🏥முதுமையால்
பார்வைக் குறை
மெலடோனின் என்பது துாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஹார்மோன். துாக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு அதைத் துாண்டக்கூடிய மருந்துகள் தரப்படுவது வழக்கம். அமெரிக்காவைச் சேர்ந்த கேஸ் வெஸ்டர்ன் மருத்துவப் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இந்த மருந்துகள் முதுமையால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
🏥களைப்பின்றி வளரும் களை
உணவு அல்லது பணப்பயிர்கள் வளர்க்கப்படும் இடங்களில் தேவையில்லாமல் வளரும் செடிகள் 'களைகள்' எனப்படுகின்றன. இவை பயிர்களுக்குத் தேவைப்படும் சத்துக்களை எல்லாம் மண்ணில் இருந்து எடுத்துக் கொள்வதால், பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதற்காகத் தான் அவற்றை அவ்வப்போது நீக்குகிறோம். சில வகை களைகளை எவ்வளவு தான் நீக்கினாலும் திரும்பத் திரும்ப வளரும். இதற்கான காரணத்தை அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சா பல்கலை விஞ்ஞானி ரூபேஷ் கண்டறிந்துள்ளார்.
கிரேக்க நாட்டிற்கு சென்றபோது திராட்சைக் கொடிகளுக்கு இடையே வளரும் சில்வர்லீஃப் நைட்ஷேட் எனும் செடி பற்றி ஆய்வு செய்துள்ளார். திராட்சைகளுக்குத் தேவையான அத்தனை சத்துகளையும் உறிஞ்சிக்கொள்ளும் இந்தத் தாவரம் திராட்சைகளின் உற்பத்தியைப் பாதிக்கின்றன. பொதுவாக புல்லை வெட்டும் கருவி கொண்டு இவை வெட்டப்படுகின்றன. ஆனாலும் இவற்றை முழுமையாக அழிக்கவே முடியவில்லை.
ரூபேஷ் மேற்கொண்ட ஆய்வில் வெட்டப்படாத நைட்ஷேட் செடிகளை விட வெட்டப்படுவை தான் மிகவும் வேகமாக வளர்கின்றன என்பது தெரியவந்தது. அதாவது வெட்டப்படும் செடி உயிர் வாழ்வதற்குப் போராடுகிறது, இதனால் தனது வேர்களை ஆழமாக்குகிறது. புழுக்களால் உண்ணமுடியாதபடி தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. வெட்டப்படாத செடிகளில் உண்டு வளர்ந்த புழுக்களை விட வெட்டப்பட்ட செடிகளில் வளரும் புழுக்கள் அதிக எடை கொண்டிருந்தன.
இந்த ஆய்வின் மூலம் நைட்ஷேட் செடிகளைப் பொறுத்தவரை வெட்டப்படுபவையே ஆபத்தானவை என்று நிறுவப்பட்டுள்ளது. இது மற்ற களைச் செடிகளுக்கும் பொருந்துமா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🏥இனி ஊசி தேவை இல்லை
நமது உடலில் இன்சுலின் சரியாகச் சுரக்காதபோது சர்க்கரை நேரடியாக ரத்தத்தில் கலந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இரு வகை நீரிழிவு நோய்களுக்கும் தினமும் சிலமுறை இன்சுலினை ஊசி வாயிலாக நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஊசி போட்டுக்கொள்வது சற்றுக் கடினமானது. பயன்படுத்தப்பட்ட ஊசிகள் தீங்கு தரும் கழிவுகளாகக் குவிவதும் ஒரு பிரச்னையாகிறது.
இதற்கு மாற்றாகப் பல்வேறு வழிகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இவற்றுள் மிக எளிமையானது வாய்வழியே மருந்தை எடுத்துக்கொள்வது தான். மாத்திரை வடிவில் இன்சுலின் தந்தாலும் அதன் முழுப்பயன் கிடைப்பதில்லை.
ஏனென்றால் வயிறு உள்ளிட்ட ஜீரண உறுப்புகளில் உள்ள அமிலங்களால் இன்சுலின் சிதைக்கப்படும். இதற்குத் தீர்வு காண விஞ்ஞானிகள் முற்பட்டனர். அந்த வகையில் கனடா நாட்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் ஒரு புது முறையைக் கண்டுள்ளனர். இதன்படி இன்சுலின் மாத்திரை வடிவில் அல்லாமல் சொட்டு மருந்து வடிவில் தரப்படும்.
நேரடியாக வாய்க்குள் எடுத்துக்கொள்ளாமல் நாக்கின் அடியில் சில சொட்டுகள் தரப்படும். இவ்வாறு நாக்கின் அடியில் மருந்து வைக்கும் முறைக்கு 'சப்லிங்குவல் அட்மினிஸ்ட்ரேஷன்' என்று பெயர். நாக்கின் அடியில் உள்ள திசுக்களில் உள்ள துளைகள் வழியே இன்சுலின் நேரடியாக ரத்த ஓட்டத்தை அடையும்.
இப்படியாக இன்சுலின் தந்தாலும் கூட முழுப்பயன் கிடைக்கவில்லை. இன்சுலினின் மூலக்கூறுகள் அளவில் பெரியவை என்பதால் நமது செல்களுக்குள் செல்ல முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் இன்சுலினுடன் மீனிலிருந்து எடுக்கப்படும் 'செல்லுக்குள் ஊடுருவும் பெப்டைட்' (CPP) என்ற பொருளைக் கலந்தனர். இது, இன்சுலின், செல்களுக்குள் ஊடுருவ உதவுகிறது. இந்த முறையில் எலிகள் மீது சோதிக்கப்பட்டபோது அவற்றின் சர்க்கரை அளவு குறைந்தது. விரைவில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு சந்தைக்கு வர உள்ளது.
🏥செயற்கை அம்பர் (Amber) கல்
தகவல்களைச் சேமிக்க மிகச்சிறந்த சாதனமாக இருப்பவை மரபணுக்கள் தான். உலகில் உள்ள மொத்த தகவல்களையும் தேநீர் கோப்பை அளவுள்ள மரபணுத் தொகுதியில் சேமித்து விடலாம். ஆனால், இவை எளிதில் சிதைந்துவிடும். இதைத் தடுக்க செயற்கை அம்பர் (Amber) கல்லைப் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மாசசூசெட்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
🏥எவ்வாறு தடுப்பது
வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பல நாடுகளுக்கு உள்ளது. அவ்வாறு அனுப்பும்போது அங்குள்ள குறைந்த ஈர்ப்பு விசையால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த ஆய்வுகளை இங்கிலாந்தைச் சேர்ந்த யு.சி.எல். பல்கலை மேற்கொண்டு வருகிறது.
🏥அன்னாசி இலைகளிலிருந்து லெதர்
விலங்கு தோல்களில் இருந்து தயாரிக்கப்படும் லெதர் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் தாவரங்களில் இருந்து தோல் பொருட்கள் தயாரிக்கும் முறை பிரபலமாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தாய்லாந்து விஞ்ஞானிகள் அன்னாசி தாவர இலைகளிலிருந்து லெதர் தயாரித்துள்ளனர். இது மற்ற தாவர லெதர்களை விட 60 மடங்கு வலிமையாக உள்ளது.
🏥நண்பர்களை அழைக்க யானைகள்
அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலை மேற்கொண்ட ஆய்வில், யானைகள் தங்கள் நண்பர்களை அழைக்கப் பல்வேறு விதமான ஒலிகளை எழுப்புகின்றன என்று தெரியவந்துள்ளது. இது மனிதர்கள் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைப்பது போன்றது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
🏥புற்றுநோயை விரட்டும் விரதம்
குறிப்பிட்ட நேரம் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது, உடலுக்குப் பலவிதமான நல்ல பலன்களைத் தரும். இடைவெளியிட்ட விரத முறை தற்போது எடை குறைப்பு உள்ளிட்டவற்றுக்காகப் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த எம்.எஸ்.கே. புற்றுநோய் ஆய்வு மையம் விரதத்தால் புற்றுநோய் செல்கள் அழிகின்றன என்று நிறுவியுள்ளது.
புற்றுநோய்க் கட்டிகள் எப்போதுமே சத்துக்களை உறிஞ்சியபடியே இருக்கின்றன. அதனால் பொதுவாகவே கொழுப்பு அதிகமுள்ள பகுதிகளில் தான் இவை வளர்கின்றன. விரதமிருக்கும்போது உணவின் மூலம் சர்க்கரை கிடைக்காது. இதனால் உடல் தனக்குத் தேவையான ஆற்றலை, சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் கட்டிகளுக்குப் போதுமான கொழுப்பு கிடைக்காமல் இறந்துபோகும்.
அத்துடன் விரதம் இருப்பதால், ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி பெருகுகிறது. இவை கிருமிகளுக்கும், கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களுக்கும் எதிராகப் போராடுகின்றன. எனவே புற்றுநோய்க் கட்டிகள் அழிகின்றன.
எலிகளில் சோதித்துப் பார்த்தபோது, வாரம் இருமுறை 24 மணி நேரங்கள் உண்ணாமல் இருக்கும் இந்த விரதமுறை பயன் தந்தது. புற்றுநோய்க்கான மற்ற சிகிச்சை எடுத்துக் கொள்வோர் கூடுதலாக இந்த விரதமுறையைப் பின்பற்றினால் பயன் பெறலாம். ஆனால் இதைக் கடைப்பிடிப்பதற்கு முன்பாக உரிய மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையைப் பெறுவது அவசியம்.
🏥நுண்ணுயிர்களை மதிப்பிட புதுவழி
நம் உடலின் எல்லா பாகங்களிலும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. குடலில் வாழும் நுண்ணுயிர்களுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனால் நோயைக் கண்டறிவதற்கும், அதற்கான மருந்துகளைத் தருவதற்கும் முன்னர் குடலில் எத்தகைய நுண்ணுயிர்கள், எப்படி வாழ்கின்றன என்று அறிவது அவசியம்.
இதற்குத் தற்போது பின்பற்றும் முறை மலத்தை ஆய்வுக்கு உட்படுத்துவதே. ஆனால், இதிலிருந்து குடலில் உள்ள பாக்டீரியா பற்றி முழு விபரம் கிடைக்காது.
டஃப்ட்ஸ் பல்கலை இதற்கு ஒரு புது வழியைக் கண்டுபிடித்துள்ளது. இதன்படி சாதாரண வைட்டமின் மாத்திரை அளவுள்ள கருவி ஒன்று உடலுக்குள் செலுத்தப்படும். இது வெளிப்புறத்தில் மிருதுவாக, பார்ப்பதற்கு மாத்திரை போலவே இருக்கும். வயிற்றுக்குள் சென்றவுடன் அமிலங்கள் பட்டு வெளிப்பகுதி சிதைந்துவிடும். இதற்குப் பின் வெளிப்படும் கருவி, குடலில் உள்ள பாக்டீரியாவை உள்ளிழுக்கும். தனது பணி முடிந்தவுடன் மலத்துடன் வெளியேறிவிடும்.
இது பன்றிகளில் சோதிக்கப்பட்டதில் நல்ல முடிவுகள் கிடைத்தன. குடல் நுண்ணுயிர்கள் பற்றிய நம் புரிதலை இந்தப் புது முறை மேம்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விரைவில் மனிதர்களில் சோதிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்.
✂✂✂✂
🏥பாலாடைக்கட்டி (சீஸ்) உண்பவர்
சீனாவில் உள்ள ஷாங்காய் ஜியோ டோங்க் மருத்துவப் பல்கலை, 23 லட்சம் ஐரோப்பியர்களின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் எதிர்பாராத விதமாக அதிகளவில் பாலாடைக்கட்டி (சீஸ்) உண்பவர்கள் முதிய வயதிலும் மன, உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான சரியான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
🏥நீரிழிவு நோயாளிகளும்
துாக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்குத் தரப்படும் மருந்து டிர்செபடைட். இதை உடல் பருமன், நீரிழிவு நோயாளிகளும் பயன்படுத்தலாம் என 469 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை வெளியிட்டுள்ளது.
🏥விரத முறை
உடல் எடை குறைப்பிற்கும், வகை 2 நீரிழிவைச் சரி செய்வதற்கும் 5 : 2 விரத முறை உதவும் என, சீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 405 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில் 5 நாட்கள் உணவு உண்டு 2 நாட்கள் (அவை அடுத்தடுத்த நாட்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை) விரதம் இருக்கும் இந்த முறை நல்ல பலன் தருவது தெரிய வந்துள்ளது.
🏥பக்கவாதத்தை கண்டறியும் பக்கா செயலி
மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் வருவது பக்கவாதம். இது ஏற்பட்டவுடன் மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம். இதன் அறிகுறிகள் தெளிவில்லாதவை. சில நேரங்களில் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதையே அறிய இயலாது. அதற்கென்ற தனிப்பட்ட சோதனைகள் செய்யப்பட்ட பின்பே சிகிச்சை தரப்படும். இதனால் மருத்துவம் செய்ய தாமதம் ஆகிறது. எனவே அறிகுறிகளை வைத்து பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பே அறிய முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
இதற்காக ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி., பல்கலை ஆய்வாளர்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக்கூடிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்தச் செயலி செயற்கை நுண்ணறிவினால் செயல்படும். பாதிக்கப்பட்டவரைச் சிரிக்கச் சொல்லி வீடியோ எடுத்தால் போதும். சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து இந்தச் செயலி ஆய்வுக்கு உட்படுத்தும். தசைகளின் அசைவு ஒன்றுபோல் சமச்சீராக இல்லை என்றால் சிரிக்கின்ற நபருக்குச் சமீபத்தில் பக்கவாதம் வந்துள்ளது என்று செயலி கூறிவிடும்.
இந்தச் செயலி சரியாகச் செயல்படுகிறதா என்று அறிவதற்காக ஆரோக்கியமான நபர்கள், சமீபத்தில் பக்கவாதம் வந்த நபர்கள் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து சிரிக்கச் சொல்லி வீடியோ எடுத்தனர். இந்தச் செயல் 82 சதவீதம் சரியான முடிவைத் தந்தது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் வாயிலாக இன்னும் துல்லியமான முடிவுகள் பெற முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதே போன்ற ஒரு செயலியை அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா மாநிலப் பல்கலை உருவாக்கி உள்ளது.
இந்தச் செயலி பயன்பாட்டிற்கு வந்தாலும் கூட சிக்கலான சூழலில் பக்கவாதத்தைக் கண்டறிய மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கும் நடைமுறை தொடரவே செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment