அறிவியல்=விஞ்ஞானம்
🚽கழிப்பறை- fப்ளஷ்
மேற்கத்திய
பாணி கழிப்பறையைப் பயன்படுத்தும்போது மூடியை மூடாமல் fப்ளஷ் செய்வதால் நுண்ணிய கிருமிகள்
வெளியே பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த கொலரடோ பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எனவே, மூடி போட்டுவிட்டு fப்ளஷ் செய்வதே சரியான முறை எனப் பரிந்துரைத்துள்ளனர்.
💊ஆஸ்ப்ரின்-புற்றுநோய்
சாதாரண
வலி, காய்ச்சலுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்து ஆஸ்ப்ரின். 4 ஆண்டுகள் 238 நோயாளிகளை
வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த மருந்து, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுத்துவதை
11 சதவீதம் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மருந்து, புற்றுநோய்க்கு எதிராகச்
செயலாற்றும் செல்களைத் துாண்டிவிடுவதே இதற்குக் காரணம்.
🪴நரம்புகளை சரிசெய்யும் இயற்கை மருந்து
பலவிதமான நோய்களுக்கு இயற்கையிலேயே மருந்து உள்ளது என்று கூறுவர். இதற்கு மேலும் ஓர் ஆதாரம் கிடைத்து உள்ளது. நரம்பு மண்டலத்தில் பொதுவாக சேதமடைந்த நரம்புகள் தாங்களே தங்களைச் சரி செய்து கொள்ளும் இயல்பு உடையவை. ஆனால், அவை பழையபடி முழுமையான செயல்பாட்டிற்கு வருவதில்லை. இதற்குக் காரணம் சரி செய்ய உதவும் ஸ்சவான் (Schwann) செல்கள் மூன்று மாதங்கள் மட்டுமே சுறுசுறுப்பாகச் செயல்படுவதும், அதற்குப் பின் மந்தமடைவதுமே ஆகும்.
இதை சீர் செய்வதற்கான மருந்துகளை உருவாக்குவதற்கு, உலகளவில் விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை செய்து வந்தனர். தற்போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோலோன் பல்கலை விஞ்ஞானிகள் ப்ளஸ்ட் திஸ்டில் (Blessed thistle) எனும் ஒருவகைச் செடியிலிருந்து எடுக்கப்படும் சிநிசின் (Cnicin) எனப்படும் மருந்து இதற்குத் தீர்வாக அமையும் என்று கண்டறிந்துள்ளனர்.
மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் வளரும் இந்தச் செடி, பாரம்பரிய மருத்துவத்தில் வயிற்று வலி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 'நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட சில நோய்களைச் சரிசெய்ய' இந்த மருந்து உதவும் என்று நவீன விஞ்ஞானம் கண்டறிந்தது.
செயற்கையாக ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட மனித, விலங்கு திசுக்கள் மீது சிநிசின் மருந்தைச் செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் நல்ல முடிவு தெரிந்தது. எலி, முயல் உள்ளிட்ட உயிரினங்கள் மீது செலுத்தியதிலும் நரம்பு பாதிப்பு சரியாவதில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. நியூரான் எனப்படும் நரம்பு செல்களின் முடிவில் ஆக்ஸான் எனும் நார் போன்ற அமைப்பு காணப்படும். இந்தகைய ஆக்ஸான் வளர்ச்சியை இந்த மருந்து ஊக்குவிக்கிறது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
🐄பசுவின் பால் தரும் தீர்வு
ஒரு நோய்க்கு பொதுவாக பலவித முறைகளில் மருந்து தரலாம். ஊசி மூலம் செலுத்துவது ஒருமுறை என்றால், வாய்வழியாகத் தருவது இன்னொருமுறை. வாய் வழியே தருவது தான் சுலபமான, அதிகம் செலவில்லாத முறை.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மருந்து செரிமான மண்டலத்தின் கடுமையான ரசாயன சூழலைக் கடந்து சென்று, குறிப்பிட்ட உடல் உறுப்பைச் சேருவதற்குள் அதன் தன்மை மாறி, வலு குறைந்துவிடக் கூடும். இதற்காகத் தான் ஊசி மூலமான மருந்து தரும் முறை பின்பற்றப்படுகிறது. குறிப்பாக ஆர்.என்.ஏ., தொடர்புடைய மருந்துகள் ஊசி மூலம் மட்டுமே தரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான் பசுவின் பாலில் உள்ள ஒருவித நானோ பொருளான எக்ஸ்ட்ராசெல்லுலார் வெசிகிள்ஸ், ஆர்.என்.ஏ. மருந்துகளை வாய்வழியாகத் தர உதவி செய்யும் என இங்கிலாந்தைச் சேர்ந்த கிங்ஸ் கல்லுாரி ஆய்வாளர்கள் கண்டறிந்து ள்ளனர்.
'எக்ஸ்ட்ரா செல்லுலார் வெசிகிள்ஸ்' என்பவை குறிப்பிட்ட செல்லுக்கு புரதம், கொழுப்பு, ஆர்.என்.ஏ., முதலியவற்றை அனுப்ப உதவுபவை.
இவற்றைச் சுற்றி கொழுப்புப் படலம் இருப்பதால், உடலுக்குள் உள்ள அமிலங்களால், இது பாதிக்கப்படுவதில்லை. இவை பசுவின் பாலிலும் உள்ளன. இவற்றின் மீது ஆர்.என்.ஏ.,வை ஒட்ட வைத்து, குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட எலிகள் மீது சோதித்துப் பார்த்தனர். எலிகளின் நோய் குணமாகத் துவங்கியது.
விரைவில் இந்த முறை மனிதர்களின் நோய் சிகிச்சையில் பயன்படும். பசுவின் பாலைப் பெரும்பாலான மனிதர்கள் பருகுவதால் எந்த வித ஒவ்வாமையும் ஏற்படுத்தாது என்பது கூடுதல் சிறப்பு.
🐟மீனுக்கு கிடைத்த புது உணவு
மீன்கள் மிகவும் சத்தான உணவாக அறியப்படுகின்றன. உலகின் எல்லா நாடுகளிலும் மீன்களை விரும்பி உண்கின்றனர். இந்தத் தேவையை ஈடுசெய்ய பண்ணைகளில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
இவற்றுக்கு சத்தான உணவைத் தந்தால் தான் நன்றாக வளரும். குறிப்பாகப் புரதம் அதிகளவில் தேவை. இதற்காகப் பிற மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு உணவாக்கப்படுகின்றன.
இதனால், அந்த மீன் இனங்கள் அழிகின்றன. மீன்களுக்கு மாற்றாக புரதங்களை உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நுண்ணுயிரிகளை வளர்ப்பது அதிக செலவும், கவனமும் தேவைப்படுவதாக உள்ளது.
இயற்கையாகவே புரத உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகளைக் கொண்ட பொருளை, ஆய்வாளர்கள் தேடிக் கொண்டு இருந்தனர்.
சிங்கப்பூரில் உள்ள என்.டி.யூ. பல்கலை, சோயா தயாரிப்பில் உருவாகும் கழிவுநீரில் இத்தகைய நுண்ணுயிரிகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
குறைவான பிராணவாயு அளவில், 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நுண்ணுயிரிகள், இந்த நீரில் பல்கிப் பெருகின. புரதங்களை உற்பத்தி செய்தன. ஒரு பகுதி மீன்களுக்கு சாதாரண மீன் உணவையும், மற்றொரு பகுதி மீன்களுக்கு இந்தப் புரதத்தையும் ஆய்வாளர்கள் கொடுத்து வந்தனர்.
மீன் உணவில் கிடைக்கும் அதே சத்துகள், சோயா நீரிலும் கிடைப்பதை உறுதி செய்தனர். வீணாகும் சோயா நீரை ஊட்டச்சத்து மிக்க உணவாக மாற்றியது அறிவியல் உலகில் பாராட்டைப் பெற்றுள்ளது.
தொகுப்பு:மனுவேந்தன்-செ
No comments:
Post a Comment