அறிவியல்=விஞ்ஞானம்
🔆வெப்பத்தால் அதிகரிக்கும் மாரடைப்பு?
மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களில் ஒன்று மாரடைப்பு. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதீத கொழுப்பு, மது நுகர்வு ஆகியவை மாரடைப்பு ஏற்பட காரணங்களாக இருக்கின்றன. என்றாலும், அதிகரிக்கும் வெப்பநிலை மாரடைப்பு ஏற்பட எவ்வாறு காரணமாகிறது என்பது இதுவரை ஆராயப்படவில்லை.
உலக வெப்பமயமாதல் என்பது முக்கியமான பிரச்னை. பகல் வெப்பநிலையை விட இரவுநேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கும் மாரடைப்பிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆக்ஸ்பெர்க் பல்கலை கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வுக்காக மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ள 11,037 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுடைய சராசரி வயது 71. இவர்கள் வெவ்வேறு அறைகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அறை வெப்பநிலை, ஈரப்பதம், அழுத்தம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன.
வெப்பம் அதிகம் இருந்த அறைகளில் இருந்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அறிகுறிகள் தோன்றின. குளிர்ந்த அறைகளில் இருந்தவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை.
இந்த ஆய்வின் முடிவில், இரவுநேர வெப்பநிலையால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 7 சதவீதம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. பிறரைக் காட்டிலும் முதியோர்களுக்கும் பெண்களுக்கும் வெப்பநிலை அதிகரிப்பதால் பாதிப்பு தீவிரமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நகர்ப்புறங்களில் கான்கிரீட் வீடுகளில் பகல் நேரத்தில் உள்ளே வந்த வெப்பம் அவ்வளவு எளிதாக வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை. இதனால் அறைகளின் வெப்பநிலை அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் மாரடைப்பு சதவீதம் கிராமப்புறங்களை விட நகரங்களில் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
🏠வலிமை கொண்ட
கான்கிரீட்
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.எம்.ஐ.டி., பல்கலை, மணலுக்குப் பதில் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்பட்ட காபி துகள்களை கலந்து கான்கிரீட்டை உருவாக்கியது. சாதாரண கான்கிரீட்டை விட 30 சதவீதம் அதிக வலிமை கொண்டிருந்த இந்தப் புது கான்கிரீட்டில், நடைமேடைகள் கட்டிப் பார்த்து சோதித்ததில் நல்ல பலன் கிடைத்தது.
👩செயலிழப்பை கட்டுப்படுத்த..
உடல் பருமன் குறைப்பு, நீரிழிவு தடுப்பு இரண்டுக்கும் உலகம் முழுதும் பயன்பாட்டில் இருக்கும் மருந்து செமாக்ளூடைட். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், இந்த மருந்து, 'டைப் - 2' நீரிழிவால் ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்பை கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது.
🌘அணுசக்தி மூலம்
வெப்பமூட்ட…
நிலவில் ஆய்வு மேற்கொள்ள பெருந்தடையாக இருப்பது, அங்கு நிலவும் இரவு நேர குளிர்ச்சி தான். இது இயந்திரங்களை செயலிழக்கச்செய்யும். இதைச் சரி செய்ய, அணுசக்தி மூலம் வெப்பமூட்டும் முறையை, இங்கிலாந்தைச் சேர்ந்த லெய்செஸ்டர் பல்கலை வடிவமைத்துள்ளது.
👧உடல் எடையை குறைக்க…
'இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங்' எனப்படும் இடைவெளியிட்ட விரத முறை, உடலுக்கு பலவித நன்மைகள் தருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலை இந்த விரத முறையுடன் அதிகமான புரதச் சத்தை எடுத்துக் கொள்வது, உதவும் என்று கண்டறிந்துள்ளது.
🦠உற்பத்தியை அதிகப்படுத்த…
'மைக்ரோ ஆல்கே' எனப்படும் நுண்பாசிகள் புரதச்சத்து மிக்கவை; உணவாகவும், பயோ எரிபொருள் உருவாக்கவும் பயன்படுபவை. நார்வே நாட்டைச் சேர்ந்த NORCE ஆய்வு மையம், பூச்சிகளின் கழிவைக் கொண்டு நுண்பாசிகளின் உற்பத்தியை அதிகப்படுத்தலாம் என்ற ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
🦷புதிய பற்களை முளைக்க வைக்கலாம்!
நமக்கு இரு வகையான பற்கள் உள்ளன. பச்சிளம் குழந்தையாக இருக்கும்போது முளைத்து, சிறுவராகும் போது உதிர்ந்து விடுபவை பால் பற்கள் எனப்படுகின்றன. அதற்கு பின் வளரும் நிரந்தர பற்கள் முதிய வயது வரை இருக்கும்.
அரிதாக சிலருக்கு பிறவி குறைபாடால் ஏதேனும் சில பல் அல்லது நிரந்தர பற்கள் வளராமல் இருக்கலாம். சிலருக்கு ஏதேனும் விபத்து காரணமாக பற்கள் விழுந்திருக்கலாம்.
இப்படியாக பற்கள் இல்லாதவர்களுக்கு இதுவரை பரவலான தீர்வு வழங்கப்படவில்லை. செயற்கை பற்கள் முதலிய புதிய தீர்வுகள் இருந்தாலும் கூட, அவை இயற்கை பற்கள் போல் இருப்பதில்லை.
புதிதாக பற்களை வளர வைக்கும் வழியை விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வந்தனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த க்யோடோ மருத்துவப் பல்கலை, புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
நம் உடலில் USAG -- 1 எனும் மரபணு புரதம் தான் பற்களின் வளர்ச்சியை தடை செய்யும். இந்த மருந்து, USAG -- 1 புரதத்தை செயலிழக்கச் செய்கிறது. இதனால், BMP எனும் புரதம் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, இயற்கையாக பற்களை முளைக்கச் செய்கிறது.
இந்த மருந்து நம்மைப் போலவே USAG -- 1 புரதத்தை உடைய எலிகள், பெரர்ட் (ஒரு பாலுாட்டி) ஆகியவற்றில் சோதனை செய்யப்பட்டபோது, அவற்றுக்கு பற்கள் முளைத்தன. இதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் வரும் செப்டம்பர் 2024 முதல் ஆகஸ்ட் 2025 வரை, மனிதர்களுக்கு இந்த மருந்தை தந்து சோதிக்க உள்ளனர்.
அதன்படி முதலாவதாக ஒரே ஒரு பல் மட்டும் இல்லாத 30 முதல் 64 வயதுடையவர்கள் மட்டும் சோதிக்கப்படுவர். அடுத்த கட்டமாக, நான்கு பற்கள் இல்லாத 2 முதல் 7 வயதுடைய குழந்தைகளுக்கு மருந்து தரப்படும்.
இவ்வாறு படிப்படியாக சோதிக்கப்பட்டு, 2030ம் ஆண்டிற்குள் இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment