"சோம்பல் தவிர்"-சிறு கதை

"முயற்சியை தடுக்க கூடியவன்

ஒருவனே! அவனே, சோம்பல்!!"

 

    ஒரு முறை ஆசிரியர் ஒருவர், சோம்பல் மாணவர்களை கொண்ட வகுப்பறைக்கு அவர்களை உற்சாகப் படுத்தும் நோக்கமுடன் போனார். எனவே அவர் அங்கு போனதும் மாணவர்களைப் பார்த்து ' நான் இந்த வகுப்பறையில் இருக்கும் அதி கூடிய சோம்பல் மாணவருக்கு ஒரு வெகுமதி கொடுக்கப் போகிறேன், யார் சிறந்த சோம்பல் மாணவர்களோ கை உயர்த்துங்கள்' என்று கூறினார். அந்த வகுப்பறையில் இருந்த எல்லா மாணவர்களும், ஒரு மாணவியைத் தவிர, கை தூக்கினார்கள். அதைக்கண்ட ஆசிரியருக்கு மகிழ்வு, ஒரு மாணவராவது சோம்பல் தவிர்த்து உள்ளாரே என்று. எனவே அவர் அந்த மாணவியிடம், ஏன் நீ கை தூக்கவில்லை என்று வினவினார். அந்த மாணவி 'நான் மிகவும் சோம்பலாக இருந்ததால், கை தூக்க முடியவில்லை' என்றார். அப்படியான ஒரு சோம்பல் மாணவி தான் என் பக்கத்து வீட்டு பெண்ணும் என் கூட்டாளியும் ஆகும். அவள் என்னைவிட இரண்டு வகுப்பு குறைவு. ஆனால் நல்ல அழகும் வனப்பும் உடையவர்.         

 

"மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும்,

உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பு அல்ல, நூற்கு இயைந்த

சொல்லின் வனப்பே வனப்பு"

 

கூந்தல் அழகும், கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், காதின் அழகும், குற்றம் இல்லாத பல்லின் அழகும் உண்மையான அழகு அல்ல, நல்ல நூல்களைப் படித்து, அதன்மூலம் நல்ல விடயங்களைக் எடுத்துச் சொல்கின்ற திறமையே உண்மையான  அழகு.என்று காரியாசான் தனது சிறுபஞ்சமூலத்தில் கூறுகிறார். ஆனால் நான் அவளை பார்த்தபின், 'நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு' என்பதை கொஞ்சம் மாற்றி, 'உடலை வளைத்து நெளித்து சுறுசுறுப்பாக்கும் செயலின் வனப்பே வனப்பு' என்று அவளுக்கு சொல்லவேண்டும் போல் இருந்தது. என்றாலும் நான் சொல்லவில்லை. அவள் பெரிய கடை முதலாளியின் மகள். நான் அதே கடையில், துப்பரவாக்கும் பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளியின் மகன்.  

 

எனவே அதைச் சொல்லப் போய், அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து, அதை தவிர்த்துவிட்டேன். ஆனால் ஒரு காலம் வரும். அப்பொழுது  "சோம்பல் தவிர்" என்று கட்டாயம் அவளுக்கு சொல்லுவேன்! அவள் நல்லவள், பணக்கார கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தாலும், சைவமதம், இஸ்லாமிய மதம் என்று எந்த வேறுபாடும் இன்றி, எல்லோரையும் சமமாக மதிப்பவள். கர்வம் கிடையாது. ஆனால் இந்த சோம்பல் தான் அவளின் குறைபாடு!

 

"குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்

கல்வியழகே அழகு"

 

என்ற நாலடியார் பாடலும் நினைவில் வந்தது. சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு என்பதற்கு அவள் நல்ல உதாரணம் எல்லோருடனும் நடு நிலையில் நின்று கதைக்கக் கூடியவள். அது தான் அவளில் எனக்கு கூட பிடித்தது, அழகுடன் சேர்த்து!

 

"ஆழிக்கும் ஆசையோ உலகையே ஆள

கரையோரம் பாய்ந்து நாட்டுக்குள் வர

கொஞ்சி விளையாடிய அலைகள் எல்லாம்

மிஞ்சி விளையாடி இடித்து தள்ளினவே!"

 

 

"மொட்டோ, பூவோ, காயோ, கனியோ

மனித உடல்கள் மிதந்து உருண்டன 

துயில் எழுந்தவை வீட்டோடு போயின

உறங்கி கிடந்தவை கட்டிலோடு போயின!"

 

 

"தாயின் மடி கருவறை அல்ல

அது கல்லறை ஆனதே அன்று

வயல்வெளி எல்லாம் நெற்கதிர் அல்ல

அது சுடுகாடு ஆனதே அன்று!"

 

ஞாயிற்றுக்கிழமை காலை 26 டிசம்பர் 2004 , நான் விறகு பொறுக்க, என் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துடன் அண்டிய கரையோர பகுதிக்கு சென்று இருந்தேன். இன்று ஏனோ வழமையை விட மெதுவாக கடல் அலைகள் வந்து கொண்டு இருந்தன. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல அது தட்டுத் தடுமாறி பாய்வது போல் எனக்கு தெரிந்தது. சூரியன் தனது கதிர்களை விரித்துக் கொண்டு கடலில் இருந்து எழுந்து கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளில் இருந்து ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களுக்கு விடை கொடுத்து சந்திரன் மேகத்தை போர்த்துக் கொண்டு நித்திரைக்கு போகிறான். ஆனால் எனோ என் மனம் அந்த எழில் காட்சியில்  ஈடுபட மறுத்துவிட்டது. அது அவளின் வருகையை மட்டுமே ஏங்கி பார்த்துக் கொண்டு இருந்தது. அந்த தேவாலயத்துக்கு தான் அவளும் ஒவ்வொரு ஞாயிறும் வருவது  வழக்கம்.

 

 

இது கிறிஸ்துமஸ்க்கு அடுத்த நாள் என்பதால், அவள் மிக விலையுயர்ந்த வண்ண ஆடையில், தோகை விரிக்கும் மயில் போல, மோட்டார் வண்டியில் இருந்து இறங்கி, பெற்றோர் மோட்டார் வண்டியில் கொண்டு வந்த பொருட்களை இறக்கிக் கொண்டு வரும் முன்பே, தேவாலயத்தை நோக்கி அன்ன நடையில் போவதை கண்டேன். அப்படியே ஒருகணம் நான் என்னையே மறந்துவிட்டேன். நான் மட்டுமா? இதுவரை மெதுவாக இருந்த கடல் கூட , அவளைக் கண்டு பூரித்தது போல திடீர் என கொந்தளித்து சட்டென பெரும் இரைச்சலுடன் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப் பட்டு தூரத்தில் கடும் வேகத்தில் எம்மை நோக்கி வருவதை கண்டேன். அது என்ன, ஏன் என்று சிந்திக்கும் முன்பு அவள் வந்த மோட்டார் வண்டியை அந்த வெள்ளம் மோதிவிட்டது. இனி யோசிக்க நேரம் இல்லை, மிக கெதியாக ஓடி அவளின் கையை நான் பிடிக்க, அவளின் தாய் தந்தையரை அதற்குள் வெள்ளம் கவ்விவிட்டது.

 

நீண்ட கரிய கூந்தலையுடைய அந்த அழகு மகளை, நான் இறுக கையை பிடித்தபடி, ' நிற்க நேரம் இல்லை, கெதியாக ஓடி வா' என்று சொல்லியும், அவளின் சோம்பல் அதை கேட்கவில்லை. பயம் வியப்பு கண்ணில் தெரிகிறது, தான் தப்ப வேண்டும் என்ற அவா பார்வையில் புரிகிறது, ஆனால் உடல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. கடல் வெள்ளம் அவளை ஈர்த்த போது, அவள் மிகவும் திடுக்கிட்டு என்னை கட்டிப்  பிடித்துக் கொண்டாள். வேறு வழி இன்றி நானும் அவளை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு அந்த வெள்ளத்துடன் இருவரும் இழுத்துச் செல்லப் பட்டோம். என்றாலும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை, இயன்ற வரை என்னையும் அவளையும் காப்பாற்றுவதிலேயே முயற்சித்தேன். அவள் எந்த முயற்சியும் செய்யாமல், ஆனால் என்னை இறுக பற்றிக் கொண்டே இருந்தாள். அவளும் சிறு முயற்சியாவது செய்து இருந்தால், நாம் தப்பும் சந்தர்ப்பம் விரைவாக கிடைத்து இருக்கும்.

 

எனினும் அந்த வெள்ளத்துடன் மிதந்து வந்த ஒரு உடைந்த படகு தள்ளாடிக்கொண்டு எமக்கு அருகில் வருவதைக் கண்ட நான், உடனடியாக மற்றக் கையால் அதை கெட்டியாக பிடித்து, அவளை அதன் மேல் தள்ளி விட்டுவிட்டு, நானும் அதில் தொற்றிக் கொண்டேன். அது எம்மை ஒரு மேட்டில் கொண்டு போய் விட்டது. அவள் அப்பொழுது நினைவு இழந்துவிட்டாள்.

 

சாவின் நாற்றமும் அவல ஓலமும் என்னை சுற்றி கேட்க, பார்க்கக் கூடியதாக இருந்தது. “சுனாமிஇப் பெயரை நான் முன்பு அறிந்ததில்லை. அதன் அர்த்தத்தை இப்ப எம்மை தூக்கி சென்ற  பேரலைகள் உணர்த்திக் கொண்டு இருந்தன.  இனிமேலும் அதில் இருந்தால், அவளுக்கு, அவள் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால், சுனாமி ஓரளவு ஓயத் தொடங்க, அவளையும் சுமந்து கொண்டு கடல் நீர் தேங்கி நின்ற பகுதிக்குள்ளாக  நடந்து சென்று பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு போனேன். அப்பொழுது என் கால்களுக்குள் உயிரற்ற உடலங்கள் தட்டுப்பட்டதையும், காயப்பட்டவர்கள் அலறியதையும் கண்டேன். அந்த தருவாயில் , நல்ல காலம் அவள் நினைவு பெற்று புது பெண்ணாக எழும்பினாள் . அவளுக்கு எல்லாம் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. எங்கே அம்மா? அப்பா? என்று தானாகவே அவள் வாய் முணுமுணுத்தது. அவள் என்னை உற்றுப் பார்த்தாள், அப்பதான், தான் சோம்பல் தவிர்த்து இருந்தால், ஒருவேளை இவ்வளவு சங்கடத்துக்கு முன் தப்பி இருக்கலாம் என்ற ஞாபகம் வந்தது. தன்னை அறியாமலே, என் கன்னத்தில் ஒரு முத்தம் தந்து, தன் பெற்றோரை நினைத்து அழத் தொடங்கினாள்.

 

"குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்."  -  குறள் 601    

   

[பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்]

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]


No comments:

Post a Comment