அறிவியல்=விஞ்ஞானம்
凸இளமையை திருப்பும்
கலவை
மனிதர்களுக்கு முதுமை என்றால் பயம். நீண்ட காலம் இளமையாக இருப்பதற்கான வழிகளைக் கண்டறிய, பல காலமாக மனிதன் முயன்று வருகிறான். இளமையைத் திருப்பும் கலவையை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர்கள் குழு வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. டெலோமெர்ஸ் (Telomeres) என்பவை நம்முடைய குரோமோசோம்களின் முடிவில் காணப்படும் ஒருவகை பாதுகாப்பு கவசங்கள்.
இவை தான் செல்கள் பெருகுவதற்கு உதவுகின்றன. டெர்ட் (Telomerase reverse transcriptase - TERT) எனும் ஒருவகை நொதி டெலோமெர்களை மீட்டுருவாக்கம் செய்கிறது. இதை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர் விஞ்ஞானிகள்.
உடலில் இயல்பாக உள்ள 'டெர்ட்' நொதி உற்பத்தி, வயதாகும் போது குறைந்துவிடும். இதனால் டெலோமெர்கள் சுருங்கி, உருமாறி மரபணுக்களைச் சிதைத்து, திசுக்களின் அழிவுக்கும், புற்றுநோய்க்கும் வழிவகுக்கின்றன. ஆகவே இந்த 'டெர்ட்' நொதியின் உற்பத்தியை ஊக்குவிக்கும் மருந்துக் கலவையை (TAC) எலிகளுக்குத் தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்துப் பார்த்தார்கள். இந்த எலிகளின் உடல்நிலை 75 வயதுடைய மனிதர்களுக்கு இணையானது.
இந்த மருந்தினால் முதிய எலிகளின் மூளையில் புதிய நியூரான்கள் உருவாகின; இதனால் நினைவாற்றல் அதிகரித்தது. அத்துடன் எலிகளின் வேகமும், ஆற்றலும், தசை வலிமையும் அதிகரித்தன. இந்த மருந்தை எலியின் அனைத்து உடல் பாகங்களும் உறிஞ்சிக் கொண்டன.
இதனால் புத்துணர்வு அடைந்து பழைய ஆற்றலைப் பெற்றன. அதாவது எலியின் இளமை திரும்பியது என்று கூறலாம். மனிதர்கள் மீது இந்த மருந்து சோதிக்கப்பட்டால் வயதாவதால் வரும் நோய்கள், குறைபாடுகளை நீக்கி இளமையை மீட்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
💊ஞாபகமறதிக்கு
மருந்து
ஆஸ்துமா நோயாளிகளுக்குப்
பரவலாகக் கொடுக்கப்படும் ரோப்ளுமிலாஸ்ட் எனும் மருந்து, துாக்கமின்மையால் ஏற்படும்
ஞாபகமறதிக்குப் பயன்படுத்தலாம் என ஆஸ்திரியா நாட்டின் ஃபென்ஸ் எனும் நரம்பியல் கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது. எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது.
🌀விபத்தைத்
தடுக்கும் கருவி
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு
தொழிலதிபர் சைக்கிள் விபத்தைத் தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளார். இதை சைக்கிளின்
பின் பகுதியில் பொருத்திவிட்டால் போதும், பின்னால் வரும் வாகனம் எது, எந்த வேகத்தில்
வருகிறது என்பதை உணர்ந்து சைக்கிள் ஓட்டுபவரை எச்சரித்துவிடும்.
💡இரவு ஒளி நீரிழிவுக்கு
வழி
வகை 2 நீரிழிவு நோய் ஏற்பட வாழ்வியல் முறை, உணவு, மரபியல் எனப் பல காரணங்கள் உள்ளன. இரவு நேரங்களில் அதிக ஒளியில் இருப்பதும் ஒரு முக்கியக் காரணி என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிளின்டர்ஸ் பல்கலை கண்டறிந்துள்ளது. 85,000 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
வௌவால் போன்ற சில உயிரினங்கள் பகலில் உறங்கும், இரவில் சுறுசுறுப்பாகத் தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும். மனிதர்களாகிய நாம் இரவில் துாங்கி பகல் வெளிச்சத்தில் இயங்குபவர்கள். எனவே அதற்கு ஏற்றார் போல் தான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும். இதையே சர்க்காடியன் ரிதம் / சுழற்சி என்று கூறுகிறோம். இரவில் அதிக நேரம் டிஜிட்டல், பிற செயற்கை மின் ஒளிகள் மிகுந்த சூழலில் நீண்ட நேரம் பணி செய்யும்போது இந்தச் சுழற்சி பாதிக்கப்படுகிறது.
இதனால், இன்சுலின் சுரப்பு குறைகிறது. சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கிறது. வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. குறிப்பாக 12.30 முதல் 6 மணி வரை இரவு நேரம் பணி செய்பவர்களுக்கு மற்றவர்களை விட வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 67 சதவீதம் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
👂இழந்த செவித்திறனை
இனி மீட்கலாம்
புல்லட், குண்டுவெடிப்பின் சத்தத்தை கேட்டல் அல்லது தொடர்ந்து அதிக ஒலி இருக்கும் இடத்தில் பணிபுரிதல் ஆகிய காரணங்களால் ஏற்படுவது 'ஒலியால் ஏற்படும் செவித்திறன் இழப்பு' (Noise -induced hearing loss - NIHL). தொழில்மயமாக்கம் காரணமாகத் தொழிற்சாலைகள் பெருகுவதால் இந்தக் குறைப்பாடு பலருக்கும் ஏற்படுகிறது.செவித்திறன் மேம்படுத்தும் கருவிகள் பொருத்தலாமே அன்றி, இதைச் சரிசெய்யவே முடியாது என்று நம்பப்பட்டு வந்தது.
தற்போது சில சீன ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவத்தையும், குடல் வாழ் உயிரினங்கள் பற்றிய தற்போதைய மருத்துவ அறிவையும் இணைத்து, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர். அதிக ஒலியால் குடல் நுண்ணியிரிகள் நலிவடைகின்றன. அவற்றுள் சில S1PR2 உள்ளிட்ட சில வகை கொழுப்புகளை உற்பத்தி செய்கின்றன. இந்தக் கொழுப்பு தான் கேட்கும் திறனைக் காக்கிறது.
அயன் ஆக்ஸைட் நானோ துகள்கள் மீது செல்லுலோஸைப் பூசி எலிகளுக்கு வாய்வழியே கொடுத்தனர். இது குடலை அடைந்ததும் நல்ல நுண்ணுயிர்களை நலமடையச் செய்தது. இதனால் கேட்கும் திறன் மேம்பட்டது. இந்த மருந்து விரைவில் மனிதர்கள் மீது சோதிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🛉ஆட்டிஸம் நோய் மருத்துவம்
குடல் நுண்ணுயிரிகளுக்கும்
மனஅழுத்தம், அல்சைமர் நோய்க்கும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே நடந்த ஆய்வுகள் நிறுவியுள்ளன.
தற்போது ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலை குறிப்பிட்ட சில குடல் நுண்ணுயிரிகளுக்கும்
ஆட்டிஸம் நோய்க்கும் உள்ள தொடர்பை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளது. இதன் வாயிலாக,
எதிர்காலத்தில் ஆட்டிஸம் நோய்க்கான மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர்
விஞ்ஞானிகள்.
🐶நாய் ரோபோ
சீனாவில் உள்ள ஷாங்காய் பல்கலை
6 கால்களைக் கொண்ட, சென்சார்கள் பொருத்தப்பட்ட நாய் வடிவ ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளது.
இது கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
𒈨கொழுப்புகளை
உருவாக்க…
காற்றிலிருந்து வெண்ணெய்
தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் ஆராய்ச்சிக்கு பில் கேட்ஸ் உதவ உள்ளார். கரியமில வாயுவுடன்
நீரிலிருந்து பிரிக்கப்பட்ட ஹைட்ரஜனை இணைத்துக் கொழுப்புகளை உருவாக்கும் இந்த முயற்சியால்
கால்நடைகளை அதிகளவு நம்பி இருப்பது குறையும்.
⏚குளுமை மைதானங்கள்
நெதர்லாந்தைச் சேர்ந்த கே.டபிள்யூ.ஆர்., ஆய்வு மையம், நகரங்களில், செயற்கையாக அமைக்கப்படும் மைதானங்களைக் குளுமையாக வைப்பதற்கு, அவற்றின் கீழே மழைநீரைச் சேமித்து வைக்கும் முறையை உருவாக்கி உள்ளது.
🥩கொழுப்பு,
புரதம்- இன்சுலின்
மாவுச் சத்தை உட்கொண்டால்
தான் நம் உடல் அதை ஜீரணிக்க இன்சுலின் சுரக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. தற்போது
கனடாவில் உள்ள யுபிசி(The University of British Columbia) பல்கலை மேற்கொண்ட ஆய்வில்,
சிலருக்கு மாவுச் சத்து மட்டுமன்றி கொழுப்பு, புரதம் ஆகியவற்றை உட்கொள்ளும்போதும் உடலில்
இன்சுலின் சுரப்பு அதிகமாவது கண்டறியப்பட்டுள்ளது.
⛾காற்றிலிருந்து
குடிநீர்
அதிகரிக்கும் ஜனத்தொகையால் வளமான பகுதிகளிலேயே தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்றால், வறண்ட பகுதியில் நிலைமையை விவரிக்கத் தேவையில்லை.
தண்ணீருக்காக அங்கு பெரிய போராட்டமே நடக்கும். இங்கு காற்றிலுள்ள ஈரப்பதத்தைக் குடிநீராக மாற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறை பிரபலமாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்ஐடி) இப்படியான ஒரு புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.
பொதுவாகவே இந்த இயந்திரங்களில் நீர் உறிஞ்சும் பொருட்கள் அமைக்கப்பட்டிருக்கும். எம்ஐடி உருவாக்கிய இயந்திரத்தில் இதில் சில புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் இறகுகள் தாமிரத்தாலானவை.
அவற்றின்மீது ஜியோலைட் எனும் நீர் உறிஞ்சும் பொருள் பூசப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், 30 சதவீத ஈரப்பதமுள்ள காற்றிலிருந்து ஒரு நாளைக்கு 1 கிலோ ஜியோலைட் பூச்சு 1.3 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும். எனில் மொத்த இயந்திரத்தால் நாள் ஒன்றுக்கு 5.8 லிட்டர் தண்ணீரைப் பிரித்தெடுக்க முடியும்.
காற்றின் ஈரப்பதம் 80 சதவீதம் இருந்தால் 8.66 லிட்டர் நீர் கிடைக்கிறது. இதற்குப் பதிலாக வேறு உறிஞ்சு பொருட்களைப் பயன்படுத்தும் இயந்திரங்கள் 100 மி.லி. நீரை மட்டுமே பிரித்தெடுக்கின்றன.
எனவே இந்தப் புதிய இயந்திரம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நீரைப் பிரிக்க 184 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படும். இதற்கு அதிக மின்சார ஆற்றல் வேண்டும். இது ஒரு முக்கியமான குறையாக உள்ளது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment