"மனதிலுறுதி
வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு
நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு
மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;"
[பாரதியார்]
கனவுகளின்
அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு
[Sigmund Freud] என்பாரின் கருத்து ஆகும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு
வகையில் கனவு காண்கின்றனர். அதை நனவாக மாற்றும் அவர்களின் பெரும் முயற்சியில் சில வெற்றி
பெறும், சில கருத்துக்களாக மட்டுமே இருந்து விடும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும்,
சில பாதிப்பதே தெரியாமல் சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள்,
கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கி விடாது. அப்படியான
ஒன்றில் தான் நான் இன்று மகிழ்வாக, நான் கனவு கண்டவளை, நாம் இருவரும் கனவு கண்ட புத்தக
கடைக்கு முன், கைபிடித்து நிற்கிறேன்.
யாழ்ப்பாண
மாவடடத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நான் அன்று என் பெற்றோர்கள், சகோதரர்களுடன் வசித்து
வந்தேன். எங்கள் பக்கத்து வீட்டில் மாயா என்ற குறும்புக்கார அழகிய பெண் இருந்தாள்.
அவர்களின் குடும்பம் ஒரு சிறிய குடும்பம். அவளுக்கு ஒரு தங்கை மட்டுமே இருந்தாள், தந்தை
யாழ்ப்பாண கச்சரியில் ஒரு அதிகாரியாக இருந்தார். மாயாவும் நானும் ஒரே பாடசாலையில் கல்வி
கற்றதாலும் பக்கத்து வீடு என்பதாலும் எண்ணற்ற நினைவுகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டு
குழந்தைப் பருவம் தொடக்கம் [பால்ய] நண்பர்களாக வளர்ந்தோம். வாலிப பருவம் அடைந்து உயர்
கல்வி தொடருகையில், அவளின் தனித்துவமான அழகும் அவள் என்னுடன் சுதந்திரமாக பழகும் நட்பும்
எனக்கு என்னை அறியாமலே அவள் மேல் ஒரு ஆசையை வளர்த்துக் கொண்டே வந்தது.
"பக்கத்து
வீட்டு பைங்கிளி கோடியில் நிற்குது
வெக்கத்தை
விட்டு அது ஆடிப் பாடுது
தூக்கத்தை
கலைத்து எனக்கு துடிப்பை தருகுது
ஏக்கத்தை
கூட்டி மனதை நொடியில் வாட்டுது"
"வயல்
வெளியில் பைங்கிளி துள்ளி திரியுது
கயல்
விழியில் கவர்ச்சியை அள்ளி எறியுது
மயக்கம்
கொடுத்து நெஞ்சை கிள்ளி இழுக்குது
தயக்கம்
கொண்டு கொஞ்சம் தள்ளி போகுது"
என்னுடைய
அந்தக் கனவில் ஒரு பகிரப்பட்ட ஆசை அவளிடமும் இருந்தது பின் ஒரு நாள் எனக்கு தெரியவந்தது.
ஒரு நாள் நான் பல்கலைக்கழகத்துக்கு போகும் பொழுது, தனக்கு உயர் வகுப்புக்கு பிந்திவிட்டது
என்று, தன்னை என் மோட்டார் சைக்கிளில் இறக்கி விடும்படி கூறினாள். ஆனால் ஏறியதும் இன்று
தனக்கு விடுதலை என்றும் ஏதேதோ கதைக்கத் தொடங்கி தன் கனவையும் எனக்கு, என்னை இறுக்க
பிடித்துக்கொண்டு சொன்னாள், அந்த இறுக்கம், அந்த தழுவல் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.
மாயா ஒரு திறமையான கலைஞர். நன்றாக படம் வரைவதிலும் சிறு சிறு கதைகள் எழுதுவதிலும் வல்லவர்.
எனவே ஒரு வசதியான சிறிய புத்தகக் கடையை, படிப்பின் பின் தான் முதலில் என்னுடன் ஒன்றாகத் திறக்க வேண்டும்
என்றும், அதன் பின் என்னுடன் வாழவேண்டும் என்றும் தன் அவாவை கெஞ்சலாக, ஆனால் உறுதியாக
கூறினாள்.
"நெருங்கி
வந்து இருந்தாள்
நெஞ்சம்
குளிர கதைத்தாள்
குறும்பாய்
சில செய்தாள்
மறுத்தால்
முறைச்சு பார்த்தாள்"
"மனம்
திறந்து பேசுவாள்
கள்ளம்
கபடம் இல்லை
வித்தகம்
கண்ணில் காட்டுவாள்
கவனம்
தன்னில் இருக்கும்"
"சந்திக்க
பதுங்கி வருவாள்
பாடம்
புரியலை என்பாள்
புத்தகம்
கையில் இருக்கும்
கவனம்
எங்கோ இருக்கும்"
"பதறி
ஓடி வருவாள்
பிந்தி
விட்டது என்பாள்
துள்ளி
ஏறி இருப்பாள்
மெல்ல
போ என்பாள்"
வருடங்கள்
செல்ல செல்ல நானும் மாயாவும் தனித்த தனி பாதையில் சென்று விட்டோம். நான் வணிகத்தில்
ஒரு தொழிலைத் தொடங்கி, இலங்கையின் தலைநகர் கொழும்பு போய்விட்டேன், மாயா ஒரு திறமையான
கலைஞராக யாழ்ப்பாணத்திலேயே பிஸியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். என்றாலும் நாம்
ஒருபோதும் தொடர்பை இழக்கவில்லை. நாம் அடிக்கடி மின்னஞ்சல் கடிதங்கள் மற்றும் தொலைபேசி
அழைப்புகளை பரிமாறிக்கொண்டோம்.
ஒரு
நாள், எதிர்பாராத அழைப்பு எனக்கு வந்தது. மாயா தனது கலையை யாழ்ப்பாண கலை காட்சி கூடம்
ஒன்றில் காட்சிப்படுத்த இருக்கிறார் என்றும்,
அதன் தொடக்க இரவுக்கு என்னை வரும்படியும் அழைத்திருந்தார்.
ஒரு சில வருடங்களுக்குப் பிறகு நான் அவளுடன் மீண்டும் இணைந்தபோது உற்சாகமும், ஆர்வமும் பெருமையும் என்னுள் நிறைந்தன. மாயாவின் கலை திகைப்பூட்டக்
கூடியதாக அத்தனை அழகாக இருந்தது, ஒவ்வொரு பகுதியும் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் மூலம்,
இலங்கை தமிழ் மக்களின் வரலாறையும் பெருமையையும் தனித்துவமான பாணியில் சொல்லிக்கொண்டு
இருந்தன.
"அறுவடை
சரியாய் நடைபெறுகிறது.
விதைத்தது
தானே விளையும்
தமிழர்
வம்சத்தை அடியோடு அழிக்க நினைத்து
முழு
நாட்டையுமே அழித்து நிற்கும் “மகாவம்ச” சிந்தனை!"
கலை
காட்சி கூடம் வாசலில் இருந்த அந்த வார்த்தை, அவளின் அர்ப்பணிப்பு என் சிந்தனையை தூண்டியது. கூட்டத்தின் மத்தியில்,
நானும் மாயாவும் மீண்டும் எம் பழைய வாழ்வை கனவு கண்டோம். எங்கள் இன்றைய வாழ்வை, அனுபவங்களை
பேசினோம். எமது படிப்புக் காலத்தில் பற்றவைத்த தீப்பொறி மீண்டும் எரியத் தொடங்கியது.
இரவு
நெருங்க நெருங்க, மாயா ஆழ்ந்த மூச்சை இழுத்து என்னிடம் ஒரு புத்தகக் கடையைத் திறக்கும் கனவு இன்னும் உயிருடன்
இருப்பதாகவும் அந்த கனவை அவள் ஒருபோதும் கைவிடவில்லை என்றும் தன் கல்யாணத்தைப் பற்றியும்
நினைவூட்டினாள். நான் அவளை மனைவியாக்கும் என் கனவும் அவளின் கனவுடன் பின்னிப் பிணைந்திருப்பதை
உணர்ந்து எனக்குள் மகிழ்ந்தேன். நான் இன்று வணிகத்தில் ஓரளவு வசதியாகவும் செல்வாக்குடனும்
இருப்பதால், அவளின் கனவை விரைவில் நிறைவேற்றி, என் கனவையும் மெய்ப்படுத்த புத்தகக்
கடையை திறக்கும் நோக்கத்துடன் கொழும்பு பயணமானேன்.
நாம்
இருவரும் சரியான இடத்தில் முறையான புத்தகக் கடையை உருவாக்க இரவு பகலாக திட்டம் போட்டு,
ஒரு புது கட்டிடத்தை கட்டி, சுவர்களை வர்ணம்
பூசி, அலமாரிகள் மற்றும் அலமாரிகளை நிரப்ப கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள்
மூலம் ஒரு ஒழுங்கு வரிசையில் நிரப்பி அந்த கடையை திறந்து, "கனவு காண்பவரின் சொர்க்கம்"
என்று அதற்கு பொருத்தமாக பெயரிட்டு, வசதியான
சூழல், புதிய புத்தகங்களின் வாசனை மற்றும் சுவரில் தொங்கும் துடிப்பான கலைப் படைப்புக்கள்
மூலம் ஒரு மாயாஜால சூழலை உருவாக்கி, யாழ் நகரத்தைச் சுற்றியுள்ள மக்களை ஈர்த்து, இந்த
கனவு சொர்க்கம் விரைவில் சமூகத்தில் ஒரு பிரியமான இடமாக மாறும் என்ற நம்பிக்கையுடன்
புத்தகக் கடையில் அருகருகே நின்று, அவள் கையை என் கையுடன் கோர்த்து, வாடிக்கையாளர்கள் தாங்கள் கவனமாகக் கண்டுபிடித்த
கதைகளில் மூழ்குவதைப் பார்த்து, நான் மாயாவிடம், "எங்கள் கனவு நனவாகிவிட்டது"
என்றேன். மாயா சிரித்தாள், அவள் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பி, "ஆம், நான்
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக கடையும் நீங்களும் இருக்கிறீர்கள்"
என்று பதிலளித்தாள்.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment