"உழைப்பின்றிச் செழிப்பில்லை....!"
"வியர்வை மற்றும் உழைப்பின் பயனில்
செழிப்பின் விதை மனிதத்தை வளமாக்கும்!
உழைக்கும் கை இல்லை என்றால்
செல்வம் பூக்காது வறுமை தாண்டவமாடும்!"
"கடினமான வயல்களின் வழியாக நடந்து
முயற்சியின் பலன்களை அறுவடை செய்!
கும்பிட்டு பூசை செய்வதால் ஒன்றுமில்லை
குனித்து நிமிர்ந்து வாழ்வை செழிப்பாக்கு!"
"இதயங்கள் சேராத உழைப்பு ஒன்றில்
அரண்மனை உயராது கோபுரங்கள் ஏறாது!
செழிப்பின் அறுவடையே நமக்குச் சொந்தம்
மனிதா கடும் உழைப்பின்றிச் செழிப்பில்லை!"
"நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"
"விடுதலை வேண்டி வீறுகொண்ட என்னை
படுகொலை செய்து குழியில் புதைத்தாலும்
நடுநிலை அற்று அடிமை ஆக்கினாலும்
வீடுகளை இடித்து நாடு கடத்தினாலும்
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"
"மனதில் உறுதி எனக்கு உண்டு
மானமாய் வாழ வீரம் இருக்கு
தானமாய் பிச்சை கேட்பவன் அல்ல
ஊனம் வந்தாலும் மனம் தளராமல்
மண்ணுக்கு விதையாய் மட்டுமே போவேன்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment