இலங்கையின் யாழ்பாணத்தில் ஒரு அமைதியான கிராமத்தில் நன்முகை என்ற ஒரு இளம் பெண் கனவுகள் நிறைந்த இதயத்துடன் உயர் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஆசிரியர் ஆகும் எண்ணத்துடன் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று வந்தார். நவம்பர் 28, 2022 அன்று யாழ்பாணத்தை ஆண்ட இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் தேசிய கல்வியியற் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது. சங்கிலிய மன்னனின் குடும்பப்படத்தை சித்திரத்துறை மாணவ ஆசிரியர்களின் மூலம் கல்லூரியின் சித்திரத்துறை விரிவுரையாளர் நெறிப்படுத்தியிருந்தார். அதேவேளை கல்லூரியின் நுழைவாயிலில் தனிக்கருங்கல்லால் ஆன 13.5 அடி சங்கிலியன் உருவச்சிலை இருப்பதும் குறிப்பிடத் தக்கது. அன்று மாலை கலை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது. அதில் நன்முகையின் பரதநாட்டியமும் இசை கச்சேரியும் இருந்தது. அவள் இப்ப இறுதியாண்டு மாணவி. அவள் மேடையில் ஏறுகையில் அவளுடைய திராட்சை விழிகள் நம்பிக்கையுடன் பிரகாசித்தன, அவளுடைய சிரிப்பு ஒரு மென்மையான மெல்லிசையாக எதிரொலித்தது.
சதிராடும் அவளின் கண்களுக்கு முன்பு - வாழ்வில் சற்றும் சளைத்ததில்லை அவளின் இதழ்கள், மதியையும் மயக்கும் அளவில் - அவளின் சிவந்த உதட்டில் இருந்து வரும் பாடல் வரிகள் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டன. அப்படி ஒரு பாடலை தானே இயற்றி அங்கு பாடினாள். முன் வரிசையில் இளம் டாக்டர் இமையாளன் தலைமை விருந்தினராக அங்கு வீற்றிருந்தான். அவன் கண்கள் அவளையே பார்த்தபடி இருந்தது. “புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமலம் மலர்ந்து, பசும்பொற் கொடி நின்றது போல" அவனுக்கு அவள் தெரிந்தாள். ஆமாம் கூந்தலைச் சுமந்து, பிறை போன்ற நெற்றியை கொண்டு, போரிடும் வில் போன்ற புருவத்தை உடைய, கயல் மீன் போன்ற கண்ணுடன், தாமரை முகத்தாள் மலர்ந்து தூய பொன்னாலான கொடி நின்றது போல அவன் மனதில் அவள் நின்றாள். அவன் சற்று தன்னை இழந்து தடுமாறினான். அவன் வாய் "அஞ்சனம் தீட்டிய விழிகள், என்னை அடிமை ஆக்கிடும் வழிகள், தஞ்சம் அடையத் துடிக்கும் என்னை, வஞ்சம் தீர்க்க கொஞ்சும் இதழ்கள், மஞ்சத்தில் இல்லை சொர்க்கம், அவளின் மை தீட்டிய விழிகளில் ... " என தன்பாட்டில் முணுமுணுத்துக்கொண்டு இருந்தது.
வசீகரத்தையும் கவர்ச்சியையும் வெளிப்படுத்திய இமையாளனை அவளின் கண்களும் கொஞ்சம் மேய்ந்தன. என்றாலும் அவள் அதற்குமேல் ஒரு கற்பனையும் செய்யவில்லை. பொதுவாக பெண்களின் அடி மனதில் ஒரு ஏக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும், ஆனால் அதை வெளியில் யாரும் பார்த்து விட கூடாது என்பதில் பெண்கள் சர்வ எச்சரிக்கையாக இருப்பார்கள். உண்மையில் ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்பதை காட்டிலும் பெண்கள் தான் ஆதிக அளவில் நோட்டம் போடுவதாக ஒரு உளவியல் சொல்கிறது. அதிகமாக அச்சம் மடம் நாணம் ஒருவேளை வெளிப்படையாக சிந்திக்க தடுத்து இருக்கலாம்? அல்லது நீ பெண் பெண் என்று வீட்டில் சொல்லி சொல்லி வளர்த்த கட்டுப்பாடாக இருக்கலாம்? அவளின் வீட்டைச் சுற்றியுள்ள பசுமையான நிலப்பரப்புகளைப் போலவே, பழக்கவழக்கங்களும் மரபுகளும் பாரம்பரிய குடும்பம் ஒன்றில் பிறந்த அவளிடம் ஒட்டியிருந்தன.
ஒருகிழமைக்கு பின், நன்முகையின் வீட்டுக்கு இமையாளனின் பெற்றோர் பெண்கேட்டு வந்தனர். நன்முகையின் பெற்றோர் இப்படி ஒரு வரன் தங்கள் வீடு தேடிவரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவர்கள் மிக மிக சந்தோசமாக ஏற்றுக்கொண்டனர். இமையாளன் ஒரு பிரசித்தி பெற்ற மருத்துவர் மட்டும் அல்ல, ஒரு விளையாட்டு வீரரும் கூட. அவனின் அப்பா ஒரு பெரும் செல்வாக்கு உள்ள செல்வந்த வர்த்தகர். "அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங், கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே, கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ, மானார் விழியார் மனம்" என பார்ப்பதற்கு அருமையான அத்தி மலரும், காக்கையின் வெள்ளை நிறமும், ஒலிக்கின்ற கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும், ஒருக்கால் பார்க்க இயன்றாலும், பெண்களின் மன நிலையை நம்மால் காண முடியாது என ஒரு நீதி வெண்பாப் பாடல் கூறினாலும், நன்முகை, மனம் திறந்து வெளிப்படையாகவே தன் மனநிலையை உறுதியாக தெரியப் படுத்தினாள்.
நன்முகை, இமையாளன் இருவருக்கும் பெற்றோர்கள் வாழ்த்த, ஊரார் போற்ற, நண்பர்கள் சூழ மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுடன் திருமணம் கொண்டாடப்பட்டு நன்முகையும் இமையாளனும் ஆழ்ந்த காதலில் வாழ்வை ஆரம்பித்தார்கள். அவர்களின் ஆரம்ப நாட்கள் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான கனவுகளை நெய்ததுடன், அவர்கள் புது வீட்டைக் கட்டி, தங்கள் அன்பின் வண்ணங்களால் வர்ணம் பூசி, எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களைப் அங்கு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றிப், பொன் எழில் பூத்து புது வானில் சிறகை அடித்து பறந்தனர். ஆனால் காலப்போக்கில், அவர்களின் திருமணத்தில் ஒரு விரிசல் தோன்றத் தொடங்கியது.
கணவன், மனைவி இருவருமே ஒருவொருக்கு ஒருவர் மதிப்பளித்து, அன்போடும், அர்ப்பணிப்போடும் வாழ்ந்தால் இல்லறம், நல்லறமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும் பெற்றோர்கள், உறவினர்களிடம் இருந்து தனிக்குடித்தனம் தூரப் போனபின், தாங்களே உடனுக்குடன் முடிவு எடுப்பதாலும் சிலவேளை விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் சிக்கல் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். அதுமட்டும் அல்ல, இன்று சமுதாயத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளில் தம்பதியினரின் கருத்துவேறுபாடும் ஒன்றாகும். வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல், போலி வாழ்வு வாழ்ந்து வாழ்வை வீணாக்குபவர்களை இன்று காணக்கூடியதாக உள்ளது. அதற்காக எல்லா நேரமும் சமாளித்து போகவேண்டும் என்று அர்த்தம் இல்லை.
எமது சமுதாயத்தில் குடும்பம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பெண்ணுக்கு அவளது மரியாதை மனைவியாகும் போதும், தாய் ஆகும் போதும் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது சரியான கணவனை அடையும் பொழுது தான். இமையாளனின் வேலை அவரை நீண்ட நேரம் வேலை செய்ய வைத்தது, நன்முகையை வீட்டில் தனியாக விட்டுவிட்டார். ஆனால் அவள் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. இளம் தம்பதியராக, காதலராக இரண்டு மூன்று ஆண்டுகள் அனுபவித்தபின், தாயாகும் அவளின் ஆரம்ப எண்ணம் மேல் தான் கோபம் வந்தது. ஒரு குழந்தை இருந்து இருந்தால் அது அவளின் தனிமையை குறைப்பதாகவும் ஆறுதலாகவும் இருந்து இருக்கும். காலப்போக்கில் அவர்களுக்கிடையே உள்ள தூரம் வளர்ந்தது, விரைவில், தவறான புரிதல்கள் உறவில் ஊடுருவத் தொடங்கின.
நீண்ட வேலை, நேரம் சென்று வீடுவருதல், களைப்பு போன்றவற்றால் இமையாளன் நன்முகையுடன் தனது துணைக்கென ஒரு நேரம் சரியாக ஒதுக்குவது இல்லை. அவன் நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல வசதி, சமூகத்தில் நல்ல அந்தஸ்து. அத்தனையும் அவளும் அனுபவிக்கக் கூடியதாக இருந்தது. என்றாலும் ஒரு தனிமை அவளை வாட்டிக்கொண்டே இருந்தது. அவர்கள் இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசுவது குறைந்து கொண்டே போனது. இங்கு உணர்வுகளுக்கோ உணர்ச்சிகளுக்கோ உறவுகளுக்கோ முக்கியத்துவம் இன்றி போகத்தொடங்கியது.
நன்முகை அவனுக்கு பிடித்தமான உணவைச் சமைத்து, தன்னை அலங்காரம் செய்து அவன் வேலையால் திரும்பி வரும் பொழுது ஆவலுடன் காத்திருந்து தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருக்க தன்னால் இயன்றவரை முயன்றாள். இருப்பினும், இமையாளன் தனது வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவராக சில பல வேளை, நன்முகையை புறக்கணித்து விடுவான். அதனால் நன்முகை விரக்தியின் விளும்புக்குப் போகப்போக அவளிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இப்ப அவள் அவனுக்காக காத்திருப்பது இல்லை. உணவை சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு நேரத்துடன் படுத்துவிடுவாள் அல்லது தன் நண்பிகளுடன் பொழுதுபோக்குவாள். அவன் அவளுடன் தன் நேரங்களைப் பொறுத்து கொஞ்சி குலாவி கதைக்க வந்தாலும் அவள் அவனை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க தொடங்கினாள். அவளின் கோபம் புரிகிறது. அது எங்கே போகும் என்பதை அவள் உணரவில்லை. அவள் நினைத்தது எல்லாம், இப்படி செய்தால், அவன் தன் பிழையை உணர்ந்து, வீட்டிலும் தன்னிலும் ஒரு குறிப்பிடட நேரமாவது செல்வழிப்பான் என்றே! ஆனால் அது தான் அவளின் வாழ்க்கையையே முற்றாக மாற்றி விட்டது.
உடற்கூறு ரீதியாக இமையாளனின் இந்த இளம் வயதில், நன்முகையின் புறக்கணிப்பால், ஏற்படுகிற காம உணர்வு சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறத் தொடங்கியது. அவள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது. அவன் மது, மாது இரண்டுடனும் மெல்ல மெல்ல தொடர்பை ஏற்படுத்தி கொண்டான். நன்முகையை அவன் ஏறெடுத்து பார்ப்பதும் இல்லை. ஒரு மனைவி வீட்டில் இருக்கிறாள் என்பதை மறந்தே விட்டான். என்றாலும் வேலையில் அவன் கவனம் எள்ளளவும் குறையவில்லை. அவனின் மாற்றத்தை கண்ட சமுதாயம், அவனை திட்டவில்லை. மாறாக அவளையே திட்ட தொடங்கிவிட்டது.
காலப்போக்கில், நன்முகையை வாழாவெட்டி என ஒதுக்க தொடங்கினார்கள். சிலர் பரிதாபத்தால் கிசுகிசுத்தனர், மற்றவர்கள் ஆர்வத்தால் கிசுகிசுத்தனர், ஆனால் நன்முகை கிசுகிசுக்களை பொருட்படுத்தவில்லை. கணவன் உண்மை நிலையை அறியாமல் வெறுத்து தள்ளினாலும் ஒரு பெண்ணால் வலுவாக நிற்க முடியும் என்று நம்பினாள். அவனின் அறியாமையை ஒரு காலம் நீக்க முடியும் என்றும் நம்பினாள். அவளுக்கு சமுதாய அமைப்பின் மேல் வெறுப்பு வெறுப்பாக வந்தது. ஏன் தன் மேலேயே ஒரு கோபம் வந்தது.
ஆணாதிக்கச் சமூகம் பெண்ணை எப்படிப் பார்க்கிறதோ, அப்படியே அவர்களால் உருவாக்கப்பட்ட மொழியும் பெண்ணைப் பார்க்கிறது என்று உணர்ந்தாள். பெண், திருமணமாகி கணவனால் கைவிடப்பட்டால் அல்லது ஒதுக்கப்பட்டால் ‘வாழாவெட்டி’ என்று தூற்றப்படுகிறாள். மனைவியைப் பிரிந்து வாழும் ஆடவனுக்கு இந்த அவச் சொல் கிடையாது. அது ஏன் என்று தனக்குள் வாதாடினாள். குழந்தை பெற்றுத் தராதவள் ‘மலடி’ என்று பழிக்கப்படுகிறாள். ஆனால், ஆணின் மலட்டுத்தன்மை வெளியே சொல்லப்படுவதேயில்லை. ... இப்படி அவள் மனம் எதை எதையோ அலசிக்கொண்டே இருந்தது. பத்தினி என்றால் என்ன ? அவள் தனக்குத்தானே கேள்விகேட்டாள். தன் உடல் தேவைக்கு மட்டும் அவ்வப்போது பாவிக்க, அதை ஆமோதித்து, தாலியை முத்தம் செய்து கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பத்தினி வேஷம் போட நான் தயாராய் இல்லை என்று அவளும் ஒரு எல்லைக்கு போய்விட்டாள். தன் கணவர் மௌத்கல்ய முனிவரை, நளாயினி கூடையில் சுமந்துகொண்டு போய் கணவர் விரும்பும் பெண் வீட்டில் விட்டுவிட்டு வெளியே காவல் இருந்தாளாம். அவளை பதிவிரதையாம், பத்தினியாம் ? அவளுக்கு சிரிப்பு வந்தது. அவள் அவனை விட்டு தாய் வீடு போய் அல்லது ஒரு தனி வீட்டில் இருந்து, ஒரு ஆசிரியையாக தன் பழைய கனவை நிறைவேற்றுவது என்ற முடிவுக்கு வந்து, அவன் இப்ப ஒழுங்காக வீடு வாராததாலும், துப்பரவாக கதைப்பதில்லை என்பதாலும், அதை அவனிடம் நேரடியாக கூறாமல், ஒரு கடிதம் மூலம் தெரிய படுத்தினாள்.
திருமணத்தன்று யாவரும் கூடி எதிர்பார்ப்போடும் நம்பிக்கையுடனும் புதுவாழ்வு ஆரம்பமாகும். ஆனால், பிரிந்த அன்று வாழாவெட்டி என்ற பட்டத்துடன் புறக்கணிக்கபட்ட தனி வாழ்வு ஆரம்பமாகும். சமுதாயம் குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்துவிடும். நீ ஒழுங்காக அனுசரித்து போயிருந்தால் அவன் ஒழுங்காக இருந்திருப்பான் என்ற ஆயிரம் விமர்சனங்கள் கூறும். விசேட நாட்களுக்குரிய வரவேற்பு கூட அவளுக்கு மறுக்கப்படும். சிலவேளை உறவுகள் உறவு கொள்ளக் கூட மறுப்பினர். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவளாக நிரந்தரமாக போய்விடுவேன் என்பது அவளுக்கு தெரியும். எனவே தான் விவாகரத்து கோராமல் பிரிந்து போக நினைத்தாள். திறந்த தொடர்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட புரிதல் மூலம் கட்டாயம் மீண்டும் ஒரு நாள் இணையலாம் என்பது அவளின் முடிவு. காரணம் இமையாளன் அறிவு படைத்தவன். நல்ல குடும்பத்தில் பிறந்தவன்.
இது கோபம், வெறுப்புகளால் ஏற்பட்ட ஒரு தற்காலிக மாற்றமே!
நன்றி- [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment