"மர்ம க்காடு" - சிறு கதை


'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' பற்றி அலசி ஆராய, அதன் மூலப்பிரதியான மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலின், ஆங்கில பிரதியை [1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படட] வாசிக்கத் தொடங்கினேன். ஆறாம், ஏழாம் அத்தியாயத்தில், இலங்கைக்கு விஜயனின் வருகை மற்றும் அவனின் ஆட்சி மிக சுவாரசியமாக பல பொய்களையும் நம்பமுடியாத நிகழ்வுகளையும் கொண்டு இருந்தன. விஜயனும் தோழர்களும் இலங்கைத் தீவில் கரை ஒதுங்கி இலங்கைக்கு வந்தேறு குடிகளாக நின்றபோது 'அங்கு பெண் நாய் உருவில் குவேனியின் பரிவாரத்தைச் சேர்ந்த ஒரு யக்ஷினி (Yakshini) தோன்றினாள் என்றும், குவேனி 'பதினாறு வயதுப் பருவ மங்கையின் எழிலுருவை எடுத்துக் கொண்டு நாநாவிதமான அணிகலன் பூண்டவளாக ஆகி விஜயனுடன் இருக்கும் வேளை ' என ஒரு மர்ம தீவாக இலங்கையை வர்ணிக்கத் தொடங்கியது. நேரம் இரவு பன்னிரண்டு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது. என்னை அறியாமல் உறக்கம் என்னைக் கவ்விக்கொண்டது.

 

கடல் அலைகள் கட்டுப்பாடு இழந்து, கரையை நோக்கி அசுர வேகத்தில் ஏறி இறங்கி முட்டி மோதின. நான் பயணம் செய்த படகும் அதில் அகப்பட்டு, உடைந்து சிதறி, நல்லவேளை, நான் ஒரு உடைந்த பலகைத் துண்டு ஒன்றை பிடித்து எதோ ஒரு கரை சேர்ந்தேன். அங்கே ஒரே அமைதி, சற்று தூரத்தில் பெரும் காடு, என்றாலும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் பேரிரைச்சல் மட்டும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. எனக்கு அந்த இரைச்சல் எரிச்சலை ஊட்டியது அதில் இருந்து தப்ப காட்டை நோக்கி திரும்பி பார்க்காமல் ஓடினேன்.

 

அது ஒரு ஒரு பரந்த மற்றும் பழமையான காடுபோல் இருந்தது. மகாவம்ச கதையில் வாசித்த நிகழ்வுகளின் ஆர்வத்தால் உந்தப்பட்ட நான், என் முதல் அடியை அந்த மங்கிய இருண்ட காட்டுக்குள் வைத்தேன். மர்மமே வடிவான இந்த மர்ம பூமியில் அடங்கியுள்ள நிகழ்வுகள் பலவற்றில் பஞ்சம் இல்லாமல் மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்து கிடக்கின்றன. அதில் அவ்வப்போது  விஞ்ஞானத்தால் தீர்க்கப் படுகின்றன. உதாரணமாக நீண்ட நாள் மர்மத்திற்கு பின் பெர்முடாவில் ஏதும் மர்மம் இல்லை என்று அங்கு நடந்த பல சம்பவங்களுக்கு விளக்கம் அளித்தது விஞ்ஞானம். எனவே அது ஒரு மர்ம காடு போல் இருந்தாலும், நான் அதை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அந்த காட்டின் புதிரான கவர்ச்சி என்னை உள்ளே வா வா என்று அழைத்தது.

 

நான் தனி மனிதனாக, விசித்திரமான அதிசயங்களைப் மகாவம்சத்தில் வாசித்து இருந்ததால், மற்றும் அவற்றை வெறும் மூடநம்பிக்கை அல்லது புரளி என்று நம்பியவன் என்பதால், எந்த பயமும் தயக்கமும் இன்றி, சூரியன் வானத்தை தங்க நிறத்தில் வரைந்தபோது, அதன் வெளிச்சம் சிறு சிறு கீறல்களாக காட்டுக்குள் எனக்கு வழிகாட்டிட உள்ளே , அதன் இதயமான, மையத்தை நோக்கி நடக்க தொடங்கினேன்.  என் வருகையை அங்கீகரிப்பது போல், சலசலக்கும் இலைகள் மற்றும் சலசலப்பான கிசுகிசுக்களுடன் காடு என்னை வரவேற்றது. படிப்படியாக, நான் ஆழமாகச் காட்டிற்குள் சென்றேன், என்னைச் சுற்றியுள்ள உலகம் ஒரு கனவுக் காட்சியாக எனக்கு தெரிந்தது. ஒளிரும் பூஞ்சைகள் (Fungii) பாதையை ஒளிரச் செய்தன, மற்றும் விசித்திரமான தாவரங்கள் மென்மையான காற்றுடன் நடனமாடின. காடு இப்ப உண்மையில் ஒரு மர்மமாகவே எனக்கு தெரிந்தது.

 

நான் எனது பயணத்தை மேலும் தொடர்ந்தபோது, ​​நிலவு ஒளிரும் குளத்தின் மென்மையான பளபளப்பில் கவர்ந்த நான், அதன் அழகில் மயங்கி, ஒரு வெட்டவெளியில், நீரின் ஓரத்தில் அமர்ந்தேன். அப்போதுதான் அவளைக் கண்டேன்  - என்னை அப்படியே மயக்கும் கருணையின் தரிசனம் அது!பிரபஞ்சத்தின் ஆழத்தை பிரதிபலிக்கும் கண்கள் மற்றும் குளிர்ந்த ஆத்மாவின் இதயத்தை உருக்கும் புன்னகையுடன் ஒரு அழகிய நேர்த்தியான பெண் அவள். அவளை எப்படி நான் வர்ணிப்பேன் என்று எனக்குப் புரியவில்லை. அத்தனை அழகு அவள். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தெய்வ தாசிகளைப் பழிக்கத்தக்க அற்புதமான அழகு. அழகிய அகன்ற விழிகளைக் கொண்ட ஊர்வசி இவளிடம் தோற்று விடுவாள். கட்டழகியான இந்த மங்கை எங்கே? என் மனம் என்னிடம் இப்ப இல்லை . என் கண்கள் இமைவெட்டவில்லை.

 

''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி

நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை

மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,

மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்

கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,

பாவை அன்ன வனப்பினள் இவள்'' என,

காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,

யாய் மறப்பு அறியா மடந்தை-

தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே."

 

நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய ... அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள், இப்படி அவள் அழகு தேவதையாக இருந்தாள்.

 

நான் தெரிந்தும் தெரியாமலும்  காட்டுக்குள் நுழைந்தாலும், - ரம்பை, ஊர்வசியை விட மிக சிறந்த மற்றொரு அழகியை பிரம்மா படைத்தார். அது தான் திலோத்துமை. அவளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் -  ஈடிணையற்ற இந்த அழகியைப் பார்த்ததும், விடிகாலையில் பறவைகளின் ஒலி; வானிலே தெளிந்த ஒளி..  நிலவு- உரோகிணி என்னும் மீனுடன் கூடிய ஓரை (Constellation) நல்ல நாள் - அந்த நாளில் மணவீட்டினை அலங்கரித்து நடை பெற்ற திருமணம் போல் இருவரும் கூடும் இந்த நாள் நல்ல நாளாகட்டும் என்று எனக்குள் நான் முணுமுணுத்தேன்.

 

 "புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி

அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்

சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,"

 

நானும் அவளும் பல மணிநேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அவள் ஏற்கனவே என்ன அறிந்தவள் போல்  சிரமமின்றி சிரித்து சிரித்து கதைத்தாள். எனது இதயம் தானாகவே மந்திரவாதியின் மந்திரத்தால் பிணைக்கப்பட்டது போல அவளுடன் இணைந்தது. நான் மீண்டும் மீண்டும்  தீக்குளிக்கும் அந்துப்பூச்சி [விட்டில் பூச்சி] போல அவள் பக்கம் இழுக்கப்பட்டேன்.  வெறும் மனிதனின் மோகத்தை விட அது மேலானதாக இருந்தது.

 

ஒரு மாலை நேரத்தில், சூரியன் அடிவானத்தில் மறைந்து, வானத்தை துடிப்பான வண்ணங்களால் வரைந்தபொழுது, அவள் என்னை காட்டின் இதயத்தில் மறைந்திருந்த ஒரு புனித தோப்புக்கு அழைத்துச் சென்றாள்.  அங்கு, அவள் அந்த காட்டின் மர்மத்தை, அதன் உண்மையை வெளிப்படுத்தினாள். கண்ணீர் ததும்ப அவளின் அந்த வாக்குமூலம் இருந்தது. தான் சாதாரண பெண் அல்ல என்றும் ஆனால் ஒரு பழங்கால ஆவி, பல நூற்றாண்டுகளாக காட்டில் பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினாள். எது எப்படி என்றாலும் என் உணர்ச்சிகளை என்னால் அடக்க முடியவில்லை. என் காதல் கதை, ஒரு மரண மனிதனுக்கும் அழியாத ஆவிக்கும் இடையே ஒரு நித்திய பிணைப்பு போல் இருந்தாலும், விஜயனும் [மனிதனும்] குவேனியும் [ராட்சத குலமும்] தம்மபாணி என்ற நகரத்தை ஏற்படுத்தி தம்பதிகளாக சில ஆண்டுகள் வாழ்ந்தது போல, ஏன் நான் அவளுடன் வாழக்கூடாது என என் மனம் என்னைக் கேட்டது. 

 

ஆனால் அவள் திடீரென வெள்ளைத் துணியால் போர்க்கப்பட்ட, அந்தரத்தில் உலாவும் ஒரு உருவாக, என்ன விட்டு விலகத் தொடங்கினாள். காட்டின் இருட்டில் அந்த வெள்ளை உருவம் பளபளத்தது. நான் ஓடிப்போய் அவளை தடுக்க முற்பட்டு, தழுவ முயன்றேன். ஆனால் அது உடலற்ற ஒரு உருவம் என்பது அப்ப தான் எனக்கு தெரிந்தது. அங்கு அவளும் இல்லை, அந்த அழகிய உடலும் இல்லை.  குட்டிச்சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான சொற்கள் உள்ளன. ஆனால் அவள் இதில் ஒன்றிலும் இல்லை. அப்படி என்றால் அவள் யார்? காட்டின்  மர்மம் என்ன ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. திடுக்கிட்டு கண் விழித்தேன், மகாவம்ச நூல் அப்படியே விரித்தபடி ஏழாம் அத்தியாயத்தில் இருந்தது. கவினி என்ற 'பேரழகு படைத்தவள்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபான குவேனியின் படம் அதில் வெள்ளை உடையில் வரையப்பட்டு இருந்தது. நான் கடைசியாக மர்மக்காட்டில் பார்த்த அதே உருவம்!

 

நன்றி  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment