விரதம் இருந்துவிட்டு வடை, சிப்ஸ் மற்றும் இனிப்புகளை சாப்பிடலாமா?

[உடல்நலம்]



பலரும் பல்வேறு காரணங்களுக்காக விரதம் இருப்பார்கள்.

சிலர் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் விரதம் இருப்பார்கள். சிலர் தொடர்ந்து மாதம் முழுவதும் விரதம் இருப்பார்கள்.

 

வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து.

 

விரத நாட்களில் வறுத்த மற்றும் இனிப்பான தின்பண்டங்களைச் சாப்பிடுவது, உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

 

நிபுணர்களின் கூற்றுப்படி, விரதம் இருப்பதன் மூலம் சில நோய்களைக் குணமாக்கலாம். ஆனால் விரத நாட்களில் சிப்ஸ், வடை போன்ற பொரித்த, வறுத்த தின்பண்டங்களையும், இனிப்பு வகைகளையும் உண்டால், ​​குடல் சாதாரண நாட்களைவிடக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

 

எனவே உண்ணாவிரத காலங்களில் வறுத்த உணவுகள் மற்றும் இனிப்பு வகைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.

 

விரத நாட்களில் வடை, சிப்ஸ் மற்றும் இனிப்புகளை சாப்பிடலாமா?

ஒரு ஆரோக்கியமான நபர், விரதம் இருக்கும் போது எதுவும் சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

 

ஆமதாபாத்தைச் சேர்ந்த கல்லீரல் நோய் நிபுணரான டாக்டர். பாத்திக் பரிக், "உடலை இளைப்பாற வைப்பதே உண்ணாவிரதத்தின் நோக்கம். ‘இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க்’ (பகலில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் உண்ணாவிரதம் இருப்பது) அல்லது 24 மணி நேரமும் உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சிலரால் உண்ணாவிரதத்தின் போது பசி தாங்க முடியாது," என்று பிபிசியிடம் கூறினார்.

 

"விரத காலத்தில் சிலர் வறுத்த, அல்லது எண்ணெய்-நெய் நிறைந்த பண்டங்களை உண்கின்றனர். இந்த உணவுகளில் அதிக கலோரிகள் உள்ளன. இது கல்லீரல் செல்களை சேதப்படுத்துகிறது. இது போன்ற வறுத்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரலில் கொழுப்பு சேர வழிவகுக்கும். இது நோயையும் உண்டாக்கலாம்," என்கிறார் அவர்.

 

கல்லீரலில் கொழுப்பு சேர்வது எப்படி?

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, நமது உடலில் உள்ள சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கிறது.

 

கல்லீரலில் எவ்வாறு கொழுப்பு சேர்கிறது என்று காஸ்ட்ரோ-என்டாலஜிஸ்ட் டாக்டர். மணீஷ் பட்நாகர் பிபிசி குஜராத்தியிடம் விளக்கம் அளித்தார். "விரதத்தின் போது எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்டால், உடலில் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்பு உணவுகளை அதிக அளவில் அல்லது நீண்ட நேரம் சாப்பிட்டால், அவற்றில் உள்ள கொழுப்பு மெதுவாக கல்லீரலில் சேரும். இந்த நிலை கல்லீரல் வீக்கம் என்று அழைக்கப்படுகிறது. ” என்கிறார்.

 

உண்ணாவிரதத்தின் போது கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் ஏற்படும் கல்லீரல் வீக்கம் போன்ற நோய்களை முறையாக விரதம் இருப்பதன் தடுத்து கல்லீரலை ஆரோக்கியமாக மீட்டெடுக்க முடியும் என்றும் டாக்டர் பட்நாகர் கூறுகிறார்.

 

உண்ணாவிரதத்தை முறையாகக் கடைபிடித்தால், கொழுப்பில் உள்ள கலோரிகள், கல்லீரல் வீக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் அதிக கலோரி உள்ள உணவுகளைச் சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் வயிறு அல்லது உடல் உறுப்புகளை சேதப்படுத்தும். உணவினால் தூண்டப்படும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இரத்தத்தையும் பாதிக்கலாம்," என்கிறார்.

 

உப்பு அதிகமுள்ள உணவுகளால் என்ன பாதிப்பு?

சிறுநீரக மாற்று மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பிரஞ்சால் மோதி பிபிசியிடம், ஆரோக்கியமற்ற உணவுகள் சிறுநீரகத்தை எவ்வாறு சேதப்படுத்தும் என்பது பற்றி கூறினார்.

 

"எண்ணெய் மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. அதிக உப்பு இருந்தால், சிறுநீரகங்கள் உடலின் உப்பு அளவைப் பராமரிக்கக் கடினமாக உழைக்க வேண்டும்," என்று டாக்டர் மோதி கூறுகிறார்.

 

சிறுநீரகப் பாதிப்பைத் தடுப்பது பற்றிப் பேசிய அவர், "உடலில் ஏற்படும் பசியை விடக் குறைவாகச் சாப்பிட வேண்டும். உண்ணாவிரதம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் விரதத்தின் போது எண்ணெய், சர்க்கரை, அல்லது உப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால், அது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் இரண்டையும் பாதிக்கும்," என்று டாக்டர் பிரஞ்சால் மோதி கூறுகிறார்.

 

விரத நாட்களில் என்ன சாப்பிடுவது?

உண்ணாவிரத காலத்தில் முழுக்கப் பட்டினி இருப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. இருப்பினும், விரதத்தின் பொது சத்தான உணவை சரியான வகையில் எடுத்துக்கொள்வதன் மூலம் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

 

உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் லிசா ஷா கூறும் போது, ​​"மழைக்காலத்தில் செரிமானம் பலவீனமடைகிறது. எனவே அப்போது விரதம் இருக்காவிட்டாலும், குறைவாகச் சாப்பிட வேண்டும். லேசான உணவை உண்ண வேண்டும். எந்த காலத்திலும் விரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்," என்கிறார்.

 

விரதத்தின் போது எப்போது சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும்?

விரதத்தின் போது எப்போது சாப்பிட வேண்டும் என்று கூறிய லிசா ஷா, "ஒரு நாளைக்கு ஒரு முறை உண்ணும் போது, ​​காலையில் வழக்கமான உணவை அதே நேரத்தில் சாப்பிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை விரதம் இருப்பவர்கள் இரவில் பழங்கள் அல்லது கொழுப்பு அல்லாத உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். இரவில் பால் குடிக்க வேண்டும்," என்கிறார்.

 

மேலும், "மாதம் முழுவதும் விரதம் இருப்பவர்களும் காலை உணவை அதே நேரத்தில் சாப்பிட்டு, இரவில் உணவை குறைவாக சாப்பிட வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட உப்புமா, கொழுப்பு நீக்கப்பட்ட பால், பழங்கள், அல்லது உலர் பழங்கள் சாப்பிட வேண்டும். இது தவிர, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம்," என்கிறார்.

 

மேலும், “விரதத்தின் போது மாலையில் உண்பவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள். மாலையில் உண்பவர்கள் பகலில் சிற்றுண்டி என்ற பெயரில் பொரித்த உணவைச் சாப்பிடுகிறார்கள். அதிகளவில் அவற்றைச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் பட்டினி கிடக்கிறார்கள் என்று நினைத்து அப்படிச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்,” என்கிறார்.

 

சந்தையில் கிடைக்கும் வறுத்த உணவுகள் மட்டுமின்றி, வீட்டில் வறுத்த உணவுகளை உண்பதும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். விரத நாட்களில், சாதாரண நாட்களை விட, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுகின்றனர்," என்கிறார் அவர்.

 

"பொதுவாக, நாம் வறுத்த உணவு அல்லது இனிப்புகளை எப்போதாவது சாப்பிடுகிறோம். ஆனால் விரத நாட்களில், இதுபோன்ற உணவுகளை அடிக்கடி மற்றும் அதிக அளவில் சாப்பிடுகிறோம். குடலைத் தளர்த்துவதற்குப் பதிலாக, இந்த வகை உணவுகள் குடலை அதிக நேரம் வேலை செய்ய வைக்கின்றன," என்கிறார்.

 

விரதத்தின் போது நீரிழப்பைத் தடுக்க என்ன செய்யலாம்?

விரதத்தின் போது திரவங்களை உட்கொள்ளும் அளவைக் குறைக்கக் கூடாது என்கிறார் டாக்டர் பரிக். "உண்ணாவிரதத்தின் போது மக்கள் சில நேரங்களில் நீரிழப்பை அனுபவிக்கிறார்கள். நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவங்களை உட்கொள்ள வேண்டும்," என்கிறார்.

 

டாக்டர். பட்நாகர் "வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தால் சில நோய்களைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, அதன்மூலம் சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளன. ஆனால், விரதம் ஒரு நாள் விரதமா அல்லது தொடர் விரதமா என்பது முக்கியமான கேள்வி," என்கிறார். “விரதத்தின் போது பழங்கள், பால் போன்ற லேசான உணவுகளை உட்கொள்ள வேண்டும்," என்கிறார்.

 

இருப்பினும், மக்கள் தங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி விரதம் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

 

டாக்டர் பட்நாகர் மேலும் கூறுகையில், "நோன்பு துறக்கும் போது ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று நினைத்து மக்கள் தங்கள் வழக்கமான அளவை விட அதிகமாக சாப்பிடும் போது, ​​அதுவும் தீங்கு விளைவிக்கும்," என்கிறார்.

 

கலோரிகளைப் பற்றி பேசுகையில், டாக்டர் பட்நாகர், "வழக்கமான நாளில் மக்கள் வழக்கமாக 2,000 கலோரிகளை உட்கொள்கிறார்கள். ஆனால், விரத நாட்களில் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் இது 3,500 கலோரிகள் வரை செல்கிறது. குளிர்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு அதிக கலோரி உணவுகள் தேவை. ஆனால் நமது சுற்றுச்சூழலுக்கு குறைவான கலோரிகளே தேவைப்படுகின்றன," என்கிறார்.

 

நன்றி: லக்ஷ்மி படேல்/பிபிசி குஜராத்தி

No comments:

Post a Comment