பழஞ்சோறு சாப்பிடுவது உண்மையில் உடலுக்கு நல்லதா?

 - அறிவியல் விளக்கம்



தமிழர் உணவு மரபில்பழைய சோற்றுக்குஎப்போதும் தனித்த இடம் உண்டு.

சர்வதேச அளவில் பழைய சோறு விளைவிக்கும் நன்மைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளதை அண்மைக் காலமாகக் காண முடிகிறது.

பழைய சோறு உள்ளிட்ட நொதித்த உணவுகள் நம் உடலுக்கு வழங்கும் நன்மைகள் என்ன? அவை எப்படி நம் உடலுக்குள் செயலாற்றுகின்றன?

 

நொதித்த உணவுகள் என்பது என்ன?

பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை போன்ற கார்போஹைட்ரேட்டுகளின் முறிவு மூலம் நொதித்த உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நொதித்தல் செயல்முறையானது பயன்படுத்தப்படும் பாக்டீரியாக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் போன்ற பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, பழைய சோற்றில் சுற்றுச்சூழலில் இருந்தே பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இத்தகைய உணவுகளின் நன்மைகள் குறித்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் குடல் இரப்பை இயல் நிபுணர் ஜஸ்வந்த் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

 

குடல் நலம்

நம் உடலின் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு மிக முக்கியமானவை. நமது உடலின் குடல் நாளத்தில் பல லட்சம் கோடி பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஆர்க்கியா மற்றும் புரோட்டோசோவா உள்ளிட்ட ஒற்றை செல் உயிரினங்கள் அடங்கியுள்ளன.

நமது உணவிலிருந்து நார்ச்சத்தை நொதிக்க உதவுதல், வைட்டமின்களை ஒருங்கிணைத்தல், வளர்சிதை மாற்றத்தை ஒருங்கமைத்தல் உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளை இவை செய்கின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குடலுக்கு நல்ல பாக்டீரியாக்களை வழங்கும் வேலையை பழைய சோறு போன்ற நொதிக்க வைத்த உணவுகள் வழங்குவதாக கூறுகிறார் மருத்துவர் ஜஸ்வந்த்.

குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால், கசிவு குடல் நோய்க்குறி (leaky gut), ஐபிஎஸ் எனப்படும் குடல் அழற்சி நோய், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இதில், கசிவு குடல் நோய்க்குறி இருந்தால், குடல் பாதுகாப்பற்றதாக மாறிவிடும், விஷத்தன்மையுள்ள பொருட்கள் அனைத்தும் குடலில் சுற்றிக்கொண்டே இருக்கும். அவை எல்லா இடங்களுக்கும் பரவுவதால், கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம், ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். கல்லீரலில் கொழுப்பு (fatty liver) தேங்கும். இவையெல்லாம் ஏற்படாமல் இருக்க புரோபயோடிக் பாக்டீரியாக்கள் உதவுகின்றனஎன்கிறார் ஜஸ்வந்த்.

குடலை சமநிலையாக வைத்திருக்கும் வேலையை இந்த பாக்டீரியாக்கள்தான் உறுதிப்படுத்துகின்றன. பெருங்குடல் ஆரோக்கியத்தையும் இந்த பாக்டீரியாக்கள்தான் பாதுகாக்கின்றன.

பழைய சோறு போன்ற நொதிக்க வைத்த உணவுகள், புரோ பயோட்டிக் பாக்டீரியாக்களை வழங்குகின்றன. பழைய சோறு ப்ரீபயோட்டிக்காகவும் செயல்படுகிறது. இந்த புரோபயோட்டிக் மற்றும் ப்ரீபயோட்டிக் இரண்டும் உடலுக்குள் வேதிவினை புரிந்து, போஸ்ட்-பயோடிக்குகளையும் வழங்குகின்றன. அதில் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு எதிராக செயல்படும் ஏஜென்ட்டுகள் உள்ளன. இதுபோன்று சுமார் 2,000 ஏஜென்ட்டுகள் இதில் உள்ளனஎன்கிறார் அவர்.

நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை ஊறவைக்கும் போதும் இத்தகைய பலன் கிடைத்தாலும் அவை அதிகமாக பழைய சோற்றிலிருந்து கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

கலப்பட உணவுகள், பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, குடலில் ஏற்கெனவே உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்என அவர் கூறுகிறார்.

 

நோயெதிர்ப்பு சக்தி

குடல் ஆரோக்கியமாக இருந்தால் பலவித நோய்கள் தடுக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நொதித்த உணவுகள் வழங்கும் நுண்ணுயிரிகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஜஸ்வந்த் கூறுகிறார்.

குடல் நலமாக இருக்கும்போது பெரிதளவில் எவ்வித நோயும் பாதிக்காதுஎன அழுத்தமாக கூறுகிறார் அவர்.

 

மன அழுத்தம், பதற்றத்தை குறைக்குமா?

இது கொஞ்சம் சுவாரஸ்யமானது. மருத்துவ உலகில் குடல் இரண்டாவது மூளை என அழைக்கப்படுகிறது. ஏனெனில், குடலுக்கு மூளைக்கான அணுகல் உள்ளது. “அதனால், இந்த பாக்டீரியாக்கள் நம்முடைய முதல் மூளையில் உள்ள செல்களுக்கு வலுகொடுக்கும். எனவே, மன அழுத்தம், பதற்றத்தை இத்தகைய உணவுகள் தணிக்கும். அதனால், இந்த பாக்டீரியாக்களை நம் உடலின் ஒரு உறுப்பாக பாவிக்க வேண்டியுள்ளதுஎன்கிறார் ஜஸ்வந்த்.

பழைய சோறு சாப்பிட்டால் உடல்பருமன் ஏற்படும், நீரிழிவு நோயாளர்கள் அதை சாப்பிட கூடாது என கூறப்படுவது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்தார்.

உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் நன்றாக கிரகிக்கப்படும்போது, உடல்பருமன் ஏற்படாது. நொதித்த உணவுகளை சாப்பிடும்போது ஊட்டச்சத்துகள் நன்றாக கிரகிக்கப்படுகின்றன. அதனால் இந்த கூற்று தவறானதுஎன்கிறார் ஜஸ்வந்த்.

கம்பு, மாப்பிள்ளை சம்பா, கவுனி ஆகிய பாரம்பரிய அரிசி வகைகளில் பழைய சோற்றை நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டால் ஆபத்தல்ல என கூறுகிறார், சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

இதுதவிர, பெருங்குடலில் அல்சரை கட்டுப்படுத்த இத்தகைய நொதிக்க வைத்த உணவுகள் பயனளிப்பதாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி:நந்தினி வெள்ளைச்சாமி-/-பிபிசி தமிழ்

No comments:

Post a Comment