சிறுநீரக கல் முதல் உமிழ்நீர் கல் வரை எப்படி உருவாகிறது?

வராமல் தடுப்பது எப்படி?

மனித உடலின் பல அற்புதமான திறன்களில், கற்களை உற்பத்தி செய்யும் திறனை விசித்திரமான ஒன்று எனக் கூறலாம். சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும்.

 

ஆனால் அவற்றைத் தவிர்த்து, உடலில் வேறு கற்களும் உருவாகலாம். யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களில் அவை இருக்கலாம்.

 

உடலில் உருவாகும் இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?

 

சிறுநீரக கற்கள்

உலகில் பத்தில் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்னை உள்ளது. இரத்தத்தில் இருந்து சிறுநீரில் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கசிவதால் இது ஏற்படுகிறது. ஆக்சலேட்டுகள் என்பவை தாவரங்கள் மற்றும் மனிதர்கள் இரண்டிலும் காணப்படும் இயற்கை சேர்மங்கள் ஆகும்.

 

அதிக அளவு கால்சியம் மற்றும் ஆக்சலேட் கசிவு காரணமாக, அவை திட நிலையை அடைந்து, ஒரு கல் வடிவத்தைப் பெறும். சிறுநீரக கற்களின் அளவும் மாறுபடலாம். இவை ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலத்திலிருந்து ஒரு சென்டிமீட்டர் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.

 

கற்கள் அசாதாரண வடிவத்திலும் இருக்கலாம். ஆனால் சிறுநீரக கால்வாயின் (calyces) கிளைகளுக்குள் கற்கள் உருவாகத் தொடங்கினால், அது மானின் கொம்பு வடிவத்தையும் பெறலாம். இது ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் (staghorn calculus) என்று அழைக்கப்படுகிறது.

 

கற்கள் எப்போது பிரச்னையாக மாறுகிறது?

சிறுநீரக கற்கள், சிறுநீர்க் குழாய்களின் பாதையைத் தடுக்கும் போது பிரச்னை ஏற்படலாம். அதாவது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை எடுத்துச் செல்லும் இரண்டு குழாய்களில் ஏதேனும் ஒன்றைத் தடுக்கும்போது இது நடக்கலாம்.

 

இதனால், சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், கீழ் முதுகில் கடுமையான வலியையும் பாதிக்கப்பட்ட நபர் அனுபவிக்கலாம்.

 

இதன் காரணமாக, சிறுநீரகத்தைச் சுற்றி சிறுநீர் குவியத் தொடங்குகிறது அல்லது சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

 

பித்தப்பையில் கற்கள் உருவாவதும் ஒரு பிரச்னையாகும், இவை பித்தப்பை கற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 

பித்தப்பையில் இருந்து குடலுக்கு பித்தநீரைச் எடுத்துச் செல்லும் குழாய்களில் அல்லது பித்தப்பைக்குள் இந்த கற்கள் உருவாகின்றன.

 

பித்தநீரில் உள்ள கொழுப்பு அல்லது நிறமிகள் காரணமாக பித்தப்பை கற்கள் உருவாகலாம். அவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம்.

 

சிறுநீரக கற்களைப் போலவே, பித்தப்பைக்குள் (பித்த நாளம் போன்றவை) ஒரு குறுகிய இடத்தில் பித்தப்பைக் கற்கள் சென்றால், அவை வயிற்று வலி, தொற்று மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

 

கல் உருவாவதற்கான பிற காரணங்கள்

இவை தவிர, வெவ்வேறு உடல் திரவங்களாலும் கற்கள் உருவாகலாம். உதாரணமாக, உமிழ்நீர் கற்கள் அதாவது உமிழ்நீரில் உள்ள கற்கள்.

 

காதுகள், தாடை மற்றும் நாக்கின் கீழ் உள்ள சுரப்பிகளால் உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. உமிழ்நீர் வாய்க்குள் விழுந்த பிறகு, உணவை ஈரமாக்கி, ஜீரணமாக்கும் செயல்பாட்டில் அது பெரும் பங்கு வகிக்கிறது.

 

கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் போன்ற பல்வேறு தனிமங்களில் இருந்து உமிழ்நீர் கற்கள் உருவாகலாம். உமிழ்நீர் வாய்க்கு வரும் குழாயில், உமிழ்நீர் கல் உருவானாலோ அல்லது சிக்கிக்கொண்டாலோ, அது வாயில் உமிழ்நீர் விழுவதை நிறுத்தலாம்.

 

இது நடந்தால், ஒரு நபருக்கு கடுமையான வலி மற்றும் வாயில் வீக்கம் ஏற்படலாம். உமிழ்நீர் நின்றுவிடுவதால் உமிழ்நீர் சுரப்பியில் தொற்று ஏற்பட்டால், அது வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதற்கும் வழிவகுக்கும்.

 

டான்சில் கற்கள்

இது தவிர டான்சில்களிலும் கற்கள் காணப்படும்.

 

தொண்டையின் அடிப்பகுதியிலும் பின்புறத்திலும் டான்சில் சுரப்பிகள் அல்லது அடிநாவு சுரப்பிகள் அமைந்துள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லிம்பாய்டு திசுக்களின் குழுக்கள். ஆனால் அவை மீண்டும்மீண்டும் வீக்கமடைந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம் என்பது தான் நகைமுரண்.

 

டான்சிலில் க்ரிப்ட்ஸ் (Crypts) என்று அழைக்கப்படும் குழிவுகள் (Cavities) உள்ளன. சில நேரங்களில் இவை உணவு மற்றும் உமிழ்நீரைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இதனால் டான்சில் கற்கள் அல்லது டான்சிலோலித்ஸ் உருவாகும்.

 

இந்த கற்கள் முதலில் மென்மையாக இருக்கும், ஆனால் காலப்போக்கில் அவை கடினமாகிவிடும். இதன் காரணமாக, வாய் துர்நாற்றம் மற்றும் அடிக்கடி தொற்றுநோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 

இவை மட்டுமல்லாது உடலில் உள்ள வேறு சில பொருட்கள் கெட்டியாகி கற்களாக மாறிவிடக்கூடும். உதாரணமாக, சில சந்தர்ப்பங்களில், மனித மலம் அவ்வாறு மாறக்கூடும். அத்தகைய நிலை கொப்ரோலைட் (coprolite) என்று அழைக்கப்படுகிறது.

 

இது தவிர தொப்புளில் சேரும் தோல் பகுதிகளும் கெட்டியாகி கற்கள் போல் ஆகிவிடும். இந்த கற்கள் ஓம்பலோலித்ஸ் (omphalolyths) என்று அழைக்கப்படுகின்றன.

 

கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இவற்றில் மிக முக்கியமான விஷயம் உடலில் சரியான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். சரியான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்கிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் வாயில் பாக்டீரியாக்கள் உருவாகாமல் தடுக்கிறது.

 

இந்த முறையால் உடலில் பல வகையான கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

 

டான்சில் கற்களைத் தவிர்க்க, வாயை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். வழக்கமான பல் துலக்குதல் மூலம் அதன் ஆபத்தை குறைக்கலாம்.

 

இவை தவிர, உணவுமுறையும் முக்கியமானது, குறிப்பாக பித்தப்பைக் கற்களுக்கு. கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் உடல் பருமனும் உடலில் கற்களை ஏற்படுத்தலாம்.

 

ஆனால் நீங்கள் விரும்பினாலும் கூட தவிர்க்க முடியாத பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

 

பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்க உதவும்.

 

கற்கள் தொடர்பான பிரச்னை இருந்தால் என்ன செய்வது?

ஏற்கனவே ஒருவருக்கு உடலில் கற்கள் இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. கற்கள் காரணமாக ஒருவருக்கு உடல்நிலை மோசமடைந்தால், எண்டோஸ்கோபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற வேண்டியிருக்கும்.

 

சிறுநீரகக் கல் ஏற்பட்டால், சிறுநீரகக் குழாய் வழியாக கல் சிறுநீர்ப்பையை அடைந்து உடலில் இருந்து வெளியேறும் வரை காத்திருக்கலாம்.

 

சில சமயங்களில், சிறுநீர்ப்பையில் இருந்து ஒரு கல் வெளியேறும் போது, மடுவில் கல் தாக்குவதால் மெல்லிய சத்தம் உண்டாகும்.

 

கற்களைப் பிடிக்க சிறுநீர் கழிக்கும் போது தேநீர் வடிகட்டியைப் பயன்படுத்தும்படி உங்கள் மருத்துவர் உங்களிடம் சொல்லலாம்.

 

உமிழ்நீர் கற்கள் பிரச்னையைப் பொருத்தவரை, சில சமயங்களில் எலுமிச்சையை உறிஞ்சுவது கூட நிவாரணமாக இருக்கும். உமிழ்நீர் உருவாகும் செயல்முறையை எலுமிச்சை அதிகரிக்கும். அதிக உமிழ்நீர் ஒரே நேரத்தில் உமிழ்நீர் குழாயில் வழியாக வரும் போது கல் தானாகவே வெளியேறிவிடும்.

 

இதுபோல பல்வேறு வகையான கற்களுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் எளிய அன்றாட நடவடிக்கைகளும் அவை உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

நன்றி:பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment