸிக் லிங்க்' நிறுவனத்தினர் மேற்கொண்ட ஆய்வில், கடல் உப்பு, பாறை உப்பு, கல் உப்பு உள்பட 10 வகையான உப்புகளும் 5 வகையான சர்க்கரைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவில், உப்பு மற்றும் சர்க்கரையில் 0.1 முதல் 0.5 மில்லிமீட்டர் வரை பல்வேறு வடிவங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
உப்பு தொடர்பான ஆய்வில், 1 கிலோவுக்கு 6.71 முதல் 89.15 வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகவும் அயோடின் உப்பில் அதிகபட்சமாக 89.15 பிளாஸ்டிக் துகள்களும் சாதாரண கல் உப்பில் 6.7 என்ற அளவிலும் துகள்கள் இருந்ததாகக் கூறுகிறது.
சர்க்கரையைப் பொறுத்தவரை, ஒரு கிலோவுக்கு 11.85 முதல் 68.25 வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடல் உப்பு, கிணற்று உப்பு (Borewell) ஆகியவற்றில் இருந்து தலா 7 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன.
மரக்காணம் மற்றும் பரங்கிப்பேட்டையில் நடத்தப்பட்ட ஆய்வில், உப்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், கடைகளில் விற்கப்படும் உப்புகள் என தலா 6 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், பிளாஸ்டிக் நார்கள் (fibre) இருந்ததாக கட்டுரை தெரிவிக்கிறது.
'இந்த பிளாஸ்டிக் துகள்கள், மூன்று வழிகளில் மனித உடலுக்குள் செல்கிறது. ஒன்று, நேரடியாக உள்ளே செல்லுதல், மூச்சு இழுத்தல் மற்றும் நேரடியாகத் தோல் மூலம் செல்வது ஆகியவற்றின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எச்சில், நுரையீரல், கல்லீரல், தாய்ப்பால், வயிற்றிலுள்ள குழந்தை, ஆகியவற்றில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' என ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
"நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் குறித்து அறிவியல்ரீதியான தரவுகளில் பங்களிப்பைச் செலுத்தும் நோக்கிலும் உலகளவில் பிளாஸடிக் பயன்பாடு குறித்த பிரச்னையைத் துல்லியமாக அணுகுவதற்கும் உதவுவதே இந்த ஆய்வின் நோக்கம்" என்கிறார், 'டாக்ஸிக் லிங்க்' நிறுவனத்தின் இயக்குநர் ரவி அகர்வால்.
ஹார்மோன்களில்
பாதிப்பா?
"எட்டு ஆண்டுகளுக்கு
முன்பு உலகம் முழுவதும் 15 முதல் 51 டிரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகத்
தகவல் வெளியானது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம். மைக்ரோ பிளாஸ்டிக்
துகள்களை மனிதர்கள் முதல் விலங்குகள் வரை உட்கொள்வது உணவுச் சங்கிலியையே சிதைக்கிறது"
என்கிறார், டாக்டர் பெருமாள் பிள்ளை. இவர், சென்னை மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள்
நலத்துறை இணை பேராசிரியராக இருக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர்,
"அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக பிளாஸ்டிக் உள்ளது. அதைச் சார்ந்தே
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடல், மண் உள்பட அனைத்திலும் பிளாஸ்டிக்கின் தாக்கம் இருக்கிறது.
தெரிந்தோ, தெரியாமலோ அதை அன்றாடம் உட்கொண்டு வருகிறோம். காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி
ஆகியவற்றில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் பாதிப்பு இருக்கிறது" என்கிறார்.
உப்பு, சர்க்கரையில் உள்ளதாகக்
கூறப்படும் பிளாஸ்டிக் துகள்கள், மனித ஆரோக்கியத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தலாம்
எனக் குறிப்பிடும் டாக்டர் பெருமாள் பிள்ளை, "இவை ஹார்மோன் அமைப்புகளைப் பாதிக்கும்.
இதை என்டோகிரைன் (endocrine) சீர்குலைவு என்பார்கள். இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்,
மரபணு மாற்றங்களைத் தூண்டுவதாக உள்ளது. இதனால் புற்றுநோய், பக்கவாத பாதிப்புகளும் ஏற்படும்"
என எச்சரிக்கிறார்.
எப்படி தவிர்ப்பது?
இவற்றைத் தவிர்ப்பதற்கு மாற்று வழிகளையும் 'டாக்ஸிக் லிங்க்' கட்டுரை முன்வைக்கிறது. அதாவது, உணவுப் பொருள்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகப் பயன்பாட்டில் பிளாஸ்டிக் துகள்களைத் தவிர்ப்பது, உற்பத்தியின்போது கழிவுநீர் சுத்திகரிப்பை மேம்படுத்துவது, உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் அடைப்பதற்குப் பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துவது ஆகியவை முக்கியப் பரிந்துரைகளாகக் கூறப்பட்டுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டும் டாக்டர் பெருமாள் பிள்ளை, "பாலிதீன் பைகள் உள்பட பிளாஸ்டிக் தொடர்பான பொருள்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதற்காக, 'மீண்டும் மஞ்சப்பை இயக்கம்' என்ற விழிப்புணர்வுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை” என்கிறார்.
'மஞ்சப்பை இயக்கம்' என்பது சுதந்திர தினத்துக்கு கொடி ஏற்றுவதைப் போல ஒருநாள் நிகழ்வாக மாறிவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.
"பிளாஸ்டிக் பொருள்களுக்கு
மாற்றாக கண்ணாடிக் குடுவைகள், பீங்கான் பொருள்கள் என மாற்று வழிகளை யோசித்தால், உயிருக்கு
ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்" என்கிறார் டாக்டர் பெருமாள்
பிள்ளை.
பொதுவாக, இந்தியாவில் சர்க்கரை,
உப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களின் அளவுகள் பெரிதாகக்
கண்காணிக்கப்படுவதில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், உணவுப் பொருள்களில்
நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களைக் கட்டுப்படுத்துவது குறித்து சில நாடுகள் தீவிர ஆய்வுகளை
மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, ஐரோப்பிய உணவுப்
பாதுகாப்பு ஆணையம் (EFSA), உணவுப் பொருள்களில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயத்தைக் குறைப்பது
தொடர்பான வழிமுறைகளை உருவாக்கி வருவதாகவும், உணவுப் பொருள்களில் பிளாஸ்டிக் துகள்கள்
ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
(FDA) மதிப்பீடு செய்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் 'டாக்ஸிக் லிங்' நிறுவனத்தின்
ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தமிழக அரசு
நடவடிக்கை எடுக்குமா?
"தொலைக்காட்சிகளில்,
'உங்க பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?' என்ற விளம்பரம் வரும். தற்போது. 'உங்கள் உப்பில்
மைக்ரா பிளாஸ்டிக் இருக்கிறதா?' என்று கேட்கும் நிலை உருவாகிவிட்டது" என்கிறார்
சூழல் ஆர்வலரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான பொறியாளர் சுந்தர்ராஜன்
கடலில் பிளாஸ்டிக் பொருள்கள்
சேரும்போது, அதன் துகள்கள் மீன்களின் உடல்களுக்குள் செல்வதாகவும் அதைச் சாப்பிடும்
மனிதர்களின் உடலுக்கு உள்ளேயும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் செல்வதாகவும் சுந்தர்ராஜன்
விளக்குகிறார்.
ஏனெனில், "உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆகையால், அவற்றிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலக்கின்றன."
பல்வேறு ஆய்வுகளில் மனிதக் கழிவு, தொப்புள் கொடி வரையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிலம், கடல், நீர்நிலைகள் என அனைத்திலும் பிளாஸ்டிக் பொருள்கள் நீக்கமற நிறைந்துவிட்டன. பிளாஸ்டிக் கழிவுகளால் நிலம் மாசுபடுவது பல கட்டங்களில் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், "பிளாஸ்டிக் கழிவு நிறைந்த அதே நிலத்தில்தான் கரும்பு விளைகிறது. அந்தக் கரும்பில் இருந்தே சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. அதை பிளாஸ்டிக் பைகளில் அடைப்பது தொடங்கி அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் துகள்களின் ஆதிக்கம் இருக்கிறது.
உப்பும் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளாத மனிதர்கள் இல்லை. ஆகவே, இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் ரத்தத்தில் சேர்கிறது. அதன் விளைவாக புற்றுநோய் உள்படப் பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு மனிதர்கள் ஆளாக நேரிடும்," என்கிறார்.
"தமிழ்நாட்டில் உணவுப் பொருள்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
அப்போது அவர், "உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆராய்வதற்கு அதிகாரிகள் உள்ளனர். இந்த துறைக்கென்று தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உள்ளனர். உணவுப் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகளில் தனித்தனி துறைகள் உள்ளன.
இதுகுறித்து அந்தந்த துறைகளில் இருந்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டால், அதைப் பற்றி நிபுணர் குழுவிடம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.
நன்றி :விஜயானந்த் ஆறுமுகம்/பிபிசி தமிழ்
No comments:
Post a Comment