மாம்பழம்: செயற்கையாகப் பழுக்க வைக்கும் பழத்தைக்---

 கண்டறியும் வழிகளும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும் [-உடல்நலம்] 

கோடைக்காலம் வந்துவிட்டாலே வெப்பத்தைத் தாண்டி பிரபலமான ஒன்றாக அறியப்படுவது மாம்பழம்தான். அதற்காகவே சில மாம்பழப் பிரியர்கள் காத்திருந்து சாப்பிடுவதும் உண்டு.

 

அப்படி தமிழகத்தில் அல்போன்சா, ருமானி, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம் போன்ற பல வகை மாம்பழங்கள் கிடைக்கின்றன.

 

ஆனால், இந்த மாம்பழங்கள் இயற்கையானதாக இருந்தபோதிலும், அவற்றைப் பழுக்க வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சில ரசாயனக் கலவைகள் அவற்றை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றாக மாற்றி விடுகின்றன.

 

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்படி, மாம்பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்துவது 2011ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல வணிகர்கள் தீங்கு விளைவிக்கும் இந்த ரசாயனத்தை பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

 

கால்சியம் கார்பைடோடு சேர்த்து, பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்துவது, மாம்பழம் பழுக்கும் செயல்முறையைச் செயற்கையாக வேகப்படுத்துகிறது.

 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனைத் தடை) விதிமுறைகள் 2011இன் விதிமுறை 2.3.5இன் படி, பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்த அனுமதி இல்லை.

 

அப்படி கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை என்று இந்த விதி தெளிவாகக் கூறுகிறது. இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுப் பாதுகாப்புத் துறைகளும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.

 

மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006 விதிகளின்படி, இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மாம்பழத்தில் கால்சியம் கார்பைடு சேர்க்கப்படுவது ஏன்?

வாழைப்பழம், அன்னாசி, லிச்சி, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களைப் பழுக்க வைக்க இந்த கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது.

 

சந்தையில் அதிக லாபத்தைக் குறிவைத்து, ஒரு பழத்தின் இயற்கையான பழுக்கும் காலத்திற்கு முன்பே அவற்றைப் பழுக்க வைப்பதற்காக இந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் அவற்றைச் சேமித்து வைக்கும் கால அளவும் அதிகரிக்கிறது.

 

மாம்பழங்களைப் பறித்து சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது அவை அழுகிவிடும் என்பதால், அவை காயாக இருக்கும்போதே அவற்றைப் பறித்து சந்தைக்கு அனுப்பி கால்சியம் கார்பைடு மூலம் பலரும் பழுக்க வைக்கும் பழக்கம் சில இடங்களில் பின்பற்றப்படுகிறது.

 

இதுகுறித்து ராஜ்கோட் மாநகராட்சியின் சுகாதாரத் துறைத் தலைவர் ஜெயேஷ் வகானியிடம் பிபிசியிடம் விரிவாகப் பேசியுள்ளார்.

 

அவர் பேசுகையில், "மரத்தில் இருந்து பறித்த பிறகு 2-3 நாட்களில் கெட்டுப்போகும் ஒரு பழமே மாம்பழம். மரத்தில் இயற்கையாகப் பழுக்கும் மாம்பழம், உடனடியாகக் கெட்டுவிடும் தன்மை கொண்டது. எனவே, அதைக் காயாகவே பறித்து, எப்போது வியாபாரத்திற்குத் தேவையோ அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறது," என்கிறார்.

 

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உணவு வணிக விற்பனையாளர்கள் பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் அவர்களுக்குக் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

 

அவ்வமைப்பு வியாழனன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு ஆணையர்களிடமும், பழங்களைப் பழுக்க வைக்கும் கால்சியம் கார்பைடை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

கால்சியம் கார்பைடு என்றால் என்ன?

கால்சியம் கார்பைடு காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் தொடர்புகொண்டு பழங்களில் உள்ள எத்திலீன் என்ற இயற்கை ஹார்மோனாக செயல்படும் அசிட்டிலீனை உற்பத்தி செய்கிறது. இந்த எத்திலீன் பழங்களை இயற்கையாகப் பழுக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

பொதுவாக மாம்பழம் போன்ற பழங்களைப் பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. இது ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கொண்ட அசிட்டிலீன் வாயுவை வெளியிடுகிறது.

 

கால்சியம் கார்பைடை பழங்களில் பயன்படுத்தும்போது, அவை பழங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவற்றில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் எச்சங்களை விட்டுச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

 

இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக நவ்சாரி பல்கலைக் கழகத்தின் அறுவடைக்குப் பின்பான செயல்முறைகள் தொடர்பான சிறப்பு மையத்தின் உதவிப் பேராசிரியரான டாக்டர் பராக் பண்டிட்டிடம் பிபிசி பேசியது.

 

"கால்சியம் கார்பைடு என்பது கார்பனின் ஒரு திடமான வடிவம். அவை பழத்தில் சேர்க்கப்படும்போது, ​​அது பழத்திற்கு அடர் நிறத்தைத் தருகிறது" என்று அவர் கூறுகிறார்.

 

"இந்த ரசாயனம் திடமான பாக்கெட் வடிவில் உள்ளது. எனவே, இவற்றைப் பழத்தில் பயன்படுத்தினால், கட்டுப்பாடில்லாமல் கரைகிறது. சில பழங்களில் குறைந்த அளவிலும், இதர பழங்களில் அதிகமாகவும் கரைகிறது."

 

இத்தகைய ரசாயனங்கள் கட்டுப்பாடில்லாமல் பழங்களில் கரையும்போது ஆபத்து ஏற்படுவதாகக் கூறுகிறார் அவர் டாக்டர் பராக் பண்டிட்.

 

கால்சியம் கார்பைடு உடல்நலத்தை பாதிப்பது எப்படி?

மேற்கூறிய ரசாயனங்கள் பழங்களில் அதிக அளவில் கலக்கும்போது அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

 

ஹெல்த் ஹசார்ட் என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, “கார்பைடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அசிட்டிலீன் மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்குவதைக் குறைக்கிறது. மேலும் கால்சியம் கார்பைடு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.”

 

இதைச் சாப்பிட்ட உடனேயே வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். இது தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வலிப்பு மற்றும் கோமாவையும்கூட ஏற்படுத்துகிறது. நீண்ட காலமாக இது மனநிலையைப் பாதித்து நினைவாற்றல் இழப்பையும் ஏற்படுத்தும்.

 

இந்திய உணவு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின்படி, "கால்சியம் கார்பைடு மூலம் மாம்பழங்களைப் பழுக்க வைக்கும்போது, அது அசிட்டிலீன் வாயுவை வெளியிடுகிறது. இது ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்களை வெளியிடுகிறது."

 

"இவற்றால் தலைச்சுற்றல், அடிக்கடி தாகம், பலவீனம், விழுங்குவதில் சிரமம், வாந்தி அல்லது தோல் புண்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படும்."

 

பராக் பண்டிட்டின் கூற்றுப்படி, கால்சியம் கார்பைடு இரண்டு முக்கிய பிரச்னைகளைக் கொண்டுள்ளது: "முதலாவது, இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஆர்சனிக் சேர்மங்களைக் கொண்டுள்ளது. ஆர்சனிக் புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்புள்ள கூறுகளைக் கொண்டுள்ளது. இந்த வாயுவைப் பயன்படுத்தும் செயல்முறை கட்டுப்பாடற்றது என்பதால், பழங்களில் அதிகளவில் வெளியிடப்படும் இந்த வாயு, அதிகளவிலான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.”

 

"இரண்டாவதாக, இந்த கால்சியம் கார்பைடில் இருந்து ஹைட்ரோகார்பன் வாயு வெளியாகும்போது அது வெடித்துச் சிதறலாம்."

 

அசிட்டிலீன் என்பது வெல்டிங் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் அதிக வினைதிறன் கொண்ட பொருள். தொழில்துறையில் பயன்படும் கால்சியம் கார்பைடு ஆரோக்கியமான பழங்களைக்கூட விஷமாக்கக்கூடிய அளவிற்கான ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸைக் கொண்டுள்ளது.

 

கால்சியம் கார்பைடால் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?

இதுகுறித்துக் கூறுகையில், "சந்தையில் 99% மாம்பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுகின்றன. மாம்பழங்கள் கால்சியம் கார்பைடு அல்லது எத்திலீன் மூலம் பழுக்க வைக்கப்படுகின்றனவா என்பதுதான் வித்தியாசம்என்கிறார்.

 

இந்திய உணவு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின்படி, “உலகளவில் பாதுகாப்பான ரசாயனங்களைப் பயன்படுத்தி, செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மனித நுகர்வுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறன்றன.”

 

கால்சியம் கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களில் வெண்புள்ளிகள் உருவாகும்என்கிறார் ஜெயேஷ் வகானி.

 

"மாம்பழங்களை கால்சியம் கார்பைடு மூலம் பழுக்கவைக்கும்போது, ​​பழங்கள் ஒரே மாதிரியாக பழுத்திருக்காது. அதாவது, ரசாயனம் அதிகமாக உள்ள பகுதி மஞ்சளாகவும், ரசாயனம் குறைவாகவோ அல்லது படாமல் இருக்கும் பகுதி பச்சை நிறமாக இருக்கும். எனவே, பல மாம்பழங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. எத்திலீன் மூலம் பழுத்த மாம்பழங்கள் ஒரே மாதிரியான நிறத்தில் பழுத்திருக்கும்.”

 

"அதேபோல், கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சற்று கசப்பான சுவையுடனும், சாப்பிடும்போது நாக்கில் எரிச்சலையும் ஏற்படுத்தும்."

 

மாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி?

கால்சியம் கார்பைடின் பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக, மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்குப் பாதுகாப்பான மாற்றாக எத்திலீன் வாயுவைப் பயன்படுத்த இந்திய உணவு மற்றும் தரநிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்படி, எத்திலீன் வாயுவை 100ppm (100 μl/L) வரை பயிர், அதன் வகை மற்றும் அதன் முதிர்ச்சியைப் பொறுத்து பயன்படுத்தலாம்.

 

எத்திலீன் என்பது பழங்களில் இயற்கையாகக் காணப்படும் ஹார்மோன். இது ரசாயன மற்றும் உயிர்வேதியியல் செயல்முறைகளைச் செய்வதன் மூலம் பழங்களைப் பழுக்க வைக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்துகிறது.

 

இயற்கையாகப் பழுக்காத மாம்பழங்களில் எத்திலீனை பயன்படுத்தும்போது, அந்தப் பழத்திலேயே எத்திலீன் உற்பத்தி செய்யப்படுவதற்கு முன்னமே அதை இயற்கையாகப் பழுக்க வைக்கும்.

 

மேலும், மத்திய பூச்சிக்கொல்லிகள் வாரியம் மற்றும் பதிவுக் குழு, மாம்பழம் மற்றும் பிற பழங்களை ஒரே மாதிரியாக பழுக்க வைக்க எத்தஃபோன் 39% SL அங்கீகரித்துள்ளது.

 

"வியாபாரிகள் மாம்பழங்களைச் சரியாகப் பழுக்க வைக்க விரும்பினால், எத்திலீன் வாயுவைப் பயன்படுத்தலாம்" என்கிறார் பராக் பண்டிட். "சிலிண்டர் மூலம் கிடைக்கும் இந்த இயற்கையான வாயு, அதன் இயற்கையான வடிவிலேயே வெளியேறுகிறது. இந்த வாயுவை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான வரம்பை அரசு நிர்ணயித்துள்ளது."

 

பராக் பண்டிட்டை பொறுத்தவரை, எத்திலீன் ஒரு இயற்கை ஹார்மோன் என்பதால், அதனால் நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.

 

 

ஆபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

மாம்பழம் மற்றும் பிற பழங்களைச் சாப்பிடுவதற்கு முன் அவற்றைக் கழுவ வேண்டும் மற்றும் அதன் தோலைச் சாப்பிடக்கூடாது என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

 

வகானி கூறுகையில், “பழங்களை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும், பழங்களின் மீது ரசாயனங்கள் தெளிக்கப்படுவதால், அவற்றின் தோலைச் சாப்பிடக்கூடாது என்றும்எச்சரிக்கிறார்.

 

அதைவிடச் சிறந்த வழி, பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி, வீட்டிலேயே பழுக்க வைப்பதுதான் என்றும் கூறுகிறார்.

 

இந்தியாவில் மாம்பழ உற்பத்தி

இந்தியப் பொருளாதாரத்தில் பழங்களிலேயே, மாம்பழம் முதன்மையானது. மாம்பழ உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது.

 

இந்தியாவில், 2400 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது. அதன் உற்பத்தி 21.79 மில்லியன் மெட்ரிக் டன். இந்தியாவில் சுமார் 1,000 வகையான மாம்பழங்கள் விளைகின்றன.

 

இந்தியாவில் ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா, பிகார், குஜராத் மற்றும் தெலங்கானா ஆகியவை மாம்பழம் விளையும் முக்கிய மாநிலங்கள்.

 

நன்றி:ருச்சிதா-/-பிபிசி மராத்தி

No comments:

Post a Comment