அது அதிகரித்தாலும், குறைந்தாலும் என்ன ஆகும்?
மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படை பானமாக காபி உள்ளது. பதினைந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக மனித கலாச்சாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த காபி எனும் பானம் 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் அறிவொளியைத் தூண்டியதாக சிலர் கூறுகின்றனர். இந்த நூற்றாண்டுகளில் தான் நவீன உலகின் பல அறிவுசார் மற்றும் கலாச்சார கருத்துக்களுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.
காபியின் உள்ள முக்கிய மூலப்பொருள் காஃபின் ஆகும், இது இப்போது உலகில் மிகவும் பரவலாக நுகரப்படும் பொருளாகக் கருதப்படுகிறது. நாம் எப்படி சிந்திக்கிறோம், உணர்கிறோம் என்பதை இது பாதிக்கிறது.
காபி எங்கிருந்து வந்தது?
காபி என்பது எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட காஃபி அராபிகா எனும் செடியின் பழத்திலிருந்து முதலில் பெறப்பட்டது.
90%க்கும் அதிகமான காபி உற்பத்தி வளரும் நாடுகளில் தான் நடைபெறுகிறது, முக்கியமாக தென் அமெரிக்கா, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில்.
புராணக்கதை என்னவென்றால், 9-ஆம் நூற்றாண்டில் கால்டி என்ற ஆடு மேய்ப்பவர், தன் ஆடுகள் காபி பெர்ரிகளை உட்கொண்ட பிறகு அவற்றின் ஆற்றல் அளவு அதிகரித்ததைக் கண்டறிந்தார். இதனால் அவரும் அதை உட்கொள்ள முடிவு செய்தார்.
அப்போதிருந்து, உள்ளூர்வாசிகள் மசித்த காபி பீன்ஸை பயன்படுத்தத் தொடங்கினர் அல்லது அந்த தாவரத்தின் இலைகளிலிருந்து தேநீர் தயாரிக்கத் தொடங்கினர்.
14ஆம் நூற்றாண்டில் ஏமனில் வாழ்ந்த சூஃபிகள் தான் முதன்முதலில் காபி விதைகளை வறுத்து, இன்று நாம் அறிந்த பானத்தை உருவாக்கியதாக வரலாற்றுக் கணக்குகள் தெரிவிக்கின்றன.
15ஆம் நூற்றாண்டில், ஒட்டோமான் பேரரசு முழுவதும் காபி ஹவுஸ்கள் (Coffee house) தோன்றின. பின்னர் ஐரோப்பாவிற்கு இது பரவியது. அங்கு வணிகம், அரசியல் மற்றும் புதிய சிந்தனைகளின் மையமாக மாறியது காபி.
20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவஞானியும்
சமூகவியலாளருமான ஜூர்கன் ஹேபர்மாஸ் போன்ற சில அறிஞர்கள், காபியின் தாக்கம் இல்லாமல்
அறிவொளி இயக்கம் சாத்தியமாகியிருக்காது என்று கூட வாதிடுகின்றனர்.
ஹேபர்மாஸின் கூற்றுப்படி, 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில்
காபி ஹவுஸ்கள் 'விமர்சன மையங்களாக' மாறியது. அங்கு பொதுக் கருத்துகள் மற்றும் சிந்தனைகள்
உருவாக்கப்பட்டன.
முக்கிய அறிவொளி இயக்க பிரமுகர்களும் இந்த பானத்தின்
பெரும் ரசிகர்களாக இருந்ததாக நம்பப்படுகிறது.
பிரெஞ்சு தத்துவஞானி வால்டேர், ஒரு நாளைக்கு 72
கப் காபி வரை பருகினார். அதே நேரத்தில் அவரது நாட்டவரான டிடெரோட் தனது 28-தொகுதிகளைக்
கொண்ட ‘என்சைக்ளோபீடியாவை’ தொகுக்க காபியை தான் நம்பியிருந்தார்.
இவரது என்சைக்ளோபீடியா தான் அறிவொளி இயக்கத்தின்
கொள்கைப் படைப்பாகக் கருதப்படுகிறது என்று அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் பொல்லான் கூறுகிறார்.
அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் காபி ஆய்வுகளுக்கான பிரிவின் தலைவர், மானுடவியல் பேராசிரியர் டெட் பிஷ்ஷர், "முதலாளித்துவத்தின் எழுச்சியில் காபியும் முக்கிய பங்கு வகித்தது" என்கிறார்.
அவர் பிபிசியிடம் பேசியபோது, "காபி வரலாற்றின் போக்கை மாற்றியது. அறிவொளி மற்றும் முதலாளித்துவத்திற்கு வழிவகுத்த சிந்தனைகளின் வளர்ச்சியை ஊக்குவித்தது.
ஜனநாயகம், பகுத்தறிவு, அனுபவவாதம், அறிவியல் மற்றும் முதலாளித்துவம் பற்றிய கருத்துக்கள், காபியின் நுகர்வு பிரபலமடைந்த நேரத்தில் வந்தது என்பது எனக்கு வெறும் விபத்தாகத் தெரியவில்லை. கருத்து மற்றும் செறிவை விரிவுபடுத்தும் இந்த பானம் நிச்சயமாக முதலாளித்துவத்திற்கு வழிவகுத்த சூழலின் ஒரு பகுதியாகும்" என்றார்.
“அந்த காலத்தில், காபியை உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பயன்படுத்தலாம் என்பதை வணிகர்கள் உணர்ந்தனர். எனவே அவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு காபியை வழங்கத் தொடங்கினர், இறுதியில் அவர்களுக்கு காபி இடைவேளை வழங்கும் வழக்கம் தோன்றியது” என்று கூறுகிறார் பிஷ்ஷர்.
காபி வரலாற்றின் இருண்ட பக்கங்கள்
பலரை அடிமைகளாக மாற்றி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதில் காபி முக்கிய பங்கு வகித்தது.
பிரெஞ்சுக்காரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை வரவழைத்து ஹைட்டியின் தோட்டங்களில் அவர்களை பயன்படுத்தினர். 1800களின் முற்பகுதியில், உலகின் மூன்றில் ஒரு பங்கு காபியை ஆப்பிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி பிரேசில் உற்பத்தி செய்து வந்தது.
இன்று, காபி உலகளாவிய கலாச்சாரத்தின் ஒரு முதன்மைக் கூறாக உள்ளது. தினசரி இரண்டு பில்லியன் கோப்பைகளுக்கு மேல் நுகரப்படுகிறது. ஆண்டுக்கு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் (இந்திய மதிப்பில் 75 ஆயிரம் கோடி) தொழில்துறைக்கு பங்களிக்கிறது.
அப்படியிருந்தும், 600 ஆண்டுகளில் காபி தொழிலாளர்களின் நிலைமை அதிகம் மாறவில்லை என்கிறது சர்வதேச அளவில் வறுமை மற்றும் பசியை ஒழிக்க பாடுபடும் ஹெய்ஃபர் இன்டர்நேஷனல் எனும் என்ஜிஓ.
காபி தொழில்துறையின் முதுகெலும்பாக அடித்தட்டு மக்கள் இருக்கிறார்கள், குறைந்த கூலிக்காக வேலை செய்கிறார்கள் என்று அந்த அமைப்பு கூறுகிறது. 50 நாடுகளில், 125 மில்லியன் மக்கள் வாழ்வாதாரத்திற்காக காபியை நம்பியுள்ளனர், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் வாழ்கின்றனர்.
காபி உடலில் தாக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?
காஃபின் உட்கொண்டவுடன், செரிமான அமைப்பு வழியாகச் சென்று குடல் வழியாக இரத்த ஓட்டத்தில் அது உறிஞ்சப்படுகிறது. இருப்பினும், அதன் பாதிப்பு நரம்பு மண்டலத்தை அடைந்தவுடன் மட்டுமே தொடங்குகிறது.
உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருளான அடினோசினுடன் காஃபினுக்கு இருக்கும் இரசாயன ஒற்றுமை காரணமாக இது நடக்கிறது. அடினோசின் பொதுவாக தன்னியக்க நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை தளர்த்துகிறது, இதய துடிப்பு குறைவதற்கு வழிவகுக்கிறது. தூக்கம் மற்றும் தளர்வு உணர்வுகளை தூண்டுகிறது.
காஃபின் நரம்பு செல்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள அடினோசின் ஏற்பிகளுடன் பிணைப்பை ஏற்படுத்துகிறது, இது ஒரு பூட்டுக்குள் சாவியைப் பொருத்துவது போல. ஆனால் இந்த ஏற்பிகளைத் தடுப்பதன் மூலம், அது ஒரு எதிர்விளைவை உருவாக்குகிறது.
இது இரத்த அழுத்தத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம், மூளையின் செயல்பாட்டைத் தூண்டலாம், பசி உணர்வைக் குறைக்கலாம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தலாம். இதன் மூலம் நீண்ட நேரத்திற்கு கவனச் சிதறல் இல்லாமல் இருக்கலாம்.
மனநிலை மேம்பாடு, சோர்வு குறைப்பு மற்றும் மேம்பட்ட உடல் செயல்திறன் ஆகியவற்றிலும் காஃபினுக்கு முக்கிய பங்கு உள்ளது. சில நேரங்களில் விளையாட்டு வீரர்கள் இதை ஒரு ஊட்டச்சத்துக் குறைநிரப்பியாக பயன்படுத்துகின்றனர்.
காஃபினின் பாதிப்புகள் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். உட்கொண்ட ஐந்து முதல் 10 மணி நேரத்திற்குப் பிறகு உடல் காஃபினை வெளியேற்றிவிடும், ஆனால் அதன் பக்க விளைவுகள் நீண்ட காலத்திற்கு இருக்கும்.
உடலில் காஃபின் நன்மைகளை அதிகரிக்க, அதை மிதமாக உட்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும், காலை முதல் கப் காபியை பருகும் போது உண்டாகும் காஃபின் தாக்கத்தைப் பாதுகாக்க, மதியம் காபி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
ஆரோக்கியமான பெரியவர்களுக்கு தினசரி காஃபின் வரம்பு 400 மில்லிகிராம் என வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன, இது நான்கு அல்லது ஐந்து கப் காபிக்கு சமம்.
இந்த வரம்பை மீறுவது தூக்கமின்மை, பதட்டம், இதயத் துடிப்பு மிகைப்பு, வயிற்று அசௌகரியம், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
1,200
மில்லிகிராம் காஃபின் - சுமார் 12 கப் காபியை விரைவாக உட்கொள்வதன் மூலம் வலிப்புத்தாக்கங்கள் போன்ற மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும் மிதமான அளவில் குடிப்பதால், காபி சாத்தியமான ஆரோக்கிய நலன்களை வழங்குவதாகக் கருதப்படுகிறது. மரணம் மற்றும் பல நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் காஃபினுக்கு பங்குள்ளது என்று ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தின் மருத்துவர் மேட்டியாஸ் ஹென் கூறுகிறார்.
"ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து கப் காபி வரை குடிப்பது இறப்பு அபாயத்தைக் குறைக்கும். அதேபோல நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் அதற்கு பங்குண்டு" என்கிறார் மருத்துவர் மேட்டியாஸ் ஹென்.
எனவே அடுத்த முறை ஒரு கப் காபியை பருகும்போது, அதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
[- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.]
No comments:
Post a Comment