நீரிழிவு நோய் பச்சிளம் குழந்தைக்கும் வரலாம்

- அறிகுறிகளும் சிகிச்சையும்

பெரியவர்கள், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. அதுகுறித்த விழிப்புணர்வும் பரவலாக காணப்படுகின்றது. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

 

குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அதுபல தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

குழந்தைகளுக்கு எதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது? அதற்கான அறிகுறிகள் என்ன? அதனை தடுக்க முடியுமா? சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.


டைப் 1 நீரிழிவு நோய்

குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுவது டைப் 1 நீரிழிவு நோய். உடல் செல்களுக்கு குளுக்கோஸ் செல்ல உதவும் இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதுதான் நீரிழிவு நோய். அந்த இன்சுலின் ஹார்மோன் கணையத்தால் உற்பத்தி செய்யப்படாத நிலையே டைப் 1 நீரிழிவு நோய்.

பெரியவர்கள், இளம்பருவத்தினருக்கு ஏற்படுவது டைப் 2 நீரிழிவு நோய். அது பெரும்பாலும் வாழ்வியல் முறைகள், மரபியல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றன. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவு நோய் எவ்வித காரணங்களும் இன்றி, தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படுகிறது என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார்.

டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதால் இது பிறப்பில் ஏற்படும் நோய் என கருதக்கூடாது. குழந்தைப்பருவத்தில் ஒரு வயது முதல் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் இது ஏற்படும். இதனால், கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்கள் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரப்பு நின்றுவிடும். எந்த வைரஸ் தொற்று காரணமாகவும் இது தூண்டப்படலாம்என விளக்குகிறார் அருண்குமார்.

 

முக்கிய அறிகுறிகள்

இந்த டைப் 1 நீரிழிவு நோய் பெரியவர்களுக்கும் வரலாம் என்று மருத்துவர் அருண்குமார் கூறுகிறார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் 2022-ம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட சுமார் 95,000 குழந்தைகள் இத்தகைய டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவுக்கு முக்கியமான சில அறிகுறிகள் உண்டு.

👤பாலியூரியா - அடிக்கடி சிறுநீர் கழித்தல்

👤பாலிடிப்சியா - அதிக தாகம் எடுத்தல்

👤பாலிபீஜியா - அதிகமாக பசி எடுத்தல்

இவைதவிர, அதிகளவில் உணவு உட்கொண்டாலும் எடை இழப்பு அதிகமாக ஏற்படும். பிறப்புறுப்பில் தொற்று நோய்கள் எளிதாக ஏற்படும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்நோய் கண்டுபிடிக்கப்படுவதில்லை,” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 

டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ்

ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படாதபோது, இதனால், டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்ற தீவிர நிலை ஏற்படுவதாக அவர் எச்சரிக்கிறார்.

டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்பது, சர்க்கரை அளவு அதிகமாகி, அதனால் ரத்தத்தில் அமிலம் அதிகமாகி பயங்கரமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோமா நிலை ஏற்படும் என்று அவர் கூறுகிறார். பெரும்பாலும் இத்தகைய தீவிர நிலையில் தான் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாகவும் இதில் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர் அருண்குமார் எச்சரிக்கிறார்.

ஒரு குழந்தைக்கு டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் ஏற்படும்போது, அவசர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றி, அதன் பின்னரே இன்சுலின் சிகிச்சை தொடங்கப்படும். தீவிரமான பிரச்னைகளின் போது குழந்தையை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படலாம்என்கிறார் அவர்.

குழந்தைகளுக்கு மூன்று மாதங்களில் 5% எடை இழப்பு ஏற்படுகிறது என்றால் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

டைப் 1 நீரிழிவு நோயை தடுக்க முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து இன்சுலின் சிகிச்சை எடுத்தால் மற்ற குழந்தைகளை போலவே ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் அக்குழந்தைகள் வாழ முடியும் என நம்பிக்கையூட்டுகிறார் மருத்துவர் அருண்குமார்.

உலக சுகாதார மையத்தின் தகவலின்படி, 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 90 லட்சம் பேர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையானோர் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர். டைப் 1 நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணமோ அல்லது அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளோ தெரியவில்லை.

 

டைப் 1 நீரிழிவு நோய்க்கு என்ன சிகிச்சை வழங்கப்படும்?

இன்சுலின் செலுத்துவதுதான் ஒரே தீர்வு. அதன் அளவு ஒவ்வொரு குழந்தையின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர்.

டைப் 1 நீரிழிவு நோயில் இன்சுலின் சுரப்பது சுத்தமாக இருக்காது. அப்படிப்பட்ட சமயத்தில் இன்சுலின் கொடுத்தால்தான் அந்த குழந்தைகள் உயிர்வாழ முடியும்என்கிறார், மருத்துவர் சந்திரசேகர்.

 

குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வராதா?

மாறிவரும் வாழ்வியல் முறைகள், உடல் பருமன், மனச்சோர்வு காரணமாக, 10-12 வயது குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதாக மருத்துவர் சந்திரசேகர் கூறுகிறார்.

இன்சுலின் எதிர்ப்பு தன்மை காரணமாக பெரியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வாழ்வியல் காரணிகள், மரபியல் காரணிகளால் இது ஏற்படும். சமீப காலமாக 10-12 வயது உடல் பருமன் கொண்ட குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சரியான உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு காரணங்கள்என்கிறார் அவர்.

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் எதிர்காலத்தில் வரலாம் என்று கூறும் அவர், தற்போது அத்தகைய குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே டைப் 2 நீரிழிவு நோய் வந்துவிடுவதாக கூறுகிறார்.

டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கக் குழந்தைகளின் உடல் எடையை கண்காணிக்க வேண்டும், 9-11 வயது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனைகள் எடுக்கப்பட வேண்டும் என கூறுகிறார், மருத்துவர் சந்திரசேகர்.

டைப்2 நீரிழிவு ஏற்படும் குழந்தைகளுக்கு மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

இதுதவிர, பிறக்கும் குழந்தைகளுக்கு நியோநாட்டல் நீரிழிவு நோய் மிக அரிதாக ஏற்படும் என்று கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர். “இது குழந்தை பிறந்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ஏற்படலாம். மரபணுக்களில் ஏற்படும் ஒரு குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பீட்டா செல்களில் சுரப்புகள் மாறி, மரபணுக்களில் ஏற்படும் குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இது டைப் 1 நீரிழிவு நோய் கிடையாதுஎன்கிறார் அவர்.

நன்றி :பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment