இரத்தம் எடுக்கும் நுண் ஊசி
உடல் பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரிகளை எடுக்க
ஊசிகளே பயன்படுகின்றன. பலருக்கு ஊசி என்றால் பயம். இதனால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த
சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் அட்டையின் பற்கள் போன்ற நுண் ஊசிகளை உடைய கருவியை உருவாக்கி
உள்ளனர். இது வலி இல்லாமல் ரத்தத்தை சரியாக உறிஞ்சும்.
கோபத்தினால் இதயம் பாதிப்பு
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அமைப்பு 280 பேரை
வைத்து மேற்கொண்ட ஆய்வில், அதிகமாகக் கோபப்படும் போது ரத்த நாளங்கள் தொடர்ந்து வேகமாக
இயங்குவதால் அவற்றுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதில்லை என்றும் இதனால் தான் இதயம் பாதிக்கப்படுகிறது
என்றும் கண்டறிந்துள்ளனர்.
அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய
உலகின் 15 சதவீத மின் தேவையை நீர் மின் ஆற்றல் தான்
பூர்த்தி செய்கிறது. ஆனால் இதை அமைக்க அதிக இடம் தேவை.
சாதாரண நீருக்குப் பதிலாக R19 தாதுப் பொடி கலந்த
நீரைப் பயன்படுத்தினால் வழக்கத்தை விடக் குறைந்த இடத்திலேயே 2.5 மடங்கு அதிக மின்சாரத்தை
உற்பத்தி செய்ய முடியும். இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதை நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர்.
எளிதில் மட்கும் பிளாஸ்டிக்
சில வகை பாக்டீரியாவின் விதைகளை (ஸ்போர்ஸ்), பிளாஸ்டிக்
தயாரிப்பின் போது சேர்த்தால் அவை மண்ணில் புதைந்ததும் பாக்டீரியாவின் உதவியால் எளிதில்
மட்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிருமி கொல்லிக் கண்ணாடி
பல மனிதர்கள் வந்து செல்லும் இடங்களில், குறிப்பாகத் தொடும் இடங்களில் அதிகமான கிருமிகள் இருக்கும். ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவவும் செய்யும்.
பொது இடங்களில் வைக்கும் தொடுதிரைகளை அழுக்கான கைகளால் பலரும் தொடுவதால், அதில் நிறைய கிருமிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்தக் கிருமிகளைக் கொல்ல தாமிரத்தைப் பயன் படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தாமிரத்திற்கு கிருமிகளைக் கொல்லும் தன்மை உண்டு. இதனால் தான், மருத்துவமனைகளில் கட்டில், கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை தாமிரத்தில் செய்யப்படுகின்றன.
ஆனால், காட்சி ஊடுருவும் திரைகள் மீது தாமிரத்தை இதுவரை யாரும் பயன்படுத்தியதில்லை. ஏனெனில், தாமிரம் ஒளி ஊடுருவலைத் தடுக்கும், மின்சாரத்தைக் கடத்தும். இதனால் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஐ.சி.ஆர்.இ.ஏ., (ICREA) ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒளி ஊடுருவக்கூடிய நானோ தாமிர பரப்பை (Transparent nanostructured copper surface - TANCS) உருவாக்கி உள்ளனர்.
விஞ்ஞானிகள் முதலில் 3.5 நானோ மீட்டர் அடர்த்தி மட்டுமே கொண்ட தாமிரப் பட லத்தை கொரிலா வகை கண்ணாடி மீது படிய வைத்தனர். பின்பு அதை 10 நிமிடங்கள் 390 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு சூடு படுத்தினர். ஆறவைத்த பின்னர் சிலிகான் டை ஆக்ஸைட், ப்ளூரோசிலேன்ஸ் ஆகியவற்றை மெல்லிய படலங்களாகப் படிய வைத்தனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடி மீது 'ஸ்டஃபைலோகாகஸ் ஏரஸ்' எனும் பாக்டீரியாவைப் பரப்பினர்.
இரண்டு மணி நேரத்தில், 99.9 சதவீத பாக்டீரியா இறந்திருந்தது. இரண்டு ஆண்டுகள், இந்தக் கண்ணாடியைத் தினமும் இருமுறை துடைத்துப் பயன்படுத்தினாலும் இதன் கிருமி கொல்லும் தன்மை குறையாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மருத்துவம் அறிந்த மனித குரங்கு
மனிதர்களாகிய நமக்கு நோய் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுகிறோம். விலங்குகளுக்கு நோய் வந்தால் என்ன செய்யும்? வீட்டு விலங்குகள் என்றால், அவற்றை வளர்ப்பவர்களே, நோயைக் கண்டுபிடித்து, கால்நடை மருத்துவரை அணுகி சரி செய்துவிடுவர். ஆனால் வன விலங்குகள் என்ன செய்யும்?
இந்த சுவாரசியமான கேள்விக்கு விடை தருகிறது சமீபத்திய நிகழ்வு. தென்கிழக்கு ஆசிய நாடான சுமத்ராவில் வாழும் ஒருவகை மனித குரங்குகள் ஒரங்குட்டான்கள். அருகி வரும் இவற்றை கவனிப்பதற்காக தேசியப் பூங்காக்கள், சரணாலயங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
அப்படியான ஓர் ஒரங்குட்டான் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொண்டதைப் படங்கள், வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர் வன அதிகாரிகள். இந்தக் குரங்கிற்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதற்குப் பின் சில தினங்கள் இந்தக் குரங்கு லியான் வைன் (Liana vine) எனும் தாவரத்தின் இலைகளைப் பறித்து, வாயில் மென்று அதன் சாற்றை முகத்தில் காயம் பட்ட இடத்தில் தடவிக் கொண்டது.
இந்த தாவரத்தின் இலை நீண்ட காலமாக மனிதர்களால் மூலிகையாகப் பயன்பட்டு வருகிறது. அதோடு இது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளைக் கொல்லும் தன்மை உடையது என்பதை நவீன விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது. மருந்திட்ட சில நாட்களிலேயே, குரங்கின் காயமும் குணமானது.
ஒரு விலங்கு தனக்குத் தானே மருந்திட்டு நோயைக் குணப்படுத்திக் கொள்வதைக் காண்பது இதுவே முதன்முறை என்று வனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், விஞ்ஞானிகளோ, குரங்குகளுக்கு மூலிகைகளைப் பற்றிய அறிவு உண்டு என்பதற்கு ஆதாரமாக பல நிகழ்வுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சொல்கின்றனர்.
சிம்பன்சி குரங்குகள், குடற்புழுக்களை நீக்க கசப்பான மூலிகைகளை உட்கொள்வதும், சில ஒரங்குட்டான்கள் இஞ்சி இலைகளின் மருத்துவத் தன்மைகள் அறிந்தே உட்கொண்டதும் இதற்கு முன்பே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment