விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்

🧠வளரும் மூளை, குறையும் நோய்கள்

மனித மூளை காலம்தோறும் மாறிவருகிறது. 1930களுக்குப் பிறகு, மனித மூளை வளர்ந்துள்ளது என்பது விஞ்ஞான உண்மை. இதற்கும் அல்சைமர் நோய்க்குமான தொடர்பு இருப்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுதும் 5 கோடி மக்கள் 'டிமென்சியா' எனும் மறதி சார்ந்த மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான காரணம் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும்.

அதாவது கடந்த காலங்களை விடச் சராசரி மனித ஆயுள் அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1970களுக்குப் பிறகு புதிதாக நினைவாற்றல் தொடர்பான 'டிமென்சியா' நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது, அதுவும் பத்தாண்டுகளுக்கு 20 சதவீதம் என்ற அளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. ஆகவே, இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் பழைய நோயாளிகள் தான்.

இவ்வாறு குறைவதற்கான முக்கியக் காரணம் 1930களுக்குப் பிறகு மனித மூளையின் கொள்ளளவு அதிகரித்தது தான் என்கின்றனர் விஞ்ஞானிகள். 1930, 1970 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த 15,000 பேரின் மூளையை எம்.ஆர்.., ஸ்கேன் செய்து இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

பொதுவாக, மூளையின் அளவு என்பது மரபியல் சார்ந்தது தான் என்றாலும் கல்வி, சமூக, உடல் ஆரோக்கியம் முதலியவையும் குறிப்பிட்ட அளவு தாக்கம் செலுத்தும் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

மூளையின் அளவு அதிகரிப்பதால், நினைவுகளுக்கு அதிக இடம் கிடைக்கிறது

இதுவே நினைவுக் குறைபாடு நோய்கள் குறைந்து வருவதற்குக் காரணம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

🪫சிறிய மாற்றம் பெரிய முன்னேற்றம்

உலகம் முழுதும் அதிகம் காற்றடிக்கும் பகுதிகளில் காற்றாலை வாயிலாக மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காற்றாலையின் இறக்கைகளின் வடிவமைப்பில் சிறிய மாறுதல் செய்வதன் வாயிலாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்புக்கு உதவியது ஒரு பறவை என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், உலகின் மிகப் பெரிய பறவைகளில் ஒன்று ஆண்டியன் காண்டார். இதன் சிறகுகள் 10 முதல் 12 அடி வரை இருக்கும்.

16 கிலோ எடை கொண்ட இவற்றால், ஒரு நாளைக்கு 240 கி.மீ., துாரத்தை இறக்கைகளை அடிக்காமலேயே பறக்க முடியும். இதற்குக் காரணம் இறக்கைகளின் வடிவமைப்பு. கனடா நாட்டைச் சேர்ந்த அல்பெர்டா பல்கலை விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், இந்தப் பறவைகளில் இறகுகளில் உள்ள சிறிய முனைகள் (துணை இறகு அமைப்பு) தான் காற்றின் வேகத்தைச் சமாளித்துப் பறக்க உதவுகின்றன என்ற முடிவுக்கு வந்தனர். இதை உறுதிப்படுத்த 17.6 அடி நீளமான இறக்கை கொண்ட புதிய காற்றாலையை வடிவமைத்தனர்.

இதன் முனைகள் கூர்மையாக வளைந்திருக்கும் படியாகச் சிறிய மாற்றம் செய்தனர். இதைச் சோதித்துப் பார்த்தபோது வழக்கத்தை விட இந்தப் புதிய காற்றாலை 10 சதவீதம் அதிக மின்சார உற்பத்தி செய்வதை உறுதி செய்தனர்.

காற்றாலை இறக்கைகள் சுற்றும்போது ஏற்படும் காற்றழுத்த வேறுபாடுகளைச் சமாளிக்க இந்தக் கூர்முனை உதவுகிறது. இதனால், காற்றுடனான உராய்வு குறைந்து சுற்றும் வேகம் அதிகரிக்கிறது. விரைவில் இந்தப் புதிய வடிவமைப்பு பயன்பாட்டிற்கு வருமெனத் தெரிகிறது.

 

🚪இதய செயலிழப்பு- செல் போன்



பின்லாந்தில் உள்ள துர்கு பல்கலை, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையுடன் இணைந்து, இதய செயலிழப்பைக் கண்டுபிடிக்கின்ற சென்சார்களுடன் இணைந்து இயங்கும் செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. 1,003 நபர்களை வைத்துச் சோதனை செய்ததில் இந்தச் செயலி, 85 சதவீதம் சரியாக இதய செயலிழப்பைக் கண்டறிந்தது.

 

🧋கொழுப்பும் கொம்புச்சாவும்

கொம்புச்சா எனப்படும் நொதிக்கப்பட்ட டீ பானம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஏற்கனவே அறியப்பட்டிருந்தது. தற்போது இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவதாக அமெரிக்காவின் வட கரொலினா பல்கலை கண்டறிந்துள்ளது.

 

🔋பிராணவாயுவைக் கொண்டு சார்ஜ்

பேஸ்மேக்கர் முதலிய சில கருவிகளை உடலில் பொருத்தும் போது அவை தொடர்ந்து இயங்க பேட்டரி மாற்ற வேண்டும். அதற்காக அவற்றை உடலிலிருந்து வெளியே எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இதைத் தவிர்ப்பதற்காக சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு உடலில் உள்ள பிராணவாயுவைக் கொண்டு சார்ஜ் செய்து கொள்ளும் பேட்டரியை வடிவமைத்துள்ளது.

 

🌱ரத்த அழுத்தத்தை சீராக்கும் நார்ச்சத்து

நாம் உண்ணும் உணவு எல்லா விதமான சத்துக்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும், அதையே சரிவிகித உணவு என்கிறோம்.

இந்தச் சத்துக்களில் முக்கியமான ஒன்று நார்ச்சத்து. சரியான அளவு நார்ச்சத்து எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாறி வரும் உணவு முறையில் போதிய அளவில் நார்ச்சத்து இருப்பதில்லை. ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக் கொள்ள ஆண்களும், பெண்களும் தினமும் எவ்வளவு நார்ச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை ஆய்வுப் பூர்வமாகக் கண்டறிந்துள்ளது.

எந்தவிதமான மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால் பெண்கள் தினமும் உணவில், 28 கிராமும், ஆண்கள் 38 கிராமும் நார்ச்சத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக 5 கிராம் எடுத்துக்கொண்டால் மிக அதிகமான உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும் என்கிறது ஆய்வு. மனித உடலில் குறிப்பாகக் குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் நிறைய வாழ்கின்றன. இவை நார்ச்சத்துக்களை உட்கொண்டு சிலவித நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை நார்ச்சத்து கிடைப்பதற்கு முழு தானியங்கள், பீன்ஸ், நிறைய காய்கறிகள் உட்கொள்ளப் பரிந்துரைக்கிறது. மைதா ரொட்டிக்குப் பதில் முழு கோதுமையில் செய்த ரொட்டி, வெள்ளை அரிசிக்கு மாற்றாகப் பழுப்பு அரிசி, அசைவ உணவுகளுக்குப் பதில் கடலை, பட்டாணி, கொண்டைக் கடலை, பழச்சாறுகளுக்குப் பதில் பழங்கள் ஆகியவற்றை உண்பது பயன்தரும் என்கிறது.

 

🝕தொற்றுக்கு தடுப்பு மருந்து

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மிகவும் வலி தருபவை. அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் உணர்வு எப்போதும் இருத்தல் ஆகியவை இதன் விளைவுகள். இதனால் ஆண்களை விடப் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இந்த நோய், 80 -- 85 சதவீதம் எஸ்செரிசியா கோலை எனும் பாக்டீரியாவால் தான் ஏற்படுகிறது.

தற்போதுள்ள சூழலில் இந்த நோய்க்குச் சிகிச்சை செய்ய கிருமிகளைக் கொல்லும் ஆன்டிபயாடிக் மருந்துகளே பயன்பாட்டில் உள்ளன.

என்னதான் வலுவான ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தினாலும் அவற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை கிருமிகள் மிக விரைவில் வளர்த்துக் கொள்கின்றன. இது தவிர தொடர்ந்து இந்த மருந்துகளைப் பயன்படுத்துவது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இதற்கு மாற்று கண்டறிய ஆய்வாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான் இந்த நோய் வராமல் இருக்க Uromune MV140 எனும் தடுப்பு மருந்தை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எஸ்செரிசியா கோலை உள்ளிட்ட நான்கு வகை பாக்டீரியா செயலற்ற நிலையில் இந்த மருந்தில் இருக்கும். இதை ஊசி மூலம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

மாறாக நாக்கிற்கு அடியில் ஸ்பிரே வடிவில் அடித்துக் கொண்டால் போதும். அன்னாசிப் பழ ப்ளேவரில் உள்ள இந்த மருந்தை மூன்று மாதங்கள் தினமும் பயன்படுத்தினால், 9 ஆண்டுகள் வரை சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படாது.

தற்போது இந்த மருந்து ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 26 நாடுகளில் கிடைக்கிறது. விரைவில் உலகம் முழுதும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

🥺கண்களை சிமிட்டுவது

நாம் கண்களை அனிச்சையாக சிமிட்டுவது, கண்களை ஈரமாக வைத்துக் கொள்வதற்கும், தூசுகளை நீக்குவதற்கும் உதவுகிறது என்பதை அறிவோம். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், விழித்திரையில் விழும் ஒளிகளைக் கண் சிமிட்டுதல் முறைப்படுத்துகிறது என்றும், இதன் வாயிலாக அதிகமான நேரம் ஒரு பொருளைக் கவனித்துப் பார்க்க முடிகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தொகுப்பு: மனு வேந்தன் –செ- Manu Venthan

0 comments:

Post a Comment