திருக்குறள்...-/58/-கண்ணோட்டம்

திருக்குறள் தொடர்கிறது




58. கண்ணோட்டம்

குறள் 571:

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு.

மு.வ உரை:

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

கலைஞர் உரை:

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

English Explanation:

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.

 

குறள் 572:

கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

மு.வ உரை:

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

சாலமன் பாப்பையா உரை:

மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

கலைஞர் உரை:

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

English Explanation:

The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

 

குறள் 573:

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்.

மு.வ உரை:

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?

கலைஞர் உரை:

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.

English Explanation:

Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.

 

குறள் 574:

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்கண்ணோட்டம் இல்லாத கண்.

மு.வ உரை:

தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை:

வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?

கலைஞர் உரை:

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

English Explanation:

Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness?

 

குறள் 575:

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்புண்ணென் றுணரப் படும்.

மு.வ உரை:

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

கலைஞர் உரை:

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்.

English Explanation:

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

 

குறள் 576:

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைடந்துகண் ணோடா தவர்.

மு.வ உரை:

கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:

கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

கலைஞர் உரை:

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

English Explanation:

They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).

 

குறள் 577:

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்.

மு.வ உரை:

கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

கலைஞர் உரை:

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

English Explanation:

Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.

 

குறள் 578:

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்

குரிமை உடைத்திவ் வுலகு.

மு.வ உரை:

தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.

சாலமன் பாப்பையா உரை:

தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.

கலைஞர் உரை:

கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

English Explanation:

The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).

 

குறள் 579:

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.

மு.வ உரை:

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை:

தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

கலைஞர் உரை:

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

English Explanation:

Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

 

குறள் 580:

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

மு.வ உரை:

எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

சாலமன் பாப்பையா உரை:

எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.

கலைஞர் உரை:

கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.

English Explanation:

Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

Theebam.com: திருக்குறள்... -/59/-ஒற்றாடல்

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

No comments:

Post a Comment