"அதுவொரு கனாக்காலம்" -சிறு கதை


ஒரு காலத்தில், இலங்கையின் வெப்பமண்டல சொர்க்கத்தில், தமிழ் சிங்கள வேறுபாடுகள் இன்றி பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இலங்கையன் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்தனர்.  இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையையும் நிலத்தின் மீதான அன்பையும் பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர். இலங்கைத்தீவு வளங்கள் நிறைந்ததாக இருந்தது மட்டும் அல்ல, அதன் மக்கள் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒற்றுமையில் மகிழ்ச்சியடைந்தனர்.

 

உதாரணமான சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டது மட்டும் அல்ல, 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப்பினராக தெரிவும் செய்யப்பட்டார். அதுமட்டும் அல்ல,  சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். ஆனால் அந்த கனாக்காலம், 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், எல்லாளனை நடத்திய விதம் மாதிரியே, இராமநாதனையும் சிங்கள அரசியல் வாதிகள் ஒதுக்கத் தொடங்கினார்கள். இலங்கையில் நிலவிய அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது. அந்த கால இடைவெளியில் தான், 1982 ஆண்டு தொடக்கத்தில், விஜயவீர என்ற இளைஞனும், மகிழ்விழி என்ற இளம் பெண்ணும் பக்கத்து பக்கத்து கிராமங்களில் வசித்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் - விஜயவீர சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர், மகிழ்விழி ஒரு தமிழர். அவர்களிடம் கலாச்சார வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்களின் காதல் எல்லைகளைத் தாண்டியது! அதுமட்டும் அல்ல, அங்கு இன்னும் ஒரு கனாக்காலம் நிலவியதால்,  அவர்களின் குடும்பங்களும் நண்பர்களும் அவர்களின் உறவை எந்த இன ரீதியாகவும் பார்க்கவில்லை.

 

காலம் செல்ல செல்ல, 1983 ஜூலைக்கு பின் அவர்களின் கனவு காலம் மறைய ஆரம்பித்தது. மலை அடிவாரத்தில், பரந்தவெளியில், எந்த பயமும் தயக்கமும் இன்றி இருவரும் மாலைப்பொழுதில் முழு நிலாவின் அழகை பார்த்து ரசித்து கொஞ்சி பேசி காதல் புரிந்த அந்தக் காலம் 'அதுவொரு கனாக்காலம்' ஆக அவர்களுக்கு மாறத் தொடங்கியது. ஒரு காலத்தில் நிலவிய தீவின் சிறப்பியல்புகள் குறையத் தொடங்கி,  பதட்டங்கள் தோன்றின. பற்றாக்குறையான வளங்கள், வேலை வாய்ப்புகள்  சமூகங்களுக்கிடையில் சச்சரவுகளைத் தூண்டின. மேலும் அரசியல், மத  தலைவர்கள் நாட்டை வளப்படுத்துவதற்குப் பதிலாக,  பிளவுபடுத்தி குறுக்குவழியில் இலாபம் அடைய பார்த்தனர்.

 பல நூற்று ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை மண், தவறான புரிதல்கள் மற்றும் அச்சங்களால் தூண்டப்பட்டு, இன பாகுபாடு மற்றும் இனப் பதட்டங்களை அனுபவிக்கத் தொடங்கியது.

 

ஆழமான காதல் வசப்பட்ட விஜயவீராவும் மகிழ்விழியும், இந்த வளர்ந்து வரும் இன கொந்தளிப்பின் மத்தியில் தங்களைக் கண்டுகொண்டனர். ஒரு காலத்தில் அவர்களது உறவை ஆதரித்த அவர்களது குடும்பங்கள் மாறிவரும் காலத்தின் அழுத்தத்தால், மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள், சமூக எதிர்பார்ப்புகள், பயம் காரணமாகவும் அவர்களின் எண்ணங்களை மெல்ல மெல்ல மாற்றத் தொடங்கினர். மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளின் உறவை இனம் மற்றும் கலாச்சாரத்தின் கண்ணாடிகளின் ஊடாக இன்று பார்க்கத் தொடங்கினர்.

 

எதுஎவ்வாறாகினும், விஜயவீராவும் மகிழ்விழியும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். தங்கள் சமூகங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பிளவை தங்களின் பிணைப்பு ஒரு பாலமாக சரிப்படுத்தும் என்று நம்பினர். அவர்கள் ஒரு காலத்தில் தங்கள் நிலத்தை வரையறுத்திருந்த ஒற்றுமையை தங்கள் தங்கள் மக்களுக்கு நினைவூட்டும் நம்பிக்கையில், புரிந்துணர்வு மற்றும் பச்சாதாபத்திற்காக உறவினருடனும் அயலவருடனும் வாதிட்டனர். அவர்களின் எண்ணம் எல்லாம் "அதுவொரு கனாக்காலம்"  ஆக மாறாமல் என்றும் அது தங்களுக்கும் தங்கள் வருங்கால பிள்ளைகளுக்கும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதே!

 

ஆனால், அவர்களின் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதிகரித்த பதட்டங்கள் இரு தரப்பிலும் தீவிரவாதக் குரல்களுக்கு வழிவகுத்தது, பிளவுகளை விரிவுபடுத்தியது மற்றும் விஜயவீராவும் மகிழ்விழியும் பகிர்ந்து கொண்ட அன்பை மறைக்க முயன்றது. அவர்களால் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான தெளிவான பாதை,  பனிமூட்டமாக வளர்த் தொடங்கி, தப்பெண்ணம் மற்றும் பயத்தின் இருண்ட மேகங்களால் மறைக்கப்பட்டது. ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளை மட்டும் உள்ளடக்கிய மகாவம்சம் என்ற புராணக் கதைகளை அடிப்படையாக வரிந்து கட்டிக் கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இது ஒரு கனாக்காலமாக மகிழ்வாக அனுபவித்த பன்மொழி நடைமுறை, பன்முக கலாச்சாரம் மற்றும் சர்வதேச வரலாறுகள் எல்லாவற்றையும் மூடி மறைக்க தொடங்கினர்.

 

துரதிர்ஷ்டவசமாக, 1983 ஜூலையில் தமிழ் மக்கள் மேல் மீண்டும் ஒரு வன்முறை ஏவிவிடப்பட்டது. வன்முறை நகரங்கள், கிராமங்கள், குடும்பங்கள் மற்றும் உயிர்களை கிழித்தெறிந்தது. இந்த குழப்பத்திற்கு மத்தியில் விஜயவீராவும்  மகிழ்விழியும் கட்டாயத்தின் பேரில் பிரிக்கப்பட்டனர். ஒரு காலத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அவர்களது காதல், அவர்களது நிலத்தை, உயிரை மூழ்கடித்திருந்த வெறுப்பின் முகத்தில் அற்பமானதாகத் தோன்றியது. ஆண்டுகள் சென்றன, மோதலின் காயங்கள் ஆழமாக ஓடியது. விஜயவீரா மற்றும் மகிழ்விழியின் காதல் கதைகள் புராணக்கதைகளாக மாறிவிட்டது.  கொந்தளிப்பின் போது இழந்த காதலை மீண்டும் புதுப்பிக்க முடியவில்லை. பாரபட்சம், இனத்துவேசம் மற்றும் பயத்தின் காரணமாக ஒற்றுமை கனவு சிதைந்ததை நல்ல உள்ளங்கள் பல உணர்ந்து தமது அந்த முன்னைய கனாக்காலத்தை வருத்தத்துடன் திரும்பிப் பார்த்தனர்.

 

1987-89 ஜேவிபி புரட்சி மற்றும் 1987-90 இந்திய அமைதி காக்கும் படையின் போர் என இலங்கை முழுவதுமே ஒரே பதட்டத்திலும் பயத்திலும் மூழ்கி இருந்தது. என்றாலும் மகிழ்விழி முன்பு விஜயவீராவை சந்திக்கும் மலை அடிவாராத்தில் பரந்தவெளியில், ஆனால் இன்று சந்திரன் தோன்றாத அமாவாசை மாலையில் வானத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அவள் எண்ணம் எல்லாம், விஜயவீராவுடன் மகிழ்வாக காலம் கழித்த அந்த கனாக்காலம் மட்டுமே ! ஆமாம் அவளுக்கு "அதுவொரு கனாக்காலம்" ஆக இன்று மாறிவிட்டது!

 

"என் அன்பு ஒன்றில் நீ வாழ்ந்தாய்

உன் அன்பு ஒன்றில் நான் வாழ்ந்தேன் 

நம் அன்பு கடலில் இருவரும் நீந்தினோம்

நாளை நாமதேயென ஒன்றாய் மகிழ்ந்தோம்!"

 

"உன் துன்பம் என்னை வலிக்கும்

என் துன்பம் உன்னை வலிக்கும் 

நம் காதல் பூந் தோட்டத்தில்

இன்ப மலர்கள் பூத்த காலமது!"

 

"என் நிழலாக இருட்டிலும் நீயிருப்பாய்

உன் மழலையாய் என்றும் நானிருப்பேன்

இனம் மதம் தாண்டியதே நம்காதல்

மனிதம் மட்டுமே அங்கு மலர்ந்தது!"

 

"பொல்லாத வெறியர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி

தவறான வார்த்தைகளை உண்மையென பரப்பி

பிரியாத உள்ளங்களை தூர விலக்கி 

அக்காலத்தை  "அதுவொரு கனாக்காலம்" ஆக்கி விட்டார்கள்!"

 

நன்றி

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

0 comments:

Post a Comment