அறிவியல்=விஞ்ஞானம்
குளிரூட்டும் கண்ணாடி
வீடு, அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்களில் நல்ல வெளிச்சம் கிடைப்பதற்கு, செங்கல் சுவர்களுக்குப் பதிலாக கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், சிக்கல் என்னவென்றால் இவை வெளிச்சத்துடன் வெப்பத்தையும் சேர்ந்து உள்ளே கொண்டு வருகின்றன. இதற்கு தீர்வு காண, PMMM எனும் புதிய பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதை, ஒரு படலம் போல சாதாரண கண்ணாடி மீது ஒட்டினால் போதும்; வெளியிலிருந்து யாரும் உள்ளே இருப்பவற்றை பார்க்க முடியாது. சாதாரண கண்ணாடியின் ஒளி புகும் தன்மை 91 சதவீதம். ஆனால், இந்தப் படலத்தை ஒட்டினால் அது 95 சதவீதமாக அதிகரித்துவிடும். இந்தப் படலம் நுண்ணிய பிரமிட் வடிவங்களால் ஆனது என்பதால் தான் அதிகமான ஒளியை அனுமதிக்கின்றன.
இதன் அமைப்பு, வெளியில் உள்ள வெப்பத்தை உள்ளே அனுமதிக்காது. இதனால், அறையின் வெப்பநிலை வெளியில் உள்ளதை விட 6 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும்.
சாய்வான பிரமிடு வடிவத்தில் துாசுகள் ஒட்டாது என்பதால், இவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய தேவை இல்லை. ஆகவே, இவற்றை பயன்படுத்துவதால் குளிரூட்டிகள், மின்விளக்குகளின் தேவை குறையும்.
கோபத்தை குறைக்கும் கொழுப்பு!
கொழுப்பு என்றாலே உடல் நலத்திற்கு கேடானது என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால், கொழுப்பு சத்து உடல் நலத்திற்கு இன்றியமையாதது.
நல்ல கொழுப்புகளில் முதன்மையானவை 'ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள். இவை, சில சைவ உணவுகளில் உள்ளன. ஆனால், மிக அதிகமான அளவில் சில மீன்களில் உள்ளன. மீன் எண்ணெய் மாத்திரைகளில் இந்த கொழுப்பு அதிகமாக இருப்பதால் தான், அவை இதயத்திற்கு நன்மை தருபவை எனப்படுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை விஞ்ஞானிகள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, இந்த ஒமேகா 3, கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் குறைப்பதாகக் கூறுகிறது.
அளவுக்கு மீறிய கோபம், ஆக்ரோஷம் நம் உடல்நலத்தைக் கெடுக்கிறது. சில நேரங்களில் வன்முறையைத் தோற்றுவித்து, பிறருக்கு தீங்கு விளைவிக்க வைக்கிறது. இதனால் இது ஒரு சமூகப் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், அதிகளவிலான ஒமேகா 3 சத்துள்ள மீன்களை உண்பது, தற்கொலை எண்ணத்தை குறைப்பதாக ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் ஒமேகா 3 உள்ளிட்ட சில சத்துக்கள் நிறைந்த உணவு, சிறைவாசிகளுக்கு கொடுக்கப்பட்டது. இது, அவர்களிடமிருந்த வன்முறை எண்ணத்தை குறைத்தது.
பென்சில்வேனியா பல்கலை விஞ்ஞானிகள், ஒமேகா 3 மருந்தை ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தையும் சேர்ந்த பல்வேறு வயதினருக்கு கொடுத்து சோதித்தனர். ஆய்வு முடிவில், அவர்களின் ஆக்ரோஷம் குறைந்திருப்பது தெரிய வந்தது. ஒமேகா 3 மூளையின் செயல்பாடுகளை ஊக்குவித்து, நரம்பு மண்டலத்திற்கு நன்மை செய்வது தான் இதற்கு காரணம் என்பது விஞ்ஞானிகள் கருத்து.
சிகிச்சைக்குப் பயன்படுமா?
ஜெம்பர்லி எனும் புது மருந்தை 42 நோயாளிகளுக்குத் தொடர்ந்து கொடுத்ததில் அவர்களுக்கு இருந்த மலக்குடல் புற்றுநோய் சரியானது. மற்ற புற்றுநோய்களின் சிகிச்சைக்கும் இது பயன்படுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
விமானத்தில் மது
நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்கள் மிக உயரமாகப் பறக்கின்றன. இதனால், பயணியரின் உடலில் ஆக்சிஜன் குறைகிறது. அத்தகைய சூழலில் விமானத்தில் தரப்படும் மதுவை அருந்துவது, இதய பிரச்னைக்கு வழிவகுக்கும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆர்.டபிள்யூ.டி.எச்., பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தனிமை-இதய நோய்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், தனிமையும் ஒருவகையில் இதய நோய்களுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. நண்பர், உறவினர்களுடன் நேரம் செலவழிப்பது இதயநோய் வரும் வாய்ப்பை 30 சதவீதம் வரை குறைக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மக்க வைக்க…
பிளாஸ்டிக் பொருட்களை மக்க வைக்கும் தன்மை புதுவகை கடல் பூஞ்சைக்கு உள்ளதை, நெதர்லாந்து கடல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பேரென்ஜியோடோன்டியம் ஆல்பம் என்ற பெயருடைய இது, முதன்முதலில் 2019 டிசம்பரில் வட பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது.
தீயவைக்கு மட்டும் தீங்கு செய்யும் மருந்து
அனைத்து பாக்டீரியாவும் நோய் ஏற்படுத்துபவை அல்ல. அவற்றுள் நம் உடலுக்குப் பல வகைகளிலும் நன்மை செய்கின்றவையும் உள்ளன. ஆன்டிபயாடிக் மருந்துகள் தீய பாக்டீரியாவை அழிக்கத் தான் தயாரிக்கப்படுகின்றன. என்றாலும் கூட, அவை சில நேரங்களில் நல்ல பாக்டீரியாவையும் சேர்த்து அழித்துவிடுகின்றன. இதனால், நம் உடலுக்குப் புதிய பிரச்னைகள் வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய் பல்கலை தீய பாக்டீரியாவை மட்டும் அழித்து, நல்ல பாக்டீரியாவைத் தாக்காத அடுத்தத் தலைமுறை ஆன்டிபயாடிக் மருந்தை உருவாக்கி உள்ளனர்.
பொதுவாக பாக்டீரியா இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கிராம் பாசிடிவ் பாக்டீரியாவில் உடலைச் சுற்றியுள்ள வெளிப் படலம் இருக்காது. ஆனால் கிராம் நெகடிவ் பாக்டீரியாவில் உள்ளே, வெளியே என இரு படலங்கள் உடலைச் சுற்றி இருக்கும். இதனால் இவற்றைக் கொல்வது கடினமாகிறது. பெரும்பாலான ஆன்டிபயாடிக் மருந்துகள் கிராம் பாசிடிவ் பாக்டீரியாவையே கொல்கின்றன. கிராம் நெகடிவ் பாக்டீரியாவைக் கொல்ல வெகுசில ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமே உள்ளன.
நம் குடலில் உள்ளவை பெரும்பான்மை கிராம் நெகடிவ் பாக்டீரியாவே. அவற்றில் ஈ கோலை, கே நிமோனியா உள்ளிட்ட பாக்டீரியா சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை. இவற்றைக் கொல்லக்கூடிய லோலாமிசின் (Lolamicin) எனும் ஆன்டிபயாடிக் மருந்தை விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
ஆய்வுக்கூடத்தில் சோதித்துப் பார்த்தபோது, இந்தப் புது மருந்து மேற்குறித்த பாக்டீரியாவில் 90 சதவீதத்தைக் கொன்றது. எலிகளின் மீது சோதித்ததிலும் வெற்றி கிட்டியது.
இந்த மருந்து மேலும் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவில் இறங்கிய சீனா
சீனாவின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எஸ்ஏ (CNSA) 2019ம் ஆண்டு Chang'e- - 5 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியது. இதைத் தொடர்ந்து உலக வரலாற்றில் முதன்முறையாக, இந்தியா நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்கியது.
சீனா Chang'e - 6 விண்கலத்தை மே 3ம் தேதி விண்ணில் செலுத்தியது. இது மே 8ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. ஜூன் 2ம் தேதி நிலவின் தென் துருவத்தில் உள்ள அபோலோ பேசின் (Apollo Basin) எனும் இடத்தில் திட்டமிடப்பட்டது போலவே தரையிறங்கியது.
இந்த விண்கலம் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென்பகுதியிலிருந்து 2 கிலோ மண்ணை ஆய்வுக்கு எடுத்து வர உள்ளது. நிலவின் நிலத்தைத் தோண்டுவதற்கு ஏதுவான இயந்திரக் கைகள் இந்த விண்கலத்தில் உள்ளன. ஜூன் 25ம் தேதி இது பூமிக்குத் திரும்பி வரும்படியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment