கிட்டப் பார்வையைப்பாதிக்கும் செல்போன்-உடல்நலம்

குழந்தைகளின் கிட்டப் பார்வையைப் பாதிக்கும் அதீத செல்போன் பயன்பாடு - தடுப்பதற்கான வழிகள்

இந்தியாவின் நகரங்களில் வாழும் மூன்றில் ஒரு குழந்தைக்கு 2030ஆம் ஆண்டுக்குள் 'மையோபியா' எனும் கிட்டப்பார்வை கண் குறைபாடு ஏற்படலாம் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

உலக அளவில் மே 13 முதல் 19 வரை கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. வளரிளம் குழந்தைகளிடையே பெருகி வரும் இந்தக் கண்சார் குறைபாடு சமீப காலமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றங்களால் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

கிட்டப்பார்வை குறைபாடு குழந்தைகளை ஏன் தாக்குகிறது? அதைத் தடுப்பது எப்படி?

மருத்துவர்கள் கூறுவது என்ன?

 

உலக கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மும்பை டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகரத்தில் வளரும் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.

 

கடந்த 1999 முதல் 2019ஆம் ஆண்டு வரை பதிவான கிட்டப்பார்வை தரவுகளின்படி, கடந்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 4.44 சதவீதத்தில் இருந்து 21.15% என்ற அளவுக்கு மும்மடங்காக உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

 

உலக கிட்டப்பார்வை நிறுவனத்தின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் 50% மையோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கும்.

 

கிட்டப்பார்வை என்றால் என்ன?

கிட்டப்பார்வை என்பது கண்களில் ஏற்படும் குறைபாடாகும். இதனால் தூரத்தில் இருக்கும் அனைத்தும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மங்கலாகத் தெரியும்.

 

அகர்வால்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் அக்சயாவின் கூற்றுப்படி, இந்தக் குறைபாடு பிறப்பில் இருந்து 18 வயது வரை உள்ள குழந்தைகள் முதல் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படக் கூடியது.

 

"சமீபத்தில் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பள்ளிக் குழந்தைகள்தான். அதற்குக் காரணம் சமீபத்தில் கோவிட் பெருந்தொற்று முடக்கத்திற்குப் பிறகான வாழ்க்கைமுறை மாற்றங்களே" என்று கூறுகிறார் அக்சயா.

 

எழும்பூர் அரசு கண் மருத்துமனையின் முன்னாள் இயக்குநரும், கண் மருத்துவருமான வஹீதா நஷீர், கோவிட் காலகட்டத்தில் குழந்தைகள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து அதிகமாக டிஜிட்டல் ஸ்க்ரீன்களை பயன்படுத்தியதால் மையோபியா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று கூறுகிறார்.

 

குறிப்பாக கோவிட் தொற்றுக்குப் பிறகு அதிகரித்துள்ள ஆன்லைன் கல்வி முறை மற்றும் இதர டிஜிட்டல் ஸ்க்ரீன் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் வளரிளம் பருவத்தினரிடையே இந்தக் குறைபாடு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் அக்சயா.

 

கிட்டப்பார்வையின் வகைகள்

'ஸ்கூல் மையோபியா' என்றழைக்கப்படும் பள்ளிக்குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை பாதிப்பானது, அவர்களுடைய கண்களின் பின்பகுதி வேகமான முறையில் நீளமாக வளர்வதால் ஏற்படக்கூடிய கண் குறைபாடு என்கிறார் அக்சயா.

 

ஸ்கூல் மையோபியா மட்டுமின்றி, மரபு சார்ந்த கிட்டப்பார்வை மற்றும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை உள்ளிட்ட வகைகளும் உள்ளன.

 

கிட்டப்பார்வை ஏன் ஏற்படுகிறது?

கிட்டப்பார்வை ஏற்படுவதற்கு மரபுவழி உட்பட ஒரு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

 

மருத்துவர் அக்சயா இதுகுறித்து கூறுகையில், “குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கிட்டப்பார்வை இருந்தால், அது அவர்களின் வாரிசுகளுக்கும் ஏற்படலாம்,” என்கிறார்.

 

அதேபோல்வீட்டிற்குள்ளேயே இருந்தபடி டிஜிட்டல் ஸ்க்ரீன் பயன்பாட்டு நேரம் அதிகரிக்கும் போதும் கண் விழித்திரையில் ஏற்படும் பாதிப்புக்கு எதிர்வினையாக கண்கள் வேகமாக வளர்ந்துகொண்டே போகும்," என்றார்.

 

இது அந்த வயதுக்கான வளர்ச்சியை விட அதிகமானதாக இருக்கும். மேலும் கண்களின் வளர்ச்சி காலம் முடியும் வரை இந்த நிலையின் தீவிரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்,” என்கிறார் மருத்துவர் அக்சயா.

 

டிஜிட்டல் காலம் தொடங்குவதற்கு முன்பு, கல்வியில் அதிக கவனம் செலுத்தும், படிப்பதில் அதிக நேரம் செலவிடும் மாணவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்று குறிப்பிடும் மருத்துவர் அக்சயா, தற்போதைய டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து உலகளவில் பெருகிவரும் பிரச்னையாக இது மாறியுள்ளது என்கிறார்.

 

கிட்டப்பார்வையின் அறிகுறிகள்

மருத்துவர் வஹீதா நஷீர் கிட்டப்பார்வையில் 'சிம்பிள் மையோப்பியா' (Simple Myopia), 'பேத்தலாஜிக் மையோப்பியா' (Pathologic Myopia) என இருவகை உண்டு என்கிறார்.

 

இதில் சிம்பிள் மையோபியாவால் கண் பார்வை கூர்மையில் (Power) மட்டுமே மாற்றங்கள் ஏற்படும். ஆனால், பேத்தலாஜிக் மையோப்பியாவில் பார்வைத்திறன் மற்றும் ரெட்டினா சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்," என்கிறார்.

 

இதன் அறிகுறிகளை அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளாத வரை கண்பார்வை மங்கலாக மாறி, அதன் கூர்மைத் தன்மை '-25' வரைக் கூட குறைந்து கண்பார்வையின் வளர்ச்சியே ஒரு கட்டத்தில் நின்று விடும் என்று கூறுகிறார் மருத்துவர் வஹீதா நஷீர்.

 

இந்தக் குறைபாடு குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுவதால் அதைத் தொடக்கத்திலேயே கண்டறிவதில் சிரமங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார் அக்சயா. ஆனாலும், கீழ்காணும் ஒரு சில அறிகுறிகளைக் கொண்டு அதை கண்டுகொள்ள முடியும் என்கிறார் அவர்.

 

>கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு தூரத்தில் உள்ள விஷயங்கள் மங்கலாகத் தெரியும் என்பதால் டி.வி. அல்லது பெரிய திரையில் எதையாவது பார்க்கிறார்கள் என்றால் அதை அருகில் சென்று பார்க்கவே முயல்வார்கள்.

>பள்ளியில் படிக்கும்போது அல்லது போர்டில் உள்ளவற்றை பார்க்கும்போது சிரமம் ஏற்படுதல், மாறுகண் பிரச்னை இருப்பவர்களும் உடனடியாகப் பரிசோதனை செய்ய வேண்டும்.

>அதேபோல் வழக்கமான தலைவலி மற்றும் கண்வலி இருப்பவர்களும் சோதனை செய்துகொள்ள வேண்டும்.

 

எப்படிக் கட்டுப்படுத்துவது?

கிட்டப்பார்வை ஏற்பட்டவர்கள் முறையான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழியாகக் கண்பார்வையில் ஏற்படும் குறைபாட்டைக் கட்டுப்படுத்த முடியும்.

 

கிட்டப்பார்வை என்பது 'ஆப்டிக்கல் நிலை' என்பதால் அதே வழியில்தான் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் அக்சயா.

 

கிட்டப்பார்வை இருப்பதைக் கண்டறிந்தால் மருத்துவர் பரிந்துரையோடு கண்ணாடி அல்லது 'கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.

 

மேலும், குறைபாட்டின் தீவிரம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வயது, நிலை ஆகியவற்றைப் பொறுத்து லேசர் சிகிச்சை போன்ற நவீன சிகிச்சைகளும் இருப்பதாகக் கூறுகிறார் மருத்துவர் வஹீதா.

 

ஒரு குழந்தைக்குக் கிட்டப்பார்வை இருப்பது தெரியாமல் விட்டுவிட்டால் நீண்ட காலத்திற்கு அதன் கண்பார்வை மங்கலாகவே தெரியும். படிப்பு மற்றும் இதர வெளிப்புறச் செயல்பாடுகளில் சோர்வு காணப்படும் என்கிறார் அக்சயா.

 

அதேபோல், “கண்ணாடி இருந்தும் போடாமல் இருந்தால் சோம்பல் கண் ஏற்படலாம். அது ஒரு கட்டத்திற்கு மேல் கண் பார்வையை வளர விடாமல் தடுத்து விடும். மேலும், மாறுகண் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதற்கு அறுவைசிகிச்சை செய்யும் நிலை வரை செல்லவும் வாய்ப்பும் உள்ளது,” என்கிறார் அவர்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சர்வதேச கிட்டப்பார்வை நிறுவனத்தின் தரவுகளின்படி அடுத்த 25 ஆண்டுகளில் உலகில் இருவரில் ஒருவருக்கு கிட்டப்பார்வை வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இது ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

 

>டிஜிட்டல் திரை பயன்படுத்தும் நேரத்தைக் குறைப்பது

>அவ்வப்போது திரைகளைப் பார்ப்பதில் இருந்து இடைவேளை எடுத்துக்கொள்வது

>குறைவான ஒளியில் படிப்பதைத் தவிர்த்தல்

>வருடாந்திர கண் பரிசோதனை செய்துகொள்ளுதல்

>வெளியே செல்லும்போது சூரிய ஒளியைத் தவிர்க்கும் கண்ணாடிகள் அணிவது

>கண்ணுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுப்பது

>புகைபிடிப்பதைத் தவிர்ப்பது.

 

கண்பார்வை பறிபோகுமா?

கிட்டப்பார்வை பாதிப்பால் நேரடியாகக் கண்பார்வை பறிபோகாது என்றாலும், கிளை பாதிப்புகள் ஏற்பட்டுக் கண்பார்வையில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறுகிறார் மருத்துவர் வஹீதா நசீர்.

 

கிட்டப்பார்வையால் கண்கள் பெரிதாகும் போது ரெட்டினா மெல்லியதாக மாறி அதற்கு ஆதரவாக இருக்கும் ஜவ்வு இலகுவாகி விடும். இது, ரெட்டினல் டிட்டேச்மென்ட் என்ற கண்குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இது குறிப்பிட்ட அளவிற்கான கண்பார்வை குறைபாட்டை ஏற்படுத்துவதில் தொடங்கி தீவிரமான பாதிப்பு வரை உண்டாக்கலாம்,” என்கிறார் அவர்.

 

நன்றி:சுபாஷ் சந்திர போஸ்/பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment