சமையலுக்கு எந்த பாத்திரம், எந்த அடுப்பு சிறந்தது?

உணவில் ஊட்டச்சத்துகளை தக்க வைப்பது எப்படி?

'கேஸ் அடுப்பில் சமைத்த சாம்பார், விறகடுப்பில் சமைத்த போது இருந்த ருசியில் இல்லை, அந்த அடுப்பில் சமைத்த உணவே சிறந்தது, குக்கரில் சமைத்த சாதமும், சட்டியில் சமைத்த சாதமும் முற்றிலும் வேறு.. மைக்ரோவேவில் சமைத்த உணவில் ருசியே இல்லை. சாரம் இழக்கும் வகையில் சமைப்பது நல்லதல்ல. இப்படி சமைப்பது நல்லது, அப்படி சமைப்பது நல்லது.." இதுபோன்ற வாக்கியங்களை அடிக்கடி நம் வீடுகளில் கேட்க முடியும். பல வீடுகளில், உணவை சமைப்பது, சூடுபடுத்துவது, கொதிக்க வைப்பது என அனைத்திலும் பல விதிகள் பின்பற்றப்படுகின்றன.


பெரும்பாலும் உணவு சமைப்பதில், பாரம்பரிய முறைகள் தான் சிறந்தது என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. மைக்ரோவேவ் அல்லது ஏர் ஃப்ரையர் போன்ற நவீன மின் சாதனங்கள் உணவின் ஊட்டச்சத்துக்களை அழித்து விடும் என்ற பலரும் நம்புகின்றனர். ஆனால் இந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) வழங்கிய புதிய வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றிய நம்முடைய நம்பிக்கைகளை புரட்டிப் போடக் கூடியவை,

 

இந்திய ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் எவ்வளவு உணவு தேவை, எவ்வளவு ஊட்டச்சத்துகள் தேவை, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உணவில் என்ன இருக்க வேண்டும் மற்றும் சமையல் உபகரணங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

 

சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றி இந்த அறிக்கை விவரிக்கும் தகவல்களை முதலில் பார்ப்போம்

 

எந்த பாத்திரத்தில் சமைப்பது சிறந்தது?

எந்த வகையான பாத்திரத்தில் சமைப்பது? நாம் பயன்படுத்தும் பாத்திரம் நல்லது தானா? அதை எவ்வாறு பராமரிப்பது, அதில் ஏதேனும் பாதகமான ரசாயன எதிர்வினை இருக்கிறதா? சமைக்கும் போது, ​​​​இந்த பாத்திரங்கள் உணவின் ஊட்டச்சத்துகளை அழித்து விடுமா? பாத்திரங்களில் ரசாயன பூசப்பட்டிருந்தால் அவை உணவோடு கலந்து விடுமா? - இதுபோன்று பல நேரங்களில் சந்தேகம் வரும். சில சமயங்களில் பயமும் இருக்கும்.

 

`ஐசிஎம்ஆர்மற்றும் `என்ஐஎன்வழங்கிய இந்த புதிய வழிகாட்டுதல்களில், மண் பாத்திரங்கள், உலோகம், துருப்பிடிக்காத எஃகு, நான்ஸ்டிக் மற்றும் கிரானைட் கற்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

மண் பாண்டங்கள் சமையலுக்கு பாதுகாப்பானவை. மண் பாண்டங்களில் சமைக்கும் போது குறைந்த எண்ணெயில் சமைக்க முடியும். மண் பாத்திரங்களில் வெப்பம் ஒரே அளவில் பரவும், உணவு பொருளில் ஒரே மாதிரி வெப்பம் ஊடுருவுவதால், ஊட்டச்சத்து மதிப்புகள் பாதுகாக்கப்படும் என்று அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஊறுகாய், சட்னி, சாம்பார், சாஸ் போன்றவற்றை அலுமினியம், இரும்பு, செம்பு பாத்திரங்களில் வைக்கக் கூடாது. ஸ்டீல் கிண்ணத்தில் இந்த பொருட்களுக்கு எந்தவித பாதகமான விளைவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Oவழிகாட்டுதல்களை உருவாக்கிய நிபுணர்கள் டெஃப்லான் பூச்சு கொண்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களை (pan) 170 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடாக்கினால் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

0ஸ்டவ் மீது நீண்ட நேரம் காலியாக வைத்து சூடாக்கினாலும் ஆபத்தான விளைவு ஏற்படும். காலியாக வைத்து சூடுபடுத்தும் போது, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் டெஃப்லான் லேயர், நச்சுப் புகைகளை உருவாக்கும்.

0நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது, எப்படி ​​சுத்தம் செய்வது என்னும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த சமையல் பாத்திரங்களில் நான்ஸ்டிக் பூச்சு சேதமடைந்து விட்டால், அதைப் பயன்படுத்த கூடாது என்றும் அறிக்கை கூறுகிறது.

 

ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்இயக்குநர் டாக்டர். ஹேமலதா ஆர் கூறுகையில் , “மக்கள் `ஒட்டவே ஒட்டாதநான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களை வாங்க விரும்புகிறார்கள், ஏனெனில் அது பிரபலமாக உள்ளது. எளிதில் கிடைக்கிறது. ஆனால் அதிக சூடேறும் போது, ​​நான் - ஸ்டிக் பூச்சுகளில் உள்ள ரசாயனங்கள் வெளியேறி, நம் உணவில் கலந்து, நம் உடலுக்குள் செல்கின்றன. இது ஆபத்தானது. எனவே, நான்-ஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அப்படி பயன்படுத்தினாலும், அதன் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ஒரு சிறப்பு முறை உள்ளது. அதற்கேற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும். கீறல்கள் விழுந்த பழைய நான்-ஸ்டிக் பாத்திரங்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

 

`கிரானைட் கல்சமையல் பாத்திரங்கள் (Granite stoneware) இப்போது குறைந்த எடையிலும் கிடைக்கின்றன. இந்த கல் சட்டிகள் மூலம் குறைந்த நேரத்திலும் குறைந்த ஆற்றல் பயன்பாட்டிலும் சமைக்க முடியும்.

 

இந்த சட்டிகள் வெப்பத்தை நன்கு தக்கவைத்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை. அடுப்பு அணைக்கப்பட்ட பிறகும் நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். டெஃப்லான் பூச்சு இல்லாத கல் பாத்திரங்கள் பயன்படுத்த பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

 

மைக்ரோவேவ் மற்றும் ஏர் பிரையர் பயன்பாடு

இந்த வழிகாட்டுதல் அறிக்கையில், சமையல், கொதித்தல், குக்கர் சமையல், வேக வைத்தல், வறுத்தல், குறைந்த எண்ணெயில் வறுத்தல், பார்பிக்யூ, கிரில்லிங் மற்றும் ஏர் ஃப்ரை செய்தல் என சமையல் முறைகளின் நன்மைகள் மற்றும் சாத்தியமான தீமைகளையும் விவரிக்கிறது.

 

உதாரணமாக பொரியலை எடுத்துக் கொள்வோம். இந்த அறிக்கையில் உள்ள தகவல்களின்படி, வறுக்கப்படும் செயல்முறை, உணவின் ஊட்டச்சத்து மதிப்புகளை மாற்றுகிறது. வைட்டமின் சி போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் அழிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், ஒரு உணவு பொருளை எண்ணெயில் வறுக்கும் போது, அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றப்பட்ட கூறுகள் உருவாகலாம் மற்றும் நச்சுகளும் உருவாகலாம்.

 

மிக முக்கியமாக, அதிகப்படியான எண்ணெய் மற்றும் கொழுப்பு நுகர்வு இதய நோய், பக்கவாதம், நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இது அடிவயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வதற்கும், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளின் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கிறது. அதே எண்ணெயை மீண்டும் பொரிப்பதற்கு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையில் மைக்ரோவேவ் அவனில் சமைப்பது பற்றிய ஒரு புதிய மற்றும் சிந்தனையைத் தூண்டும் தகவலை வழங்குகிறது.

 

மைக்ரோவேவ் சமையலுக்கும் வழக்கமான சமையலுக்கும் இடையே சிறிய ஊட்டச்சத்து வேறுபாடு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

ஊட்டச்சத்துகளின் மீது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் சமையல் முறைகளில் மைக்ரோவேவ் சமையல் ஒன்றாகும். காரணம், மைக்ரோவேவில் சமைக்கும் போது, மிகக் குறைந்த நீரே பயன்படுத்தப்படும். மைக்ரோவேவ், உணவை உள்ளே இருந்து சூடாக்குகிறது. இது ஊட்டச்சத்துகளை அழிக்காததால், மற்ற சமையல் முறைகளை விட இது அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்க வைக்கிறது.

 

மைக்ரோவேவ் அவனில் மிகக் குறுகிய காலத்தில் சமைப்பதால், அதிக நேர வெப்பத்தால் அழிக்கப்படும் வைட்டமின் சி மற்றும் பிற கூறுகளும் பாதுகாக்கப்படுகின்றன. இது புரதங்கள், லிப்பிடுகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றில் குறைவான விளைவை ஏற்படுத்தும். மைக்ரோவேவில் சமைக்கும் போது, பாதுகாப்பான கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துமாறு அறிக்கை பரிந்துரைக்கிறது. பிளாஸ்டிக் கொள்கலன்கள் நல்லதல்ல என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

'மைக்ரோவேவ் விதிகளை பின்பற்ற வேண்டும்'

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்இயக்குநர் டாக்டர். ஹேம்லதா ஆர் பிபிசி மராத்திக்கு கொடுத்த பேட்டியில்,

 

வழக்கமான சமையல் முறைகளை விட மைக்ரோவேவ் சமையல் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் உங்களுக்கு வேறு வழியில்லை எனில் மைக்ரோவேவ் பயன்படுத்தலாம். மைக்ரோவேவ் நாம் நினைப்பது போல் மோசமான உபகரணம் இல்லை. நிச்சயமாக, மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது ஆபத்தானது. அதன் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எனவே, மைக்ரோவேவில் அனைத்து ஊட்டச்சத்து மதிப்புகளும் இழக்கப்படும் என்ற பொதுவான பார்வையை நம்ப வேண்டியதில்லை. மைக்ரோவேவை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இது அந்தளவிற்கு கெடுதல் இல்லை." என்றார்.

 

மைக்ரோவேவில் உணவை நீண்ட நேரம் சூடாக்கினால், அதில் ' அக்ரிலாமைடு' (acrylamide) என்ற வேதிப்பொருள் உருவாகும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எரிவாயு அல்லது விறகடுப்பில் உணவைச் சூடாக்குவதை விட மைக்ரோவேவில் உணவைச் சமைப்பது அதிக அக்ரிலாமைடை உருவாக்குகிறது என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கவனமாக இருங்கள்! இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

 

மைக்ரோவேவில் இருந்து வரும் வெப்பம் பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு பாலிமர் (polymer) துகள்களை உடைக்கும். இந்த பாலிமர் துகள்கள் உணவுடன் கலக்கின்றன. இந்த பாலிமர் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்கள் பாதிக்கப்படும். எனவே, பிளாஸ்டிக் பொருட்களை மைக்ரோவேவில் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருள்களை மிருதுவாக்க பயன்படுத்தப்படும் ரசாயனமான தாலேட்ஸ் (Phthalates) எனப்படும் பிளாஸ்டிசைசர்கள் (plasticizers) நமது வளர்சிதை மாற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலை மோசமடையத் தொடங்குகிறது.

 

இந்த தாலேட்ஸ் (Phthalates) உடலில் நுழைவதால், குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இது இன்சுலின் சுரக்கும் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னைகள் தோன்றும். இது ஆஸ்துமா அல்லது கருவுறுதல் தொடர்பான பிரச்னைகளையும் ஏற்படுத்தும் .

 

மைக்ரோவேவ் அவன் இந்திய சமையலறைகளில் ஹோட்டல்களில் ஊடுருவி இருந்தாலும், ஏர் பிரையர்கள் ஒப்பீட்டளவில் நமக்கு புதியவை தான். இதில் வறுத்த உணவுகள் அதிக எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது. மற்ற சமையல் முறைகளில் உணவு பொருட்களை வறுப்பதை விட இதில் வறுக்கும் போது உணவில் குறைந்த அளவு எண்ணெய் உறிஞ்சப்படும்

 

குறைந்த எண்ணெய் என்றால் குறைந்த கலோரிகள் என்று அர்த்தம். குறைந்த கலோரிகள் என்றால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் குறைவு. உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சமைக்க ஏர் பிரையர்களைப் பயன்படுத்தலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஏர் பிரையரில் மீன்கள் வறுக்கப்படும் போது, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்புகள்) குறையும் மற்றும் ஆரோக்கியத்தில் அழற்சியை ஊக்குவிக்கும் சேர்மங்களை அதிகரிக்கும் என்கிறது அறிக்கை.

 

உணவில் ஊட்டச்சத்துகளை தக்க வைப்பது எப்படி?

சமையல் முறை மற்றும் பாத்திரங்கள் பற்றிய தகவல்களை பார்த்தோம், இந்த அறிக்கை ஊட்டச்சத்து மதிப்புகளை பராமரிக்க சில குறிப்புகளை வழங்கியுள்ளது.

 

இந்த அறிவுறுத்தல்கள் படி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அடிக்கடி கழுவ வேண்டாம். காய்கறிகள் மற்றும் பழங்களை தோலுரிப்பதற்கும், வெட்டுவதற்கும் முன் கழுவவும். சமையலில் அதிக தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சமையலுக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும்.

 

காய்கறிகளை சமைக்கும் போது பாத்திரங்களை மூடி வைக்கவும். எண்ணெயில் வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைக்கவும்.

 

உடைந்த தானியங்கள் மற்றும் புளித்த உணவுகளை (இட்லி-தோசை) உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை சமைக்கும் போது சோடாவை சேர்க்க வேண்டாம். மீதமுள்ள எண்ணெயை மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்கவும்.

 

ஆரோக்கியமான உணவு முறை என்றால் என்ன?

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோய்க்கும் டாக்டர்கள் 'வாழ்க்கை முறை மாற்றங்களை' அதாவது வாழ்க்கை முறையை மாற்றி 'ஆரோக்கியமான உணவை' சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் முதல் மனநோய் வரை இந்த அறிவுறுத்தலை மருத்துவர்களிடம் கேட்டிருப்பீர்கள்.

 

என்ன தான் சாப்பிடுவது என்ற கேள்வி வரும். 'ஆரோக்கியமான' உணவில் ஏராளமான காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மிதமான உலர் பழங்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் தயிர் ஆகியவை இருக்க வேண்டும் என்று ICMR மற்றும் NIN பரிந்துரைக்கின்றன.

 

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்இல் இந்த வழிகாட்டுதல்களை உருவாக்க பணியாற்றிய ஆராய்ச்சியாளர் டாக்டர். சுப்பாராவ் எம். ஜி, பிபிசி மராத்திக்கு கூடுதல் தகவல்களை வழங்கினார்.

 

உணவு பொருட்களில், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெய் வித்துகள், எண்ணெய், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், வேர்கள் மற்றும் கிழங்குகள், இறைச்சி, மீன், மசாலாப் பொருட்கள் என பத்து வகைகளாகப் பிரித்துள்ளோம் என்றார்.

 

மேற்சொன்ன உணவு வகைகளில் ஏதேனும் ஐந்து முதல் ஏழு உணவுகளை தினசரி உணவில் எடுத்து கொள்ளலாம். 2000 கலோரி உணவு என கருத்தில் கொண்டால், உங்கள் உணவில் பாதி காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்க வேண்டும். முடிந்தவரை புதிய காய்கறிகள் மற்றும் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.”

 

மேற்சொன்ன 10 வகை உணவு உட்பிரிவுகளில், ஏதேனும் ஒன்றை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதும் சரியல்ல, உங்கள் உணவில் பலவகையான உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவுக்கு அதிக செலவு தேவையில்லை. ஆனால் உட்கொள்ளும் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவில் இருக்க வேண்டும்.

 

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் உண்ண வேண்டிய உணவுகள்

`ஐசிஎம்ஆர் - `என்ஐஎன் வழிகாட்டுதல்களின்படி

 

0கருத்தரித்தல், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது நல்ல உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவை இருக்க வேண்டும். கருத்தரித்தலுக்கு முன்கூட்டிய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றி கொள்வது நல்லது.

0கர்ப்பிணிகள் சரியான ஹீமோகுளோபின் மற்றும் பிஎம்ஐ அளவை பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

0முதல் கர்ப்பத்திற்கான குறைந்தபட்ச வயது 21-ஆக இருக்க வேண்டும்.

0உணவில் பல்வேறு பருப்பு வகைகள், முந்திரி, பாதாம் போன்றவை, மீன், பால், முட்டைகள் இருக்க வேண்டும். அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

0மது, புகையிலை எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

0இரத்த சோகை வராமல் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

 

உப்பு மற்றும் சர்க்கரை ருசிக்கு மட்டும் தான்

கடந்த சில ஆண்டுகளில், நிறைய உப்பு நிறைந்த பல உணவுகள் சந்தையில் விற்கப்படுகின்றன.

 

வீட்டில் உள்ள உணவிலும் வெளியில் உண்ணும் உணவுகளிலும் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளிலும் மக்களின் உணவில் உப்பின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த கவலைகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

 

ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்ஆகியவையும் ஒரு நாளைக்கு ஐந்து கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றன.

 

>அயோடின் உப்பு பயன்படுத்தவும்.

>சாஸ்-கெட்ச்அப், பிஸ்கட், சிப்ஸ், சீஸ், கருவாடு ஆகியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

>காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பொட்டாசியம் கிடைக்கும்.

>அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம். இது ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது.

>இருப்பினும், இந்த உணவுகளில் கலோரிகள் அதிகம். எனவே, இந்த அறிவுறுத்தல்களில் உள்ள ஒரு முக்கியமான பரிந்துரை என்னவென்றால், அனைவரும் சாஸ்கள், சீஸ், மயோனைஸ், ஜாம், பழ கூழ், ஜூஸ், கார்பனேற்றப்பட்ட பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் ஆகியவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.

வீட்டில் தயாரிக்கும் உணவில் எண்ணெய்-நெய், சர்க்கரை, உப்பு அதிகம் பயன்படுத்தினால் அதுவும் நல்லதல்ல. வெளியில் சாப்பிடும் போது கூடுதல் கவனம் தேவை. வறுத்த உணவு, இனிப்பு, உப்பு, வேக வைத்த உணவுகளைத் தவிர்க்கவும்.

 

உப்பு அதிகம் உள்ள உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று இந்த அறிவுறுத்தல்கள் கூறுகின்றன.

 

நன்றி:பி பி சி தமிழ்

0 comments:

Post a Comment